காதல் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதிக் கொடுங்கள் என்று நண்பர் மனுஷ்யபுத்திரன் தகவல் அனுப்பினார்.
நான் என் நாவல்களில் காதல் என்ற சொல்லேயே பயன்படுத்துவதில்லை. என் பாத்திரங்கள் நிர்ப்பந்தம் காரணமாக அந்தச் சொல்லைப் பயன்படுத்திவிட்டாலும் அதை அவர்கள் அளவோடு நிறுத்திக்கொள்ளுமாறு பார்த்துக்கொள்கிறேன். அன்பு, பாசம், காதல் போன்ற சொற்களை நான் நேர்வாழ்க்கையிலும், கதைகளிலும் தவிர்க்கிறேன். எல்லாவற்றிற்கும் பொதுவாக பற்று என்ற சொல்லையே நான் தேர்ந்தெடுக்கிறேன்.
ஆண், பெண் இடையே உடல் ஈர்ப்பு வரும்போது அதற்கு காதல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இலக்கியம், சமூகம், அரசியல் ஒற்றுமை இருக்கிறது என்றெல்லாம் நியாயம் கற்பித்துக்கொண்டு உடல் ஈர்ப்பு கொண்டு சிலிர்க்கும் மனிதர்களையே நாம் பார்க்கிறோம்.
பிறந்தவுடனேயே அம்மாவையும், அப்பாவையும் பொறாமையாக ஒரு குழந்தை பார்க்கத் தொடங்கிவிடுகிறது என்று உளவியல் ஆசான் சிக்மண்ட் ஃப்ராய்ட் கூறிச் சென்றுவிட்டார். பற்று, எதிர்ப்பற்று, விருப்பம், எதிர் விருப்பம், ஆசை, எதிர் ஆசை என்று ஒருமை, இருமை வகைமைகளில் உருவெடுக்கின்றன உணர்வுகளின் அடிப்படைகள்.
மனிதன் உணர்ச்சிக்கு அடிமை என்பார்கள். தனக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நினைப்பவன் எல்லாவற்றிற்கும்தான் அடிமையாக இருப்பான். பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்களே மூளைக்கும் இதயத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இதயம் ஏதோ உணர்வின் மையம் போலவும், வீடு கட்டி இருந்துக்கொள்ளக்கூடிய திறந்த வெளி அது போலவும் அவர்கள் பாவிக்கிறார்கள். இதயம் என்பது, கல்லீரல், நுரையீரல் போன்ற மற்றொரு அவசியமான உறுப்புதான். காதலின் குறியீடாக இதய வடிவம் பயன்படுத்தப்படுவதும் அபத்தமானதாகவே இருக்கிறது.
திருமணம் ஆன பின்னால் காதலிக்கத் தொடங்கினேன் என்று வசனம் பேசுபவர்கள் உண்டு. திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்கள் காதலோடு இருக்கிறார்கள் என்று பல தம்பதிகளைப் பற்றி விளக்கங்கள் கூறப்படுவதுண்டு. ஈர்ப்பு என்பதை இப்படி நாசுக்காகச் சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொள்ளாலாம்.
உடல்களை எல்லோரும் கண்காணிக்கிறார்கள். மீறல்களும், அதற்கான நியாங்களும் உடல்கள் சார்ந்து இருந்துவிடுகின்றன. உடல் நேர்மை மிகவும் அரிதாக இருக்கிறது. காதலில் இது அரிதிலும் அரிதாக மாறிவிடுகிறது. இதனால்தான் மன நெருக்கடிகளும் வன்முறைகளும் உருவாகின்றன.
காதல் என்ற சொல்லும் மிகவும் அசிங்கப்பட்டிருக்கிறது. அதில் ஒன்று காதல் மன்னன் என்ற பட்டம். பல பெண்களுடன் தொடர்பு கொண்டு களிப்பவர்களை காதல் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
வெளிநாட்டில் காதல் மன்னர்களாக இருப்பவர்கள்கூட அரசியலுக்கு வந்தால் ஒரு மனைவிதான் வைத்துக்கொள்ள முடியும். ஆனால் இந்தியாவில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காதல் என்ற சொல்லும் அதைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனைகளும் இல்லாதிருந்தால் உலகம் முழுக்க பல கவிஞர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்.
என் மொத்த எழுத்து வாழ்வில் இந்த அளவுக்கு இந்தக் காதல் என்ற சொல்லைப் பயன்படுத்தியதில்லை. அதைப் பயன்படுத்த வைத்த மனுஷ்யபுத்திரனுக்கு நன்றி சொல்லிவிட வேண்டும்.