திரையில் விரியும் இந்திய மனம் -12

அலங்காரம் செய்யப்பட்ட பெண் முகம், பசுவின் உடலுடன் கூடிய படத்தை காலண்டரிலோ வழிபாட்டுப் படமாகவோ பெரும்பான்மையாகப் பார்க்க நேரிடலாம். இந்துக்கள் பசுவைத் தாய்க்கு நிகராக வழிபடுவதும் அதைக் கொல்வது பெரும் பாவம் என்றும் கருதுவதற்கும் பின்னால்  ஆன்மீக, சமூக வரலாறுகள் பல உண்டு.  ஆனால் இந்தியாவின் பசிக்கும் வறுமைக்கும் முதலாவது காரணம் பசு வழிபாடுதான் என்று பல நிபுணர்கள் கூறுகின்றனர். பசுக்கொலை தவறு என்று கருதுவதால் சுமார் பத்து கோடி உபயோகமற்ற விலங்குகள் உயிரோடு வைத்திருக்கப்படுகின்றன என்று மேற்கத்திய விவசாய அறிஞர்கள் கூறுவதாக மானுடவியலாளர் மார்வின் ஹாரிஸ் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். மேலும் பசுவைக் கும்பிடும் இந்தப் பழக்கத்தால், பாலுக்கோ மாமிசத்துக்கோ உதவாத விலங்குகளை உயிரோடு வைத்திருந்து, பிரயோசனமான மற்ற விலங்குகள், மனிதர்களுடன் அவற்றைப் போட்டி போட வைத்து இந்திய விவசாயத்தையே வீணடிப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.

உத்திரப் பிரதேச மாநில அரசு பசுக்களைக் கொல்வதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்த காலத்தில் அங்கு வசிக்கும் எளிய இந்திய முஸ்லீம் குடும்பம் தங்கள் வாழ்வாதாரத்தையும் உயிரையும் பாதுகாத்துக்கொள்ளப் போராடுவதை Aani Maani என்கிற அற்புத கலைவடிவமாக ஃபாஹிம் இர்ஷாத் எடுத்துள்ளார்.

மதச்சம்பிரதாயங்களும் பாரம்பரியமும் பசுவின்மீது புனிதங்களைக் கட்டமைத்தாலும், கொடுமையான பஞ்ச காலத்தில் இந்திய விவசாயிகள் மாட்டுக்கறி தின்றே உயிரைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் 1944ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின்போது மாட்டுக்கறி தின்பது அதிகமானது. அதனைத் தடுக்க பிரிட்டிஷ் ராணுவமே களத்தில் இறங்கியுள்ளது. “பீகாரில் இந்துக்கள் பெரும்பட்டினி பஞ்சத்தில் சிக்கி, இந்து மதத்தில் புனிதமாகக் கருதப்படும் பசுக்களையும் காளைமாடுகளையும் கொன்று தின்றார்கள்” என்று 1967ல் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டதாக “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு காலத்தின் முன்னும் பின்னும் கவனித்தால், மாட்டுக்கறி உண்பது வழக்கமாகவும் தடைவிதிக்கப்பட்டதாகவும் தடைமீறலாகவும் இருந்து வந்துள்ளது. 2014ல் பாரதி ஜனதா இந்தியாவில் வீச்சாகத் தலையெடுத்த பிறகு பல்வேறு மாநிலங்களில் மாட்டுக்கறி விவகாரம் சட்டமாகவும் பிரச்சனையாகவும் மாறிவிட்டது. மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று கூறப்பட்டு பல்வேறு இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர். பலர் அடித்தே கொல்லப்படுகின்றனர். பல்வேறு ஆண்டுகளாகத் தொழில் செய்து வந்த கடைகள் சூறையாடப்படுகின்றன.

இயக்குநர் ஃபாஹிம் இர்ஷாத்தின் “ஆனி மானி” திரைப்படம், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மாட்டுக்கறி வைத்திருப்பதற்கும் விற்பதற்கும் தடை என்று சட்டம் இயற்றிய காலகட்டத்தில் குடும்பத்தோடு ஒரு சிறுநகரத்தில் மாட்டுக்கறி கபாப் கடை வைத்திருக்கும் இஸ்லாமிய இளைஞன் புட்டோவின் வாழ்வு எப்படி இருந்தது என்பதைக் காதலும் அரசியலும் கலந்து இயல்பாகப் பேசுகிறது.

நகரத்தில் இருந்து பறவையாகப் பறந்துவந்து குடும்பத்தின்மீது நிலைகொள்ளும் காட்சியிலிருந்தே தன் நோக்கத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது திரைக்கதை. குடும்பத் திரைப்படமாக நகரும்போதும் அது நிகழ்த்தும் அரசியல் உரையாடலுடைய இழை குறையவே இல்லை.

புட்டோ, அவனது மனைவி, பெற்றோர், விவாகரத்தான அக்கா மற்றும் அவளது மகள் ஆகியோர் கொண்ட கீழ்நடுத்தர இஸ்லாமியக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், பொழியப்படும் காதல், எழும் முரண் எல்லாவற்றையும் படம் அசலாகப் பதிவு செய்திருக்கிறது. பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இயக்குநர், படம் கேரளாவில் திரையிடப்பட்டபோது கூறிய சொற்கள் சினிமாவின் வேலையை வரையறுக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகள் தட்டாமாலை சுற்றியபடியே பாடும் ஒரு பாடலின் முதல்வரியைத் தான் இயக்குநர் படத்தின் தலைப்பாக வைத்துள்ளார்.ஒரு தேசத்தின் பாடலைக் கூடப் பொதுவில் வைக்காமல் பெரும்பான்மை மக்களுக்கானது என்று யாராவது சொல்லிவிடமுடியும், ஆனால் இதுபோன்ற குழந்தைப் பாடல்களை யாரும் உரிமை கொண்டாடிவிட முடியாது. மேலும் இப்பாடலின் முதல் வரியை வைப்பதன்மூலம் இஸ்லாமியர்களும் இந்திய நீரோட்டத்தில் கலந்தவர்கள்தான் என்று கூறும் வாய்ப்பும் உண்டு. வட்டமாக நின்று குழந்தைகள் பாடும் பாடலே தலைப்பாக அமைந்தது ஒரு குறியீடு.  “இதுபோன்ற விசயத்தை நான் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது?  என் சமூகம் தொந்தரவு செய்யப்படுகிறது, அலைக்கழிக்கப்படுகிறது, அவர்களின் உணர்வுகளை நான் பேசுகிறேன். நிராயுதபாணிகளான அவர்களின் ஆயுதமாக இத்திரைப்படத்தைப் பயன்படுத்துகிறேன்” என்று வலிமிகுந்த வார்த்தைகளையும் இயக்குநர் பேசியிருக்கிறார். இதை ஆழமாக யோசித்தால் ஒரு பெரும்திரளான மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக வைத்திருக்கும் அவலம் புரியும்.

படத்தின் நாயகியாக வரும் ப்ரியங்கா வர்மாவின் நடிப்பு அவ்வளவு இயல்பாக இருக்கிறது. புட்டோவும் நாயகியும் நிஜமான தம்பதிகளாகவே இயல்பாகப் பொருந்திப் போகின்றனர். அவர்கள் மட்டுமல்லாது பெற்றோர், அக்கா, குட்டிப்பெண் ஆகியோருடன் சேர்த்து அந்த அழகான வீடும் ஒரு பாத்திரமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது.

புட்டோ ஏற்கனவே எட்டு ஆண்டுகள் ஜெயில் வாழ்வை வாழ்ந்திருக்கிறான். “பொய் வழக்கு” என்ற ஒற்றை வரியோடு அது நின்றுவிடுகிறது, காரணம் விரிவாக சொல்லப்படுவதில்லை. பார்வையாளர்களுக்கும் அது தேவைப்படுவதில்லை. இந்தியாவில் ஒரு இஸ்லாமிய இளைஞன் ஆண்டுக்கணக்காக சிறை வைக்கப்பட பெரிய காரணங்கள் தேவையில்லை என்ற நிலை எத்தனை துயரமானது!?

சிறைவாசத்துக்குப் பிறகும் அவனது குடும்பம் அவனை ஆதுரத்தோடு அரவணைத்துக்கொள்கிறது. கூடுதலாக அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பும் அவன் தலையில் வைக்கப்படுகிறது. மாட்டிறைச்சி கபாப் கடை மூலம் அளவான வருமானம் வந்தாலும் அவன் மகிழ்ச்சியாகவே இருக்கிறான். அரசு கொண்டு வரும் திடீர் சட்டம் அவனது சுழல் வாழ்வில் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து கீழே சாய்க்கப் பார்க்கிறது. அதிகாரங்களிடம் சரணடைந்து தடைகளைத் தாண்டித் தன் பிழைப்பைத் தொடரவே முயல்கிறான். ஒரு கட்டத்தில் புட்டோ நெருக்கடி தாளாமல் தொழிலை மாற்றிக்கொள்ளலாமா என்ற நினைப்பில் காய்கறி சந்தைக்குச் செல்கிறான். காய்கறி விலைகளைக் கேட்டு மலைத்துப் போகிறான். வேறு வழியின்றி மீண்டும் லஞ்சம் தந்து மறைத்தாவது கபாப் விற்பனை செய்யும் முடிவுக்குத் தள்ளப்படுகிறான். அந்த எளிய குடும்பத்தை ஆதிக்க மனப்பான்மையின் கோரப்பற்கள் விட்டுவைக்குமா என்பதுதான் படம்.

புட்டோ, தரன்னம் இருவரும் கவிதைபோலான ஒரு வாழ்வை வாழ்கின்றனர், கொண்டாடுகின்றனர். அதே நேரம் இருவருக்குள்ளும் இயல்பாக எழும் முரணும் சச்சரவுகளும் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோதுமை வயலில் இருவரும் ஓடிவிளையாடும் காட்சி அழகியலின் உச்சம். தரன்னம் புட்டோவின் கண்ணுக்கு மையெழுதும் காட்சி அவர்களிடையே நிலவும் காதலை அச்சு அசலாகப் பேசுகிறது.

கூட்டுக் குடும்பமாக இருப்பதன் பலமும் பலவீனங்களும் உணர்த்தப்படுகின்றன. எல்லாம் தாண்டி மனிதர்கள் இவ்வாறு கூடி வாழ்வதில் பெரும் பலமும் மகிழ்ச்சியும் இருப்பது தெளிவாகிறது. தரன்னம்மும் அவளது நாத்தனாரும் வீட்டுக்குள் அவ்வப்போது உரசிக் கொள்கின்றனர். அந்த உரசலில் மத அடிப்படைவாதம், ஆண்மைய சிந்தனை, பெண்களின் நிலை, உளவியல் எல்லாம் பேசப்படுகிறது. ஈரத்துணிகளைக் கொடியில் காயப்போடும் காட்சியில் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அவர்களின் கதாபாத்திரத் தன்மைகளை உணர்த்திவிடுகின்றன. பெண்களின் உள்ளாடைகளைப் பொதுவில் வெளியே தெரியும்படி காயப் போடக் கூடாது என்று அவள் கூறும்போது, தரன்னம் தன் கணவனின் உள்ளாடைகளையும் ஒரு துணிக்குக் கீழ் மறைக்கிறாள். அங்கு வந்து பார்க்கும் புட்டோ “இது எப்படிக் காயும்” என்று கேட்கிறான். அதற்குத் தரன்னம் சொல்லும் பதில் குடும்பங்களுக்குள் நிலவும் நுட்பமான அரசியலை வெளிப்படுத்துகிறது.

கழிப்பறைக்குச் சென்றுவிட்டுத் திரும்ப வந்து அடிபம்பில் கை கால்களை சுத்தம் செய்வது, நகம் வெட்டுவது, ஊறுகாய் போடுவது,கணவன் குளிக்கும்போது முதுகு தேய்ப்பது, அவனது புகைப்பழக்கத்தால் வரும் இரவுநேரச் சண்டை என்று அன்றாடங்களின் அழகியலைக் காட்சிக்குக் காட்சி வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் மூன்று பெண்கள், அவ்வப்போது வரும் பெண் விருந்தினர்கள், குட்டிப்பெண் ஆகியோரிடையே நடக்கும் உரையாடல்கள் நிதர்சனமாக அன்றாடம் குடும்பங்களில் பேசப்பவதைப் பிரதிபலிக்கின்றன. உடல், உடை, சமூக நெருக்கடி, உணவு, உறவுகள் என்று எல்லாவற்றையும் விவாதிக்கிறார்கள்.

ஆனி மானி பாடியபடி குழந்தைக்கே உரிய கேள்விகள், சிரிப்பு, விளையாட்டு எனத் திரியும் சகோதரியின் மகள், குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியைக் கண்களின் ஓரத்தில் ஏந்திக்கொண்டிருக்கிறாள். புட்டோவின் தகப்பன் கதாபாத்திரம் ஒரு சராசரி இஸ்லாமியக் குடும்பத்துடைய தலைவனை அழகாகப் பிரதிபலிக்கிறது. அவர் உள்ளூர் விளம்பரங்களுக்குக் குரல் தருபவராகவும் இருக்கிறார். அதுவும் ஒரு இடத்தில் அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பொருளாதார நெருக்கடி உள்ள குடும்பத்தில் தந்தைக்கும் மகனுக்கும் உரசல்கள் வரும். மாட்டிறைச்சியை அரசு தடை செய்தபிறகு அவர் மகனை எச்சரித்தபடியே இருக்கிறார்.  என்னதான் செய்வது என்று அவன் வாதிடும்போது, ஒரு கட்டத்தில் உணர்ச்சி வேகத்தில் “பன்றி இறைச்சி தின்னு” என்று திட்டுகிறார். பன்றி என்றாலும் பசு என்றாலும் அந்த இறைச்சியின்மீதான ஒவ்வாமை ஒருவித மத அடிப்படைவாதமாகவே வெளிப்படுவதைப் பதிவு செய்கிறது இந்த வசனம். அடிப்படைவாதிகள் எந்தப் பக்கத்தில் இருந்தாலும் அது விமர்சனத்துக்குரியது என்பதை நேர்மை மாறாமல் பதிவு செய்த இயக்குநர் பாராட்டுக்குரியவர்.  மேலும், மக்கள் பொதுவாகத் தன்னை ஒரு குடும்பத்துக்குள் மதமாக இனமாக அடையாளப்படுத்திக்கொள்ள இதுபோன்ற பழக்கங்கள் பயன்படுத்தப்படுவதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

துணிகளை உலர்த்தும்போது தரன்னமும் சிறுபெண்ணும் பாடும் ஒரு மகிழ்ச்சியான பாடல், இருவரும் உருது கற்றுக்கொள்ளும்போது வாய்ப்பாடு வடிவத்தில் வரும் ஒரு சிறு பாடல், அடிக்கடி வந்துபோகும் ஆனி மானி என, எதிர்பாராத இசைப்பாடல்களால் படத்தின் ஒலி உலகம் நிறைந்திருக்கிறது. அதிகாரம் இவர்களின் குரல்வளையை நசுக்கியபிறகு வேறொரு பாடல் கேசட்டில் ஒலிக்கிறது.

“ரிங்கா ரிங்கா ரோஸஸ்” என்ற பிரபலமான குழந்தைகள் விளையாட்டுப் பாடல், மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அல்ல, அது ப்ளேக் நோய் காலத்தில் எழுதப்பட்ட துக்கப் பாட்டு என்பது அதிர்ச்சியான ஒரு தகவல். ஆனாலும் குழந்தைகள் அந்த வரலாற்றின் நிழல் அறியாமல் அதைப் பாடி சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  அதன் நீட்சியாகவே ஆனி மானி பாடலைப் பார்க்க முடிகிறது. இந்தப் படத்தைப் பார்த்தபிறகு ஆனிமானியைக் கேட்பவர்களுக்கு அதில் துயரத்தின் கறை படிந்திருப்பதாகவே தோன்றும்.

Movie: Aani Maani

Year: 2019

Language: Hindi

Platform : Mubi