திரையில் விரியும் இந்திய மனம்-11 

பதினாராயிரம் ஆயுதப்படைகள். நாற்பது லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறு பள்ளத்தாக்கில் ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயுதப்படையினர். ஐந்து அல்லது ஆறு காஷ்மீரிக்கு ஒரு படைவீரன் என்ற விகிதத்தில் ராணுவம். இதையும் தாண்டி ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம். காஷ்மீரிகளுக்கு எதிராக இந்திய அரசு கட்டமைத்திருந்த அச்சுறுத்தல்களில் ஒரு சில இவை. யாருடைய வீட்டுக்குள்ளும் எந்த நேரமும் நுழையும் அதிகாரம், யாரையும் இழுத்துச் செல்ல, பயன்படுத்த, கொல்வதற்கான அனுமதி, அதற்கு பரிசாக அரசாங்கம் தரும் பதவி உயர்வு என்று 75 ஆண்டுகால வரலாற்றுப் பக்கங்கள் புரட்டப் புரட்ட எண்ணிலடங்கா அதிர்ச்சிகள் நிறைந்தவை.

பொதுவாக அமைதி விரும்பிகளாக இருந்த காஷ்மீர் மக்கள்தான் படிப்படியாகப் போராட்டத்தின் பல்வேறு வடிவங்களுக்கு அதிகாரத்தால் இழுத்து வரப்பட்டனர்.  1947 தொடங்கி 1989ம் ஆண்டு வரை அமைதி வழியில் போராட்டம் நிகழ்ந்த அம்மண்ணில் 1989ல் தான் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. 2016ல் மக்கள் தெருக்களில் இறங்கினர். தலைவர்கள் இல்லாத தன்னெழுச்சிப் போராட்டத்தில் இளைஞர்கள் களம் கண்டனர். அவர்களின் அதிகபட்ச ஆயுதங்கள் கற்கள் மட்டுமே.

போராட்டத்தில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போயினர். கையெழுத்து இடப்பட்ட ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றிலும் காஷ்மீர் மக்கள் ஏமாற்றப்பட்டனர். மக்களின் குரலைப் பொருட்படுத்தாது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காஷ்மீர் அறிவிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 395 பிரிவுகளில் 260 பிரிவுகள் ஜம்மு காஷ்மீருக்கும் பொருந்தும்படியாக ஒவ்வொரு இந்தியப் பிரதமரும் தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர். இந்த சூழலில்தான் ஆகஸ்ட் 6, 2019ல் சிறப்பு சட்டம் 370 பிரிவு தற்போதைய பாஜக அரசால் பறிக்கப்பட்டது. காஷ்மீரின் சிக்கலான அரசியல் சூழலைப் பற்றி விரிவான ஒரு கட்டுரையை 2016ல் பேராசிரியர்.அ.மார்க்ஸ் எழுதியுள்ளார்.

இவ்வளவு இருந்தபோதிலும் மக்கள் நம்பிக்கையை விடாமல் போராடிவருகின்றனர். காஷ்மீர் மக்களின் போராட்டத்தை, அன்றாட வாழ்வை, ஒரு சில பாத்திரங்களை முன்வைத்து 108 நிமிடங்களில் பேச முயல்கிறது 2019ல் உருது மொழியில் வெளியான Hamid திரைப்படம். உருது மொழியில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருதை இயக்குநர் அய்ஜாஸ் கானும் தயாரிப்பு நிறுவனமும் பெற, சிறுவன் தல்ஹா அர்ஷத் ரெஷி சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். சிறுவனின் தாயாராக ரசிகா துகால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏழு வயது சிறுவன் ஹமீத், தொலைந்துபோன தந்தையை நினைத்து தினமும் ஏங்குகிறான். அம்மா இஷ்ரத், தனது கணவனைக் கண்டுபிடிப்பதற்காகக் காவல்நிலையம் உள்ளிட்ட அதிகார மையங்களோடு மன்றாடிக்கொண்டு இருக்கிறாள். தனது அப்பா தன்னோடு இருக்கும்போது அல்லா பற்றித் தெரிவித்த கருத்துக்களை வைத்து, தனது தந்தை அல்லாவிடம் சென்றுவிட்டதாக சிறுவன் ஹமீத் கருதுகிறான். அவரை அல்லாவிடமிருந்து மீண்டும் அழைத்துவர விரும்புகிறான். இஸ்லாமியர்களின் 786 என்ற நம்பிக்கை எண்ணை அல்லாவின் தொலைபேசி எண்ணாக நம்பத் தொடங்குகிறான். அதையே பத்து இலக்க எண்ணாக மாற்றி அந்த எண்ணுக்குரியவரிடம் தொடர்ந்து பேசுகிறான். அவர்தான் அல்லா என்று நம்புகிறான்.

அந்த எண்ணுக்குரிய நபரோ, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாய். அபய் என்ற பெயர் கொண்ட அவர் ஒரு தீவிரமான தேசப்பற்றாளர். போராட்டக்காரர்கள் மீதான வெறிமிகுந்த ஒரு கதாபாத்திரமாக அவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வயது வேறுபாடு இன்றி சிறிய வயது கொண்ட போராட்டக்காரர்களையும் வெறுக்கிற, துன்புறுத்தவோ கொல்லவோ தயங்காத ஒருவனிடம் தனது தொலைந்துபோன தந்தையைத் தந்துவிடுமாறு தினமும் பேசுகிறான் ஹமீத். இந்த உரையாடல் அபய் போன்ற ராணுவ வீரனுக்குள் எத்தகைய மாற்றத்தைத் தருகிறது? ஹமீதுக்கு தனது அப்பா திரும்பக் கிடைத்தாரா? இதையெல்லாம் கதையின் பாதைகளாகக் கொண்டு பயணிக்கும் படம் பல்வேறு தளங்களில் காஷ்மீரின் கள அரசியல் நிலவரத்தைப் பேசுகிறது.

“கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்” என்ற புதுமைப்பித்தனின் கதையில், கடவுளும் குழந்தையும் வட்டு விளையாடுவதாக ஒரு காட்சி வரும். அதில் “ஆடத் தெரியாமல் விளையாட வரலாமா?” என்று கடவுளையே குழந்தை கடிந்துகொள்ளும். கடவுள் என்பவரிடம் நாம் வேண்டுகோள் விடுக்கலாம், முரண்படலாம், பிணங்கிக்கொள்ளலாம், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டி மனு தரலாம் என்று ஹமீத் முழுமையாக நம்புகிறான். என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்ற பெரியவர்களின் தத்துவார்த்தம் அவனிடம் இல்லை. நான் கேட்டதை நீ ஏன் இன்னும் செய்யவில்லை, என்னால் பொறுமையாக இருக்க முடியாது என்று அல்லாவிடம் கத்துகிறான் ஹமீத். கடவுள் என்கிற பிம்பத்தைக் குழந்தைகள் அணுகும் விதத்தைத் திரைக்கதை நுணுக்கமாகப் பேசுகிறது.  தேவைப்படும் நேரத்தில் எல்லாம் ஒரு செல்போன் மூலம் தொடர்பு கொள்ளமுடிகிற கடவுள் ஒருவர் கிடைத்தால் நன்றாகத்தானே இருக்கும்!

இந்திய ராணுவத்தால் காஷ்மீர்  மக்களின் அன்றாடம் நிலைகுலைந்துள்ளது. அதே நேரம் போராட்டத்தை முன்வைத்து இளைஞர்கள் என்ன வகையான பிரச்சாரத்திற்குள் சிக்க வைக்கப் படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் வெளிப்படுத்துகிறார்.

பொதுவாக இதுபோன்ற படங்களில் இயக்குநர் யார்பக்கம் நின்றபடி திரைக்கதையை முன்னெடுத்துச் செல்கிறார் என்பதில் ஒரு தெளிவு தேவைப்படுகிறது. போராட்டக்காரர்களின் தவறுகளைக் குறிப்பிடுகிறேன் என்ற பேரில் கற்பிதமாகப் பொதுவெளியில் பேசப்பட்டு வரும் சில அபத்தங்களை உறுதிசெய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் ஒரு போராட்டக்காரர் கதாபாத்திரம், தீவிர மதப்பற்றாளராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் மதாலயங்களுக்கு வரும் சிறுவர்களிடம் பிரச்சாரம் செய்கிறார், பள்ளிப்படிப்பைப் பின்தள்ளிவிட்டு மதப்படிப்புக்கு முக்கியத்துவம் தரக் கோருகிறார். ஹமீத் அவனைப் பொருட்படுத்தாமல் தனிப்பாதையில் தொலைந்த தகப்பனைத் தேடுகிறான்.

ஹமீதின் தாயார் கதாபாத்திரம் கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. போராட்டக் களச் சூழல் மிகுந்த, அச்சுறுத்தலுக்குள்ளான நிலப்பரப்பில் தன் கணவனை, பிள்ளைகளைக் காப்பாற்றிக் கைக்குள் வைத்துக் கொள்ளும் ஒரு பெண்ணாகவே வருகிறாள். தகப்பனார் கூட இருக்கும்போது ஹமீத் கேட்கும் பல கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல மறுக்கிறாள். அவனது எல்லா கேள்விகளையும் மடைமாற்றி வாய்ப்பாடு சொல்லச் சொல்கிறாள். வேறு எதுகுறித்தும் ஹமீத் சிந்திக்காத வண்ணம் அவனது எண்ணத்தின் கண்களின்மீது ஒரு திரையை இழுத்து விரித்தபடியே இருக்கிறாள். கணவன் மீதான அன்பில் திளைக்கும் அவளுக்கு, அவன் தொலைந்த பிறகு வாழ்வில் ஒரு இருண்மை வந்துவிடுகிறது. அவன் திரும்ப வருவான் என்று நம்பி தினமும் ஸ்வெட்டர் பின்னுகிறாள். அவநம்பிக்கையின் தகிப்பில் மனம் வெந்து அதை ஒருநாள் பிய்த்து எறிகிறாள். தினமும் காவல்நிலையத்திற்குச் செல்கிறாள். அவளைப் போலவே குடும்ப உறுப்பினர்களைத் தொலைத்த மனிதர்களின் வரிசை, இந்திய அரசின் கோரப்பற்களுடைய நீளத்துக்கு சாட்சி.

குறியீடு மிகுந்த காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருக்கின்றன. ஆஸாதி என்று எழுதியிருக்கும் சுவரின்முன் நின்று சிறுநீர் கழிக்கும் ராணுவ வீரர்களை ஒரு சிறுவன் கல்லால் அடிக்கிறான். சுதந்திரப் போராட்டக்காரர்கள்மீது ராணுவ வீரர்களுக்கு இருக்கும் வெறுப்பின் உச்சத்தை வெளிப்படுத்தும் இடம் அது. ஹமீதின் தந்தை மரத்தாலான படகை செய்யும் ஒரு தொழிலாளி. இரவு நேரக் காவல் சோதனையில் அவருடைய கருவிப்பெட்டிக்குள் இருக்கும் கவிதைகள் நிறைந்த ஒரு டைரியும் ராணுவ வீரர்களால் மோசமாக அணுகப்படுகிறது. போராட்டக் களத்தில் நிற்பவர்களின் ஒரே கோரிக்கை சுதந்திரம் மட்டுமே. கவிதைகளின் வழியாகவும் அமைதியான அறப்போராட்ட்டங்களின் வழியாகவும் அதைக் கோரும் அவர்களைக் கற்களைத் தேட வைப்பது அதிகாரத்தின் அச்சுறுத்தல்தான்.

ஹமீதுடனான உரையாடல்களை தத்துவமார்த்தமாக, கவித்துவமாக, கதையாக அணுகுகிறார் அவனது தந்தை. அந்த உரையாடல்களே ஹீமிதின் தேடலுக்கு வழித்துணையாக வருகின்றன. சத்தியவான் – சாவித்திரி கதையின் நீட்சியாகவே இப்படமும் அமைகிறது எனலாம். கணவனுக்காக எமனுடன் போராடும் சாவித்திரியோடு மகனும் இங்கு சேர்ந்து கொள்கிறான்.

ஹமீதுக்கும் ராணுவ வீரருக்குமான உரையாடல் படத்தின் மையப்புள்ளி எனலாம். அபய் இந்திய அரசின் பிரதிநிதியாகவும், ஹமீத் போராட்டக்காரர்களின் குரலாகவும் இருக்கிறான். அபய் இழைத்த அநீதியை அவனுக்கு சுட்டிக்காட்டி உலுக்குகின்றன ஹமீதின் சொற்கள். அவன் மெல்ல குற்ற உணர்வுக்கு உள்ளாகிறான். அவனது பார்வை மாறுகிறது. அவனுக்குள் இருந்த மாற்றத்தைக் கடித்துக் குதறுகிறது எதேச்சதிகாரம். தனி மனிதனின் மாற்றத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்த கேள்வியையும் சிறு நம்பிக்கையையும்கூட விதைத்திருக்கிறது படம்.

உயரதிகாரியின் அறைக்குள்ளிருந்து வெளியேறும்போதுகூட விறைப்பாக ராணுவ ஒழுங்கில் அபய் நடக்கும் காட்சி பல்வேறு கேள்விகளைக் கிளர்த்துகிறது. எதிர்க்கேள்விகள் இன்றி கீழ்ப்படிதலை ஒரு சிறப்பான பண்பாக முன்னிறுத்தி மக்களுக்கு எதிராக ராணுவ வீரர்களை முன்னிறுத்தும் விளையாட்டு பல ஆண்டுகளாக காஷ்மீரில் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஒரு சோறு பதமாக அபயின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அபய் தொடர்ந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும்கூட உயரதிகாரிகள் அதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அதிகாரப் படிநிலையில் அபயின் இடம் என்ன என்று அடிக்கடி சுட்டிக் காட்டுகிறார்கள். எல்லாம் சேர்ந்து அவன் ஒரு கொந்தளிப்பான மனநிலையிலேயே இருக்கிறான்.

கடவுள் எல்லாவற்றையும் தருவார் என்று ஹமீத் நம்புகிறான். அதே நேரம் அவருக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதால், நம் கோரிக்கையைப் பரிசீலிக்கத் தாமதமாகும் என்று தன்னைத்தானே சமாதானமும் செய்துகொள்கிறான். தொலைந்துபோனவர்களின் புகைப்படத்தோடு குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் மௌனப் போராட்டம் மனதைக் கலங்கடிக்கிறது.  அந்தக் கூட்டத்தில் இஷ்ரத் உடைந்து அழுகிறாள். மற்றவர்களும் உடைந்துவிடுவார்கள் என்று சுற்றியிருப்பவர்கள் அவள் அழுகையை நிறுத்த முயற்சி செய்கின்றனர். சிறிது நேரத்தில் ஆசுவாசம் அடைகிறாள் அவள். கண்ணீரும் மௌனமுமாக அவர்கள் வைக்கும் எந்தக் கேள்விக்கும் துப்பாக்கி ஏந்தியவர்களிடமும் சைரன் வைத்த வண்டியில் வந்து இறங்குபவர்களிடமும் பதில் இல்லை.

ஒரு நிலப்பிரதேசத்தின் போராட்டம் மிகுந்த வாழ்வை, அரசியலை நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது ஹமீத் திரைப்படம். அரசியல், மதம், பெண்கள், கல்வி, தொழில் என மக்களின் அன்றாட வாழ்வியலைக்கூட அதிகாரம் கட்டமைப்பதை உணர முடிகிறது.

“யுத்தகால இரவொன்றின் நெருக்குதலில் எங்கள் குழந்தைகள் வளர்ந்தவர் ஆயினர்” என்கிறது ஈழக்கவிஞர் சிவரமணியின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. சுதந்திரமாக சுற்றிதிரிய வேண்டிய வயதில் அப்பாவை மீட்கப் போராடும் ஹமீத், போரால் வாழ்வை இழந்த லட்சக்கணக்கான உலகக் குழந்தைகளின் பிரதிநிதியாய் நிற்கிறான்.

Movie: Hamid

Language: Urdu

Year: 2019

Platform: Netflix

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
 2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
 3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
 4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
 5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
 6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
 7. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
 8. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
 9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
 10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
 11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
 12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
 13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
 14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
 15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
 16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
 17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்