உன் நிகழ்காலத்தின் பிரம்மாண்டங்களை

உன் கடந்த கால சூனியத்தோடு

ஒப்பிட்டு உடைந்து போகிறேன்….

 

முன்னெப்போதுமில்லாத

ஓர் கரிசனத்தை உன்மேல்

அதீதமாய் வைக்கிறேன்….

 

வாழ்வின் ஏற்றுக்கொள்ள

முடியாத இன்னொரு பக்கத்தை

தான் நீ வாழ்ந்து கடக்கிறாய்

எனும்போது உனக்காய்

என்னிதயம் இரண்டாய்  உடைந்து

சிதறிப்போகிறது…

 

எல்லா விரிசல்களையும்

சரிசெய்துவிடலாம் என்ற என் எண்ணம்

கணக்கற்று  கரைந்து  அடையாளமற்று

சிதைந்து போகிறது…

 

உனக்காக எதையாவது

தந்துவிட எண்ணியே …

ஏதுமற்ற என்னிலையை

வெறுத்து ஒதுக்கி தூரத்தில்

வைத்தே உன்னை ரசித்து

கடக்கிறேன்…

 

நேசித்தலுக்கும்…

நேசிக்கப்படுதலுக்கும்….

இடையில் யாருமற்ற

இவ்வெற்றிடம் உனக்குள்

தனிமையை கொடுக்கலாம்….

சில நாட்கள் வாழ்வின் மீதொரு

வெறுப்பை உமிழ்ந்து போகலாம்..

யாருமற்ற உன் சாலைகளை நீ

விரும்பமின்றி கடந்து போகலாம்…

ஆசை ஆசையாய் வாங்கிய

மலர்களை சூடும் இடமறியாமல்

நீ தூக்கியெறிந்தது காய்ந்து போய்

உன்னை காயப்படுத்தலாம்…

 

எது நடந்தாலும் …

என்ன உனக்குள்  இருந்தாலும்…

உன் அழகிய புன்னகைக்கு

பின்னே உள்ள

வலிகளையும்,

வேதனைகளையும்,

நொறுங்கி போன உன் இதயத்தின்

எண்ணங்களையும்,

கட்டுப்படுத்தி வைத்த ஆசைகளையும்,

யாருக்காக வேண்டியும்

மீண்டும் வரைய நினைக்காதே…

 

இவ்வுலகம் கண்ணால்

கண்ட உன் ஓவியத்தை

உனக்கு பின்னால்

வேண்டுமானால் விமர்சித்து இருக்கலாம்…

உண்மையில் விமர்சிக்க கூட

தகுதியற்ற ஓர் ஓவியத்தை

தான் உன்னை பார்த்த எல்லோரும்

இங்கே வரைந்து கொண்டு இருக்கிறார்கள்

என்பதை மட்டும் மறந்து போகாதே.

 

பின்

வாழ்தல் எளிது.

 

-ஆழ்.