திரையில் விரியும் இந்திய மனம்-16 

Double seat என்ற மராத்தியப் படம், மாநகரத்தின் நெரிசல்களுக்கிடையே ஒரு கூட்டில் இருந்து எண்ணற்ற கனவுகள் சுமந்த பெண்ணொருத்தியின் வாழ்வை முன்வைத்து மத்தியதர மக்களின் கதையைப் பேசுகிறது.

மும்பை போன்ற பெருநகரத்துக்கு நாள்தோறும் கனவுகளை ஏந்திக்கொண்டு பலர் வந்து இறங்குகின்றனர். மஞ்சரி என்ற இளம்பெண் அதுபோலவே பல கனவுகளுடன் மகாராஷ்டிராவின் ஒரு ஊரிலிருந்து மும்பையைச் சேர்ந்த அமித் என்ற இளைஞனைத் திருமணம் செய்துகொள்கிறாள். மஞ்சரி தெளிவாகப் பேசக்கூடியவள், முற்போக்கானவள். அவளுக்கு மும்பை மீது மாளாக்காதல். கடற்கரையில் அமர்ந்து கதைகள் பேசுவது, ஷாருக்கான் போன்ற பிரபல நடிகர்கள் வீட்டின்முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது, டூ வீலர் ஓட்டுவது, பானிபூரி சாப்பிடுவது என்று வழக்கமாக நகரத்துக்கு வரும் இளம்பெண்ணுக்கு இருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் உடையவள்.

அமித், மாநகரத்தில் பொருட்களைப் பார்சல் அனுப்பும் அலுவலகத்தில் வேலை செய்பவன். குடும்பத்தின் பொறுப்புகளால் தன் காலடியில் எலும்மிச்சையெனக் கனவுகளை வைத்து நசுக்கத் தயங்காதவனாகவே இருக்கிறான். மஞ்சரி அவனது வாழ்வில் வந்தபிறகு கனவுகளுக்கு உயிரூட்ட முனைகிறான். பல்வேறு போராட்டங்களுக்கு இடையே வாழ்வை நேர்மறையாகக் கொண்டு செல்ல மஞ்சரி தனது சொற்களால் மெல்ல அவனைப் பழக்குகிறாள்.

மஞ்சரி மீது கொண்ட அன்பைத் தயக்கமின்றி வெளிப்படுத்த, ஒரு முத்தமிட்டுக் கொள்ளும் சுதந்திரத்தைக் கூடத் தராத ஒரு குடியிருப்பில் அமித் அவனது பெற்றோர்கள், இளைய சகோதரனோடு இருக்கிறான். ஒரு அறை கொண்ட வீட்டில் எப்போதும் ஜனங்களின் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் காதல் வார்த்தைகளைக் கூட செல்போன் குறுந்தகவல்கள் மூலம் மட்டும் பகிர்ந்துகொள்ளும் நிலை. அவர்கள் பகிர்ந்துகொள்ளும் குறுஞ்செய்திகள் பலவும் பிரபல இந்திப் பாடல்களின் முதல் வரிகளாக இருப்பது கூடுதல் அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

காதல் மனைவியாக நடித்திருக்கும் முக்தா பார்வேயிடம் வெளிப்படும் உற்சாகமும் குதூகலமும் அளவில்லாதது. அற்புதமான நடிப்பைத் தந்து அந்தப் பாத்திரத்துக்கு நேர்மை செய்துள்ளார். அமித்தின் அப்பா ரேஸ் குதிரை பயிற்சியாளர், அம்மாவோ இல்லத்தரசி, தம்பி ஹிப்ஹாப் கலைஞன். அவரவர் தம் பாத்திரங்களைக் கச்சிதமாகச் செய்துள்ளனர். இசையும் பாடலும் கூடுதல் பலத்தைத் தருகின்றன.

கடற்கரையில் அமர்ந்து பேசும்போதும், அமித் அவனது அப்பாவோடு வாதம் செய்யும்போதும் சோர்ந்து அமரும் அமித்திடம் எதார்த்தமாக நம்பிக்கையூட்டும் விதமாகப் பேசும் இடங்களிலும் படத்தில் வரும் உரையாடல்கள் அசரடிக்கின்றன.

மஞ்சரி வரும்வரை அந்த சிறுவீடே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. அவள் வந்தபிறகு அமித் அந்த வீட்டின் போதாமைகளை உணர்கிறான். மஞ்சரியோடு வெளியில் செல்லும்போது வாழ்க்கை உற்சாகமாக இருக்கிறது. அந்த அப்பார்ட்மெண்ட்டில் நுழையும்போது இருவரும் முத்தமிட்டுக் கொள்ள இடம் தேடுகின்றனர். எவரோ குறுக்கில் வர, மஞ்சரி உற்சாகம் வடிந்துபோய் ஒரு புழுவாகச் சுருண்டு போகிறாள். அவர்களுக்கான அறையில் கதவுகளின் இடுக்கு வழியே நுழையும் பிற மனிதர்களின் சத்தம்கூட அவளின் அந்தரங்கத்தைத் தொந்தரவுக்குள்ளாக்குகிறது.

இயக்குநர் சமீர் வித்வான்ஸ் பாத்திரங்களை நேர்மறையோடு அமைத்துள்ளது பெரும் பாராட்டுக்குரியது. மஞ்சரியின் மாமியார் மகனுக்கும் மருமகளுக்கும் இருக்கும் புதுவீட்டுக் கனவைப் புரிந்துகொள்கிறார், அதற்கு அவர் சொல்லும் நியாயமும், அந்தக் காட்சியின் உரையாடலும் அலாதியானவை. தன் ஆறுதல் மற்றும் அரவணைப்பை அவர் இருவருக்கும் தருகிறார்.

அமித்தின் நண்பனாக வரும் போக்குவரத்துக் காவலர் மூலம் பார்வையாளர்களுக்கு இயக்குநர் வழங்கும் சமூக அக்கறையும் அறமும் படத்தின் மையமாக நேர்மையைக் கொண்டு வைக்கிறது. அவனுடன் அமித் உரையாடும் இடம் பார்வையாளர்களின் அக இருண்மைக்குள் புதுவெளிச்சம் பாய்ச்சுகிறது.

அந்த வெளிச்சத்தையே அமித் தன் கைகளில் ஏந்தி வந்து வீட்டில் எல்லாருக்கும் கடத்துகிறான். குறுக்குவழியில் வீடு வாங்கித் தர முனையும் உறவினரிடம் கறாராக எதிர்ப்பைப் பதிய வைக்கிறான்.

மனைவி மஞ்சரியோடு காதல் வாழ்வைத் தொடரவே தனி வீடு வாங்க முயல்கிறான். கூடுதலாக அந்த நேரத்தில் வந்து சேரும் உறவை சுமையாகக் கருதுகிறான். தெளிவுமிக்க மஞ்சரியின்மூலம் மீண்டும் அமித் புத்துணர்ச்சி கொள்கிறான். குடும்பமே அமித்தின் கைகளைப் பற்றிக் கொள்ளும் இடங்களில் உறவின் பரஸ்பர மதிப்பு, உதவி இவையெல்லாம் சமூகவாழ்வில் மனிதனுக்கு அவசியமானது என்பதை உணர வைக்கிறது.

உழைப்பை உறிஞ்சிக் கொண்டாலும் தக்க சன்மானத்தை வழங்க மும்பை போன்ற நகரங்கள் தவறுவதில்லை. அசுர உருவமிக்க மும்பை மாநகரத்தின்முன்பு சிறுகூட்டில் நின்றுகொண்டு ஐவர் சவால்விடுகின்றனர். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு வகையில் உழைப்பைத் தருகின்றனர். நிறைமாதத்தில் இருக்கும்போதும் அமித் அத்தனை முறை எடுத்துக்கூறியும் டாக்சியில் செல்லாமல் மின்சார ரயிலில் பயணித்து நுகர்வோரை சந்திக்கிறாள் மஞ்சரி. மத்தியதரக் குடும்பங்களில் சிக்கனமும் சேகரிப்பும் எவ்வளவு பங்களிப்பாகிறது என்பதைப் படம் எடுத்துரைக்கிறது.

வீடு என்பது மத்தியதர மக்களின் பொதுமைப்படுத்தப்பட்ட கனவு. ஏற்கனவே தமிழில் பாலுமகேந்திரா எடுத்திருந்த வீடு திரைப்படம் இதை விரிவாகப் பேசியிருக்கிறது. வீடு கட்டி முடிப்பதையே தங்களின் வாழ்நாள் சாதனையாகக் கருதி பெருமிதம் பேசும் பலரை அறிவோம். அதேநேரம் வீட்டை சொத்தாக, கனவாக இழந்தவர்கள் சாகும்வரை அந்த மனபாரத்துடன் இருக்கின்றனர். புரோக்கர் மூலம் வீட்டைப் பார்க்கப் போகும் மஞ்சரி மற்றும் அமித் இருவருக்குமான காட்சிகளை இயக்குநர் மிக அழகாக எடுத்திருப்பார்.

வீட்டில் இருக்கும் நபர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வது அசுர பலத்தை மனிதனுக்கு அளிக்கிறது. புரியாமல் அணுகும் தந்தை கதாபாத்திரம் போன்றவர்கள்கூட நேர்மையான உரையாடல்மூலம் வழி திரும்புகின்றனர்.

படத்தின் இடைச்செருகலாக ஒரு வயதான பாத்திரம், அவரோடு நட்பு பாராட்டும் இளம் பெண் ஆகியோர் வருகின்றனர். அமெரிக்காவில் இருக்கும் மகனது பிரிவை அந்த முதியவர் இளம்பெண் மூலம் ஈடு செய்துகொள்கிறார். அவர் அவளுக்குப் பயிற்றுவிக்கிறார். அவளும் ஒரு காட்சியில் மஞ்சரிக்கு நம்பிக்கையைக் கடத்துகிறாள். மஞ்சரியின் அம்மாவும், அப்பாவும்கூட மகளை வாரியணைத்து இதமான சூட்டைக் குஞ்சுகளுக்குத் தரும் பறவைகளாகவே இருக்கின்றனர்.

படத்தைப் பார்த்து முடிக்கும்போது அந்த நேர்மறை எண்ணம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த் ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆவது போலவோ வழக்கமான தமிழ்ப்படங்களில் கதாநாயகிகள் கலெக்டர் ஆவது போலவோ இந்தப் படத்தின் சாயலும் இருக்கலாம், ஆனால் இது உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது.

அரசின் தாராளமயமாக்கல் எவ்வாறு ஒரு எளிய குடும்பத்தின் கனவை சிதைக்கிறது, நிம்மதியைக் குலைக்கிறது என்பது படத்தின் மைய செய்தியாக இருந்தபோதும் எல்லாவற்றையும் தாண்டிய நம்பிக்கையை ஒரு திரைப்படத்தின் வழியாக பார்வையாளர்களுக்கு எளிமையும் எதார்த்தமுமாகக் கடத்த முடியும் என்பதற்கு இந்தப் படமே சாட்சி.

Movie: Double Seat

Year: 2015

Language: Marathi

Platform – Amazon Prime 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  4. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  5. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  6. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்