தெளிவான திரைக்கதையுடன் 2011ல் வெளியான இந்தி திரைப்படம் Shor in the city. ஏற்ற இறக்கங்கள் நிறைந்த திரைக்கதையில் படம் பயணத்தாலும் பார்வையாளர்களுக்கு எந்தக் குழப்பமும் இன்றி கதை நகர்கிறது. மும்பை மாநகரத்தைப் பின்னணியாக வைத்து வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வரும் இளைஞன், மிரட்டல் திருட்டில் ஈடுபடும் நபர்கள், இந்திய அணியில் இடம்பெற விடாது முயற்சி செய்யும் கிரிக்கெட் வீரன் ஆகியோரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களைப் பின்னிக்கொண்டு ஒரு கதை இயங்குகிறது. இதனை சிறப்பாகத் திரையில் கொண்டு வந்துள்ளார்கள் இயக்குநர் கிருஷ்ண்டா டி.கே மற்றும் ராஜ் நிடிமோரு.

“அலுப்புமிகுந்த நாளொன்றில் இப்படத்தைப் பார்க்கத் தொடங்கினேன். ஆனால் தொடங்கிய சில நிமிடங்களில் படம் அழைத்துச் செல்லத் தொடங்கிவிட்டது” என்று படத்தைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த உணர்வுதான் எனக்கும் எழுந்தது.  படம் தொடங்கியதும் அதனோடு பார்வையாளனும் எளிதாகத் தொற்றிக்கொள்ள முடிகிறது.

ஒவ்வொரு நாளாகப் படம் காட்டுகிறது. க்ளைமேக்ஸை நோக்கி நாம் நகர்கிறோம் என்ற எண்ணமின்றி நாளை என்ன நடக்கும் என்றவாறு நம்மை எதிர்பார்க்க வைக்கிறது. பெரிய நகரத்தில் ஒரு நாளைக் கடத்த ஒவ்வொருவருக்கும் ஒரு சவால் காத்திருக்கிறது. Forrest Gump படத்தில் கதாநாயகன் கூறுவான் : “என் அம்மா கூறியிருக்கிறாள். இந்த வாழ்க்கை சாக்லேட் பெட்டி போன்றது. எந்த வகைமை எந்த நாளுக்கானது என்று நமக்குத் தெரியாது”.

நாளொன்று விடிந்ததும் ஒவ்வொருவரும் ஒரு விசயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அந்த நாளை உருட்டத் தொடங்கி விடுகிறோம். பைத்தியக்கார நகரம் உங்கள் கைகளில் எதை வேண்டுமானாலும் தரலாம். ஒரு நாள் உங்கள் சட்டையைக் கிழித்து ஓடவும் வைக்கும். இன்னுமொரு நாள் உங்களுக்குப் புத்தம்புது சட்டையைப் பரிசாகவும் அளிக்கும்..

சின்ன தருணங்களால் ஆனது நமது வாழ்வு. ஒவ்வொருவரும் இவ்வாழ்வில் நமக்குத் தெரியாமலேயே நமக்கு முக்கியமானவர்கள் ஆகிறார்கள். அவர்களின் செயல் நம்மை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. எங்கோ ஒருவனது பையில் இருந்து ஒரு பொருள் திருடப்படுவது உங்கள் நாளைத் தொந்தரவுக்கு உள்ளாக்கலாம். இத்திரைப்படம் இதையே அடிப்படையாகக் கொண்டு உள்ளது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு நேர்த்தி படத்திற்கு பலம் சேர்க்கிறது. சப்னாவின் அறிமுகக் காட்சியே அற்புதம். முதல்நாள் திருமணத்திற்குப் பரிசாக வந்த கடிகாரம், வளையல்கள், அணிகலன்கள் எல்லாவற்றையும் அணிந்துகொண்டு அவள் அமர்ந்திருக்கும்போது கணவன் உள்ளே வந்துவிடுகிறான், அவள் நாணம் கொள்ளுகிறாள். அவர்களுக்கிடையே மெல்ல மலரும் உறவு, உரையாடல் இவையெல்லாம் கதையின் ஓட்டத்துக்கு அழகு சேர்க்கின்றன. பாலோ கொய்லோ எழுதிய “தி ஆல்கெமிஸ்ட்” புத்தகத்தைப் படத்தின் முக்கியமான திருப்பத்தில் கொண்டு வைத்திருப்பது இயக்குநரின் அறிவுத் திறனுக்குக் கட்டியம் கூறுகிறது. சாண்டியாகோ என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல், திலக்கின் வாழ்க்கையையே மாற்றுகிறது. அவனது தொழில் பார்வையாளர்களுக்கு மிகவும் புதிதான ஒன்று. புத்தகங்களை வாங்கி அவற்றை அனுமதியின்றி பிரதியெடுத்து அச்சிட்டு ரயில் நிலையங்கள்,சாலையோர சிக்னல்களில் விற்கும் ஒருவகையான தொழில் இது. “ஆல்கெமிஸ்ட்” நூலில் வரும் சிறுவனுக்குப் பொக்கிஷம் கிடைத்ததா என்பதைக் காட்டிலும் அவனது வாழ்வே ஒரு பொக்கிஷம் என்பதை திலக் புரிந்துகொள்கிறான்.

சப்னா, ஷால்மிலி, சேஜல் என்று மூன்றே பெண் கதாபாத்திரங்கள்தான் என்றாலும்கூட அவற்றின்மீது சிறு கீறலும் இன்றி அற்புதமாகப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர். அந்தக் கதாபாத்திரங்களை நாகரீகமின்றி ஆபாசமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கதையில் இருந்தபோதும் அதையெல்லாம் தவிர்த்தது இயக்குநரின் நேர்மையைக் காட்டுகிறது.

நகரத்தில் வணிகர்களைக் குறிவைத்து மிரட்டும் கும்பலாக வரும் ஜாகிர் உசேன் உள்ளிட்டோரின் பங்களிப்பும் நிறைவு. அவர்கள் அபய் என்னும் இளம் வணிகனைப் பல்வேறு தொந்தரவுகளுக்கு உள்ளாக்குகிறார்கள். அதற்காக அவர்கள் அரங்கேற்றும் படிப்படியான மிரட்டல்கள் மிகுந்த சுவாரஸ்யத்தைத் தருகின்றன. அவர்களிடமிருந்து அபய் விடுதலை பெற முயற்சிக்கும்போது மன உளைச்சலுக்கு உள்ளாகிறான். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்தில் பேசும் அபய், “உங்களுக்கு எது நேர்ந்தாலும் கேட்க நாதியற்ற தெரு நாய்கள் நீங்கள்” என்று கத்துகிறான். இந்த வசனம்கூட பார்வையாளர்களுக்குள் பல கேள்விகளை உருவாக்குகிறது. மிரட்டிப் பிழைக்கும் குற்றவாளிகள் அவர்கள்தான் என்றாலும் அவர்களுக்கு ஏதும் நேர்ந்தால் கேட்க யாருமற்ற சூழலை உருவாக்கும் வல்லமை மிகுந்த முதலாளித்துவம் குறித்தும் யோசிக்க வைக்கிறது.

சாவன் மூர்த்தி என்ற இளம் கிரிக்கெட் வீரனாக சந்தீப் கிருஷ்ணன் அந்தப் பாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்திப் போகிறார். இந்திய அணியில் இடம்பெற ஏற்படும் நெருக்கடிகளுக்காக சாவன் எதையும் செய்யத் துணிகிறான். இன்னொருபுறம் அவனது காதலி சேஜல் ஒரு நடுத்தர குடும்பத்துப் பெண்ணாகவும் காதலனின் அன்புக்குப் பாத்திரமாகவும் அல்லாடுகிறாள்.

திலக்கும் அவனது நண்பர்களும் செய்யும் சிறு தவறுகளில் ஒரு சிறுவன் சிக்கிக்கொள்ளும்போது திலக் அடையும் குற்ற உணர்ச்சியும் பதட்டமும் மனிதனின் அடிப்படைக் கட்டமைப்பை சொல்லிவிடுகிறது. பாதிக்கப்பட்ட சிறுவனை திலக் பார்க்கப்போகும் காட்சி வெகு சிறப்பாக அமைந்திருக்கும். ஒரு திரைக்கதையில் புத்திசாலித்தனம் இருக்கும்போது சாதாரண ஒரு காட்சிகூட எவ்வாறு மாறுகிறது என்பதை அந்தக் காட்சி புரிய வைக்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மும்பை நகரத்தின் தவிர்க்க முடியாத நாளாக விநாயகர் சதுர்த்தி விழா அமைந்திருப்பதை அது உறுதிப்படுத்துகிறது. அந்த நாளை முன்வைத்துப் பலரும் பலவற்றைத் திட்டமிடுகின்றனர். ஒரு ஊர்வலம் அரசியல், குற்றம், தப்பித்தல் என்று பலவற்றை உள்ளடக்கி உள்ளது.

ஒரு நகரத்தில் பிழைத்திருப்பதற்காக மனிதன் எதையும் செய்யத் துணிகிறான். ஒரு திருட்டைக் கூட கலைநயத்தோடு செய்யும் திருடர்கள் நகரத்தில் இருக்கிறார்கள். அதற்காகக் காத்து இருக்கிறார்கள். ஒரு ரயில் பயணத்தில் உங்கள் பை திருடப்படுவது என்பது ஒரு மனிதனின் உழைப்பைக் கோரும் செயலும்கூட. அதற்காக அவன் உங்களை ஊன்றி கவனிக்கிறான், காத்து இருக்கிறான், உங்களின் ஒரு சிறு அலட்சியத்தில் அவன் வெற்றி கொள்கிறான்.

நகரத்தின் பல்வேறு துண்டுப் பரிமாணங்களை இப்படம் கலைடாஸ்கோப்பில் போட்டுக் குலுக்குகிறது. ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு வகையான உணர்வுகளைக் குறுக்குவெட்டாக கவனிக்க முடிகிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  3. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  4. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  5. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்