ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சுமார் 66 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த தேர்தலில் பாஜகவும், கடந்த தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கமும் தனித்தனியாகக் களமிறங்கின. பாஜக தனது முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் ரகுபர் தாஸையே முன்னிறுத்தி 81 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

எதிர்க்கட்சிகளான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஜார்க்கண்ட்முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

காங்கிரஸ் கூட்டணியின்முதலமைச்சர் வேட்பாளராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் அறிவிக்கப்பட்டுள்ளார். 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, பாஜக, காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி இருந்து வருகிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.மதியம் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி42 இடங்களிலும் பாஜக 29 இடங்களிலும் மற்றவை 10 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளர் ரகுபர் தாஸ் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.