2011-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது. கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியின் போதே பதவிக்காலத்தை முடித்திருந்த‌ தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக 2016ல் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும்.

ஆனால் தொகுதி வரையறை மற்றும் வாக்காளர்கள் பட்டியலில் உள்ள பல வாக்காளர்களின் பெயர்கள் ஆளுங்கட்சி துணையுடன் நீக்கப்பட்டிருந்தது, பழங்குடி இன மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் சரியான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது எதிர்க்கட்சியான திமுக.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பழங்குடி இன மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, முறையான வாக்காளர்களை சேர்த்துவிட்டு 2016ம் ஆண்டு திசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .

இந்நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்து விட. அதற்குப் பிறகு ஊழல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை. பாஜக கொடுத்து வரும் நெருக்கடி. மூன்றாக பிளவுபட்ட அதிமுகவால் உள்ளாட்சி தேர்தலில் நிற்க தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எழுந்த தோல்வி பயத்தின் காரணமாக. கடந்த நான்கு வருடங்களாக பல முறை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் உயர்நீதிமன்றமே தலையிட்டு கண்டித்த பிறகும். மழைக்காலம் வெயில் காலம் என பல்வேறு காரணங்களைச் சொல்லி வந்த தமிழக அரசு, உள்ளாட்சித் தேர்தலை நினைத்து அஞ்சி நடுங்கியது.

மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஒத்துழைப்பையும் கொடுக்காமல் தேர்தலை ஒத்திப்போட்டது. ஜெயலலிதா முதல் முறையாக ஆட்சியில் அமர்ந்த  1991-96 காலகட்டத்தைப்போல தனி அலுவலர்களை வைத்தே உள்ளாட்சிகளை மீதமுள்ள காலமும் ஓட்டிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து கும்பகர்ண தூக்கத்தில் இருந்தது.
தற்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியின் காரணமாக கூட்டணி கட்சியினரின் தோழமையுடன் உள்ளாட்சித் தேர்தலைச்சந்திக்க அதிமுக தயாராக உள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து.

திமுக, அதிமுக போன்ற கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல் திருவிழாவின் முதற்கட்டமாக விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளது.

புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுக்கு எல்லை வரையறைக்கான அறிவிப்பும், அந்த மாவட்டங்களுக்கான ஆட்சியர்களை தமிழக அரசு அறிவித்து வரும் வேளையில். தமிழக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற 6.5 லட்சம் தேர்தல் பணியாளர்கள் கொண்ட பட்டியலை கேட்டுள்ளது மாநில தேர்தல் ஆணையம்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த சுப்பிரமணியன் மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள விவகாரம் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்டதாலேயே தற்போது தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார் இவர் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கடுமையான குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  ஊழல் அரசாங்கத்தின் அவல ஆட்சி சிறப்பாக நடக்கிறது என்று கூறியுள்ளார் தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

எதிர்கட்சி தலைவர் மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரத்தில் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் மறுபடியும் நடக்குமா அல்லது கடந்த முறைபோல கடைசி கட்டத்தில் நிறுத்தப்பட்டுவிடுமா என பெருத்த சந்தேகத்தோடே ஆளும் கட்சிகளின் கூட்டணி கட்சியினர் சோகத்தோடு வலம் வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில்  15 மாநகராட்சிகளும்,150 நகராட்சிகளும்,519 பேரூராட்சிகளும்,12,524 ஊராட்சி மன்றங்கள் மற்றும் 386 ஊராட்சி ஒன்றியங்கள் என அரசு அலுவலகங்கள் இருந்தாலும். கடந்த நான்கு வருடங்களாக அதை நிர்வகிக்க மக்களால் தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் இல்லாமையால். தனி அலுவலர்களைக் கொண்டே இதுவரை காலம் கடத்தி வந்தது தமிழக அரசு. இதனால் பல்வேறு அரசு அலுவலகங்களில் ஊழல் கரைபுரண்டு ஓடுகிறது. உதாரணமாக சென்னை ஆவடி நகராட்சியில் கடந்த‌ ஒரு வருடத்திற்கு மட்டுமே டெங்கு விழிப்புணர்வுக்காக 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக பொய்க்கணக்கு காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த நிலையை களைய வேண்டி பல்வேறு தரப்பட்ட மக்கள் ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற பல்வேறு கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில்தான் பாஜக. பாமக. தேமுதிக என கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்போடு உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்க காத்திருக்கும் அதிமுகவிற்கு முதல் செக் வைத்துள்ளது அதிமுகவின் தாய் கட்சியான பாஜக. கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய பாஜகவின் இல.கணேசன். தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலே தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அதிமுகவிடம் 5 மாநகராட்சியை பாஜக கேட்டுள்ளதாகவும், காஷ்மீரில் நீக்கப்பட்ட சிறப்பு அதிகாரம். முத்தாலக் சட்ட ஒழிப்பு. பாபர் மசூதி தீர்ப்பு என இந்துக்களுக்கு ஆதரவான செயல்பாடுகளால் தமிழகத்தில் தங்களது வாக்கு வங்கி உயர்ந்திருப்பதாகவும். அதன் அடிப்படையில் முக்கிய சில மாநகராட்சி மற்றும் நகராட்சிகளை தங்களுக்கு ஒதுக்கவேண்டுமென டெல்லி மேலிட தலைவர்கள் மூலம் நிர்பந்தம் கொடுத்து வருவதாகவும். உள்ளாட்சி தேர்தலில் சராசரியாக 30 சதவிகித ஒதுக்கீட்டினை வழங்க நிர்ப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி விக்கிரவாண்டி தொகுதியில் தங்களால்தான் அதிமுக வெற்றி வாகை சூடியது என மார்தட்டிக் கொள்ளும் பாமகவும் தனது பங்கிற்கு குறிப்பிட்ட சில மாநகராட்சி மற்றும் நகராட்சி தொகுதிகளை கேட்டுள்ளதாகவும். தேமுதிக போன்ற இதர கட்சிகளும் மாநகராட்சி இல்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் நகராட்சி இடங்களையாவது எங்களுக்கு ஒதுக்குங்கள் என கோரிக்கை விடுத்துள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி போயுள்ளனராம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள்.

இதுபற்றி மேலும் தகவல் அறிய அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கழுமங்கலம் அதிமுகவின் கிளைச் செயலாளர் கலியபெருமாளிடம் பேசினோம்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு 46 சதவிகித வாக்கு வங்கி உள்ளது . கூட்டணி கட்சியினரின் அழுத்தங்களுக்கு செவிசாய்க்காமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்றும். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின்  மேற்கொண்டு வரும் மக்கள் நல போராட்டத்திற்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருவதால் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றுவது சந்தேகம்தான். ஆனால் தற்போது பாஜகவின் அழுத்தம் காரணமாக மாநகராட்சிகளை விட்டுக் கொடுத்தால் அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் திமுகவே வெற்றி வாகை சூடும்‌. அந்த சந்தர்ப்பத்தை அதிமுக தலைமை வழங்கக்கூடாது என்று கூறுகிறார்.

திமுக தொண்டர்களோ புதிய உற்சாகத்துடன் இந்த உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள தயாராகிக் கொண்டு வருகின்றனர். கடந்த 10ம் தேதி நடைபெற்ற திமுகவின் பொதுக்குழுவில் பேசிய தலைவர் ஸ்டாலின். கட்சிக்காக தேர்தல் சமயங்களில் மட்டுமே வேலை செய்யும் பொறுப்பாளர்கள் தூக்கியடிக்கப்படுவார்கள் என்றும். மக்கள்தான் நமது முதலாளிகள். அவர்களிடம் கட்சியைக் கொண்டு சேருங்கள் என கூறியுள்ளது. தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த திமுகவின் ஐடி விங்கும் விழிப்புற்று தினம் பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.

ஆட்சியர்கள் மாற்றம். உள்ளாட்சி தொகுதி வரையறை என பரபரப்பான காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக கொடுத்து வரும் அதிமுக அரசும்.
அதன் பிடியில் உள்ள தேர்தல் ஆணையமும். உண்மையாகவே உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யுமா? அல்லது  சட்டத்தின் ஓட்டைகள் மூலம் மாற்று வழிகளைத் தேடி, உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் ஒத்திப்போட வேறு ஏதாவது காரணங்களை கூறி தாமதப்படுத்துமா என காத்திருக்கின்றனர் தமிழக மக்கள்.