திரையில் விரியும் இந்திய மனம்-17 :

சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் உள்ள பழமையான சிவன் கோயில் மற்றும் அதை ஒட்டிய குளத்தின் அருகில் ‘வாகைசூடவா’ திரைப்படததின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருநாள் மட்டுமே படப்பிடிப்பு நடந்த நிலையில் மக்கள் சாரைசாரையாகக் கூடிவிட்டனர். ஒருகட்டத்தில் தொந்தரவு காரணமாக படப்பிடிப்பு வேறு இடத்திற்கே மாற்றப்பட்டது.

நவீனகாலம் என்றான பிறகும் மக்களுக்குக் கேமராவைப் பார்க்கும் ஆர்வம் தீரவில்லை. இப்போது வீட்டுக்கொரு யூட்டூப் வைத்திருக்கிறார்கள். டிக்டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டபோது பலரும் வருந்தினர். ஏனெனில் எல்லாரும் சினிமாவை, சலனக் காட்சிளை  எடுப்பதற்குத் தயாராகிவிட்டனர். அனைவரும் ஏதோ ஒரு வகையில் தங்களை இயக்குநர்களாக நம்பத் தொடங்கிவிட்டனர். தெலுங்கு இயக்குநர் ப்ரவீன் கண்ட்ரேகுலாவின் “சினிமா பன்ட்டி” திரைப்படமும் இதையே மையக்கருத்தாகக் கொண்டிருக்கிறது. உலகமே ஒரு நாடக மேடை, நாம் எல்லோரும் அதில் நடிகர்கள் என்ற உலகப் பிரசித்தி பெற்ற சொற்களுக்கு வலு சேர்த்திருக்கிறது.

இந்தப் படத்திற்கான ஒரு போஸ்டரில் ஒரு ஆட்டோவுக்குள் பலரும் அமர்ந்தபடியும் நின்றபடியும் நெருக்கடியடித்துக்கொண்டு இருப்பார்கள். படத்தின் கதைக்களம் அதுதான். சினிமா பண்ட்டி என்ற தலைப்புக்கு”சினிமா வண்டி” என்று பொருள். ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்குமான எல்லையோர கிராமத்தில் வாடகை ஆட்டோ ஓட்டும் இளைஞன் வீரபாபுவுக்கு ஒரு கேமரா எதேச்சையாகக் கிடைக்கிறது. அவனது நண்பன் கணபதியும் வயதான ஒரு மனிதரும் அவனுடன் இணைந்துகொள்கின்றனர், மூவரும் அந்தக் கேமராவை வைத்து கிராமத்தில் ஒரு படம் எடுக்க விரும்புகிறார்கள். இந்த எளிய கதையை வைத்து ஒரு உணர்வுப் பூர்வமான நகைச்சுவை இழையோடும் ஒரு படத்தைத் தந்திருக்கிறார்கள். ஈரான் இயக்குநர் மஜீத் மஜீதி அடிக்கடி கூறுவதைப் போல ஒரு படத்தை எடுக்க பெரும் தொகையோ, கூட்டமோ தேவையில்லை என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

சிக்கல்கள் பெரிய அளவில் இல்லாமல் எளிய முடிச்சுகள் கொண்ட திரைக்கதை பார்வையாளர்களை இணக்கத்துடன் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. விகாஷ் விசிஷ்தா கதாநாயகனாக நடித்துள்ளார். அவரும் பிற கதாபாத்திரங்களும் பேசும் வட்டாரத் தெலுங்கு,வேற்றுமொழி பார்வையாளர்களையும் கவனிக்கச் செய்கிறது. இசைநயத்தோடு அமைந்திருக்கும் இந்தப் பேச்சுவழக்கு அந்தக் கிராமத்தில் நம்மையும் ஒருவராகவே பிணைக்கிறது.

ஒருசில படங்களே நம் இதயத்தின் அடியாழம் வரைச் சென்று தங்குகின்றன. அந்த வகைமையைச் சேர்ந்தது இத்திரைப்படம். சினிமா மீது ஆர்வத்தைக் கிளர்த்துவதோடு, சினிமா என்னும் கலைமீது மதிப்பைக் கூட்டுகிறது. கேமராவைக் கையாளத் தெரிந்தவரோடு ஒரு குழு சேர்ந்துவிட்டால் எல்லாராலும் எளிதாகத் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை அழகியலோடு திரைக்கதை பதிவு செய்திருக்கிறது. சினிமா என்ற மைய இழையோடு கதை பயணித்தாலும், மனித எத்தனத்தையும் கூட்டு முயற்சியின் மகத்துவத்தையே முன்னிறுத்துகிறது.

படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பும் வசனங்களும் அடுத்தடுத்த நிகழ்வுகளும் அதீத மெனக்கெடலாக துருத்திக்கொண்டு தெரியாமல் இயல்பு மாறாமல் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. படத்தின் ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அந்த கிராமத்தில் ஒருவராகவே பார்வையாளர்களை உணரச் செய்கிறது.

கதாநாயகனிடம் ஒரு சாதரணமான கதை கிடைக்கிறது. அவனிடம் பிரம்மாண்டமான புராணக்கதையோ நேர்த்தியான திருப்பங்கள் கொண்ட ஒரு திரைக்கதையோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தக் கதையை நேர்மையோடும் உழைப்புடனும் திரைப்படமாக மாற்றினால் நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு ப்ளாக்பஸ்டரை உருவாக்கலாம் என்று அவன் நம்புகிறான். ஆட்டோவுக்கான கடனைக் கூட கட்டமுடியாத வறுமையில் இருப்பவன் அவன். உள்ளூர் விசேசங்களுக்குப் பெயர்போன புகைப்படக் கலைஞனான நண்பனுடன் இணைகிறான். இருவரும் திரைப்படம் எடுக்கத் தொடங்கும்போது அவனது மனைவிகூட கூலிவேலைக்குச் சென்று படப்பிடிப்புக்குப் பணம் தருகிறாள். மாட்டுவண்டியின் பின்னால் நின்று அதைத் தள்ளும் ஊர்மக்கள் ட்ராலி கலைஞர்களாக உருமாறுகிறார்கள். படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சிறுவன் பெரியவர்களுக்கே யோசனைகள் தரும் இணை இயக்குநராகப் பதவி உயர்வு பெறுகிறான்.

தாங்கள் விரும்பிய படத்தை வீரபாபுவும் கணபதியும் எடுக்க முயற்சி செய்யும் காட்சிகளே படம் நெடுக வந்தாலும் அலுக்கவே இல்லை. ஏனென்றால் அவை வெறும் காட்சிகள் அல்ல, அவர்களது வாழ்வின் ஒரு துண்டு இது.  நமது நாட்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவை அத்தனை விரைவாக அலுத்துவிடுவதில்லையே. அத்தனை நாட்கள் வாழ்ந்த பிறகும் அடுத்து வரும் நாட்களுக்கான நம்பிக்கையுடன் அவர் காத்திருப்பதுபோலவே பார்வையாளர்கள் படத்தைப் பின்தொடர்கின்றனர்.

உரையாடல்களின்போது கிராமம்-நகரம் இரண்டுக்குமான பாரதூர வேறுபாடுகள், அரசியல், கிராமங்கள் புறக்கணிக்கப்படுவது பற்றி இரு நண்பர்களும் தொடர்ந்து விவாதிக்கிறார்கள். சாதாரண சாலை வசதிகூட அந்த கிராமத்திற்கு வந்து  சேர்வது இல்லை. மழை பெய்தாலோ ஊரில் நடமாட முடிவதில்லை. அதே நேரம் அரசுகளின் கவனம் பெரிய நகரங்களின் மீதே இருக்கிறது. இதைப் பேசி ஏக்கத்துடன் இருவரும் கடக்கின்றனர். வசதிகளற்ற கிராமத்திற்கு இந்தத் திரைப்படம் வளர்ச்சியைக் கொண்டு வரும் என்று நம்பும் நாயகனின் நோக்கம் வெள்ளந்தித்தனமாகத் தெரிந்தாலும் அவனது ஊக்கம் நெகிழச் செய்கிறது.

புரையோடிப் போயிருக்கும் சாதிய மனநிலை கொண்ட கிராமங்களைப் பல திரைப்படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. ஆனால் வெள்ளந்தி மனிதர்கள் நிறைந்த ஒரு கிராமத்தின் கூட்டு முயற்சிக்கு சாட்சியாக நிற்கிறது சினிமா பன்ட்டி.  கிராம மக்களின் அறியாமையும் கள்ளமற்ற தன்மையும் படம் நெடுக பிரதிபலிக்கிறது. முடிதிருத்தும் இளைஞனைக் கதாநாயகனாகவும் காய்கறிக்கடை நடத்தும் மங்காவை கதாநாயகியாகவும் நடிக்க வைக்கின்றனர். படப்பிடிப்பின் தொடர்ச்சியைக் கவனித்துச் சொல்லும் சிறுவன், கதாநாயகன் முட்களைப் பிடித்து ரத்தம் சொட்ட நிற்கும் காட்சியைப் படம்பிடிக்கும்போது அவன் கையில் சிவப்பு மையை ஊற்றுகிறான். குழந்தைமை நிரம்பிய பெரியவர்கள் இதை யோசிப்பதுகூட இல்லை. வெள்ளந்தி மனிதர்களைக் காட்சிப்படுத்தும்போது அதை மிகை உணர்ச்சியோடு காட்டிவிடும் அபாயம் இருந்தாலும் கத்திமேல் நடப்பதுபோல அதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

“எதைப்பற்றிய திரைப்படம் என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல. சினிமா பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது” என்று ஸ்டீவன் ஸ்பீல்பர்க் ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார். “திரைப்படம் எடுக்கும் அனுபவத்தைப் பற்றிய திரைப்படம்” என்ற ஒற்றை வரிக்குள் அடக்க முடியாத அழகான உணர்ச்சிகளை சினிமா பன்ட்டி பார்வையாளர்களுக்குப் பரிசளிக்கிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
 2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
 3. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
 4. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
 5. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
 6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
 7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
 8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
 9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
 10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
 11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
 12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
 13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
 14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
 15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
 16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
 17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்