திரையில் விரியும் இந்திய மனம்19 :

“அலகாபாத் இன்னும் உள்ளது. ஆனால் அது அவரவர் பைகளில் மட்டுமே” என்கிறார் ஷூபாக்ஸ் (Shoebox) திரைப்படத்தின் இயக்குநர் பராஸ் அலி.

ஒரு நகரம், ஒரு குடும்பம், உள்ளூர் அரசியல் என்ற மூன்று புள்ளிகளில் இருந்து கிளைத்தெழும் கோடுகள் ஒன்றையொன்று இடித்துக்கொண்டு குறுக்கு மறுக்காகப் பயணித்து வரைந்த சித்திரமாகவே இந்தப் படம் அமைதிருக்கிறது.

நாயகி மம்புவாக அம்ருதா பக்சி, தந்தை கதாபாத்திரத்தில் பூர்ணேந்து பட்டாச்சார்யா, மம்புவின் பால்யகால நண்பன் கௌஸ்துப்பாக அஸ்வதோஷ் ஆகிய மூவரும் அந்தந்த பாத்திரமாகவே வருகின்றனர். கும்பமேளா நிகழ்வுக்காக வருடம் முழுக்க உறங்கியபடி காத்திருக்கும் சிறு நகரமான அலகாபாத்தும் படத்தில் முக்கியப் பாத்திரமாக இழையோடுகிறது. அதன் பாலங்களும் படகுகளும் கும்பமேளா அலங்காரங்களும் கதைக்கு அழகூட்டுகின்றன.

பேலஸ் என்ற திரையரங்கின் உரிமையாளர் மாதவ், பெங்காலியாகப் பிறந்து அலகாபாத்தில் தொழில் செய்பவராக உள்ளார். அவரது மகள் மம்புவுக்கும் பேலஸ் திரைப்படம் உணர்வுரீதியாக நெருக்கமானது. தொழில்ரீதியாக மாதவ் அத்திரையரங்கத்தை நேசிக்கிறார் எனில், மம்புவிற்கும் அவளது நண்பன் கௌஸ்துப்பிற்கும் அத்திரையரங்கம் பால்யகாலத் தோழன், கனவுகளின் கலைடாஸ்கோப். அரங்கத்தின் இருட்டை அவள் மிகவும் விரும்புகிறாள். அறிவியல் சோதனைகளில்கூட நாளிதழிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட அமிதாபச்சனின் புகைப்படத்தை நுழைக்கிறாள். இருவரின் குழந்தைப்பருவத்தை விவரிக்கும் பள்ளிக் காட்சிகள் அழகானவை.

சிறுவயதில் அம்மாவை இழந்த மம்புவை சின்னச்சின்னக் காரணங்களுக்காகவெல்லாம் கோபப்பட்டுக் கட்டுப்படுத்தும் மாதவ், ஒரு கட்டத்தில் மம்புவை விடுதி வாழ்க்கைக்குள் தள்ளிவிடுகிறார். தான் மிகவும் நேசித்த திரையரங்கம், நகரம், நண்பனைப் பிரிகிறாள் மம்பு.

நோயின் பிடியில் உழன்று கிடக்கும் தகப்பனுக்காக மம்பு மீண்டும் அலகாபாத் நகருக்குத் திரும்புகிறாள். நினைவுகள் சுழன்றடிக்கின்றன. மல்யுத்த வீரர்களின் விளையாட்டு அட்டைகளை வைத்து விளையாடி பால்யகாலத்திற்குள் சென்று திரும்புகிறாள். அவளுக்கும் நண்பன் கௌஸ்துபிற்கும் அந்த காலகட்டம் பொக்கிஷம். அவளும் அந்த நினைவுகளில் சஞ்சரிப்பது மூலமாகவே நிகழ்காலத்தில் ஆறுதல் அடைகிறாள்.

காலம் ஒரு நகரத்தின் முகத்தை முற்றிலும் மாற்றிவிடுவதை இயக்குநர் பதியவைக்கிறார். எல்லா வீடுகளும் ஒரே வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. அதன் பின்னணியில் கலாச்சாரம், உலகமயமாக்கல், அரசியல் என பலவும் இயங்குகின்றன. இவற்றின் தாக்கம் படத்தின் ஆன்மாவாக அமைகிறது.  உண்மையில் அலகாபாத் நகரத்தின் மாற்றங்களை ஆவணப்படமாக எடுக்க இயக்குநர் அலி முடிவெடுத்து உள்ளார். ஒரு நகரத்தின் பெயர் மாற்றப்படும் அரசியலின் நுண் இடங்களைத் திரைப்படம் தொடுகிறது. அலகாபாத் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வருகைக்குப் பின் “பிரயாக்ராஜ்” என்று மாற்றப்படுகிறது. அலகாபாத் என்பது இஸ்லாமியர்களீன் மதப்பின்னணியை நினைவூட்டுவதே அவர்களுக்கு சிக்கல். புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியவற்றின் கூடுகை என்று இதிகாசங்களின் துணையோடு புனிதங்களின் பாதுகாப்பில் நகரத்தின் பெயர் மாற்றப்படுகிறது. மெட்ராஸ் சென்னையாகிறது, கல்கத்தா கொல்கொத்தாவாகிறது, பம்பாய் மும்பையாகிறது என்ற வரிசையில், அலகாபாத் பிராயாக்ராஜாக மாற்றப்படுவதைக் கடக்க முடியாது. இதன் பின்னணியில் இருக்கும் மத அரசியல் மிகப்பெரிய உறுத்தலானது. “இந்து ராஷ்டிரத்துக்கு இந்து நகரங்கள் தேவை. நமது நகரங்கள் ஆய்வுக்கூடங்களாக மாறியிருக்கின்றன. அவற்றில் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இவை சிவப்பு நிறத்தில் இருக்கிற, எளிதில் தொற்றிக்கொள்ளக்கூடிய கதைகள். அவற்றை நாம் கவனிக்கவேண்டும்”  என்று அலகாபாத் பற்றிய தனது நூலில் எழுதுகிறார் உத்பவ் அகர்வால்.

இந்தப் பெயர் மாற்றத்தை இயக்குநர் பல காட்சிகளில் நுட்பமாக அணுகியுள்ளார். மேலும் நகரம் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது. ஒரு சிறு இசைக்குழு நகரத்தில் பாட்டுப்பாடிக்கொண்டே படத்தின் இடையிடையே வருகிறது. அலகாபாத் திரும்பியது, தனது நண்பனுடன் மம்பு அலகாபாத்தை சுற்றிப் பார்க்கிறாள். சிறுவயதில் காதுகேட்கும் கருவியை வைத்துக்கொண்டு தயங்கி நின்ற நண்பன், இன்று அவனது சகோதரனோடு சேர்ந்து உள்ளூர் அரசியலுக்குள்ளும் வலம் வருகிறான். அவன் அவளிடம் மகாகும்பமேளா குறித்தும் அப்போது தான் உருவாக்க இருக்கும் உணவுப்பந்தல் குறித்தும் தனது சகோதரன் உள்ளூர் அரசியலில் இறங்கியதுபற்றியும் பேசும் இடங்கள் முக்கியமானவை. காலம் விசித்திரமானது. காலத்தின் மாற்றத்தில் மனிதர்கள் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மாதவ் பாத்திரம் எதையும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தாத ஒன்று. மம்புவும் அப்பாவின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கிறாள். தனது விடுதியில் இருந்து நோயுற்ற தந்தையைப் பார்க்க வீட்டுக்குக் கிளம்பும் முதல் காட்சியிலேயே பார்வையாளர்களின் மனதில் மம்பு இடம்பிடித்துவிடுகிறாள். தலையில் கட்டிய ஈரத்த்துண்டோடு அவள் உடைகளை அணிந்துகொண்டு கிளம்பும்போது அதை அவளது தோழி சுட்டிக்காட்டும் காட்சி, எடுத்த எடுப்பிலேயே யதார்த்தத்தை அறியவைத்துவிடுகிறது.

ஒரு நகரத்தின் பின்னணியில் முரணாக வரும் அப்பா-மகள் கதாபாத்திரம், பால்யகால நண்பனுடனான உரையாடல் என்ற இழைகளோடு கைகோர்த்துப் படம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நில அபகரிப்பு என்பது உள்ளூர் அரசியலில் ஒரு மிகப்பெரிய பகுதியாக இருப்பது இந்திய அரசியலின் அநியாயப் பக்கங்களில் ஒன்று. ஒரு நகரம் அதன் பழமையை இழக்கும்போது அதை உணர்வுமிக்க மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உணரமுடிகிறது.

இப்படத்தில் இளவயது நட்பு காதலாக மாறாமல் அதே தொனியில் இருப்பதும் அழகான ஒன்று. படத்தில் வரும் வசனங்களும் காத்திரமானவை. விடுதி வாழ்வின் துயரத்தை மம்பு ஒரு காட்சியில் உணர்த்துவாள். தனது சகோதரன், அவன் மகளை விடுதிக்கு அனுப்பப் போகிறான் என்றதும் அவள் வாதாடுகிறாள். வீடு, விடுதி, ஏன் நண்பர்கள்கூட முழுமையாகக் கிடைக்காத ஒரு வாழ்விற்கு அவளை அனுப்பாதே என்று தன் அனுபவத்தைப் பேசுவாள்.  அங்கும் இங்கும் அலைவுறும் வாழ்வு அது என்று சொல்லிவிட்டு, “அவளை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்து நீங்கள் நிம்மதியாக உறங்கிவிடுவீர்கள். அவளுக்கோ அந்த விடுதியில் தூங்குவதற்கே மாசக்கணக்காகும். அது தெரியுமா?” என்று கேட்பாள்.

தனது நகரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்த கதையை, அதன் பின்னணியில் உள்ள மத, பதவி அரசியலை, மக்களின் மனநிலை மாற்றத்தை, ஊருக்குள் இருக்கும் முதலாளிகளின் தந்திரங்களை இயக்குநர் பராஸ் அலி ஒவ்வொரு காட்சியிலும் பிரதிபலிக்கிறார்.

தான் பிறந்துவளர்ந்த ஊர் கண்முன்னால் மாறுவதையும் துண்டாடப்படுவதையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்த ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் அறிவிக்கப்படாத சமர்ப்பணமாகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  2. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  3. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  4. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  5. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்