நோபல் பரிசு கிடைத்ததாக ஒரு பெரிய எழுத்தாளரே ஏமாந்த கதை உங்களுக்குத் தெரியுமா? நண்பர்கள் தங்களுக்கிடையில் Prank என்ற பெயரில் ஏமாற்றி விளையாடுவது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் சமீபகாலமாக பெரிய நிறுவனங்களே Prank செய்துவருகின்றனர். ஏன் நமது அரசாங்கமேகூட 2ட்ரில்லியன் பொருளாதாரம் , 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்றெல்லாம் நம்மிடம் விளையாடுவது சர்வ சகஜமாகிவிட்டது. அப்படியிருக்க பெரிய எழுத்தாளர் ஒருவர் நோபல் பரிசு பெற்றுவிட்டார் என்று அறிவித்து ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
இலக்கியத்திற்காக நோபல்பரிசு வழங்கப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் ஒரு எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றுவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக ஏமாற்றப்பட்ட துயர சம்பவம் இந்த ஆண்டு அரங்கேறியுள்ளது. The Sea, Ancient light, The Book of Evidence போன்ற புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கிய புக்கர் பரிசுபெற்ற ஐயர்லாந்து எழுத்தாளர் ஜான் பேன்வில் தான் அப்படி ஏமாற்றப்பட்டிருக்கிறார்.
வானொலி ஒன்றிற்குப் பேட்டியளித்த எழுத்தாளர் ஜான் பேன்வில் இந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். வியாழனன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறப்போவது யாரென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் 40 நிமிடங்களுக்கு முன்பு, அப்பரிசை வழங்குகின்ற ஸ்வீடிஷ் அகாதெமியிலிருந்து அழைப்பு வந்தது என்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வெல்லப்போகும் இருவரில் தானும் ஒருவர் என்று தெரிவித்தனர் என்றும் கூறினார்.
ஆனால் உண்மையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு போலந்தை சேர்ந்த புதின எழுத்தாளர் ஓல்கா தோக்கர்ஜுக் மற்றும் ஆஸ்திரிய எழுத்தாளர் பீட்டர் ஹண்ட்கே ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தோக்கர்ஜூக் 2018-ஆம் ஆண்டிற்கான விருதினையும், ஹண்ட்கே 2019-ஆம் ஆண்டிற்கான விருதினையும் பெற்றுள்ளனர்.
பேன்வில் இதுபற்றி மேலும் கூறியதாவது: “எனக்கு அழைப்பு வந்த அந்த எண்ணிற்குத் தொடர்புகொண்டு நான் மீண்டும் பேசமுயற்சித்தபோது தொடர்ந்து அந்த எண் பிஸியாக இருந்தது. ஆனால் அந்த எண் ஸ்வீடிஷ் அகாதெமியின் தொலைபேசி எண் தான். அழைத்துப் பேசியவரும் மிகவும் நம்பும்படியாகப் பேசினார். அதனை நான் எப்படி நம்பாமல் இருக்கமுடியும்” என்றும் குறிப்பிட்டார்.
அந்த தொலைபேசி அழைப்பினை நம்பி, தான் நோபல் பரிசு பெற்றுவிட்டதாகத் தன் நண்பர்களிடமெல்லாம் அதனைக் கூறியுள்ளார். பேன்வில் தன் நண்பர்கள்மூலம் அதற்கான விருந்து ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். ஆனால் நோபல் பரிசு அறிவிப்பைத் தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகள்தான் “அப்பா நான் நேரலையில் நிகழ்ச்சியைப் பார்த்தேன்; பரிசு உங்களுக்கில்லை” என்று உண்மையைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் தகவல் சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் பரிசு தனக்குக் கிட்டவில்லை என்றும் விருந்து ஏற்பாடுகளைக் கைவிட்டுவிடுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த பேன்வில்-ற்கு முன்னர் தொடர்புகொண்ட அதே நபரிடமிருந்து மீண்டும் ஒரு குரல்பதிவு வந்தது. அதில் கடைசி நேரத்தில் நடுவர்குழுவினர் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்வீடிஷ் அகாதெமியின் மீது காழ்ப்புணர்வு கொண்டு அவர்கள்மீது கலங்கம் கற்பிக்க எண்ணம்கொண்ட அகாதெமியிலேயே உள்ள யாரோதான் இப்படிச் செய்துள்ளனர் என்று தான் கருதுவதாக அந்த எழுத்தாளர் கூறியுள்ளார்.
அந்த எழுத்தாளர் 40 நிமிடங்கள் தான் நோபல் பரிசு பெற்றவன் என்று எண்ணியிருந்துள்ளார். அந்த 40 நிமிடங்கள் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு உற்சாகமாக இருந்ததாகத் தெரிவித்தார்.
இப்படி ஒரு பெரிய எழுத்தாளரே உலகப் புகழ்பெற்ற நோபல் பரிசு விவகாரத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பது சற்றே வருத்தத்திற்குரிய செய்திதான்.