திரையில் விரியும் இந்திய மனம்-14

நூற்றாண்டின் சிறந்த பெண்மணி,  நாட்டின் சிறந்த பிரதமர் என்றெல்லாம் பத்திரிக்கைகளின் கருத்துக்கணிப்புகள் பாராட்டிய இரும்புப் பெண்மணி இந்திரா காந்தியின் அரசியல் வாழ்வில் நெருக்கடிநிலை என்பது தீராத களங்கத்தைத் தந்தது. 1975 ஜூன் 26ம் தேதி தொடங்கி 1977 மார்ச் 21 வரை நீடித்த எமர்ஜென்சி காலத்தில் நாடு முழுவதும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர். எதிர்க்கருத்துக்களைக் கொண்ட அரசியல் சாரா அமைப்புகளும் தடை செய்யப்பட்டன. நாடு முழுவதும் ஒன்றிய ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. தேசமே ஒரு சிறைபோலக் காட்சியளித்த காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் நியாயமின்றிப் பறிக்கப்பட்டன.

இந்தியாவின் இருண்டகாலப் பின்னணியில் பதினான்கு வயது பள்ளி மாணவர்களின் வாழ்வை மகாராஷ்டிரத்தின் உள்ளடங்கிய ஒரு கிராமத்தில் இருந்து பேசும் படம் ஷாலா (Shala).  சுஜய் தாஹாகே இயக்கிய இப்படம் மிலிந்த் போகில் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையாக எழுதப்பட்டது.

பதின்வயது மாணவர்களின் பின்னணியைக் கொண்டு படம் அமைந்து இருந்தாலும் இப்படத்தைப் பதின்வயது பிள்ளைகளுக்கான படம் என்று கூற முடியாது. பதின்வயதுப் பிள்ளைகள் நடித்த வயது மூத்தவர்களுக்கான படம் இது. ஜோஷி என்ற சிறுவனுக்கும் சிரோத்கர் என்ற பதினான்குவயது சிறுமிக்கும் இடையே பதின்வயதில் ஏற்படும் உணர்வைப் படம் இயல்பாக முன்வைக்கிறது.

பதின்வயது காதலைப் பேசுவது என்பது மிகுந்த கவனமாகக் கையாளவேண்டிய ஒன்று. கண்ணாடிப் பாத்திரம் போன்று அதை ஏந்தவேண்டும் என்பது வழமையான உவமை என்றாலும்கூட அதுவே பொருத்தமானது. வேறுவேறு குடும்பங்களில் இருந்து ஒரே பள்ளியில் சங்கமிக்கும் பிள்ளைகளின் வாழ்வை அத்தனை நெருக்கமாக, இயல்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

நடுத்தரக் குடும்பம், ஏழ்மையான குடும்பம் இவற்றிலிருந்து வரும் மாணவர்களில் முரடன், அசடன், விஞ்ஞானியாக விரும்புபவன், படிப்பில் கெட்டிக்காரன், விளையாட்டு வீரன் எனப் பலவாறு இருக்கும் பாத்திரங்களை சித்தரித்து, பார்வையாளர்களை அவர்களின் பள்ளி வயது நாட்களுக்கே அழைத்துச் செல்கிறது படம். எமர்ஜென்சி காலத்தைப் படத்தின் பின்னணியாக வைத்ததால் போராட்டம், விடுதலை, தனிமை, சுதந்திர உணர்வுகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவை சமூகத்திலும் தனிமனித வாழ்விலும் இணைந்தே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்திய சினிமாவில் இதுபோன்ற பல பள்ளிக்கதைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கதாபாத்திரங்களை நேர்த்தியாகக் கையாண்ட விதத்தில் ஷாலா தனித்துவம் பெறுகிறது. ஜோஷி என்ற மாணவனின் பாத்திரம் நாயகத் தன்மையோடு இருப்பதும் தன்னியல்பு மாறாமல் சித்தரிக்கப்பட்டிருப்பதும் அந்தப் பாத்திரத்தை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு செல்கின்றன. அந்த வயதில் பெண் மீதான மையல் ஏற்படுத்தும் குழப்பத்தை அப்படியே தருகிறது படம். திரையில் குழப்பத்தை விவரிப்பது சவாலானது. பதின்வயதினரின் சூழலுக்கு அவர்களுக்குமிடையேயான கொடுக்கல் வாங்கல்கள், அவர்களின் உடல், உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மெருகு குலையாமல் காட்சிகளாக விரிகின்றன. ஜோஷி சந்திக்கும் மனிதர்கள் அவனுக்குள் பாதிப்பை நிகழ்த்துகின்றனர். அதே நேரம் அவன் கேட்கும், சந்திக்கும் சம்பவங்கள், உரையாடல்களைத் தாண்டி அவனுக்குள் அவனே ஒரு உரையாடலில் இருக்கிறான். அது அவனை எப்போதும் ஒரு தெளிவுக்குள் வைத்திருக்கிறது. ஷிரோத்கரைத் தாண்டி மூன்று பாத்திரங்கள் அவனை நேரடியாக பாதிக்கின்றனர். அப்பா, மாமா, நெருக்கடி காலத்தை எதிர்த்துக் குரல் எழுப்பும் ஒரு இளைஞன் மூவரும் வெவ்வேறு தளங்களில் அவனுக்குள் மாற்றத்தை விதைக்கின்றனர்.

குறிப்பாக மாமாவாக வரும் பாத்திரம் அவனுக்கு சினிமா, அரசியல், வாழ்வியல் போன்ற பல புதிய களங்களை அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. அதேபோல் அப்பாவாக வரும் நந்து மாதவ், பதின்வயதுப் பிள்ளைகளை சுதந்திரமாகவும் கவனமாகவும் வளர்ப்பது எப்படி என்று பார்வையாளர்களுக்குக் கற்றுத் தருகிறார்.

ஷிரோத்கர் வயதுக்கே உரிய அழகும் மீறிய முதிர்ச்சியும் கொண்டு இருக்கிறாள். ஜோஷியை அவள் அழகாகக் கையாள்வதற்கு அதுவே பயன்படுகிறது. அந்த உறவை அவள் மிகுந்த கவனத்தோடும் அழகியலோடும் கொண்டு செல்கிறாள். அதற்கு அவள் குடும்பமும்  துணை செய்கிறது. புரிதலுடைய பெற்றோர்கள் வகுப்பிலுள்ள ஆண் நண்பர்களையும் வீட்டுக்குள் அனுமதித்து தேநீர் தருகிறார்கள். அந்த அனுமதியும் புரிதலும் தரும் தெளிவு ஷிரோத்கரிடம் இயல்பாக இருக்கிறது.

பள்ளியில் ஆசிரியர்களாக வருபவர்கள் இந்தியப் பள்ளி ஆசிரியர்களின் பிரதிபலிப்பாக வருகிறார்கள். மஞ்ச்ரேக்கர் என்ற இளமையும் புதுமையும் கொண்ட ஆசிரியர், அதை மாணவர்களிடமும் கடத்தும் எத்தனிப்போடு இருக்கிறார். அவருக்கும் அந்தப் பள்ளியில் புதிதாகச் சேரும் நகரத்துக் கான்வெண்ட்டைச் சேர்ந்த மாணவிக்கும் இடையே பேசப்படும் விசயங்கள் எல்லாம் திரையில் நிகழ்ந்திருக்கும் அமைதியின் சாட்சி.

கண்டிப்பும் தடியுமாக வரும் ஆசிரியை, கவர்ச்சியான உடையில் வரும் ஆசிரியை, உள்ளடங்கிய கிராமத்துப் பள்ளியின் அசலான தலைமை ஆசிரியர், இவர்களோடு அதே பள்ளியில் உதவியாளராக வரும் பாத்திரம், அவருக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவு எல்லாம் அழகாக எடுக்கப்பட்டுள்ளன.

ஜோஷியும் அவனது சகோதரியும் படம்நெடுக முரண்பட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவனைப் புறம்பேசியும் குறைகூறியும் அவள் கவனித்துக்கொண்டே இருக்கிறாள் அவனது சகோதரி. இதுவும் அவனுடைய நாட்குறிப்பில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட ஒரு துண்டு.

முதல் காதலை பதின்வயதுக்கே உரிய அழகியலோடு அசலாகக் காட்டிய இந்தியப் படங்களில் முதல்வரிசையில் முக்கியமான படமாக ஷாலா அமைந்துவிடுகிறது. ஒளிப்பதிவும் நிலப்பிரதேசமும் கூடுதல் பலம். மலைப்பிரதேசம் போலவே அமைந்துள்ள கிராமம் தன் பங்கிற்குக் கதைகூறுகிறது. பின்னணி இசை என்பது மிகையைக் கிளர்த்தாமல் அதே மெல்லிய உணர்வைத் தருகிறது.

எமெர்ஜென்சி காலத்தில் உரிமைக்குரல் நசுக்கப்படுவதை சிறிய இடைவெளிகளோடு படம் காட்டிக்கொண்டே இருக்கிறது. பார்க்கிற அனைவரையும் பதின்பருவத்தினருக்கு அழைத்துச்செல்வதாகப் படம் அமைந்துள்ளது. எமெர்ஜென்சி காலத்தில் நடந்த அத்துமீறல், மறுக்கப்பட்ட உரிமைக்கான குரலை, அதன் அரசியலை ஒரு திரைப்படம், அதுவும் பதின்வயதுக் காதலைக் கதையாகக் கொண்ட ஒரு படம் ஏன் மையமாக வைத்திருக்கிறது? அதுதான் கலையுடைய நோக்கத்தில் இருக்கும் பிழையற்ற தன்மை. அந்த வகையில் கலை, அரசியல், வாழ்வு மூன்றையும் சம அளவில் கலந்து தந்திருக்கும் படம் இது.

வகுப்பறைகளில் மாணவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வது, கிசுகிசுப்பது,  சிரித்துக்கொள்வது, பாடுவது, சிரிப்பது, விளையாடுவது எல்லாமே பார்வையாளர்களின் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கிறது. பால்யயத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது. நம் வாழ்வின் மிக அழகான நாட்களை ஆழ்கடலில் இருந்து எடுத்து வந்து சேர்க்கிறது. முத்துக் குளிப்பவர்களின் மனநிலை. ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் பிரகாசிக்கும் ஞாபக முத்துக்கள் தரும் வெளிச்சம் உன்னதமானது.

மாணவர்களின் பள்ளி நாட்கள் மீண்டும் பெற முடியாதவை. இந்த நாடு முழுவதும் எமர்ஜென்சிக்குள் தள்ளப்படும்போது மக்கள் அனைவரும் சிறைவாழ்வுக்குள் தள்ளப்பட்டுவிடுகின்றனர். அதுபோலவே பள்ளிவளாகம் எப்பொழுது வேண்டுமானாலும் எமர்ஜென்சிக்குள் வரலாம். அப்போதெல்லாம் மாணவர்கள் கைதிகள் ஆகின்றனர். எனவேதான் மாணவர்கள் சுதந்திரத்திற்கான குரலை எழுப்புவதில் எப்போதும் ஆர்வமானவர்களாகவே இருக்கின்றனர்.

ஒரு திரைப்படம் சர்வதேசத் தரத்தைப் பெறுவது, அது எந்த நிலத்திலிருந்து வருகிறதோ அந்த மக்களின் வாழ்வை உண்மைக்கு நெருக்கமாகப் பேசுவதில்தான் இருக்கிறது. பள்ளி மாணவர்களின் வாழ்வை ஒரு கண்காணிப்புக் கேமரா வைத்துப் பதிவு செய்தத்தைப் போல அசலான காட்சிகளோடு படம் விரிகிறது. படம் எடுக்கப்பட்ட விதம், பின்னணி இசை, கதை செல்லும் நேர்த்தி என எல்லா வகையிலும் ஒரு சர்வதேசத் தரத்தில் மிளிர்கிறது இந்தத் திரைப்படம்.

மாணவர்களின் வாழ்க்கையைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நிர்ணயிக்கின்றனர். ஆனால் நாம் குழந்தைகளிடம்தான் பொறுப்பைப் கோரிக்கொண்டே இருக்கிறோம், ஒழுக்கத்தை போதித்துக்கொண்டே இருக்கிறோம், எதிர்பார்ப்புகளை விதைத்துக்கொண்டே இருக்கிறோம். நாம் அவர்களிடம் சுமத்தும் பொறுப்பையும் ஒழுக்கத்தையும் நாம் முதலில் கடைபிடிக்கிறோமா? அவர்களின் வாழ்வில் நாம் கறையாக இருக்கப் போகிறோமா? அழகிய ஞாபகமாக ஒளிரப் போகிறோமா என்ற கவலை நமக்கு இருப்பதே இல்லை.

குழந்தைகளின் பிஞ்சுக் கைகள்

நிலவையும் நட்சத்திரங்களையும் நோக்கி

இப்போதைக்கு நீளட்டும்

கல்வி கிடைத்தபின்பு

அவர்கள் நம்மைப் போல மாறிவிடுவார்கள்

என்ற நிடா ஃபாஸ்லியின் உருதுக் கவிதை ஒன்று உண்டு. பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றத்தின் ஒரு கீற்றை நம் கண்முன் காட்டியிருக்கிறது திரைக்கதை. ஒரு மனிதனின் வாழ்வில் மகத்தானவை பதின்பருவப் பள்ளி நாட்கள். அதில் இந்தப் படம் ஒரு கல் எறிகிறது. சுழலும் வளையங்களில் அவரவருக்கு உரியதை எடுத்து அணிந்துகொள்வோம்.

Movie: Shaala

Year: 2011

Language: Marathi

Platform: Amazon Prime

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
 2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
 3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
 4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
 5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
 6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
 7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
 8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
 9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
 10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
 11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
 12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
 13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
 14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
 15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
 16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
 17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்