திரையில் விரியும் இந்திய மனம்-9

அசாம் மாநிலத்தின் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் பள்ளிக்குச் செல்லும் பதின்பருவத்தினர் மூவரின் வாழ்வையொட்டிய சம்பவங்களைத் திரையெனும் சட்டகத்துக்குள் வைக்கிறது Bulbul Can Sing திரைப்படம். அசாமைச் சேர்ந்த இயக்குநர் ரிமா தாஸ் இயக்கிய இரண்டாவது படம் இது. இவரது முதல் படமான village rockstars ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற படம்.

அசாம் மாநிலத்தின் ஏதோவொரு புள்ளியில் உள்ள கிராமத்தின் வாழ்வுதான் என்றாலும் இந்திய கிராமங்கள் அனைத்துக்கும் பொருந்திப்போகும் ஒன்றையே படம் காட்சிப்படுத்துகிறது. மொழி, உடை, நிலம் மாறினாலும் இதுவே இந்தியக் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இந்திய என்ற வார்த்தையைத் தாண்டி படம் நமக்குள் கிளர்த்தும் உணர்வுகள் சர்வதேசத் தரமிக்கவை. இந்திய கிராமங்களில் கெட்டித்தட்டிக் கிடக்கும் சாதி, ஆணாதிக்கம், பாலியல் சீண்டல்கள், இந்துத்துவ அரசியலின் கோரமுகம் என்று பலவற்றைத் தோலுரிக்கிறது படம்.

படத்தின் பொருண்மை இதுதான் என்று எதுவொன்றிலும் அடக்கமுடியாதபடி விரிவான பல தளங்களை நுட்பமாகத் தொட்டிருக்கிறார் இயக்குநர். எல்லாவற்றிலும் அவருக்கு இருக்கும் தெளிவான சிந்தனை, ஒவ்வொரு வசனத்திலும் காட்சியிலும் தெரிகிறது. பன்றி வளர்க்கும் நாயகியின் தகப்பன், பக்கத்துப் பண்ணை நண்பனுக்கு ஆலோசனை கூறுகிறான்.  ஆடு மாடுகளை விட குட்டிகளை ஈனுவதால் பன்றிகளிடமிருந்து வரும் லாபத்தைப் பேசும் காட்சி உட்பட ஒரு வினாடியையும் வீணாக்காது ஏதேனும் ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டேயிருக்கிறது படம்.

கிராம மக்களின் பேச்சில், பாடல்களில், வாழ்வில் எல்லா இடங்களிலும் புராணக் கதாபாத்திரங்கள் பயணிப்பதை உணர முடிகிறது. ராதாவுக்கும் கண்ணனுக்கும் இருந்த காதல் உடலை மீறிய உன்னதம் என்று ஒருநாள் இரவு ஆண்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் அதைப் பற்றி விவாதிக்கும் பெண்கள், “ஆணும் பெண்ணும் முத்தமிடுவதில் என்ன தவறு?” என்று தொடங்கி “என்ன இருந்தாலும் அவங்க சொன்னா சரியாதான் இருக்கும்” என்று கொண்டுவந்து முடிக்கிறார்கள். இதிலென்ன தவறு என்று கேட்கும் பெண்ணிடம் அதிகார மையம் இருந்தால் படத்தின் போக்கே வேறுமாதிரி இருந்திருக்கும்.

புல்புல்லின் தந்தை தினமும் எண்ணெய் விளக்கை ஏற்றிக்கொண்டு அமர்ந்தபடி இரவெல்லாம் பாடிக்கொண்டேயிருக்கிறார். அவர் காலத்தில் தவறவிட்ட பாடகர் எனும் இடத்தை, அதன்வழி பெறும் புகழைத் தனது மகளின் மூலம் மீட்டெடுக்க ஏங்குகிறார். திணிக்கப்படும் கனவைச் சுமக்கும் புல்புல், தனக்கான குரலைக் கண்டுபிடித்தாளா என்பதைப் பேசுகிறது திரைக்கதை.

புல்புல், போன்னி, சுமு மூவருக்கும் இடையே நிலவும் நட்புதான் திரைக்கதையின் ஆதாரம். புல்புல், போன்னி என்ற இரு பெண்களும் சுமு என்ற பெண்சாயல்மிக்க ஆணும் பள்ளி, வீடு, ஊர் என எல்லா இடத்திலும் தங்கள் நட்பை வெளிப்படுத்துகிறார்கள். அழகான கவிதையைப் போல நயமிக்கதான ஒரு நட்பு இயற்கையின் பின்னணியில் விரிகிறது.  பெண்தன்மையுடன் இருக்கும் சுமு, பள்ளியிலும் பொதுஇடங்களிலும் தொடர் சீண்டலுக்கு உள்ளாகிறான். புல்புல், போன்னி இருவருடன் இருக்கும்போதுதான் அவன் தன்னியல்புடன் இருக்க முடிகிறது. மரத்தின்மீது அமர்ந்து ஊஞ்சலைத்  தயார் செய்துகொண்டிருக்கும் மூவரிடம் இருந்துதான் படம் தொடங்குகிறது. அந்த ஊஞ்சலில் பார்வையாளர்கள் அமர வைக்கப்படுகின்றனர். 95 நிமிடங்களும் ஊஞ்சலில் ஆடும் நாம், சில நேரங்களில் உயரே செல்கிறோம், சில நேரம் தாழ்வுறுகிறோம். பொதுவாகக் கிடைக்கும் ஒட்டுமொத்த உணர்வு அற்புதமானது.

படத்தில் வரும் நிலக்காட்சிகள் கூடுதல் உற்சாகத்தைத் தரக்கூடியவை. பறவைகளின் சத்தம் பின்னணியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது. மழை பெய்துகொண்டேயிருக்கிறது. மின்சாரம் இல்லாத இரவுகள், பச்சைப் பசேலான வயல்வெளிகளும் தோட்டங்களும் கிராமத்துக்கு இழுத்துச் செல்லும் சேறும் சகதியுமான பாதைகள். பள்ளிக்குச் செல்லும் வழியெங்கும் பசுமை இழைந்தோடுகிறது. நிலத்தை அச்சு அசலாகக் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவின் பங்கு முக்கியமானது. இயக்குநரே ஒளிப்பதிவாளர் என்பதால் கதைக்குத் தேவையான களத்தை நம் கண்முன் நிறுத்திவிடுகிறார்.  வாழை மட்டைகளில் ஏற்றப்படும் எண்ணெய் விளக்குகள், பள்ளி விழாவில் வரும் பாரம்பரிய நடனங்கள், நாட்டார் பாடல், கிராமங்களில் நிலவும் பேய் பற்றிய கதைகள், ஊர் குளத்தில் அனைவரும் மீன்பிடிக்கும் காட்சிகள் என அசாமின் நிலமும் வாழ்வியலும் மிக நேர்த்தியாக விரிகின்றன.

பதின்பருவத்தினர் வாழ்வில் பள்ளிக்கூடம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அங்கு படிக்கும் மாணவர்கள், பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள் பெரும் தாக்கத்தை அவர்களின் வாழ்வில் ஏற்படுத்துகின்றனர். புல்புல்லை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டேயிருக்கும் ஆசிரியர் கதாபாத்திரத்தின் பாலியல் அத்துமீறலுக்கான காத்திருப்பும், அதை புல்புல் எளிதாகக் கடப்பதும் முக்கியமானது.

மூன்று பேருக்கும் இடையே நிலவும் நட்பு, சுமுவுக்கு அவர்கள் தரும் ஆதரவின் வழியே பெண்களின் அரவணைப்பையும் அன்பின் மகத்துவத்தையும் உணர முடிகிறது. உலகின் பல இடங்களில் பால்புதுமையினருக்கு நிகழ்த்தப்படும் அநீதியின் சாட்சியாக நிற்கிறான் சுமு. சிறுவர்கள் உட்பட ஆண்மையச் சிந்தனையில் ஊரே அவனைக் கேலி செய்யும்போது, சுமுவை அவனது இயல்புமாறாமல் ஏற்றுக்கொள்ளும் பெண்கள் அவனுக்கு உணர்வுரீதியான புகலிடத்தைத் தருகின்றனர். இறுதிக்காட்சியில் தெரியும் சிறு துண்டு வானவில் சுமுவேதான்.

பொதுவாக ஒரு படம் ஏதேனும் ஒரு மையப்புள்ளியை முன்னிறுத்தியே செல்லும். கதையின் சரடில் பயணித்தாலும் இந்தத் திரைப்படத்திலிருந்து கிளைக்கும் நிகழ்வுகள் ஆழமானவை.

உண்மைக்கு நெருக்கமான கலைப்படைப்பு இப்படித்தான் இருக்கும் என்பதற்கான உதாரணமாக இருக்கிறது இத்திரைப்படம். பதின்பருவ வாழ்வை கிராமத்துப் பின்னணியில் பேசும்போது சமூக அவலத்தையும் சேர்த்தே தொட்டுவிடுகிறது.

கலாசாரக் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்துபவர்களுக்கு சமூகம் கட்டுக்கடங்காத ஒரு அதிகாரத்தை மறைமுகமாகத் தந்துள்ளது. ஆகவே அவர்கள் நிகழ்த்தும் வன்முறையின் ரத்தக்கறை எல்லோர் கரங்களிலும் படர்ந்துவிடுகிறது. தான் இந்த இடத்தில் இருந்திருந்தாலும் இதையே செய்திருப்போம் என்று நினைக்கும் எல்லாரும் மறைமுகமாக ரத்தவீச்சை முகர்ந்துகொள்கின்றனர்.

பதின்பருவ மாணவர்கள் எதிர்ப்பால் கவர்ச்சியில் ஈடுபடும்போது பள்ளி ஆசிரியர்களும் நிர்வாகமும் அவர்களைக் கையாள்வதில் இருக்கும் போதாமையை நாம் இத்திரைப்படத்தின்வழி உணர முடிகிறது.  ஆறுதலாக சில ஆசிரியர்கள் மாணவர்களின் வயது வேகத்தைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்க முயல்கிறார்கள். மீதமிருக்கும் ஆசிரியர்களோ வயதின் புரியாமையை, ஹார்மோன்களின் செயல்பாட்டைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே நீதியின் தராசைப் பிடித்துத் தொங்கி அறுத்தே விடுகின்றனர்.வயதில் செய்யும் சில காரியங்கள் சிக்கலான இடத்தில் குழந்தைகளை நிறுத்திவிடும்போது அவர்களை உளப்பூர்வமாக மீட்டெடுக்கவேண்டிய பொறுப்பு பள்ளிக்குத்தான் உண்டு.

படம் இறுதிக்காட்சியை நோக்கி நகரும் இடங்களில் ஒரு செவ்வியல்தன்மையைப் பெற்றுவிடுகிறது. புல்புல் தனது தோழியின் அம்மாவுடன் பேசும் காட்சிகள் அந்தக் கதாபாத்திரத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுகின்றன.

வீடு, ஊர், பள்ளி இவைகளில் அன்றாடத்தைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம், பார்வையாளர்களை அந்த வெளிக்குள் தள்ளி ஒரு வாழ்வை சில நிமிடங்கள் வாழச்செய்கிறது.

கவலைகள் ஏதுமற்ற பறவைகளாக இருக்கும் அவர்களின் வாழ்வு பார்வையாளர்களின் கண்களையும் உறுத்துகிறது. பொறாமை கொள்ளச் செய்கிறது. ஆற்றில் நீந்துகிறார்கள், மழையில் நனைகிறார்கள், ஊஞ்சலாடுகிறார்கள், சேறு சகதியில் குதிக்கிறார்கள், தரையில் கிடக்கும் பூக்களைத் தலையில் அலங்கரித்துக் கொள்கிறார்கள். இவ்வாறு இயற்கையோடு அவர்கள் கொண்டிருக்கும் நெருக்கம் அவர்களின் வாழ்வை அவ்வளவு மலர்த்துகிறது.

இவையெல்லாம் இருக்கும் அதே கிராமத்தில்தான் வளர்ந்த மனிதர்களும் இருக்கிறார்கள். வளர வளர அவர்களின் மனதில் இருக்கும் இருளும் சேர்ந்தே வளர்கிறது. இசையைப் பற்றிப் பேசும்போதுகூட அவர்களுக்குக் கடவுள் தேவைப்படுகிறார். ஆணாதிக்கம் பேச்சிலும் செயலிலும் புரையோடிப்போயிருக்கிறது.

சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைத் தவறவிடாமல் பார்க்கவேண்டும். மிகையாகத் தெரிந்தாலும் கவனமாகவே இதை அறிவிக்கிறேன். படம் முடிந்தபின்னும் அதிர்வலைகள் நீங்கவில்லை, பறவைகளின் சத்தம் காதுக்குள் கேட்டபடியே இருக்கிறது.

இளஞ்சூட்டு ரத்தம் நிரம்பி வழியும் அந்த நீர்நிலை நம் காலை நனைக்க வருகிறது. எத்தனை உயரத்திற்குக் கால்களைக் கொண்டு சென்றாலும் அதன் வருகையை தடுக்க இயலாது. இந்திய கிராமங்களில் புரையோடிப்போயிருக்கும் அழுக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது திரைப்படம். இந்திய சமூகம் நாகரீகம் அடைந்ததாக அடிக்கடி அறிவித்துக்கொள்கிறது. ஆனாலும் புல்புல் போன்ற ஒரு சிறுமிக்குத் தன் தலைமுடியை விரித்துப் போட்டுக்கொள்வதற்குக் கூட அது உரிமை தருவதில்லை

Movie: Bulbul Can Sing

Language: Assamese

Year: 2018

Platform: Netflix

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  7. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  8. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  9. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  10. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்