மும்பையில் நெரிசல் மிகுந்த டோங்ரி பகுதியிலுள்ள பழமையான நான்கடுக்குக் குடியிருப்பு ஒன்று, இன்று மதியம் 1 மணியளவில் திடீரென சரிந்து விழுந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த மும்பை நகர காவல்துறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 10ற்கும் மேற்பட்ட ஆம்புலஸ்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினர், மும்பை நகரப் பேரிடர் மீட்புக் குழு மற்றும் தீயணைப்புக் குழுவினர் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் அங்குள்ள மக்களும் மனிதச்சங்கிலி அமைத்து ஈடுபட்டுவருகின்றனர்.
இதுவரை 4 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 40 முதல் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்கப்படுவோர் அங்குள்ள அரசு ஜெ.ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர் பட்டியலையும் மும்பை நகர காவல்துறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்துவருகின்றது.
100 ஆண்டுகள் பழமையான அந்தக் கட்டிடத்தை கடந்த 2012ஆம் ஆண்டே இடிப்பதற்கு மும்பை கட்டிட பழுதுபார்க்கும் மற்றும் மறுகட்டுமானக் குழு (MBRRB) உத்தரவிட்டுள்ளதாக அதன் தலைவர் வினோத் கோசல்கர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தக் குடியிருப்பு மகாராஷ்டிரா வீட்டுவசதி மற்றும் பகுதி மேம்பாட்டு ஆணையத்தின் அபாயகரமான கட்டிடங்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திரமோடி இச்சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாகவும் பாதிக்கப்பட்டோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.