மேற்கத்திய, குறிப்பாக ஆங்கில அமெரிக்க இலக்கிய வரலாற்றின், தலைமை ‘ஜீயரான’ ஹெரால்ட் புளூம் (ஜுலை 11, 1930-அக்டோபர் 14, 2019) மரணமடைந்தார் – 89 வது வயதில். யேல் பல்கலைக்கழக பேராசிரியராக நீண்ட காலம் செயலாற்றிய, The Western Cannon, Shakespeare: The Invention of the Human, Poetry and Repression, How to Read and Why ஆகிய பிரசித்தமான நூல்களை எழுதிய புளூம் இலக்கிய விமர்சனத்தில் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் என்பன இரண்டு:
1) வாசிக்க எளிமையான இலக்கிய அறிமுகங்களை அவர் நிறைய எழுதி இருக்கிறார். இலக்கிய சாதனைகள், இலக்கிய மேதைகள் போன்ற வரிசையில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அதைவிட அதிகமாக பல்வேறு விமர்சன தொகை நூல்கள். இலக்கியத்தை சுலபத்தில் ஜீரணிக்க விரும்பும் பிஞ்சுவயிறு கொண்ட வாசகர்களுக்கு ஏற்றவர் புளூம். ஒவ்வொரு நல்ல பிரதியும் சுலபத்தில் விளக்கமுடியாதபடி பல்வேறு சிக்கல்களும் உள்முடிச்சுகளும் கொண்டது. புளூம் இப்பிரதிகளை எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் விளக்குவார். இதற்காக அவர் எழுத்தாளனின் வாழ்வை எளிமைப்படுத்தப்பட்ட கருத்துக்களாக்கி, அவற்றை பிராயிடிய உளவியலின் அடிப்படையில் சுருக்கி புரிந்துகொண்டு, அவற்றைக் கொண்டு அவரது படைப்பை ரத்தபரிசோதனை முடிவைப் போல (“அட, உங்களுக்கு ஹெச்.ஐ.வி பாஸிட்டிங் சார். சாவுங்க!”) எளிமைப்படுத்துவார். இதன்மீது அவர் தனது முரட்டு ரசனையை திணித்து “ஒழுங்க மரியாதையாக நான் சொல்றதை ஒதுக்கோ, இல்லாட்டி நீ ஒரு மடையன், முட்டாள், ரசனை கெட்டவன்” என வாசகனை மிரட்டுவார். மனதளவில் பலவீனமான வாசகர்கள் உடனடியாக புளூமின் காலில் விழுந்து சரணடைவார்கள். அடுத்து அவர்கள், பயத்திலும் சுயவெறுப்பிலும் உள்சுருண்டு, புளூமின் பார்வையை சிரமேல் ஏற்று, ஆங்கில இலக்கியத்தைக் கொண்டாடி புளகாங்கிதம் கொள்வார்கள்.
2) தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தனி சாதனைகள் என நிறுவி அதன்வழி ஆங்கில நுண்ணுணர்வே, ஆங்கில படைப்புலகமே, கலாச்சாரமே மேம்பட்டது எனும் ஒரு நவகாலனிய ஆக்கிரமிப்பை உலகின் மீது நிகழ்த்தினார். ஷேக்ஸ்பியரை விட்டால் இந்த உலகில் வேறு பெரும் படைப்பாளியே கிடையாது என திரும்பத் திரும்பக் கூறி வெள்ளையனை விட்டால் இந்த உலகில் மேம்பட்ட மனிதனே இல்லை எனும் சித்திரத்தை அவர் உருவாக்கினார். இலக்கியத்தில் அரசியலுக்கு இடமில்லை எனும் கருத்தின் வழி அவர் மேற்சொன்ன விமர்சனத்தை உதாசீனித்து வேறு விடுவார். யார் தன்னை விமர்சித்தாலும் அவரது பதில் “போடா அபிஷ்டு” என்பதாக இருக்கும் (உருவகமாக சொல்கிறேன், அவருக்கு பிராமணத் தமிழெல்லாம் தெரியாது.)
ஹெரால்ட் புளூமை நீங்கள் தமிழில் இருவருடன் ஒப்பிடுவதானால் ஒருவர் க.நா.சு மற்றவர் ஜெயமோகன். இந்த இருவரில் ஜெயமோகன் புளூமை விட மேலான விமர்சகர் தான் என்றாலும் இலக்கிய பிரதியை எழுத்தாளனின் வாழ்க்கையைக் கொண்டு விளக்கும் பாணியை இருவரும் வலுவாக நம்பினார்கள். உ.தா., ஜெ.மோ மனுஷ்யபுத்திரனின் கவிதை / சமூக நோக்கை அவரது “ஊனமான” உடல் நிலையைக் கொண்டு நிறுவுவதை பல வாசகர்கள் ஒருவித அதிர்ச்சியுடன் எதிர்கொண்டதைப் போன்றே மேற்கில் பலரும் புளூமின் “வாழ்க்கைக்கதை” விமர்சனங்களையும் பீதியுடன் கண்டார்கள். கடந்த 30-40 ஆண்டுகளில் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் புளூமை ஒரு ஆளுமையாகவே இதனாலே பொருட்படுத்தாமல் இருந்தனர். புளூமும் தன் பாட்டுக்கு “நானும் இந்த கோட்பாட்டுவாதிகளை பொருட்படுத்தவில்லை. சமூக கோபம் என்பது ஒருநாளும் விமர்சனம் ஆகாது” என தீர்ப்பெழுதினார். (பின்னமைப்பியல், கட்டுடைப்பு, பெண்ணியம், பின்னமைப்பியல் பெண்ணியம், மார்க்ஸியம் ஆகியவற்றை அவர் எப்படி வெறும் அரசியல் கோபம் என வகுத்துக் கொண்டார் என்பது ஒருவித விசித்திரமே.)
இதன் பொருள் புளூம் ஒரு நுண்ணுணர்வோ வாசிப்பு ஞானமோ அற்றவர் என்பதல்ல. அவர் மிக நுணுக்கமான புத்திசாலியான வாசகர் என்பதை அவரது விமர்சனங்களைப் படிக்கும் எவரும் உணர முடியும். ஆனால் இலக்கியத்தை ஒரு தனி விழுமியமாக கண்டு விமர்சனத்தை ஒழுக்கவியலாக அவர் முன்னெடுத்தார் என்பதே அவரது பிரதான பிரச்சனை. புத்தகங்களை அவர் கையில் சாட்டையுடன் தான் எடுப்பார். “ம்ஹும் இது சரியில்லை” என்று தூக்கி எறிந்து விட்டு அந்த எழுத்தாளனை முதுகில் ஒருமுறை சாட்டையால் விளாசுவார். அல்லது பூமாலை இட்டு பாராட்டுவார்.
பிரதியை எழுத்தாளனிடம் இருந்து விலக்கி, அடுத்து மெல்ல மெல்ல பிரதியிடம் இருந்து அர்த்தத்தை பிரித்து, அர்த்தத்தில் இருந்து வாசிப்பை விடுதலை அடைவதே வாசிப்பின், மனித இருப்பின் நோக்கம் எனும் இடத்துக்கு கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலான கோட்பாட்டு விமர்சனம் வந்தடைந்துள்ளது என்றால் ஹெரால்ட் புளூமோ இந்த முன்னெடுப்பை நேர் மாறாக செய்தார் – வாசிப்பின் நோக்கம் என்பது புளூமைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனின் நோக்கத்தை அந்த பிரதியில் கண்டடைவது. அதை உறுதிப்படுத்த அவர் எழுத்தாளனின் பேட்டியில் இருந்து வாக்கியங்களை மேற்கோள் காட்டுவார். பிறகு “நீ அப்போ இப்படி சொன்னே இல்ல, அதான் இப்படி இப்போ இந்த கதையை எழுதி இருக்கே” என தீர்ப்பு எழுதுவார். இது நமது காவல்துறை விசாரணை பண்ணி குற்றவாளிக்கு முதல் தகவல் அறிக்கை எழுதுவதற்கு இணையாக இருக்கும். ஹெமிங்வேயின் “கடலும் கிழவனும்”, தல்ஸ்தாயின் “அன்னா கரனினா” ஆகிய நாவல்களுக்கு புளூம் எழுதிய விமர்சனங்கள் இதற்கு “உன்னத” உதாரணங்ககள்.
புளூமின் “அன்னா கரனினா” இலக்கிய விமர்சனம் சுவாரஸ்யமானது என்றாலும் அவர் அன்னா என்பது தல்ஸ்தாயே தான் என முடிவுக்கு வரும் இடம் மிக மிக சிக்கலானது. அடுத்து அவர் தல்ஸ்தாயே தல்ஸ்தாயை காதலிக்கிறார் எனும் அவதானிப்பை வைக்கிறார். ஏன்?
நீங்கள் வாழ்க்கைக்கதை விமர்சனத்தை செய்யும் போது எழுத்தாளன் எழுதுவது தன் கதையையே எனும் எளிமைப்படுத்தலை விமர்சனமாக முன்வைக்கிறீர்கள். இப்போது “எழுத்தாளன் ஏன் தன் கதையை சொல்ல இலக்கிய பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும்?” என புளூமிடம் கேட்பீர்கள். அதற்கு எழுத்தாளன் தன் வாழ்க்கைக் கதையையே நேரடியாக (கதைக்குப் பதிலாக) எழுதலாமே? இதற்கு பதிலளிக்க புளூம் பிராயிடிடம் செல்கிறார்.
எழுத்தாளன் தான் நேரடியாக தன்னிடம் எதிர்கொள்ள முடியாத / விரும்பாத தனக்குள்ளே அழுத்தி அடக்கப்பட்ட உணர்வுகளை கதாபாத்திரங்கள் மூலம் சித்தரித்து எதிர்கொள்கிறான் எனும் இடத்திற்க்கு வருகிறார் புளூம். இப்போது எழுத்தாளன் தான் எதிர்கொள்ள விரும்பாத சுயபிம்பத்தை ஒரு பாத்திரமாக்கி அதனுடன் உரையாடுகிறான், அதுவே இலக்கிய பிரதி என முடிவு செய்கிறார் அவர். இங்கு, எழுத்தாளன் இரண்டு குரல்களாக பிரிகிறான் – தனது இருண்மையை அவன் தனது பகுத்தறிவின் ஒளியில் அடைவதே படைப்பூக்கமாகிறது என புளூம் சொல்கிறார் (இது ஏற்கனவே பிராயிட் சொன்னது தான்). ஆக அவர் ஒரு காதல் கதையை படித்தால் அதில் வரும் பெண்ணும் அந்த பெண்ணை காதலிக்கும் ஆணும் அதை எழுதுகிற எழுத்தாளனே தான் எனும் எளிமைப்படுத்தப்பட்ட பார்வையை வந்தடைகிறார் (இதனாலே அன்னா வழி தல்ஸ்தாயே தல்ஸ்தாயையே காதலிக்கிறார் எனும் அபத்தமான பார்வையை புளூம் முன்வைக்கிறார்). எந்த படைப்பில் இந்த சுய-ஆட்கொள்ளலை ஒரு எழுத்தாளன் கடந்து செல்கிறானோ அதுவே மேம்பட்ட படைப்பு என சொல்கிறார். “கடலும் கிழவனும்” நாவலில் சாண்டியாகோவும் அவன் பிடிக்கும் அந்த பெரிய மீனும் ஹெமிங்வேயே தான் என புளூம் சொல்கிறார். ஹெமிங்கே தன் சுய-மோகத்தை மீற முடியாததால் இந்நாவல் ஒரு தோல்விப்படைப்பே என்கிறார். ஆனால் ஹெமிங்வேயின் தனிவாழ்க்கையைக் கடந்து தன்னால் அந்நாவலை, ஒரு பிரதியாக மட்டுமே, வாசிக்க முடியவில்லை என்பது தன் விமர்சனத்தையே ஒரு “தோல்வி விமர்சனம்” ஆக்குகிறது என்பது பற்கள் உதிர்ந்த காலத்திலும் புளூமுக்கு ஏனோ புரியவில்லை.
அறிதல் என்பது, லகான் போன்ற நவீன உளவியலாளர்களின், நோக்கில் தன்னையோ உலகையோ அறிவது அல்ல – அறிதல் என்பது அறிதலை கடந்து செல்வதே. அப்படி கடந்து செல்லும் பொருட்டே மனிதன் இலக்கியத்தை உருவாக்குகிறான், நுகர்கிறான், அதன் பொருட்டே அவன் உலகுடன் தொடர்ந்து உரையாடலில் ஈடுபடுகிறான். அறிதலின் ஆழத்தில் உள்ளது சூன்யமே, அர்த்தமல்ல. ஒரு பிரதியினுள் விரவியுள்ள உள்முரண்களையும் அடுக்கடுக்கான இருமைககளையும் ஒரு வாசகன் கண்டுகொள்ளும் இடத்தே அவன் பெரும் வாசிப்பின்பத்தை அடைகிறான் என தெரிதா வலியுறுத்துகிறார். நீங்கள் ஒரு கதை / கவிதைக்குள் இது “அது” என அறியும் சற்று முன்பே இது “அதுவல்ல” என்பதையும் உணர்கிறீர்கள். அப்படி உணரும் போதே அந்த பிரதியின் அர்த்தம் தன்னையே ரத்து பண்ணுகிறது.
உ.தா., “மோகமுள்” நாவலில் பாபு யமுனாவை மிதமிஞ்சி விரும்புவதாலே அவளை அடைய தொடர்ந்து முயலாமல் விட்டு விலகி செல்கிறான் (அவளை அடைவது அருவருப்பானது என நினைப்பதாலோ அந்த கூச்சத்தினாலோ குற்றவுணர்வாலோ அல்ல.) யமுனாவும் பாபுவை விரும்பினாலும் அவனை தான் அடைய நினைப்பதே உள்ளுக்குள் அவனை அடைய விரும்பாமல் இருப்பது தான் என உணர்கிறாள். அதாவது பாபுவின் இச்சை முன்னோக்கி ஓடினால் யமுனாவின் இச்சை பின்னோக்கி ஓடுகிறது. இருவரின் இச்சையையும் வாசகன் அதன் உள்முரண்களுடன் மட்டுமே அறிகிறான். இந்த இச்சை என்பது நிகழும் போதே நிகழாமலும் இருக்கிறது. ஒரு பெண் ருதுவாகும் போதே குழந்தையாகவும் நீடிப்பது போன்றது இது. இதுவே “மோகமுள்ளின்” வாசிப்பு இன்பம். அந்த இன்பம் எனும் “அது” எதுவென வாசகன் முழுக்க பகுத்துணர தி.ஜா விடுவதில்லை என்பதே அவரது கலை. நம் ஒவ்வொருவரது மோகம் என்பதும் தள்ளிப் போடுவது தானே! நாம் ஒருத்தியை மோகிக்கும் போதே அவளை மோகிக்காமல் மற்றொருத்தியாக மாற்றவும் செய்கிறோம் தானே. இப்போது “மோகமுள்ளை” வாசிப்பது நம் இருப்பை உணரும் அனுபவமாகிறது. “அதுவே” மோகமுள்ளை மகத்தான இலக்கியமாக்குகிறது.
இப்படியே இலக்கிய வாசகன் இலக்கியத்தை அணுகுகிறான் எனும் முக்கியமான “புரிதல்” புளூமைப் போன்ற ஆரம்பநிலை உருவியல் (formalist) விமர்சகர்களுக்கு என்றுமே விளங்கியதில்லை என்பது ஒரு பெரும் துயரம். ஒரு பெண்ணின் உடலைப் பார்த்து அதுவே பெண்மை என நம்புவதைப் போன்ற அபத்தம் இது.
நாகார்ஜுனரின் பௌத்த தத்துவ பரிச்சயம் கொண்ட இந்திய வாசகர்களுக்கு இத்தகைய விமர்சங்களின் பிழை எதுவென சுலபத்தில் புரியும். ஆனால் புளூமுக்கோ, க.நா.சு போன்ற ரசனைவாதிகளுக்கோ ஆச்சரியமாக இந்த நுணுக்கம் விளங்கவில்லை. இவர்களை நாம் மேற்கின் புலனறிவாதம் (empiricism) எனும் அறிவியல் சார் பொருண்மைவாத தரப்பாக புரிந்து கொள்ளலாம். மொழி, பண்பாடு, இலக்கியம், தத்துவம், மெய்யியல் ஆகிய துறைகளின் நேரெதிர் பள்ளியை சேர்ந்த இத்தகைய விமர்சகர்கள் இலக்கிய வாசிப்புக்கு செய்த பங்களிப்பு என்பது பெருமளவு பாதகமே அன்றி சாதகமானது அல்ல.
புளூமின் விமர்சனத்தைப் படிக்கையில் எனக்கு, சுவாரஸ்யமாக, நான் பங்குபெற்ற விஷ்ணுபுரம் வாசகர் வட்ட விவாதங்கள் நினைவுக்கு வருகின்றன. இவர்களும் புளூமைப் போன்றே ஒரு பிரதியை படைப்பாளியின் வாழ்க்கை, ஊர்ப்பின்னணி, அவனது வரலாறு மற்றும் பிரதியின் எளிய வடிவ சங்கதிகளைக் கொண்டே சுருக்கி புரிந்து கொள்கிறார்கள். ஒருவேளை புளூம் தமிழகம் வந்திருந்தால் “விஷ்ணுபுரம் மேற்கத்திய விமர்சகர் விருது” என ஒன்றை அமைத்து அவருக்கு அளித்து விழா எடுத்திருப்பார்கள் எனத் தோன்றுகிறது. சொர்க்கத்தில் இருந்து க.நா.சுவும் பூ தூவியிருப்பார்.
ஹெரால்ட் புளூம் 89 வயது வரை உயிருடன் வாழ்ந்த, தன் இருப்பால் இலக்கிய வாசிப்பை மேலும் மேலும் பின்னுக்கு நகர்த்திய, ஒரு எலும்புக்கூடு. அவருக்கு தமிழில் வாரிசுகள் இன்றும் இருக்கிறார்கள் என்பது ஒரு வேடிக்கையான துன்பியல்.