திரைப்படம் மேதைகளுக்கான கலைவடிவம் அல்ல. அது பாமரர்களுக்கானது
-வெர்னர் ஹெர்ஸோக்
தமிழ் சினிமாவின் மையங்கள் ஒரு புறம் வணிக வெற்றியை நோக்கியும் இன்னொரு பக்கம் கலாபூர்வ உன்னதங்களுக்கான முயற்சித்தலும் என இரண்டாகப் பிளந்தாலும்கூட ஒரு திரைப்படத்தின் வணிக வெற்றியிலிருந்துதான் அதன் சரித்திரம் தொடங்குவதாகப் பொருள். அப்படியான மையங்களை மாற்றி அமைப்பதற்கான முயல்வுகள் சென்ற நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பலமுறை நிகழ்ந்திருக்கின்றன. புராணப் படங்களிலிருந்து சமூகத் தளத்துக்கு மாற்றமடைந்ததையும் புனையப்பட்ட அரங்கங்களில் இருந்து நிஜமான கிராமங்களுக்குப் பெயர்ந்ததையும் சொல்ல முடியும். அதைப்போலவே காதல் என்கிற சாகாவரம் பெற்ற திரைக்கதைக்கான இடுபொருளை ஆய்வுசெய்தால் காதலைத் திரைப்படுத்துவதில் கிடைத்த எல்லா விதமான திரைப்படங்களையும் பார்த்துச் சலித்து “அடுத்தது என்ன?” என்று சாமான்ய தமிழ் ரசிகன் அயர்ந்திருந்த பொழுதொன்றில் 90களின் மத்தியில் வெளியான காதல் கோட்டை அகத்தியனுக்கு சிறந்த திரைக்கதை மற்றும் இயக்கத்துக்கான இரட்டை தேசியவிருதுகளையும் பெற்றுத்தந்தது.
பெரும் ஓட்டத்துடனான வணிக வெற்றியும் பல இந்திய மொழிகளுக்குப் பெயர்ந்த அதன்பின் விஸ்தாரமும் கூடுதல் தகவல்களே. ஒரு திரில்லர் படத்தில் மாத்திரமே சாத்தியமாகிற இறுதிவரை குறையாத விறுவிறுப்பை காதல் படத்தில் சாத்தியப்படுத்தியது காதல் கோட்டை. நல்லவர்களுக்குக் கெட்டவர்களால் ஏற்படும் துயரிலிருந்து தப்பித்தலைக் கதையாக்கிக் கொண்டிருந்த சினிமாவில் சகஜ மனிதர்களின் முரண்பாடுகளைக் கலைத்துப் போடுவதன் மூலமாகவே திரைக்கதை நகர்ந்தது ஆரோக்கியமான புதுமை. கடிதம் மூலமாக நட்புக் கொள்வதென்பது அதற்கு முந்தைய ஐம்பது ஆண்டுகால தமிழ் மத்யம கூட்டு ஞாபகத்தின் செல்வாக்கான மற்றும் அதிகம் சொல்லப்படாத இடுபொருள். அதனைக் கதையின் மையக் கருவாக்கியதன் மூலமாக இயல்பான மனிதர்கள் எல்லோர்க்கும் நிகழ வாய்க்கிற சம்பவங்கள் கூர்மையான வசனங்கள் என்று இந்தப் படத்தின் பெரிய வெற்றி முன் கூட்டித் திட்டமிடாத ஒன்றுதான்.
நாயகனும் நாயகியும் படத்தின் கடைசி ஃப்ரேமில்தான் முதல் முறை சந்தித்துக் கொள்வார்கள் என்று இதன் ஒருவரியைத் தீர்மானித்துக் கொண்டு களமிறங்கிய புள்ளிதான் அகத்தியனின் மாபெரிய தைரியம். சென்ற நூற்றாண்டில் செல்ஃபோன் இல்லை. கடிதங்கள் புழக்கத்தில் இருந்தன. இணையதளம் செல்பேசி குறுஞ்செய்தி பேஜர் என உலகம் தன் சுவர்களை உடைக்கத் தொடங்கிய காலத்தில் இப்படி ஒரு படம் சாத்தியம். இதையே அடுத்த படமா எடுத்துக்கலாம் என்று வைத்திருந்தால் ஜஸ்ட் லைக் தட் திரிந்த பால்போல் கெட்டிருக்கும். எடுப்பதற்கு எதுவுமின்றிக் கலைந்து சரிந்திருக்கும்.
தன் சான்றிதழ்களை ரயிலில் தவறவிடுகிறார் இளம்பெண் கமலி, அதை கண்டெடுக்கிறான் இன்னொரு திசையில் தனது பயணத்தை மேற்கொள்ளும் சூர்யா. மிகுந்த பொறுப்புணர்வுடன் அதை கமலியின் முகவரிக்கு அனுப்பிவிட்டு வட இந்தியாவின் ஒரு நகரத்தில் புதிய வேலையை நோக்கி சென்றுவிடுகிறான். கமலி சூர்யா இருவருக்குமிடையே கடிதங்களின் வழியாக நெருக்கமான நட்பு ஏற்படுகிறது. அதுவே பிற்காலத்தில் கனிந்து காதலாகிறது. ஒருவருக்காக ஒருவர் காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள். சூழல் நிமித்தம் சூர்யா சென்னை வர கமலியும் சென்னை வருகிறார். இருவரும் சந்தித்துக் கொண்டாலும் பேசுவதில்லை. பேசிக் கொண்டாலும் அது ஒரு பெயர் கேட்கும் அளவுக்கு கூட இல்லை. இப்படியான காணாமல் காதல் கடிதம் வழி அன்பு என்கிற எளிய கதையை எல்லா நிலத்துக்கும் ஆன காட்சி அனுபவமாக மாற்றினார் அகத்தியன். எப்படி, எங்கனம் அவர்கள் காதல் கடிதங்களிலிருந்து மனம்பெயர்ந்து உதடுகளை உடைத்துக் கொண்டு காதலாய்க் கனிந்தது என்பது காதல் கோட்டை படத்தில் கதை. எப்படி பாலச்சந்தர் தன் படவுலகத்தை தனக்கே உண்டான விசித்திர மனிதர்களைக் கொண்டு அவர்களுக்கான தனித்த உரையாடல்களைத் தயாரித்து அவர்களின் மூலமாகத்தான் உணர்ந்த அத்தனை முரண் புதுமை மீறல் எதிர்ப்பு ஒவ்வாமை லட்சியம் அலட்சியம் தனிமை என எல்லாவற்றையும் பேசச் செய்தாரோ அடுத்த காலத்தில் அதை இன்னும் புதிய உறுதியான யதார்த்த மனிதர்களின் தனித்துவங்களை எடுத்துச் சொல்ல விழைந்தவர் அகத்தியன். இந்தப் படத்தில் மழை ஒரு கதாபாத்திரமாகவே நடித்திருந்தது. ரயில் நிலையம் கடைசிக் காட்சியில் மனம் மாறும் வில்லனைப் போலவே பங்கு பெற்றது.
அதுவரை தமிழ் சினிமா கண்டிராத சுயமரியாதையுடனான குணச்சித்திர கதாபாத்திரங்கள் மக்களை வெகுவாக கவர்ந்தன. அகத்தியனின் பாத்திரங்கள் நம்மோடு கலந்து வாழ்பவர்கள். நம்மில் பலராய்த் ததும்பினாலும் ஆளுமையும் கம்பீரமும் உறுதியும் தனித்துவமும் கொண்டவர்கள். அவர்களைப் பேசிப் பழகுபவர்கள் அவர்தம் வித்யாசங்களை உணர்வார்கள். ஆட்டோ ட்ரைவராக வரும் தலைவாசல் விஜய், மணிவண்ணன், ஹீரா, இந்து, கரண், பாண்டு, ராஜீவ் என எல்லாருமே அகத்தியனின் பாத்திரங்கள். காதல்கோட்டை மட்டுமல்ல அகத்தியனின் பல படங்களும் அவரது கதை சொல்லல் முறை வசனங்கள் மற்றும் பாடல்கள் என எல்லாவற்றுக்காகவும் ரசிக்கப்பட்டன. சினிமாவின் நெடிய வரலாற்றில் தன் படங்களை அழுத்தந்திருத்தமாய்ப் பொன்னால் எழுதிய கையெழுத்துக்களாய்ப் பதித்தார் அகத்தியன்.
காலமெல்லாம் காதல் வாழ்க என்று இந்தப் படத்தின் டைடில்ஸ் துவங்கி இறுதிக் காட்சிவரைக்கும் மாபெரிய பரபரப்பை தக்கவைத்தது. படத்தின் பலம் ஒளிப்பதிவு தொடங்கி இசை வரைக்கும் எல்லாமே இனித்தன. காதல் கோட்டை அந்தக் காலத்தின் அற்புதமாகவே ஞாபக ஆழத்தில் உறைகிறது. காட்சி அனுபவத்தின் எல்லா அடுக்குகளிலும் தொண்ணூறுகளின் மத்தியில் சுயமாண்பும் சக மனிதப் போற்றுதலும் மிகுந்த மத்யம உலகத்தின் மாந்தர்கள் நிரம்பி இருந்ததுவும் அதுவரைக்கும் யாரும் சொல்லிப் பார்க்காத காதலைக் கன கச்சிதமாய்ச் சொன்னதுவும் சென்ற நூற்றாண்டின் ஆகச்சிறந்த தமிழ்ப்படங்களின் வரிசையில் காதல் கோட்டைக்கு உண்டான இடத்தை ஐயமற உறுதிசெய்ததன் காரணிகள்.
காதல் கோட்டை மனங்களின் கூட்டுப்பிரார்த்தனை