திரையில் விரியும் இந்திய மனம் -6
இருபதாம் நூற்றாண்டின் இந்தியாவில் தொடங்கிய தொழிற்புரட்சி, இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே தொழிற்சாலைகளை அதிக அளவில் தோற்றுவித்தது. மனிதர்களின் அன்றாட வாழ்வின் எல்லா இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு தனிநபர், நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயித்தது. அதுவரை மனிதர்களின் கைகளால் உருவாகியவை இயந்திரமயமாயின. மலிவாகவும் எண்ணிக்கையில் அதிகமாகவும் பொருட்கள் உருவாக்கப்பட்டன. எல்லாம் ஒரு புறம் இருக்க, இயந்திரங்களின் முன் நின்று பணிபுரியத் தொடங்கிய மனிதன் காலப்போக்கில் இயந்திரமாகவே மாறிப்போனான்.
இயந்திரமயமாகிப் போன மனித வாழ்வைப் பல்வேறு கலைப்படைப்புகள் பேசிக்கொண்டே இருக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கைக்கு எட்டாத கனவாக, கனவின் ஒரு புள்ளியாக தூரமாகிக்கொண்டே இருக்கிறது.
கொல்கத்தா நகரத்தில் இயந்திரமயமாகிப்போன வாழ்வில் உழன்று கிடக்கும் ஒரு தம்பதியின் வாழ்விலிருந்து ஒரு நாளைத் துண்டாக நறுக்கி சினிமா என்னும் கலைடாஸ்கோப்பில் போட்டுக் காட்டுகிறது ஆஷா ஜாவோர் மாஹே (Labour of love) என்ற மௌனமொழித் திரைப்படம். 2014ம் ஆண்டு வெளியாகி தேசிய விருது, வெனிஸ் திரைப்பட விழா உட்பட பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றுள்ள இத்திரைப்படத்தை ஆதித்யா விக்ரம் சென்குப்தா இயக்கியுள்ளார். ரித்விக் சக்ராபோர்த்தி, பாசாப்தத்தா சாட்டர்ஜி ஆகிய இருவரும் தம்பதிகளாக நடித்துள்ளனர். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே. பின்னணியில் ஆங்காங்கே சிலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். இரண்டு பாத்திரங்களும் அவர்களின் ஒருநாள் வாழ்வும் கதையாகிறது.
கொல்கத்தா நகரத்தில் தொழிற்சாலைக்குத் தலையைப் பணித்துள்ள இரண்டு தொழிலாளர்களும் திருமண ஒப்பந்தததின்கீழ் தங்களின் அன்றாடத்தை எவ்வாறு நகர்த்துகின்றனர் என்பதை அசலாகப் பேசுகிறது படம். குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் நகரங்கள் குரூரமானவை. அவற்றின் கண்களுக்கு உற்பத்தியும் வளர்ச்சியும் மட்டுமே புலப்படும். மனிதர்கள் சிறு புள்ளிகளாக அதற்குள் அலைவுறுவர்.ஒரு புள்ளி மறைந்தால் இன்னொரு புள்ளி வரிசையில் காத்திருக்கும் என்பதால் தனிநபர் வாழ்வு பெரும் அலட்சியத்துக்கு உள்ளாகிறது.
படத்தின் தொடக்கப்புள்ளி 1958ம் ஆண்டு இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ எழுதிய The adventure of a married couple சிறுகதையிலிருந்து அமைகிறது. தமிழில் “மஞ்சள் பூ” என்ற மொழிபெயர்ப்பு நூலில் “ஒரு தம்பதியின் சிக்கல்” என்னும் தலைப்பில் இக்கதை அமைந்துள்ளது. காலை ஆறு மணிக்கு முடிவுறும் ஷிஃப்ட்டில் தொழிற்சாலையில் வேலை செய்யும் கணவன், பெரும்பாலான நாட்களில் அலார ஒலிக்குப் பதிலாக அவனது காலடிச் சத்தம் கேட்டு எழுந்து பகல்நேரப் பணிக்குத் தயாராகும் மனைவி இவ்விருவரையும் பாத்திரங்களாகக் கொண்டு புனையப்பட்ட இக்கதை பல்வேறு மொழிகளில் குறும்படமாகவும் திரைப்படமாகவும் விரிந்திருக்கிறது. தொழிற்சாலைப் பணியின் அழுத்தத்திற்கிடையே தங்களின் நாட்களைக் கொண்டு செல்லும் விதத்தைக் கதை எடுத்துரைக்கும். நேரத்தின் கோரப்பற்களுக்கு இரையாகும் தம்பதியினர் வாழ்வை நகரத்துப் பின்னணியில் காட்சிப் படிமங்களாகவே கால்வினோ எழுதியிருப்பார்.
இக்கதையின் அடித்தளத்தைக் கொல்கத்தா நகரத்தில் வைத்து இயக்குநர் ஆதித்யா மௌனமொழியில் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்தின் ஒரு காட்சியில், ஓடிக்கொண்டேயிருக்கும் மிதிவண்டி சக்கரத்தின்மீது கேமிரா நிலைத்து நின்றுகொண்டிருக்கும். சுழன்றுகொண்டேயிருக்கும் வாழ்வை, ஓடிக்கொண்டேயிருக்க நிர்பந்திக்கும் வேலையின் அவலத்தை மென்குறியீடாக அது வெளிப்படுத்துகிறது.
தம்பதியின் வீட்டை, கொல்கத்தா நகரத்தை, பணிபுரியும் தொழில் இடங்களை எல்லாம் ஏதுவான ஒளியோடும் பின்னணி சத்தங்களின் கலவையோடும் நேர்த்தியாகக் கண்முன் நிறுத்துகிறது படம். அழகியலும் நுட்பமும் ஒன்று சேரும் காட்சிகள் படம் முழுக்க வருகின்றன. நகரத்தின் அவசர வாழ்வைப் படம் காட்டுகிறது. இந்தக் கருணையற்ற நகரம்தான் தன் படைப்புத்திறனுக்குப் பல வாய்ப்புகளை வழங்குகிறது என்பதையும் ஒரு நேர்காணலில் நேர்மையோடு ஒப்புக்கொள்கிறார் இயக்குநர்.
படம் மிக மெதுவாகச் செய்கிறது, அதுவே படத்திற்குள் ஒரு அமைதியை வழங்கிவிடுகிறது. அந்த அமைதியில் நாமும் ஒரு அங்கமாகிறோம். தியானத்திற்குப் பின் வரும் ஒற்றைக் கீற்று வெளிச்சம், திரைப்படம் முடிவடைகையில் நமக்குள்ளும் வந்து போகிறது. பின்னணியில் இசைக்கப்படும் பாடல்கள் பெங்காலிய மொழியின் காலப்பெட்டகங்களாக இருக்கலாம் என்பதை உணர முடிகிறது. வசனங்கள் இல்லாத இப்படிப்பட்ட ஒரு அற்புதத் திரைப்படம் நம் மொழியிலிருந்து எடுக்கப்பட்டு அதன் இடையிடையே இளையராஜாவின் பாடல்கள் வந்துபோனால் அதன் அனுபவம் எவ்வாறு இருக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.
படம் முடிவடையும் தருணத்தில் வசனம் வருவதுபோல் முடிவு செய்திருந்த திரைப்பட இயக்குநர், படத்தின் போக்கும் அதன் ஆளுமை வெளிப்பாடும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கச் செய்ததாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். மிகவும் சரியான முடிவு.
ஒரு அதிகாலையில் நாயகி பணிக்குத் தயாராகிறார். நாயகன் வேலையிலிருந்து திரும்பிக்கொண்டு இருக்கிறார். அவனது மிதிவண்டியும் அவள் பயணிக்கும் ட்ராம் வண்டியும் ஒரு இடத்திலும் ஒருநாளும் சந்தித்துக்கொள்வதேயில்லை. ஒரு மரத்திலிருந்து வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு நேரங்களில் புறப்பட்டு வந்துசேரும் வாழ்வு.
நிறங்களும் செய்கைகளுமாகப் படம் முழுக்கவே பல படிமங்கள் வருகின்றன. அவற்றை நாம் மிகச்சரியான வகையில் புரிந்துகொள்ளும்போது ஏற்படும் திரை அனுபவம் அலாதியான ஒரு இன்பத்தைத் தருகிறது.தொழிற்சாலையில் இரவு முழுவதும் அழுக்கடைந்த கறுப்பு நிற உடையில் பணிபுரியும் அவன் வீட்டிற்கு வந்ததும் வெள்ளை நிற உடையில்தான் உறங்க செல்கிறான்.இதுவும் கூட அழகான உணர்வுபூர்வமான குறியீடுதான்.படத்தின் முடிவில் விரியும் அந்த சர்ரியலிசக் காட்சி உச்சக்கட்ட திரை அனுபவ சிலிர்ப்பு.
இருவரும் வீட்டில், சிறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மாறி மாறி எண்ணுகின்றனர். அதற்காகத்தானே இந்த அலைவுறுதல்! அவன் பகலில் வாங்கிவந்துவைக்கும் மளிகைப் பொருட்களை அவள் பாத்திரங்களில் பிரித்து வைக்கிறாள். வேலைப்பகிர்வின் அவசியத்தை வலியுறுத்தும் காட்சிகள்.
பொதுவாகக் காதலை வெளிப்படுத்தத் தம்பதியினருக்கு சொற்கள் அவசியம் என்பார்கள். மனநல ஆலோசகர்களை அணுகினால், சின்னச் சின்ன தொடுதல்கள் மிக மிக அவசியம் என்பார்கள். இந்தத் திரைப்படமோ, அவை எல்லாம் கற்பிதங்கள் என ஒதுக்கித் தள்ளுகிறது. காதலின் அழுத்தத்தைக் காட்ட சின்ன சின்ன செய்கைகளை அழகியலோடு காட்சிப்படுத்துகிறது. நாயகன், நாயகி இருவருமே சிறு செய்கைகளின்மூலம் காதலின் ஆயுளை வாழ்நாள் முழுவதும் நீட்டித்துக்கொண்டே போகின்றனர். இதற்கு இவர்கள் இருவரும் ஒரே அறையில், அருகருகே இருக்கவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. முதல் மரியாதை படத்தில் ராதா ரயில்வே ஸ்டேஷனில் கால்வைத்ததும் படுக்கையில் இருக்கும் சிவாஜியின் சிலிர்ப்பை மிகையான கற்பனை என்று ஒதுக்கிவிடமுடியாது.
வாணலிச் சட்டியில் காயும் நீர்த்துளிகள் தீராக் காமத்தின் குறியீடுகளாக மின்னுகின்றன.சங்க இலக்கியத்தில் வரும் பாறைதான் அந்த வாணலி என்றால் வெண்ணெய் என்பது நீர்த்துளி.
பகல் முழுவதும் வீட்டில் இருக்கும் அவன், காலையில் அவள் துவைத்துவைத்த துணிகளைக் காயப் போடுகிறான். இருவரின் துணிகளும் ஒரே கொடியில் அருகருகே கோர்க்கப்பட்டு இருக்கும். அவள் வீடு திரும்பிய பிறகு அந்த துணிகளை மடித்துவைக்கும்போது, அவன் துணியின்மீது தன் துணியை விரிப்பாள். உடல்கள் சேராத ஏக்கத்தைத் துணிகள் வழியே இருவரும் அடைகின்றனர். அவன் துவட்டிய தூவாலையில்தான் இவளும் உடல் துவட்டுகிறாள். கசங்கிய படுக்கையில் இருவரும் மாறி மாறித் துயில் கொள்கின்றனர். காமம் மட்டும் உறங்காத பூனையாக அந்த வீட்டுக்குள் அலைகிறது.
இருவரும் வேலைக்குச் செல்லும் நேரங்களில் தெருக்களில் ஒலிக்கும் சங்கங்களின் உரிமைக்குரல், காலம் காலமாகப் போராட்டத்தின்மூலமாகத்தான் தொழிலாளர்கள் ஒரளவாவது உரிமைகளைப் பெற முடிகிறது என்ற நம்பிக்கையை வரவழைக்கிறது.
நகரத்தின் நெரிசலை, அவசரத்தைக் காட்ட மேலிருந்து காட்டப்படும் மின்சார ஒயர்களும் அதன் பின்னணியில் ஒலிக்கும் சத்தங்களுமே போதுமானவை. ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் படத்திற்குக் கண்களும் காதுகளுமாகின்றன. எண்ணெய் இன்றிக் கிறீச்சிடும் மின்விசிறியின் சத்தமும், அவள் வேகத்தை அதிகரிப்பதும் அவன் வேகத்தைக் குறைப்பதும்கூட இருவரின் இயல்பை உணர்த்துகின்றன.
சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதற்கு இந்தப் படம் வலுவான சான்று. இதைவிடுத்து ஏன் திரையில் நசநசவென்று பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்?! வசனகர்த்தாக்களை சிலுவையில் அறையுங்கள் என்று சினிமாவை நேசிக்கும் மனங்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
உயிரோடு இருக்கிற, கண்கள் துடிக்கிற மீன்களை அவள் சமைக்க வாங்கி வருவாள். துடிக்கும் அந்த மீனைப்போலவே இவர்களின் வாழ்வு துள்ளத்துடிக்கக் காலத்தால் அரியப்படுகிறது. சொகுசு மெத்தைகளைத் தரும் தொழிற்புரட்சி, தூக்கத்தைக் காவு கேட்கிறது.
வீட்டிற்கு வந்ததும் அவன் வெண்மையான உடைக்கு மாறிவிடுவான். இரவு முழுவதும் அடுக்களையில் கருப்பு உடையில் பணிபுரியும் அவள் வெள்ளை உடையில் வீட்டுக்குள் உறங்குவதுகூட அழகான, உணர்வுபூர்வமான குறியீடுதான். படத்தின் முடிவில் விரியும் சர்ரியலிஸக் காட்சிதான் உச்சகட்ட அனுபவ சிலிர்ப்பு.
நெருக்கடி மிகுந்த வாழ்வில் காதலிக்க நேரத்தைத் தேடும் இந்தத் தம்பதியினருக்கு ஒருநாள் விடுமுறை என்பது வரம். அந்த நாளில் அவர்களின் படுக்கை மொத்தமாகக் கசங்கட்டும். தலைமாட்டில் உள்ள அலாரங்கள் ஓய்வெடுக்கட்டும். தொழிற்சாலை கடிகாரங்கள் நின்று தொலைக்கட்டும்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
- திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
- "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
- கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
- கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
- பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
- மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
- நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
- கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
- துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
- அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
- காஸி-உணர்வு யுத்தம் : ஸ்டாலின் சரவணன்
- காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
- இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
- Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
- ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
- "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்