காமத்தின் வலிமை: சந்திராவின் மருதாணி

காமத்தை உயவு நோய் என்கிறாள் குறுந்தொகைப் பாடலில் இடம்பெறும் பெண்ணொருத்தி. அந்தப் பெண்ணை எழுதியவள் ஔவை என்னும் பெண். முட்டுவென்கொல் தாக்குவென்கொல் எனத் தொடங்கும் அந்தப்பாடல், உயவு நோய் கண்ட ஒருவர், செய்வது இன்னதென்று அறியாது செயல்களில் ஈடுபடுவர் என்கிறது.  ‘இந்த நோய்க்குக் காரணமான ஆண் வருவான் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்; அவன் வருவதாக இல்லை; என் தூக்கம் போய்விட்டது; என்னைச் சுற்றியிருப்பவர்கள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்; ‘ஆ..ஓ..’வென்று குரல் எழுப்பிக் கத்தியாவது ஆற்றவேண்டும் போலிருக்கிறது என்பது அவளது ஆற்றாமையின் வெளிப்பாடு. இந்த ஆற்றாமையின் மனத்தவிப்பல்ல. உடலின் தவிப்பு. உயவுநோய் உடலின் தவிப்பு.

காமத்தை நோயாகப் பார்க்கும் இந்தப் புனைவுநிலைப் பார்வைக்குப் பின்னால், அந்த நோய் தீர்க்கவே முடியாத ஒரு நோய் என்ற பார்வையும், தீர்க்கப்படவேண்டிய நோய் என்பதாக ஒரு பார்வையும் இருக்கிறது. ஏன் தீர்க்கமுடியாத நோயாகவும், தீர்க்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதை இலக்கியங்கள் விதம்விதமாகப் பேசியிருக்கின்றன. மனிதர்களின் எல்லாவகைச் செயல்பாடுகளுக்கும்  இயல்புகளுக்கும் அதனதன் போக்கில் விளக்கங்களை முன்வைக்கும் சமயங்களில் சில காமத்தை உள்வாங்கியனப் பேசுகின்றன. சில நெறிமுறைகள் ஒதுக்கப்பட வேண்டியனவாகப் பேசுகின்றன.  

வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று நினைக்கும் மேற்கத்தியர்களின் ஆன்மீகமாக இருக்கும் கிறித்தவம் காமத்தை உறவைப் பாவமாகக் கருதுகிறது. உடல் சார்ந்த ஆண்- பெண் உறவு நரகத்திற்கு இட்டுச் செல்லும் ஒன்றாகவே விளக்குகிறது. மனிதர்களுக்கான அமைதியையும் ஓரளவு சமத்துவத்தையும் முன் மொழிந்த பௌத்தமும் காமம் விலக்கப்பட வேண்டிய ஒன்றாகவே நினைத்தது. ஞானத்தை அடைவதற்காகப் புத்தர் துறந்தவைகளில் ஒன்றாகக் காமமும் இருந்துள்ளது. இவற்றிற்கு மாறாகக் காமத்தை வாழ்க்கையின் மூன்று சக்திகளில் ஒன்றாக நினைத்துள்ளது வைதீக சமயம். வாழ்தலில் கைக்கொள்ள வேண்டிய வழிமுறைகளில் – அறம், பொருள், காமம் என்ற மூன்றில் ஒன்றாகப் பேசுகிறது. அதன் வெளிப்பாடாகக்  காமதேவன் ஒருவனை உருவாக்கிக் கொண்டாடியதைப் பார்க்க முடிகிறது. மனிதர்கள் பின்பற்றத்தக்க சாஸ்திரங்களை எழுதிய நிலையில் காமத்திற்கும் ஒரு சாஸ்திரத்தை – காமசாஸ்திரத்தை எழுதியிருக்கிறார்கள். வாத்ஸ்யாயனர் காமசாஸ்திரம் இருபால் உடல்களின் இணைவாகவும் துய்ப்பாகவும் முன்வைத்து விளக்கும் விரிவான நூல். நான்கு புருஷார்த்தங்களில் ஒன்றாகக் காமத்தை முன்வைத்துப் பேசும் சைவ, வைணவ மதங்கள் வாழ்க்கையில் அடையவேண்டிய குறிக்கோள்களில் ஒன்றாகவே காமத்தைக் கருதியுள்ளன. அதன் வழியாகவும் வீடுபேற்றை அடைய முடியும் என்பது நம்பிக்கை. கோயில் சுவர்களில் எழுதப்பெற்ற ஓவியங்களிலும் கூடங்களில் நிறுவப்பெற்ற சிற்பங்களிலும் காமநிலைகள் தவிர்க்கப்படவில்லை என்பதை இன்றளவும் காண்கிறோம். தமிழின் முதன்மையான அறநூலான திருக்குறள் அறத்துப்பாலிலும் பொருட்பாலிலும் பேசிய அறங்களுக்கு மாறாக இன்பத்துப்பாலில் அதைக் கொண்டாட்ட நிலையிலேயே எழுதியுள்ளார். ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றாக முன்வைக்கவில்லை.

மதங்களுக்கு மாற்றான கருத்துநிலையெடுக்கும் அறிவியல் காமத்தின் காரணங்களையும் அதன் வெளிப்பாடுகளையும் விளைவுகளையும் பேசுகிறது. சமயங்களின் சொல்லாடல்கள் காமத்தையும் புலன் இன்பத்தையும் ஆண்களுக்குரியதாக மட்டும் பேச, அறிவியல் பாலியல் ஆசைகள் இருபாலாருக்கும் உரியதாக  முன்வைக்கிறது. காமத்தின் தோற்றக் காரணிகளாக மனித உடலுக்குள் உந்துசக்தி ஒன்றிருப்பதாகவும் (Drive ), அச்சக்தியின்  நோக்கமே ( Motivation )  விருப்பங்களாக (Wish) மாறுகின்றன என்றும் விளக்கிக்காட்டும்போது ஒவ்வொன்றின் பின்னணியிலும் செயல்படும் காரணிகளையும் சொல்கிறது. உந்துசக்தியின் காரணிகளாக இருப்பவை உயிரியல் கூறுகளாகவும், நோக்கங்களைத் தீர்மானிப்பவை உளவியல் காரணிகளாகவும் அறியப்படுகின்றன, விருப்பங்களும் வெளிப்பாடுகளும் சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுகின்றன எனக் கோட்பாட்டு ரீதியில் விளக்கும் அறிவியல் அதனதன் சட்டகங்களுக்குள் வினையாற்றுகின்றன என்றும் சொல்கிறது. அறிவியல் விளக்கங்களை அறியாத நிலையில் சமயநெறிகளும் அன்றாட வாழ்வின் சமூகப்பொருளியல் காரணிகளின் நெருக்கடிகளும் சேர்ந்து மனிதர்களின் காமத்தை – பாலியல் விருப்பங்களைத் தீர்மானிக்கின்றன; தடைசெய்கின்றன. இவற்றை ஏற்று நடக்கும் மனிதர்களை மட்டுமே பொதுநிலை குணங்கள் கொண்ட மனிதர்களாகவும் அவர்களின் பாலியல் நடவடிக்கைகளை ஒழுங்குநிலைப்பட்ட வடிவங்களில் வெளிப்படும் பாலியலாகவும் விளங்கிக் கொள்கிறோம். 

சமூகத்தின் இருப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் மனிதர்கள் தங்களின் வாரிசுகளை உற்பத்தி செய்கிறார்கள்; அதுவே பாலியல் விருப்பம் மற்றும் நடவடிக்கைகளின் பின்னால் இருக்கும் காரணிகள் என்பதை நிலைநிறுத்தக் கண்டுபிடித்த அமைப்பு குடும்பம். அதில் ஒருவனும் ஒருத்தியும் இணைந்து, அவர்களின் வாரிசுகளை உற்பத்தி செய்வதற்காகப் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள்.  இதை ஏற்றுக்கொண்டதாகச் சமூகத்தின் போக்கு இருந்தபோதிலும் அதில் தனிமனிதர்களின் விருப்பங்கள் எப்போதும் நிறைவேறுவதில்லை என்பதும் உண்மை. திருமணம் என்னும் ஏற்பாடே அதில் இணைக்கப்படும் இருவரின் விருப்பம் சார்ந்ததாக இருப்பதில்லை என்பதும் உண்மை. ஒரு குறிப்பிட்ட சூழலில் விரும்பித் தொடங்கும் உறவுகள் தொடர்ச்சியாக நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதும் ஒருவித ஆதிக்கமும் அழுத்தமும் கொண்ட நிலைதான் எனப் பெண்ணியச் சொல்லாடல்கள் முன் வைக்கின்றன. இந்த வலியுறுத்தல்கள் ஆண்களுக்குக் கட்டுப்பாடாக இல்லாத நிலையில் அதற்கான கோரிக்கைகளை இயக்கமாக ஆண்கள் முன்வைப்பதில்லை. அதே நேரத்தில் பாலியல் கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்நெறிகளைத் தேடுவதை ஆண்களும் கைவிட்டவர்கள் அல்ல என்பதைப் பலவிதமான குழு நடவடிக்கைகள் காட்டுகின்றன.   

ஆண் – பெண் பாலியல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொண்டு குடும்ப அமைப்புக்குள் நுழையும் ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பங்களையும் விடுதலையையும் விட்டுக்கொடுத்தே அதற்குள் தொடர்ந்து வாழ்கின்றனர் எனப் பேசும் புரட்சிகரப் பெண்ணியத்தை உள்வாங்கிய பனுவல்கள் தமிழில் அதிகம் இல்லையென்றே சொல்லலாம். அதே நேரத்தில் கவிதைகளில் ஆதிச் செவ்வியல் பனுவல்கள் தொடங்கிக் காமத்தை முன்வைத்துத் தன்னை- தன் உடலைப் பேசிய பெண்களை  வாசிக்க முடிகிறது. இடைக்காலத்தில் ஆண்டாள், காரைக்காலம்மை போன்றவர்களிடம் உடலின் இச்சையைப் பக்தியின் ஈடேற்றமாக மாற்றிக் கட்டமைத்துத் தரும் பனுவல்களை வாசிக்கிறோம். அண்மைக்காலப் பெண் கவிகள் இந்தப் பரப்பிற்குள் நுழைந்தும் வெளியேறும் போக்குக்காட்டுகின்றனர். 

ஆண்கள் எழுதிய புனைகதைப் பரப்பிற்குள் பெண்ணுடலின் மீதான அபரிமிதமான  காமத்தை நேரிடையாகக் காட்டாமல், அவர்களின் பிற விருப்பங்கள் சார்ந்தும், ஈடுபாடுகள் சார்ந்தும் கொண்டாடும் நிலையையும் துய்க்கும் ஆசையையும் வாசிக்க முடிகிறது. ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், தஞ்சை ப்ரகாஷ் போன்றவர்களின் பிரதிகளில் குடும்ப அமைப்பைத் தாண்டி, பெண்ணுடல்களைக்  குற்றவுணர்வின்றித் துய்க்கும் ஆண்களையும் அவர்களுக்குத் தங்கள் உடலை அதே ஈடுபாட்டுடன் தரும் பெண்களையும் வாசிக்க முடிகிறது. இந்த அளவுக்கு பெண்பிரதிகளில் மிகமிகக் இல்லை. மீறல்களை விரும்பும் பெண்களின் வகைமாதிரிகளைப் பெண் எழுத்துகளில் வாசிக்க முடிகிறது என்றாலும் பாலியல் நடவடிக்கைகளைக் குற்றவுணர்வின்றித் தொடரும் பிரதிகள் அரிதாகவே உள்ளன. தன் உடலின் போக்கில் காமஞ்சார்ந்த தன் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு பெண்ணை வாசிக்க முடியவில்லை. இதற்கு விலக்காக இருக்கிறது சந்திராவின் மருதாணி என்னும் கதை. சிறுகதை எழுத்தாளராகவும் சினிமாவில் செயல்படும் ஆளுமையாகவும் இருக்கும் சந்திராவின் மருதாணி கதை எழுதப்பெற்ற முறையில் ஒரு கிராமத்துப் பெண்ணின் இயல்பான மனநிலை வெளிப்பாடாகக் காம விருப்பத்தைச் சொல்கிறார் . அவளது விருப்பமும் ஈடுபாடும் தண்டனைக்குரியது என்பதும், எதிர்காலக் குடும்ப வாழ்வைச் சிதைத்துவிடக்கூடியது என்பது தெரிந்தபோதிலும், அவளின் உடல் காமம் சார்ந்த முழுமையைத்   தேடிக்கொண்டே இருந்தது என்பதாகக் கதையை வாசிக்கத் தருகிறார். 

ஆணுக்கோ, பெண்ணுக்கோ முதல் காதலும் முதல் விருப்பங்களும் தொடரும் எண்ணங்களாகவும் செயல்களுமாக இருப்பதை உறுதிசெய்கிறது மருதாணி கதை மருதாணியின் முதல் விருப்பமாக இருந்தவனோடான உறவையே முழுமையான உறவாக நினைத்து முழுமை அடைந்தாள் என்பதைச் சொல்ல எழுதப்பெற்ற அந்தக் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது:

வெயில் மெல்ல மெல்ல ஊர்ந்து தாழ்வாரத்தின் மேல்கூரையில் விழுந்த நேரம் மருதாணிக்கு வலதுகாலின் கட்டைவிரலில் நரம்பு சுண்டி இழுத்தது.அது தன் மனத்திலிருந்து கிளம்பும் காமத்தின் வலி என்பதை நன்கு அறிவாள். யாருக்கும் தெரியாமல் தன் பாதங்களை சேலைக்குள் மூடி உட்கார்ந்தாள்

திருமணமாகி ஒரு குழந்தையின் அம்மாவாக இருக்கும் மருதாணியின் செயல்களும் விருப்பங்களும் நனவிலியில் நடக்கும் செயல்களாக க் கதையில் காட்டப்படவில்லை. முழுமையான நினைவு நிலையிலேயே எல்லாவற்றையும் செய்கிறாள். அவளது விருப்பத்திற்குரியவனாகக் கதையில் வரும் சுரேஷ், மருதாணியின் கணவன் ஐயப்பனின் நண்பன். இருவரையும் முதன் முதலில் சந்தித்தபோது அவளது ஈர்ப்பும் காம மும் ஐயப்பனிடம் இல்லை; சுரேஷிடமே இருந்தது என்பதைக் கதை குறிப்பாகச் சொல்கிறது 

தன் ஊரில் நீராடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய வழியில்தான் தன் நண்பன் சுரேஷ் உடன் வந்து இவளைப் பெண் பார்த்து சென்றான் ஐயப்பன். தன் எதிரே வரும் இளைஞர்களில் ஐயப்பனை பார்க்காமல் சுரேஷைப் பார்த்துத்தான் அழகான ஆணாக இருக்கிறானே என்று மருதாணிக்கு எண்ணத் தோன்றியது. தன்னைப் பெண் பார்க்க தான் வருகிறார்கள் என்று தெரியாமல் ஏகாந்தமாக அழகிய பெண்ணின் திமிரான நடையுடன் அவர்களை  கடந்து சென்றாள்.இவளைத் தான் கட்டிக்கொள்வது என்ற முடிவுக்கு வந்த ஐயப்பன் கைகளை மேலே தூக்கி சந்தோசமாக விசிலடித்துச் சென்றான்.

ஐயப்பனோடு திருமணம் நடக்கப்போகிறது என்றாலும் மருதாணியின் மனமோ வேறுவிதமாகவே நிலைகொண்டிருந்த து. 

ஐயப்பன் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டிக் கொண்டிருந்தான். கல்யாணத்திற்கு முன்பே நான்கைந்து தடவை “இங்க பக்கத்துல காட்டுக்கு உழுது போட வந்தோம். அப்படியே பார்த்துட்டு போயிடலாம்னு” என்று வழிந்தபடி மருதாணி விட்டு டீக்கடையில் உட்கார்ந்து சென்றார்கள். அப்போதெல்லாம் மருதாணி நீராட ஆற்றுக்கு தன் தோழிகளுடன் போய்க் கொண்டிருப்பாள். பலகாரமும் டீயும் சாப்பிட்டுவிட்டு இருவரும்  அவள் பின்னாடியே போவார்கள். போகும் வழியில் ஐயப்பனிடம் தைரியமாகப் பேசிய மருதாணி, சுரேஷைப் பார்த்து வெட்கப்பட்டாள். ஐயப்பன் உடன் திருமணம் முடிந்த பின்னரும் அந்த வெட்கம் தொடர்ந்தது.

நீரோட்டத்தில் அடி ஆழத்தில் படிந்த பாசியாய் சுரேஷின் முதல் பார்வையை மருதாணி மனத்தில் நிலைநிறுத்திக்கொண்டாள். 

சுரேஷ் ஐயப்பனின் நண்பன். அந்தக் கிராமத்தில் வட்டிக்கடன் கொடுத்து வசூல் செய்யும் லேவாதேவிக்காரன். 

அவர்கள் முதலிரவு அறையை சுரேஷ்தான் அலங்கரித்தான். அவனைப்பார்த்து மருதாணியின் உடல் நடுங்கியது. ஐயப்பனை வெளியே தள்ளிவிட்டு சுரேஷை அறையில் இழுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் ஒருநொடி அவள் மனதில் தோன்றும் குற்ற உணர்வுடன் விலகியது. அர்த்தம் கண்டுபிடிக்க முடியாத சிரிப்புடன் அறையை அலங்கரித்து முடித்தவுடன் சுரேஷ் விலகிச்சென்றான்.

 

சமூக ஒழுங்கை மீறிய உறவுக்கு ஏங்கும் மனத்தோடு மருதாணி இருந்தாள்; அந்த ஏக்கம் அவளது உடலின் முழுமைக்கான தேடல் என்பதாக எழுதும் சந்திரா முழுவதும் மருதாணியை மட்டுமே எழுதுகிறார்; அவளோடு உறவுகொள்ளத் தயங்காத சுரேஷின் மனநிலையையோ, அச்ச உணர்வையோ எழுதவில்லை. தனது நண்பனின் மனைவி என்ற நிலையைப் பற்றிய நினைப்பே இல்லாமல் சுரேஷ் இயங்கியிருப்பானா என்ற கேள்விக்குக் கதையில் விடை இல்லை. மருதாணியின் மனநிலையைக் கண்டிக்கும் கணவன் ஐயப்பனின் நிலைப்பாட்டையும் எரிச்சலையும் எழுதிக் காட்டியிருக்கும் சந்திரா, சுரேஷைப் பற்றி எழுதாமல் விட்டது ஏனென்று தெரியவில்லை. 

அவர்கள் இருவரின் சந்தோஷத்தைப் பார்த்து சுரேஷின் ஞாபகத்தை முழுமையாகத்  தன்னிலிருந்து எடுத்து விட்டு ஐயப்பனோடு மன நிறைவோடு வாழ வேண்டும் என்று மருதாணி நினைப்பாள். கொஞ்ச நாள் சுரேஷ் வசூலுக்கு அத்தெருவுக்கு வரும் சமயங்களில் வீட்டிலேயா மூர்க்கமாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள். இச்செய்கைகளைப் பார்த்து ஐயப்பனும் மனநிறைவு கொள்வான்.


கணவனுக்காகவும் குழந்தைக்காகவும் தனது விருப்பத்தைத் தவிர்க்க நினைத்தால் என எழுதப்பட்ட பகுதியைத் தொடர்ந்து சுரேஷின் குற்றமனத்தையோ, திருட்டுத் தனத்தையோ எழுதியிருக்க வேண்டும்.  அப்படி எழுதப்படாததால் காமவேட்கை ஒருபால் விருப்பமாக – குறிப்பாக மருதாணியின் அத்துமீறிய ஆசை என்பதாக நின்றிருக்கிறது; காட்டப்பட்டிருக்கிறது.கதையில் இடம்பெறும் குறிப்புகள் அப்படியான வாசிப்பைத் தரத் தவறவில்லை. ஓரிடத்தில், 

 இருவர் பேச்சுக்களும் ஒருநாள் செயலிழந்தன. குழந்தையை வாங்கும் போதும் கொடுக்கும் போதும் ஏற்பட்ட கிண்டல் உடலுக்குள்ளும் தீ மூட்டின.அவனது வருடல் அதிகரிக்க அதிகரிக்க இவள் உள்ளுக்குள் உருகிக் குழைந்தாள்

என எழுதிக்காட்டுவதோடு, திரும்பத் திரும்ப மருதாணியே சுரேஷை நாடினாள் என்பதாகவும் காட்டுகிறார்.

 முனியம்மாள் வீட்டிலிருந்த பெண்கள் மழை வரப்போகிறது என்று சொல்லி ஒதுங்க வைக்க கிளம்பிப் போய்விட்டார்கள். சுரேஷ் திண்ணையின் ஓரமாக உட்கார்ந்திருந்தான். சமைத்த பாத்திரங்களில் வீட்டில் குவிந்து கிடப்பதாகக் கூறி அவற்றை விளக்கி வைத்துவிட்டு வருவதாகச் சொல்லி குழந்தையை முனியம்மாள் வீட்டில் விட்டுவிட்டு சுரேஷுக்குத் தீர்க்கமான சமிக்கை ஒன்றை காட்டி விட்டு போனாள் மருதாணி. போன சிலநிமிடங்களில் கழித்து சுரேஷ் அவள் வீட்டுக்குள் நுழைந்தான்.

தான் கனவில் கண்டதை மருதாணி நிஜத்தில் வெல்லத் தொடங்கினாள்.

அவள் சேமித்து வைத்திருந்த காதலெல்லாம் காமமாக உருவாகி வழிந்தது. அவளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுரேஷ் திணறினான். அவனது சிறு தொடுகையும் அவளை இன்பத்தின் எல்லைக்கு கொண்டு சென்றது.

மழையின் ஊடே அவள் ஆசை திணறித்திளைத்து முடிவுக்கு வந்தது. வெளியே பெரும் மழை பெய்து ஓய்ந்தது.அவள் உடலும் சம நிலைக்கு வந்தது. ஒருவரின் கைகளை ஒருவர் பிடித்தபடி மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார்கள். சிறு சத்தமாக ஆரம்பித்த கதவு தட்டல் பெரும் சத்தமாக ஒலித்தது. கைகளை விடுவித்துக் கொண்டார்கள். உடைகளை அணிய அவளுக்கு துணிவில்லை.

இருவரின் இணைவை விவரிக்கும் சந்திராவின் மொழியும் விவரணைகளும் மருதாணியின் முழுமையான விருப்பத்தின் பேரிலும் அடங்காத காம வேட்கையின் காரணமாகவும் நிகழ்ந்தது என்பதாகப் படம் பிடிக்கிறது. பெண்ணின் காம வேட்கைச் சமூகப் பண்பாட்டை மீறுவதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்காமல் இயல்பிலேயே அப்படியொரு தன்னுணர்வுடன் இருக்கிறது என்பதை    உறுதி செய்யும் விதமாகவே கதையின் முடிவையும் அமைக்கிறார் கதாசிரியர் சந்திரா.

ஐயப்பன் தன் சொந்தக்காரர்களை அழைத்து அந்தக் காரில் ஏறச் சொல்லி விட்டுத் தானும் உட்கார்ந்தான். கார் ஆற்று பாலத்தின் வழியே அவள் ஊருக்கு போனது.குழந்தை ஜன்னல் வழியே ஓடும் மரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தது. ஐயப்பன் வீட்டுப் பெண்கள் மருதாணியின் பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னதும் அவள் அம்மா ஓடிவந்து மருதாணியை அடி அடி என்று அடித்து வீட்டுக்குள் போகச் சொன்னாள்.  மருதாணியின் உடலில் வேட்கை அப்போது முழுமையாக நிறைவடைந்தது.

கண்ணீர் ஏதுமற்ற தீர்க்கமான முகத்துடன் அவள் அறைக்குள் போனாள்.

கண்ணீர் ஏதுமற்றுத் தனது காமத்தை – பாலியல் விழைவை நிறைவேற்றிய மருதாணியை எழுதிக் காட்ட வேண்டும் என நினைத்த சந்திராவின் எழுத்து பெண்ணுடலுக்குள்ளும் ஒரு தீராத வேட்கை இருக்கிறது; அது சொல்லப் பெறுவதில்லை; குறைந்த பட்சம் எழுத்தில் கூட எழுதப்பெறுவதில்லை என்று உணர்ந்து எழுதிக்காட்ட வேண்டும் என்று எழுதிய எழுத்தாக இருக்கிறது.