திரையில் விரியும் இந்திய மனம்- 4

வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் கார்கோனகர் இயக்கி 2019ல் வெளிவந்த படம் ஆக்குனீ (Axone). Axone என்ற செமா மொழிச்சொல், ஆக்குனீ என்று உச்சரிக்கப்படுகிறது. ஆக்குனீ என்பது ஆழந்த மணம் என்ற பொருளைக் குறிக்கிறது. வடகிழக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவு என்பதை மையக்கருத்தாகக் கொண்டு படம் பேசும் அரசியல் ஆழமானது. 

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து டெல்லியில் வசிக்கும் சிலர் ஒன்றுகூடி ஒரு திருமணக் கொண்டாட்டத்தை நிகழ்த்த முனைகின்றனர். அதையொட்டி எழும் சங்கடங்கள், இடையூறுகளை சுற்றிப் பின்னப்பட்ட கதை, வடகிழக்கு இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து இந்திய நகரங்களில் விரவிக்கிடக்கும் பலரின் துயரத்தை உணர்த்துகிறது.

கிளர்ந்தெழும் மணம்:

இரண்டு இளம் வடகிழக்குப் பெண்கள் தங்களது பாரம்பரிய உணவான ஆக்குனீ தயாரிக்கத் தேவையான பொருட்களைத் தேடி வாங்குவதில் இருந்து தொடங்குகிற படம் இழை தவறாமல் முன்னோக்கி நகர்கிறது.

ஆதிகால மனிதன் உணவை சேகரிப்பதையே ஒரு நாளின் பயணமாகக் கொண்டவன். படமும் ஒரு உணவுக்கான தயாரிப்பாகவே உள்ளது. அதை முன்வைத்து, புலம்பெயர்ந்த வடகிழக்கு மாநிலத்தவரின் நிலைப்பாட்டை சமூகம், அரசியல் என்று பல தளங்களில் படம் நுணுக்கமாக அலசுகிறது.

ஆக்குனீ தயாரிக்கும்போது கிளர்ந்தெழும் மணம், அது செல்லும் பாதையியெல்லாம் இவர்களையும் சேர்த்துப் பந்தாடுகிறது. 

குடியிருக்கும் வீட்டின் உரிமையாளரான வயதான பெண்மணியில் தொடங்கி நகரத்தில் ஒவ்வொருவரும் போகும் இடமெல்லாம் இவர்களைக் கைவிடுகின்றனர்.

வாசனை என்பது ப்ரத்யேகமானது. ஒவ்வொரு இனக்குழுவுக்கு தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு மணங்கள்கூட உண்டு. சிலரின் நாசி வெங்காயம், பூண்டு வாசனையைக் கூட சகித்துக்கொள்ள மறுக்கிறது. எல்லாம் பழக்கம்தானே.

உணவு அரசியல்:

இந்திய நாட்டின் உணவு, கலாச்சாரப் பன்முக அரசியல் எதார்த்தம் பல்லிளிக்கும் இடங்களில் எல்லாம் “உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கிறதா என்று கருத்துக்கேட்டு நமது முகத்தின்முன்னால், கேள்விகள் சர்ப்பமெனப் படமெடுக்கின்றன.

அடுத்தவன் உணவுத்தட்டில் நம் கண்களுக்கு என்ன வேலை? ஆனால் அதுவே முகம்சுளிக்கவைக்கும் யதார்த்தமாக இருப்பதை முகத்திலறைந்து சொல்கிறது படம்.

*வீடு வாடகைக்கு” பலகைகளில் எழுதப்பட்ட, எழுதப்படாத நிபந்தனைகள்:

சாதியப் படிநிலைக்கு சற்றும் குறைவில்லாதது உணவுப் பழக்கத்தின் படிநிலை. ஒருவகையில் உணவுப் பழக்கத்தின் படிநிலைக்கும் சாதி அமைப்புக்கும்கூட ஒரு நுண் தொடர்பு உண்டு. அதுதான், “நான்வெஜ் பிரியர்களுக்கு வீடு இல்லை” என்று கனிவோடு அறிவிக்கும் பலகைகளை வீடுகளின் முன் மாட்டச்செய்கிறது.

இந்த தேசத்தின் பன்முகத்தைப் பாதுகாப்பதற்காக அவரவர் உணவுத்தட்டிலிருந்தே கலகத்தைத் தொடங்கவேண்டி இருக்கிற அவலத்தை, தேவையைப் பல்வேறு காட்சிகளின்மூலம் படம் அழுத்தமாக முன்வைக்கிறது.

நகரங்களில் வாடகைக்கு வீடு வேண்டுமானால் பணம், வேலை என்பதைத் தாண்டி “ஏற்றுக்கொள்ளப்பட்ட” இனம், சாதி, உணவுப்பழக்கம் மூன்றும்கூட அவசியமாகிவிட்ட காலகட்டம் இது. வீட்டு உரிமையாளர்களின் வாய்க்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள், புலம்பெயர்ந்தவர்கள் என்றால் கூடுதல் நீளத்துடன் சீறிப்பாய்கின்றன.

பணம் கொடுத்துத் தங்கியிருப்பவர்களை இரண்டாம் தரமாக நடத்த எது காரணமாகிறது? இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் அவர்களை எந்நேரமும் இருத்துவது எது?

உளவியல் நெருக்கடிகள்:

வடகிழக்கு இந்திய மக்கள் ஏனையோருக்குக் காட்சிப்பொருளாகவே தெரிவது, அவர்களுக்கு மிக மோசமான ஒரு உளவியல் நெருக்கடியைத் தருகிறது.

படத்தில் புலம்பெயர்ந்த வடகிழக்கு இளைஞனின் கடைவாசலில், நடுத்தர வயது மனிதர் ஒருவர் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து புகைத்தபடியே இருக்கிறார். நாளெல்லாம் அந்தக் கடையை, இளைஞனை உற்று கவனிப்பதையே தலையாயக் கடமையாக நிறைவேற்றிவருகிறார். இந்த தேசம் முழுக்கவே எல்லா நகரங்களிலும் இவர்களை விசித்திரமாகப் பார்க்கும் நம் அனைவரின் கண்களுக்கான ஒற்றைக் குறியீடு அவர். அந்த வயதானவரின் கண்களில் என் கண்கள் பொருத்தப்பட்டிருப்பதான பிரமைகூட எனக்கு வந்துபோனது.

அவமதிப்புக்குள்ளாகும் பெண்கள்:

படம் முழுக்க வரும் உரையாடல்கள் அர்த்தபூர்வமானவை. ஒரு வடகிழக்குப் பெண்ணின் காதலன் கண்முன்னே அவளைக் கொச்சையாகப் பேசும் இளைஞர்கள், அவள் எதிர்த்துக் கேட்கும்போது கன்னத்தில் அறைகின்றனர். அவர்களின் உறவையே அது அசைத்துப்பார்க்கிறது.

வடக்கு, கிழக்கு என்று திசைகளை வைத்து மனிதர்களை அவமதிக்கும் சமூகம், பெண்கள் என்றால் மட்டும் கூடுதல் அவமதிப்புகளைத் தயார் நிலையில் வைத்திருக்கிறது. நகரத்திற்கு அந்நியப்பட்டவர்கள் மீது ஒழுக்கம், உடை, அதிகாரம் என்ற பெயரில் கற்கள் தொடர்ந்து வீசப்படுகின்றன.

வடகிழக்கு இந்திய பெண்கள் புலம்பெயர்ந்தவர்கள் என்ற நிலையில் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகமாகவே இருக்கின்றன.

அவர்கள் அணியும் ஆடை என்பது அவர்களின் சுதந்திரம் என்பதை தாண்டி இவர்களுக்கான சமிக்ஞையாக புரிந்து கொள்ளப்படுவதன் உந்துதல்.

பொதுவாக வடகிழக்கு இந்திய ஆண்-பெண்களுக்குள் அழகிய புரிதல் உள்ளது.உறவுகளை அதன் போக்கில் கையாளுகின்றனர்.படத்தில் அதன் மாதிரியாக பாத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய பெண்கள் தங்கள் ஆண்களை  மயக்க வந்த மோகினிகளாக அவர்களை எண்ணிக் கொள்வதையும் படம் உணர்த்துகிறது.இல்லையென்றால் நம் ஆண்கள்தான் எத்தனை தூய்மையானவர்கள்!?கொரோனா காலத்தில் நிகழ்ந்த குடும்ப வன்முறைகள், பாலியல் வக்கிர நிகழ்வுகளின் காவல் நிலைய  தகவல் அறிக்கை புத்தகங்கள் இதற்கு பதிலளிக்கும்.

இந்திய மனநிலைக்கு வெளியே நிறுத்தும் அவலம்:

பொதுவாக இந்திய மனநிலைக்குள் அவர்கள் நிலைநிறுத்திக் கொள்ள முடியாதவாறு அவர்கள் வாழ்வின் நாட்களை நகரவாசிகள் சிதறடிப்பதன் நிதானமான சாட்சியாகிறது படம்.அவர்களை இந்தியர்களாகவே நாம் பொருட்படுத்தாதன் தாக்கம், வடகிழக்கு இந்தியர்களை நேபாளிகளாக எண்ணுவது என பல கூறுகளை படம் தெளிவுப்படுத்துகிறது.

மேலும் வடகிழக்கு இந்தியர்கள் அனைவரையும் தோற்றத்தை வைத்து ஒன்றாக மதிப்பிடும் போக்கும் அவர்களின் தனித்துவத்தை குறைக்கிறது.இயக்குநர் அதை ஒரு காட்சியில் உணர்த்துகிறார்.

ஆக்குனீ சமைக்க இடம் தேடி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நண்பரை தொடர்பு கொள்ளும்போது ஆளுக்கொரு மொழியில் பேசும் ஒற்றைக் காட்சியில் வடகிழக்கு மாநிலத்தவரின் பன்முகத்தன்மையை விளக்கிவிடுகிறார் இயக்குநர்.

அவர்களில் ஒருத்தி சமைக்கும் காட்சியில் தான் ஒரு நேபாளி என்று அந்த வாசனைக்கு முகத்தை சுளிப்பதும் நுட்பமான வெளிப்பாடு.

வேற்று நாட்டில் அகதி மனநிலைக்கு தள்ளப்படுவது துயரத்தின் ஒரு வகை என்றால் சொந்த நாட்டிலே இந்த நிலைக்கு உள்ளாவது எவ்வளவு வலிமிகுந்தது என்பதன் சான்று இப்படம்.

ஒருநாள் என்பது நீளமானது:

படம் ஒரு நாளில் நடக்கும் சம்பவங்களை கொண்டுள்ளது.ஒரு நாளுக்குள்தான் எத்தனை புறக்கணிப்புகள், அவமானங்கள், பாலியல் அத்துமீறல்கள்,கண்காணிப்புகள்!? அவ்வாறெனில் ஒவ்வொரு நாளையும் பெரும் விலை கொடுத்தே அவர்கள் தள்ளுகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

கதையின் போக்கு பிசகாமல் செல்கிறது.ஒரு நாள் என்பதன் வழி ஒரு சமூகத்தின் துயரத்தை பேசி மறுபுறம்  இந்திய சமூகத்தின் மனசாட்சியை ஓங்கி அறைகிறார் இயக்குநர்.

பழங்குடி இனக்குழுவில் இருந்து டெல்லிக்கு பெண் பணிபுரிய வருகிறாள்.அவளால் அவள் திருமணத்திற்கு செல்ல இயலவில்லை.குறித்த நேரத்தில் திருமணம் நடக்க இணைய வழி ஏற்பாடு செய்யப்படுகிறது. சர்வசாதாரணமாக பழக்க  வழக்கங்களை புதுப்பித்து கொள்கின்றனர்.அவர்கள் மீதான நம் கற்பிதம் உடைக்கப்படுகிறது.

அடர்த்தியான அரசியலைப் பேசியிருந்தாலும் சுமையின்றி எம்பிப் பறக்கிறது திரைப்படம். நெகிழ்வும் நகைச்சுவையுமான தருணங்கள் திரைக்கதை முழுக்க விரவியிருக்கின்றன. “தோழியின் திருமணம்… குடிக்காமல் இருக்க முடியுமா?” என்றபடி மது அருந்தும் ஒருத்தி, மெல்லிய போதையுடனேயே படம் முழுக்க வலம்வருகிறாள். பிரச்சனையில் மாட்டிக்கொள்ளாமல் ஆக்குனீ சமைப்பதற்காக நண்பர்கள் குழு செய்யும் ரகசிய முயற்சிகள் புன்முறுவலை வரவழைக்கின்றன. அழகியல் நிரம்பிய கலைடாஸ்கோப் சித்திரங்கள்தான் என்றாலும், அவை உடைந்த கண்ணாடித் துண்டுகளாலானவை என்பதையும் அவ்வப்போது உணர்த்துகிறார் இயக்குநர்.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருந்து பணி, கல்வி நிமித்தம் லட்சக்கணக்கான மனிதர்கள் நாட்டின் பெருநகரங்களில் விரவி உள்ளதை கொரோனா என்னும் தொற்று நோய் வெளிச்சமிட்டது.

அசாம், திரிபுரா, மணிப்பூர்,சிக்கிம், நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் நேபாளம்,பூடான், பங்களாதேஷ், மியான்மார் நாட்டின் எல்லையொட்டி உள்ளன.

அங்கேயும் “இந்தியர் யாவரும் என்னுடன் பிறந்தோர்” என்றே உறுதிமொழி எடுக்கின்றனர். உறுதிமொழிகளை டெல்லி போன்ற பெருநகரங்கள் மாசுபடுத்துவதை  Axone என்ற இந்தி திரைப்படம் கலையின் வழி கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒற்றை கலாச்சாரத்தை இந்தியாவில் முன்வைப்பவர்களை, நாட்டின் கலாச்சார பன்மயத்தின் புரிதல் அற்றவர்கள் என்பதன் அழுத்தமான சான்றாகிறது படம்.

Movie: Axone

Language : Hindi

Year: 2019

Platform: Netflix

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
 2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
 3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
 4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
 5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
 6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
 7. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
 8. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
 9. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
 10. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
 11. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
 12. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
 13. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
 14. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
 15. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
 16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
 17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்