நேற்று புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்லாமிய மாணவி ரபிஹாவை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் தனக்கு வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தைத் திருப்பித் தந்துவிட்டார்.
மாணவிக்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.இதுகுறித்து விசாரிக்கப்படுமெனப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மாணவிக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். சு.வெங்கடேசன் மாணவிக்கு இழைக்கப்பட்ட அவமானம் குறித்து குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதி வேண்டுகோளையும் வைத்துள்ளார்.
அவரது கடிதம் வருமாறு:
“குடியரசுத்தலைவர் அவர்களுக்கு, டிசம்பர் 23-ம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அதே விழாவில் ரபிஹா அப்துரஹிம் என்கிற மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தங்கப்பதக்கம் வென்ற தொடர்பியல் துறை மாணவி ரபிஹா நீங்கள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். நீங்கள் வெளியேறிய பிறகே மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் காரணம் தனது தோற்றம்தான் என்று ரபிஹா சரியாகவே நம்புகிறார். எல்லா விதமான தேர்வுகளுக்கான சுதந்திரமும் உரிமையும் உள்ள ஒரு நாட்டில் ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு இந்தியப் பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
‘வன்முறையில் ஈடுபடுபவரை அவரது உடைகளை வைத்தே அடையாளம் காண முடியும்” என்று பிரதமர் சொன்னதன் நேரடி விளைவாகவே இந்தச் சம்பவத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தையே இப்படி இழிவுபடுத்துவதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமாகவும் நம்பிக்கையாகவும் ஒளிரும் ரபிஹா போன்றவர்களை அவர்களது உடைகளை வைத்து அவமானப்படுத்தும் செயல் இங்குச் சாதாரணமாக அரங்கேறுகிறது.
குடியரசுத்தலைவர் அவர்களே, ரபிஹாவுக்கு ஏற்பட்ட இந்த இழிவைத் துடைக்க தாங்கள் முன்வர வேண்டும் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் கோருகிறேன். ரபிஹாவிடம் வருத்தம் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான செய்தியை நீங்கள் விடுப்பீர்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அவர் மறுத்த தங்கப்பதக்கத்தை நீங்கள் ரபிஹாவுக்கு வழங்க நீங்கள் முன் வர வேண்டும் என்றும் கோருகிறேன் . சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள மதச்சார்பற்ற குடிமகனாகிய நான் விடுக்கும் இந்தக் கோரிக்கைகளை நீங்கள் நல் நோக்கத்தோடு பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும்.
மிக்க நன்றி”.
இவ்வாறு சு.வெங்கடேசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.