திரையில் விரியும் இந்திய மனம் – 1

உணர்வுகளைக் காட்சி வழி பார்வையாளர் மனதில் இழையவிடுவதுதான் கலையின் செயல். அப்படியான ஒரு படமாக கௌரி தேஷ்பாண்டே  எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு மராத்தியில்  வெளிவந்த “ஆம்கி தோகி” அமைந்துள்ளது.

முதல்காட்சியில் பள்ளியில் ஒரு கூட்டம். ஒரு மாணவி அம்மாவின் பெருமைகளைப் பேசிக் கொண்டிருக்கிறாள். அதைக்கேட்டுக் கூட்டத்தில் ஒரு மாணவி அழத்தொடங்க, அருகிலிருக்கும் சாவித்ரியும் தன்னைத் தானே கிள்ளிக்கொண்டு அழுவதாக பாவனை செய்கிறாள். இருவரையும் சக மாணவர்களும் ஆசிரியர்களும் சமாதானம் செய்கின்றனர். பிறகு தோழி “அம்மா ஞாபகம் வந்துவிட்டதா?” என்று சாவித்ரியிடம் கேட்க, “அம்மாவைப் புகைப்படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் கூட்டத்தில் அழுதுவிட்டால் சக மாணவர்களின் வம்புகளிலிருந்து தப்பலாம்” என்கிறாள்.  நடைமுறை வாழ்வுக்கு சாவித்ரியும் அவள் அப்பாவும் எந்த அளவுக்குப் பழகியிருக்கிறார்கள் என்பதைத் தொடக்கத்திலேயே உணர்த்திவிடுகிறது படம்.

புகழ்பெற்ற வழக்கறிஞரான சாவித்ரியின் தந்தை, மகளின் சிறுவயதிலேயே மனைவியை இழக்கிறார்.அதன் பிறகு மறுதிருமணம் செய்ய மறுத்து வாழ்கிறார். சாவித்ரி 15-ம் வயதில் நிற்கும்போது அவளைக் காட்டிலும் பத்து வயது மூத்த அம்லா என்கிற பெண்ணைத் தனது இணையாக திடீரென வீட்டுக்கு அழைத்து வருகிறார்.

அங்கு இருந்து கதை பல தளங்களில் பயணிக்கத் தொடங்குகிறது. எல்லாமே தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று நினைக்கிற, உணர்வுகளை வெளிப்படுத்தாத இறுக்கமான மனிதராக ஜெகதீஷ் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். தன்னிடம் சிறு வார்த்தையைக் கூடப் பகிராமல் தன் அப்பா ஒரு துணையை வீட்டுக்கு அழைத்து வந்தது சாவித்ரியை மனதளவில் உடையச் செய்கிறது.

கூண்டிலிருந்து விடுபடும் பறவை

சிறுவயதிலிருந்து உணர்வுகளுக்கான இடத்தை புறக்கணித்து நிதர்சன வாழ்வின் இயல்புகளுக்கு முதன்மை தந்து வாழப் பழக்கப்படுத்தப்பட்டவளாக இருக்கிறாள் சாவித்ரி.தந்தையின் மறுமணத்தை தொடர்ந்து வீட்டில் நிகழும் சூழல்களால் அவளது தந்தையுடனான உறவு கசப்பை நோக்கி நகர்கிறது.

சுதந்திரமான வாழ்வை நோக்கி அவள் இயல்பாக ஈர்க்கப்படத் தொடங்குகிறாள்.அதற்கு கல்லூரி வாழ்வை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறாள்.தனது ஆராய்ச்சிப்படிப்பை  முன்வைத்து மும்பை செல்கிறாள், வலுக்கட்டாயமாக வீட்டில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு பறந்துவிடுகிறாள்.கல்வியின்மூலம் பெறப்படும் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தன்னம்பிக்கையைத் தருகிறது என்பதைக் காட்சிகள் விவரிக்கின்றன.ஒருகட்டத்தில் தன் வளர்ப்பு கூண்டின் வாசத்தையே மறக்கும் அளவுக்கு வீட்டிலிருந்து விலகி இருக்கிறாள்.

சாவித்ரி-அம்லா இருவரிடையே மலரும் உறவில் அசைகிறது கதையின் ஆன்மா. தனது வீட்டுக்குள் சிற்றன்னையாக நுழையும் அம்லாவுக்கு, தனது வாழ்வுக்குள் வருவதற்கு எல்லைக்கோடுகளை வரைந்து வைத்திருக்கிறாள் சாவித்ரி. காலம் அந்தக் கோடுகளை அத்தனை மென்மையாக அழிக்கிறது.

ஒரு அற்புதமான ஓவியம் உருவாக்கப்படுவதை ஆரம்பப் புள்ளியில் இருந்து கவனிக்கப் பேறுபெற்ற பார்வையாளர்களாக ஆகிப் போகிறோம்.

மூன்று கோணங்கள்

சாவித்ரி, தனது தகப்பனோடு முரண்பட்டு வெளியேறும் அதே நேரம், சிற்றன்னை அம்லாவுடனான அவளது உறவு ஏறி இறங்கும் கோடாகிறது. ஒரு முக்கோணத்தில் மூன்று புள்ளிகளாக நிற்கும் இவர்களின் உறவு வாழ்வில் எங்கெங்கு செல்கிறது,மூன்று புள்ளிகளும் காலத்தால் அருகருகே வந்து சேர்ந்தனவா என்பதுதான் கதை.மூன்று கதாபாத்திரங்களும் தனித்துவமாகவும் நேர்த்தி பிசகாமலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூவரும் சளைக்காத நியாயத்தை அந்தந்த பாத்திரங்களுக்கு வழங்கியிருக்கின்றனர்.குறிப்பாக அம்லா  பார்வையாளர்களுக்கு புதிது. அவ்வளவு எளிதில் கடக்க முடியாத குணநலமுடையவர்கள்தான் கதைக்கு பலமாகின்றனர்.துணைக் கதாபாத்திரங்களும் அவ்வளவு இயல்பானதாக, ஏதொவொரு வகையில் நேர்மறை எண்ணத்தை மனதுக்குள் கூட்டியபடியே இருக்கின்றன.

இரண்டு பெண் கதைமாந்தர்களோடு முதன்மையான ஒரு ஆணாக சாவித்திரியின் தந்தை, ஜெகதீஷ் சர்தேசாய்.எந்திரமாக தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறார்.தனக்குள் இருக்கும் ஆண் என்னும் எண்ணம் மிகுந்த ஒரு வாழ்வில் இருக்கிறார்.வாழ்க்கையிடம் தனது புத்திசாலித்தனத்தைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்.அவரின் வாழ்வில் எல்லாமே பருப்பொருள் தான்.அதையே பார்த்து வளரும் மகள் அவரின் அதே ஆயுதத்தைக் கையில் தரிக்கையில் பதற்றத்தை தாண்டிய ஈகோ தந்தையை அங்கேயே கட்டி வைக்கிறது.தன் இயல்பை விட்டுத்தராமல் அதாகவே நிறைவுறுகிறார்.கடைசியில் திரைக்கதை முடிச்சுகள் அவிழும் நேரம் அவர் மீது பெருகும் நன்மதிப்பு பார்வையாளர் மனதில் பாரம் ஏற்றுகிறது.

பெண்களின் அகவுலகிற்குள்….

சுவர்களுக்குள் அதிகமாக சுற்றி வரும்போதும் கேமரா கொஞ்சமும் அலுப்பைத் தரவே இல்லை.படத்திற்கான வெளிச்சம் தனி உணர்வைக் கிளர்த்தி திரையோடு ஒன்றிப் போகச் செய்கிறது.

மேற்புரத்தில் அமைதியின் சொரூபமாய்க் காட்சி தரும் கடலுக்குள்தான் எத்தனையெத்தனை ஆர்ப்பாட்டங்கள்!?அப்படியொரு திரைக்கதையை இயக்குநர் ப்ரதிமா ஜோஷி, பாக்யஶ்ரீ ஜாதவ் என்பவருடன் இணைந்து வடிவமைத்திருக்கிறார்.இயக்குநர் ப்ரதிமா ஜோஷியும் பெண் என்பதால் பெண்களின் அக உலகத்துக்குள் பார்வையாளனை வெகு எளிதாக இழுத்துச் செல்ல முடிகிறது.

பெண்களின் மனதிற்குள் பயணம் செய்வது , பழகிய கானகத்துக்குள் ஒவ்வொரு முறையும் புதிய பாதையில் செல்வது போலானது. புதிரான கட்டங்களை தனக்குத்தானே வரைந்துகொண்டு ஆடிப்பார்க்கும் விளையாட்டாக  இந்த பயணம் ஆகிப்போகிறது.

அமைப்புகளை சிதைப்பது ஒரு பெண்ணுக்குப் பெரும் சவால். குறிப்பாக குடும்ப அமைப்புக்குள் செல்லும் பெண்கள், கணவன், குழந்தைகள், உறவுகள்வழி ஆறுதல்தான் அடைய முடியும், அங்கே தனக்கான வாழ்வை வாழ்வது என்பது நீரில் சித்திரம் வரைய முற்படுவது போன்றதுதான். சாவித்ரி தனக்கான வாழ்வு சுதந்திரமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறாள். ஆனால் அதற்கான முனைப்பில்,காதலைக் கூட புத்தியிலிருந்து அணுகும் வடிவமைக்கப்பட்ட ஒரு இயந்திரம்போல  ஆகிவிடுகிறாள். சரி/தவறுக்கு அப்பாற்பட்டதுதானே வாழ்வு?!

திறப்புகளைத் தருகிற உறவு

ஒரு கட்டத்தில் மீண்டும் அவளது வட்டத்திற்குள் வருகை தரும் அம்லா, அவளது உணர்வுகளின் முடிச்சுக்களைத் தேடி ஒவ்வொன்றாக அவிழ்க்கிறாள். மன உணர்வுகளை மறைத்து வாழும் வாழ்வின் பாதகங்களை அவளுக்கு உணர்த்துகிறாள். முதன்முறையாக சாவித்ரியை அழ வைக்கிறாள். உணர்ச்சியோடு வாழ்வது என்பது பெரிய மாபாதகம் அல்ல என்பதையும் புரிய வைக்கிறாள். ஆண்-பெண் உறவோடு ஒப்பிடும்போது, இரு பெண்களுக்கிடையேயான உறவு என்பது நிலத்தில்  ஒளித்துவைத்திருக்கும் ஒரு புதையலைக் கண்டடையும் விளையாட்டு.

ஆண்-பெண், பெண்-பெண், பெண்-சமூகம் என்ற பல்வேறு கிளைக்கதைகளின் உணர்வுகளைப் படம் பேசினாலும், சாவித்ரி-அம்லா என்னும் இரு  கரைகளுக்கும்  இடையே நம்மை ஓடத்தில் அமரவைத்து அலுக்காத பயணத்தைத் தருகிறார் இயக்குநர்.

வாழ்வெனும் நதியில் ஓடம் எப்போதும் கவிழலாம்.தோணுகிற நேரத்தில் உதடுகளை முணுமுணுக்கச் செய்துவிடுங்கள். காற்றில் வேகம் அதிகமாகியோ ஓட்டை விழுந்தோ ஓடம் கவிழுமுன் சகப் பயணிகள் மேல் கொண்ட சிறிதினும் சிறிதே கொண்ட அன்பு எனினும் மனம்திறந்து விடுங்கள். ஏனெனில் வெளிப்படுத்தாத அன்பு காலாவதியான மருந்து.

நாமோ மனதின் சாளரங்களை எப்போதும் மூடிக் கொண்டே இருக்கிறோம்.

இறுகிப் போனக் கதவுகளை படீரென திறக்கும் காற்றாகிறது இந்த படம்.

stalinsaravanan@gmail.com