ஆஸ்கார் எதிர்பாராத முடிவுகளுடனும் திருப்பங்களுடனும் நிறைவடைந்தது. முதல்முறையாக முழுவதும் ஆங்கிலம் அல்லாத மொழியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட Parasite நான்கு விருதுகளை அள்ளியது. சிறந்தஇயக்குனர், சிறந்த சர்வதேசப்படம், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த நேரடித் திரைப்படம் என எதிர்பார்க்காத பரிசுகளை பெற்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஒரு வெளிநாட்டுப்படம் நேரடியாக போட்டியில் கலந்துகொண்டு இத்தனை விருதுகளை பெறுவது சாத்தியமா? அகாடமி விதிகள் என்ன சொல்கின்றன?
சிறந்த படத்திற்கான பிரிவில் போட்டியிட அது ஆங்கிலப்படமாக இருக்க வேண்டிய தேவையில்லை. மாறாக,
- சென்ற ஆன்று ஜனவரி 1முதல் டிசம்பர்30-க்குள் அந்தப் படம் ஹாலிவுட் என்றழைக்கப்படும் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் இருக்கும் வணிக திரையரங்குகளில் பொதுமக்களின் பார்வைக்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும்.
- தொடர்ந்து ஏழு நாட்கள் மூன்று காட்சிகள் திரையிடப்பட்டிருக்க வேண்டும், குறிப்பாக மாலை ஆறு மணி மற்றும் பத்து மணிக்காட்சிகள் அவற்றுள் அடங்கியிருப்பது அவசியம்.
- அப்படத்தைப் பற்றியான போதுமான விளம்பரம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- திரையரங்கு அல்லாத மற்ற வழிகளில் வெளியிடப்பட்ட படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டது.
- படத்தைப்பற்றிய விவரங்கள் அகாடமியிடம் டிசம்பர் 1 குள் சமர்பிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேற்கண்ட விதிகளை பூர்த்தி செய்த எந்த படமும் நேரடியாக அனைத்து ஆஸ்கார் விருதுக்கான பிரிவுகளிலும் கலந்துகொள்ளலாம். சரி அதோடு முடிந்துவிட்டதா என்றால் இல்லை. அகாடமி என்பது சுமார் ஆறாயிரம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சங்கம். போட்டிக்கு தயாரிப்பாளரால் சமர்பிக்கப்பட்ட படங்கள் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்ளப்பட, குறைந்தது மொத்த உறுப்பினர்களில் ஐந்து சத ஓட்டுக்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு முன்னோட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுஐந்து முதல் பத்து படங்கள் முன்மொழியப்படும். அந்தப்படங்கள் இறுதி ஓட்டெடுப்புக்கு உறுதிசெய்யப்பட்டு ஆறாயிரம் உறுப்பினரின் வீட்டிற்கும் கடிதம் மூலம் அனுப்பப்படும். உறுப்பினர்களின் ஓட்டெண்ணிக்கையே அனைத்து பிரிவுகளிலும் வெற்றியை தீர்மானிக்கிறது.
பொதுவாக வெளிநாட்டுப்படங்கள் இப்படி பரவலான வெளியீட்டையும் கவனத்தையும் பெறுவது இதுவரை நடந்திராத நிகழ்வு, CrouchingTiger Hidden Dragon போன்ற படங்கள் இதற்கு முன்னர் அந்த வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் அது அமெரிக்க நிறுவனமும் இணைந்து தயாரித்து ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிடப்பட்டது. முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு வேற்றுமொழிப்படம் இத்தகைய பரவலான வெளியீட்டைப்பெற்றது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வணிக வெற்றியை அடைந்ததும் Parasite படத்திற்குபலமாக அமைந்தது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே Parasite சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.இந்த வெற்றியின் தொடக்கம் சென்ற ஆண்டில்கான்ஸ் திரைப்பட விழாவில் Palmde Or விருதைப் பெற்றதிலிருந்து தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் கவனத்தைப்பெற்று ஐரோப்பா முழுவதும் வெளியாகி பெரும் வெற்றியை கண்டது. குறிப்பாக உலகம் முழுக்கவே கொரிய மொழியில் துனைத்தலைப்புகளுடன்இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதுஇதுவேமுதல்முறையாகஇருக்கவேண்டும்.
இந்தப்படத்தினை பரவலாக மக்கள் பார்த்துவிட்டால் ஆஸ்கார் கிடைத்துவிடுமா? என்றால் இல்லை. அதற்க்கு மேலும் பல்வேறு குட்டிக்கரணங்களைப் போட்டாகவேண்டியிருக்கிறது. அகாடமியின் ஆறாயிரம் உறுப்பினர்களில் கணிசமானவர்கள் படத்தை பார்த்திருந்தாலோ அல்லது கேள்விப்பட்டிருந்தால் மட்டுமே அதற்க்கு ஆதரவாக அவர்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். தயாரிப்பாளர் அதற்கென தரகர்களை ஹாலிவுட்டில் கண்டுபிடித்து, பெரிதாக விளம்பரப்படுத்தி பல்வேறு திரையிடல்களையும் விருந்துகளையும் நடத்தி அகாடமியின் உறுப்பினர்களின் மத்தியில் விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சமீப காலங்களில் இந்த முயற்சிக்கே சில மில்லியன் வரை செலவு செய்தாக வேண்டியிருப்பதாக செய்திகள் கிடைக்கின்றன. விசாரணை ஆஸ்காருக்கு முன்மொழியப்பட்டு நீண்ட பட்டியலில் இருந்த பொழுது, வெற்றிமாறன் அங்கு ஆறுமாதம் தங்கி சிலகோடிகள் செலவு செய்து இத்தகைய முயற்சியை மேற்கொண்டதாக பேட்டிகள் தந்தது நினைவிருக்கலாம். இத்தனையும் தாண்டிபடம் அகாடமி உறுப்பினர்களை கவர்ந்திருக்கவும் வேண்டும்.
Bohn Joon Ho மிகவும் ஆழமான சமூக கதைகளை வெகுஜனஜானர் திரைப்படங்களுக்குள் ஒழித்து அசலான திரைமொழியுடன் படைக்கக் கூடியவர். அவருடைய ஏனைய படங்கள் கூட முன்னரே Masterpeice என்றே அழைக்கப்படுகின்றன. இயக்குனராக அவருடைய படிநிலை வளர்ச்சி Parasite படத்தில் அசாதியமான எல்லைகளை தொட்டு நிற்கிறது. காட்சியமைப்பு கதாபத்திர வடிவமைப்பு அவர் பேச வரும் கருத்து என் அனைத்தும் ஒன்றாக குவிந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம் Parasite. சமூக ஏற்றத்தாழ்வுகள் என்பது வளர்ச்சிபெற்ற மேலை நாடுகளில் கூட கொடிய தக்குத்துடன் இன்றைய நாட்களில் உணரப்பட்டு வருகிறது. படம் திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் கதையோடு மக்கள் ஒத்துப்போய் வரவேற்பதை கண்டு ஆச்சர்யப்பட்டு போனதாக இயக்குனர் தனது பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ‘நாம் நாடுகளால், இனத்தால், மொழியால், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் பிளவு பட்டிருந்தாலும்; முதாலாளித்துவம் என்ற கொடிய அரக்கனால் பிணைக்கப்பட்ட ஒற்றை தேசமாகத்தான் வாழ்ந்தது வருகிறோம்’ என்பதை இப்படம் உணர்த்தியதாக பதிவுசெய்துள்ளார். Parasite வெறும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் வரும் வெளிப்புற முரணை மட்டும் பேசவில்லை. அத்தகைய சமூக படிநிலை மனிதமனங்களுக்குள் ஏற்படுத்தும் வன்மத்தையும் ஒவ்வாமையையும் கடுமையாக விமர்சிக்கிறது.
கட்டுப்பாடற்ற முதலாளித்துவம் ஏற்படுத்திய சமூகப்பிளவுகள் பலரை கரையான்களைப்போல பாதாள இருட்டிலும், சிலரை ஒளிபொருந்திய அரண்மனைகளிலும் விட்டுவைத்திருக்கிறது. எல்லாவற்றாலும் கைவிடப்பட்டு ஒட்டுண்ணிகளாக மாற்றப்பட்டவர்கள் தனக்கான ஒரு சிறிய ஆசுவாசத்தையும் பாதுகாப்பையும் தேடும்பொழுது. அவர்களின் நியாயங்களும் அறங்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. Parasite இந்த சமூகப்படிநிலைகளில் பிறக்கும் வெவ்வேறு முரண்களை நேருக்கு நேர் மோதவிட்டு பெரும் வன்மனத்தை வெடிக்கவைத்து முடிகிறது, இங்கு எவர் எவருக்கு ஒட்டுண்ணியாக வாழ்கிறார். முடிவுறாமல் ஒட்டுண்ணிகள் எவ்வாறு உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்ற சுழற்சியை கண்முன்னே விவரிக்கிறது.
இதுவரை உலகம் முழுக்க வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களுக்குகூட கிடைக்காத வாய்ப்பை Parasite பயன்படுத்திக்கொண்டு அமெரிக்க மனசாட்சியை அசைத்துப் பார்த்திருக்கிறது. ஆஸ்கார் விதிகளில் வெகுகாலமாகவே வெளிநாட்டுப்படங்கள் கலந்துகொள்ளலாம் என்றிருந்தாலும், எழுதபப்டாத மரபாக எதையும் கண்டுகொள்ளாமல் கண்மூடி வாழ்ந்து வந்து அகாடெமி இந்த முறை விழித்துப் பார்த்திறுக்கிறது. Parasite மாபெரும் வெற்றியை நிகழ்த்திசாதனை புரிந்திருக்கிறது.
சிறந்த நடிகருக்கான பிரிவில் Parasite படத்தின் நாயகன் சாங்காங்கோ முன்மொழியப்படவில்லை, ஒருவேளை அது நடந்திருந்தால் ஜோக்கர் கதாபாத்திரத்துக்கு கடுமையான போட்டியாக இருந்திருக்கக்கூடும். இருப்பினும் ஆண்டின் சிறந்த நடிப்பை ஜாக்வின் பீனிக்ஸ் சந்தேகமில்லாமல் நிகழ்த்திக்காட்டி சுலபமாக சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றார்.
மிகவும் போற்றுதலுக்குரிய ஒளிப்பதிவாளரான ரோஜர் டீகின்ஸ் 1917 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வென்றதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. இரண்டு மணிநேரப்படத்தை ஒரே ஷாட் போல கட்டமைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டும் ஓடிக்கொண்டும் பாய்ந்து தாவியும் முதல் உலகப்போரின் கிடங்குகளின் வழியே அடவாடித்தனமாக ஒளிப்பதிவு செய்திருந்தது பிரம்மிக்கபடக்கூடிய சாதனை. இத்தகைய பெரும் சவால் மிக்க படத்தில், ஒளிப்பதிவை அழகியல் நேர்த்தியுடனும் சுவாரஸ்யத்தை எகிற வைக்கும் விதமாகவும் அமைத்து பிரம்மிக்க வைத்தார்.
ஹாலிவுட்டின் முடிசூடா மன்னன் பிராட் பிட் மூன்று முறை நடிப்பிற்காக முன்மொழியப்பட்டு இருந்தாலும் இதுவரைவென்றதில்லை என்பது குறையாகவே இருந்து வந்தது, இந்தமுறை Once Upon a Time in Hollywood படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதைப்பெற்றது நெகிழ்ச்சி. சிறந்த துணை நடிகைக்கான விருதை லாரா டென்ன்னும், சிறந்த நடிகைக்கான விருதை ரேனே செல்வேக்கேரும் பெற்றனர்.
பொதுவாக ஆண்கள் கோலோச்சிவரும் மற்றொரு பிரிவான இசைத் துறையில், இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஹில்தூர் என்ற பெண் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆஸ்காரில் ஜோஜோ ராபிட் என்ற படம் ஹிட்லரை நகைப்புக்குரிய பாத்திரமாக மாற்றி பகடி விமர்சனத்துடன் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருந்தது பெரும் கவனத்தைப் பெற்றது. இதைப்போன்ற அரசியல் பகடிப்படங்கள் சமீகாலங்களில் உலகெங்கும் பெருகிவரும் வலதுசாரி அரசியலிற்கு எதிர்வினையாகவும் விமர்சனமாகவும் பார்க்கப்படுகிறது. சிறந்த மறுவுருவாக்கப்பட்ட திரைக்கதைக்கான விருதையும் அப்படத்தின் இயக்குனரும் ஹிட்லர் பாத்திரத்தை ஏற்று வெகுசிறப்பாக நடித்திருந்த Taika Waitti வென்றார்,
வழக்கமாக மிகுந்த கட்டுக்கோப்புடன் தொகுத்து வழங்கப்படும் ஆஸ்கார் இந்த முறை நல்ல தொகுப்பாளர் இல்லாமல் சற்று தொய்வுடன் காணப்பட்டது ஏமாற்றமே. இரண்டாண்டுகளுக்கு முன்பு மிகச்சிறப்பாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கியது நினைவிருக்கலாம். இந்த ஆஸ்கருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ‘கெவின் ஹர்ட்’ சமீபத்தில் தன்பால் ஈர்ப்பாளர்களை புண்படுத்தும் விதமாக பதியப்பட்ட tweet காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டார். இருப்பினும் வேறொரு நகைச்சுவை தொகுப்பாளர் ஹாலிவூட்டில் கிடைக்காமலா போய்விட்டார் என்பது ஆச்சர்யமே!