திரையில் விரியும் இந்திய மனம்-8

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 2017ம் ஆண்டு வெளியான காஸி திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டது. சங்கல்ப் ரெட்டி, தனது முதல் திரைப்படத்தின்மூலம் இந்தியாவின் முதல் கடலடிப் போர் இயக்குநராகவும் சிறப்புப் பெறுகிறார்.

1971ம் ஆண்டு நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் போரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், சிறந்த தெலுங்குப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. PNS Ghazi என்கிற பாகிஸ்தானிய நீர்மூழ்கி,  INS Rajput என்கிற இந்திய நீர்மூழ்கியால் தாக்கப்பட்ட கதையைப் பேசுகிறது காஸி.

வங்கப்பிரிவினை என்பது பள்ளிக்கூட வரலாற்றுப் பாடப்பிரிவில் மிக முக்கியமான தேர்வுக் கேள்விகளில் ஒன்று. 1905ம் ஆண்டு என்பதை மனனம் செய்த காலநேர்க்கோட்டில் மறக்கமுடியாத இதன் தொடர்ச்சியான காஸி நீர்மூழ்கி நிகழ்வும் வருகிறது. வரலாறு, கண்ணிகளளால் இணைக்கப்பட்ட ஒன்று என்பதை அறிவோம். பிரிட்டிஷ் அரசு, இந்திய வங்காள மாகாணத்தை  மத அடிப்படையில் மக்களின் எண்ணிக்கையை வைத்து மேற்கு வங்காளம், அசாம், கிழக்கு வங்காளம் என்று பிரிக்கிறது. மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிழக்கு வங்காளத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாகவும் இருந்தனர். இந்திய தேசியவாதிகள், இந்துக்களின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் கிழக்கு வங்க இஸ்லாமியர்கள் இதனை வரவேற்றதோடு, 1947ல் இந்தியாவிடமிருந்து பிரிந்த பாகிஸ்தானோடு தங்களை இணைத்துக்கொண்டனர்.

பிற்காலத்தில் கிழக்கு பாகிஸ்தானாக நிலைபெற்றவர்கள், பாகிஸ்தான் அரசால் மேற்கு, கிழக்காகப் பாகுபாட்டோடு நடத்தப்பட்டனர். பொருளாதார ரீதியில் இந்தியாவில் தமிழகத்தில் எழுந்த “வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது” உரிமைக்குரலைப் போல அங்கு மேற்கு வாழ, கிழக்கு தேய, மக்கள் தனிநாடு பிரிவினைக்குப் போராட வீதிக்கு வருகின்றனர். அரச பயங்கரவாதம் தலை எடுக்கிறது. இனப்படுகொலைகள் அரங்கேறுகின்றன. கிழக்கு பாகிஸ்தானின் நான்கு எல்லைகளில் மூன்று இந்தியாவாலும், ஒன்று கடலாலும் சூழப்பட்டது. இந்திய அரசு கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்குத் துணை செய்ய, இந்திய-பாகிஸ்தான் போர்ச்சூழல் உருவாகிறது. போர் வரலாற்றில் மிகக்குறைவான 13 நாட்களில் முடிவுக்கு வந்த இந்தப் போரில் வான் தாக்குதல்கள் வரலாற்றில் இடம் பெற, கடலுக்கடியில் நிகழந்த போர் மட்டும் புதிரானதாக மாறிப்போனது.

திரைக் கதையின்படி இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் காஸி நீர்மூழ்கியைக் கொண்டு இந்திய நீர்மூழ்கியைத் தாக்கவும் கண்ணி வெடிகளைப் புதைக்கவும் பாகிஸ்தான் திட்டமிடுகிறது. விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் குறி வைக்கப்படுவதாக இந்தியாவுக்குத் தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன. இத்திட்டத்தை முறியடிக்க கேப்டன் ரன்வீர் சிங் என்பவர் தலைமையில் ராஜ்புட் எனும் நீர்மூழ்கி இந்தியாவால் அனுப்பப்படுகிறது. கேப்டன் ரன்வீர் சிங் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கக் கூடியவர் என்பதால் தேவையற்ற போர் மூளச்செய்கிற பதற்றம் இருநாடுகளுக்கிடையயே எழலாம். அதை விரும்பாத இந்தியா, கேப்டன் ரன்வீர் சிங்கின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அர்ஜுன் வர்மா என்ற அதிகாரியையும் அனுப்புவதாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கடலுக்கடியில் நிகழப்போவதைக் காண்பதற்குப் பார்வையாளர்களை ஆர்வத்துடன் தயார் செய்கிறது திரைக்கதை அமைப்பு. பொதுவாக இந்திய சினிமாவில் போர்த் திரைப்படங்கள் என்றால் சுதந்திரத்துக்கு முன்பான ராஜா-ராணி கதையாகவே கணிசமான எண்ணிக்கை இருக்கும். முதன்முதலாக இந்திய அளவில் கடலுக்கடியில் நடக்க இருக்கும் போரைத் திரைப்படம் காட்டுகிறது.

எதிரெதிர் துருவங்களாக இரண்டு அதிகாரிகள் போருக்குத் தலைமை ஏற்க, அவர்களுக்குள் எழும் முரண் போரில் எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்த இருக்கிறது என்ற பதைபதைப்பு பார்வையாளர்களைத் தொற்றிக் கொள்கிறது. இப்பயணத்தில் கூடுதலாக இளம்பெண்ணும் ஒரு குழந்தையும் இணைந்து கொள்கின்றனர். அவர்களின் வருகை ஏற்படுத்தும் தாக்கம் தேசப்பற்று, மனிதாபிமானம், போரின் முகம் என்று பலவாறு இருக்கிறது.

ராணாவும் கே.கே மேனனும் இரண்டு அதிகாரிகளாகக் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றனர். இணையாக வரும் அதுல் குல்கர்னி பாத்திரமும் சிறப்பு. நீழ்மூழ்கிக் கப்பல் செயல்படும் விதம், கடலுக்குள் நடைபெறும் போர் இவையெல்லாம் இந்தியத் திரைக்குப் புதியது. கப்பலில் நடைபெறும் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்படுள்ளன. கடலுக்கடியில் நாமும் இருப்பதுபோன்ற ஒரு உணர்வைத் தருகிறது திரைப்படம்.

காஸி அனுப்பும் நீர்மூழ்கி வெடிகளிலிருந்து தப்பிக்க அதிகாரிகள் முடிவெடுக்கும் இடங்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரி இருந்தாலும் அலுப்பூட்டவே இல்லை.

போர் போன்ற சூழலில், அதுவும் கடலுக்கடியில் எனும்போது அவர்கள் எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானவை என்று புரிந்துகொள்ள முடிகிறது. காதில் ஒரு கருவியை வைத்துக்கொண்டு எதிரியின் இடம், அசைவு, முன்னெடுப்புக்களைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இதெல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

தேசப்பற்று வெறியாக உருமாறும் அவலத்தையும் உணர முடிகிறது. இத்திரைக்கதையில் அதை மிக கவனமாகக் கையாண்டிருக்கின்றனர். கப்பலுக்குள் வந்து போகும் பெண், தனது நாட்டின் தேசிய கீதத்தை சத்தமாகப் பாடுகிறாள். அவள் முன் நிற்கும் இந்திய வீரர்கள் குழம்பிப் போய்ப் பார்க்கிறார்கள். தான் நிற்பது எந்த நாட்டுக் கப்பல் என்று அறியாத நிலையில் இந்தப் பாடலை அவள் பாடுகிறாள். ஒருவேளை பாகிஸ்தான் கப்பலாக இருந்தால், வங்க தேசிய கீதத்தைக் கேட்டவுடன் இனவெறி மிகுந்த ஆத்திரத்தில் அவளைச் சுடுவர். அதன்மூலம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகாமல் மரணத்தைத் தழுவ நினைப்பதாகக் குறிப்பிடுகிறாள்.  இந்தக் காட்சியில் இந்திய வீரர்கள் நல்லவர்கள் எனும் கோட்டுக்குள் தானாக வருகின்றனர். இதே சூழலில் காஷ்மீர் பெண்களின் குரல் இந்திய ராணுவத்தால் எவ்வாறு கையாளப்படுகிறது என்ற கேள்வியும் எழுகிறது. அரச பயங்கரவாதத்தின், ராணுவ உடுப்பின் வண்ணம் நாட்டுக்கு நாடு மாறலாம். அதன் குணம் மாறுமா?

படத்தோடு ஒன்றி இருக்கும்போது நீங்கள் இந்தியப் பார்வையாளராகத் தூண்டப்படுவீர்கள். அதற்கான காட்சிகள் தாராளமாகக் கிடைக்கின்றன.அதே சமயத்தில்அரசியல் அறிவு உறங்காமல் இருந்தால் தேசப்பற்றின் பின்னணியில் பல கேள்விகளும் எழலாம்.

கப்பல் அதிகாரியாக வரும் கே.கே.மேனன் பாத்திரம் வடிவமைக்கப்பட்டதை பார்க்கலாம்.அவர் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்.அவரைக் கட்டுப்படுத்த கூடுதலாக ராணா அதிகாரியாக அனுப்பப்படுவார்.தேசப்பற்றின் உச்சத்தில் அது என்னவாக மாறி அவர் காணப்படுகிறார் என்று நாம் புரிந்துக் கொள்ளலாம்.அதிகாரத்தின் உச்சம் இவர்களை இவ்வாறு மாற்றிவிடுகிறது என்றும் கொள்ளலாம்.அதிகாரம்,ராணுவஉடுப்பு ஆயுதம் இதெல்லாம் சேரும்போது எதிரில் நிற்பவன் மனிதன் என்பதே மறந்துப் போய் விடும் ஆபத்தும்வந்து விடுகிறது.சட்டையில் குத்தப் பட இருக்கும் மெடல்களின் மீதான மயக்கத்தில் அவர்களின் பார்வையில் இருந்து கூட இருக்கும் மனிதர்கள்,எதிரில் இருப்போர் எல்லோரும் வெளியேறிவிடுகிறார்கள்.இதற்காகவே அவரின் பாத்திரத்தின் நெளிவை சரிசெய்யும் விதமாக அவருக்காகவே ஒரு பின் கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.அவரின் குடும்பமே ராணுவ சேவையில் பங்குக் கொள்கிறது.அவரின் மகன் பாக்கிஸ்தான் ராணுவத்தால் உயிர் இழந்திருப்பார்.இது போன்ற பின் கதைகள் நாடகத்தன்மையை திரைக்கதைக்கு உருவாக்கி விடுகின்றன.பொதுவாக சாதாரண காவல் சீருடைப் பணியாளர்களே மக்களிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை நாம் அன்றாடம் பார்த்துதானே வருகிறோம்.ஆகவே அவரின் போக்கிற்கு வலிந்து ஒரு நியாயம் தேவையில்லை.அதிகாரத்தின் போக்கு தரும் தைரியம் அவர்களை இவ்வாறே வழி நடத்தும்  என்று நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.

வங்காள விரிகுடாவில் இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் காஸி தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக இந்த நிகழ்வு அறிவிக்கப்படாததால் இன்னும் இந்தப் புதிர் நீடிப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். “உள்ளுக்குள் சில பாகங்கள் வெடித்ததாலோ கடற்படுகைகளில் உள்ள கண்ணிவெடிகள் தவறுதலாக வெடித்ததாலோ இது நடந்திருக்கும்” என்றுதான் பாகிஸ்தான் ராணுவம் தெரிவிக்கிறது. “கடற்கரையில் நின்றுகொண்டிருந்த போது கடலுக்கடியில் பெரிய வெடிப்பு நடப்பதைப் போன்ற சத்தங்கள் கேட்டன” என்கிறார் இந்திய அதிகாரி ரஞ்சித் ராய். காஸியிலிருந்து கிடைத்துள்ள நின்றுபோன ஒரு கடிகாரத்தின் நேரமும் மக்கள் வெடிப்பு சத்தத்தைக் கேட்ட நேரமும் பொருந்திப்போகிறது. ஓய்வுபெற்ற இந்திய துணை அட்மிரல் ஹிரண்நந்தானி, “இது உள்ளுக்குள் நடந்த விபத்தாக இருக்கலாம்” என்கிறார்.

காஸிக்குள் ஏற்பட்ட தீவிபத்து உள்ளே இருக்கிற நீர்மூழ்கி வெடிகளையும் கண்ணிவெடிகளையும் இயக்கியிருக்கலாம், பாட்டரிகளை சார்ஜ் செய்யும்போது ஹைட்ரஜன் அதிகமாகி நீர்மூழ்கி வெடித்திருக்கலாம், ராஜ்புத் நீர்மூழ்கி துரத்தியதால் காஸி கீழே செல்லும்போது தான் புதைத்துவைத்த கண்ணிவெடியின் விபத்திலேயே அது சிக்கியிருக்கலாம் என்றெல்லாம் பல கருத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.

இதே நிகழ்வை அடிப்படையாக வைத்து 1998ல் காஸி ஷாஹித் என்ற பெயரில் பாகிஸ்தான் ஒரு திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்தக் கதை எவ்வாறு இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.

நீர்மூழ்கிக் கப்பல், கடலடிப் போர் என்று இந்திய திரைக்குப் புதிதான பல விஷயங்களைப் பேசியிருந்தாலும் இன்னும் பல நுட்பங்களைத் தொட்டிருக்கலாம். படத்தின் நோக்கம் தேசப்பற்று மிகை உணர்ச்சியிலேயே சிக்கிச் சுழல்வதால் நீர்முழ்கிக் கப்பலின் செயல்பாடு, கடலுக்கடியில் நடக்கும் போர் போன்றவற்றின் விவரங்களில் போதாமையும் ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் காட்டப்படும் சொன்னது சொல்லலுமாக அமைந்துவிட்டது.

பொதுவாக போர்ப்படங்களுக்கு என்று பொறுப்புணர்வு இருக்கிறது.அது வெற்றி தோல்வியைத் தாண்டி மனிதகுலத்தின் மாண்பை  மேம்படுத்தும் கூறோடு இருக்க வேண்டியது அவசியம்.

அந்த வகையில் பாகிஸ்தான் எதிர்ப்புணர்வுக்குத் தீனி போடும் இந்தப் படத்தை கவனமாகவே அணுகவேண்டும். போர் எந்த இடத்தில், எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும் அது மனிதர்களுக்கு எதிரானது என்பதை கவனப்படுத்தத் தவறும்போது போர்சார்ந்த திரைப்படங்களின் அடிப்படை நோக்கிலிருந்து அது தவறிவிடுகிறது.

Movie: Ghazi

Year: 2017

Language: Hindi/Telugu/Tamil

Platform: Amazon Prime

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
 2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
 3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
 4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
 5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
 6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
 7. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
 8. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
 9. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
 10. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
 11. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
 12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
 13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
 14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
 15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
 16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
 17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்