திரையில் விரியும் இந்திய மனம் -13

சிறுவயதில் இயக்குநர் விசுவின் திரைப்படங்களைத் தொலைக்காட்சியில் குடும்பத்துடன் பார்க்க நேரிடுகையில் சொல்லவியலா சங்கடம் பற்றிக்கொள்ளும். அவரின் படங்களில் இளம் தலைமுறையை மிக மோசமாக ஏமாற்றுபவர்களாகவே சித்தரிப்பர். அக்காட்சிகள் விரியும்போதெல்லாம் பெற்றோர்கள் மனதில் தாங்கள் எதிர்காலத்தில் இதேபோல் குழந்தைகளால் கைவிடப்படுவோமா என்ற அச்சம் தலைத்தூக்கும். இதுபோன்ற படங்கள் மிகை உணர்ச்சியால் இயங்கக் கூடியதாகவே இருக்கும்.

Shonar Pahar என்ற பெங்காலி மொழித் திரைப்படம் இதுபோன்ற விசயத்தை மிகை உணர்ச்சிக்குள் தள்ளாமல் சார்பு மனநிலை பெரிதும் இல்லாமல் கையாண்டு இருக்கிறது. இது ஒரு பிரத்யேகத் தன்மையை வெளிப்படுத்துகிறது. கல்கத்தா நகரம் படத்துக்குப் முன்னணியில் இயங்குகிறது. நகரத்தின் தெருக்கள், வீடுகள் அமைக்கப்பட்டிருக்கும் முறை இவையெல்லாம் சேர்த்துப் பின்னணி சத்தங்களையும் படம் இயல்புத்தன்மையோடு கொண்டு வருகிறது.

உபமா என்ற எழுபது வயது பெண்மணி, பாத்ரூமில் வழுக்கி விழுந்து உதவிக்கு அவள் வீட்டில்  இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணை சத்தமிட்டு அழைப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. இத்தகவலை அவளது மகனுக்குத் தொலைபேசியில் சொல்கிறாள். உபமா தனித்து வசிக்கிறாள். துணைக்கு வீட்டோடு ஒரு பெண். அவளின் ஒரே மகன் அதே நகரத்தில் திருமணமாகி தூரமாக இருக்கிறான். இவையெல்லாம் படத்தின் முதற்காட்சியிலேயே பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கப்படுகிறது. அவளின் மருமகள் சிகிச்சைக்காக அழைக்கும் இளைஞனிடம் இருந்து உபமாவின் வாழ்வில் ஒரு மாற்றம் நிகழ இருக்கிறது என்பதை நாம் யூகிக்கவில்லை. ராஜ்தீப் என்ற அந்த இளைஞன் அனந்தகர் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறான். அவன் உபமாவின் மகனுடைய நண்பன். “என்னை நினைவிருக்கிறதா” என்று உபமாவிடம் கேட்கிறான்.

 அவனைக் கூர்ந்து பார்க்கும் உபமா, “நாங்கள் அப்போது குடியிருந்த வீட்டில் ட்ரெஸ்ஸிங் டேபிளை உடைத்தவன் நீதானே” என்று அவனை நோக்கிக் கேட்கும் காட்சியிலிருந்து தொடங்கும் படம் அடுத்தடுத்த இழைகளில் அழகியல் குறையாமல் நகர்கிறது. உபமாவின் தனிமையான வாழ்வில், பிட்லு என்ற சிறுவனைக் கொண்டு சேர்க்கிறான் ராஜ்தீப். பிட்லு இத்திரைப்படத்தின் கதையை, உபமாவின் வாழ்வையே புரட்டிப் போடுகிறான்.

ஒரே மகன், மருமகளைப் பிரிந்து அதே நகரத்தில் வாழும் உபமாவுக்கு நாட்கள் கசப்பு மிகுந்தவையாக இருப்பது ஆச்சரியமல்ல. வயதும் உடம்பும் தரும் வலியும் தளர்வும் அவளை சிடுசிடுப்பு மிகுந்தவளாக ஆக்குகின்றன. சேட்டைகளோடு வயதுக்கு மீறிய பேச்சோடு வந்துசேரும் சிறுவன் பிட்லு, கொஞ்சம் கொஞ்சமாக அவள் வாழ்வில் மாற்றங்களைத் தருகிறான். வயதின் முதிர்ச்சி தரும் குழந்தைமையும், இயல்பாக சிறுவனுக்குள் இருக்கும் குழந்தைமையும் சந்திக்கும் புள்ளியில் மலர்ச்சி பூக்கிறது. 

உபமாவும் வீட்டு வேலை செய்யும் பெண்மணியும் சிறுவன் பிட்லுவை ஏற்க மறுக்கிறார்கள். மெதுவாகத் அவனை உள்வாங்கிக்கொள்ளும் சூழல் உருவாகிறது. அதையும் அவனே உருவாக்கித் தருகிறான். பிட்லுவின் பின்னணிக் கதை நம் மனதை அலைக்கழித்துவிடுகிறது. அவன் ஒரு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் என்பது இக்கதை பயனளிக்கத் தேவையான நேரடியான அம்சம் இல்லையென்றாலும் அதை இப்படத்தின் இயக்குநர் பரம்ப்ரத்தா சட்டோபாத்யாயா ஆழகாகப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறான கதையைப் பேசும் ஒரு படத்தில் ஹெச்.ஐ.வி பாசிட்டிவ் மனிதர்களை அணுகுவதற்கும் வழிகாட்டுகிறார். அவர்கள் மிகவும் இயல்பாக நம் வாழ்வுக்குள் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.

உபமாவுக்கும் சிறுவன் பிட்லுவுக்கும் இடையே மெல்ல மெல்லக் கனியத் தொடங்கும் உறவின் பயணமே படமாக அமைந்துள்ளது. சிறுவன் பிட்லுவின் மூலமாகத் தன் வாழ்விலிருந்து தூரமாகித் தொலைந்துபோன மகன் சவுமியாவைக் கண்டடைகிறார் உபமா.

உரையாடல்கள் படத்துக்கு வலிமையைக் கூட்டுகின்றன. உறவுகளைக் கையாளும் பக்குவம் எல்லா வயதினருக்கும் தேவை என்பதைத் திரைக்கதை அறிவுறுத்துகிறது. அந்த அறிவுறுத்தல் நேரிடையாக இல்லாமல் பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவே வெளிப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற படங்களில் மருமகளாக வரும் பெண் பாத்திரத்தை வில்லியாக சித்தரிக்கப்படும். அதே மனச்சாய்வு இந்தப் படத்திலும் நிகழ்ந்திருக்கிறது. மௌமிதா பாத்திரம் அவ்வாறாகவே காட்டப்பட்டு உள்ளது. மருமகள்-மாமியார் இடையே இருக்கும் புரிந்துணர்வின்மை விரிசல் மேலும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க மௌமிதா தொடர்ந்து முயற்சி செய்யும்போதெல்லாம் உபமா கதவடைத்துக்கொண்டே இருக்கிறாள்.

மூன்று கோணங்களில் இதை நாம்  பார்க்கவேண்டியிருக்கிறது. மகனை உடைமையாகக் கருதும் தாய், தனது மகனை இம்மி அளவும் மருமகளிடம் விட்டுத்தர மனமில்லாது இருக்கிறாள். கணவனை உடைமையாகக் கருதும் மனைவி, அம்மாவின் மடியில் இருந்து மகனை இறக்கிவிட எண்ணுகிறாள். இவர்கள் இடையே எழும் பிரச்சனைகளிலிருந்து தப்பி அமைதியாகத் தன் வேலையில் மூழ்கிவிட எத்தனிக்கும் சவுமியா,  மகன்,கணவன் என்ற இரு பொறுப்புகளையும் செவ்வனே நிறைவேற்ற இயலாமல் தப்பிக்கும் மனநிலையில் வேலை, பணம் இதை நோக்கியே தனது பாதையை அமைத்துக்கொள்ள முயல்கிறான்.

நேரம்,பணம், ஆற்றல் – இந்த மூன்றும் வயதுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவே குடும்ப உறவுகளைக் கட்டமைக்கிறது. இந்தப் படத்தில் சிறுவனாக வரும் பிட்லுவிடம் ஆற்றலும் நேரமும் இருக்கிறது, ஆனால் பணம் இல்லை. தன்னிடம் இருக்கும் நேரத்தையும் ஆற்றலையும் உபமாவுக்குத் தருகிறான். உபமா தன்னிடம் இருக்கும் நேரத்தையும் பணத்தையும் சிறுவன் பிட்லுவின் மகிழ்ச்சிக்காக செலவிடுகிறார். இருவராலும் ஒருவருக்கொருவர் நிறைவைத் தர முடிகிறது. மகன் சவுமியாவால் தனது நேரத்தையும் ஆற்றலையும் அவனது தாய் உபமாவுக்குத் தர முடிவதில்லை, விரிசல் அதிகமாகிக்கொண்டே போகிறது.

பிட்லுவைப் போலவே ராஜ்தீப்பின் தொண்டு நிறுவனத்துக்கு உதவி செய்யும் மனிதராக வரக்கூடிய வயதான மனிதர் ரஜத்தும் உபமாவின் வாழ்வில் ஒரு சிறு மலர்ச்சியைத் தருகிறார்.  உபமா சிறார் கதைகள் எழுதுவார் என்று அறிந்துகொள்ளும் பிட்லு, அவரது கதைகளைப் படித்துக் காட்டச் சொல்கிறான். ஒரு கட்டத்தில் கதைகள் எழுத அவரைத் தூண்டுபவனாகவும் உருமாறுகிறான். அந்தக் கதைகளை தூசி தட்டி உபமா படித்துக் காட்டத் தொடங்கும்போது இழந்துபோன தன் மகனின் நட்பைப் புதுப்பித்துக்கொள்ளவும் மனரீதியாகத் தயாராகிறார்.

வயதின் காரணமாக ஏற்படும் இடைவெளிகள், அவற்றை சரிசெய்ய நாம் எடுக்கத் தவறும் முயற்சிகள், மனித உறவுகளை நிலைநிறுத்தத் தேவையான சகிப்புத்தன்மை இவற்றையெல்லாம் பல்வேறு கோணங்களில் படம் அலுப்புத் தட்டாத வகையில் பேசுகிறது. படத்தின் இடையே உபமாவின் கதைகள் காட்சியாக விரிந்து அவளுக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவைப் பேசுகின்றன. படம்நெடுக இழையோடும் நகைச்சுவை ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. எந்த நொடியிலும் மிகை உணர்ச்சிக்குள் சென்றுவிடக்கூடிய கதையை இசைமிகுந்த கவிதையைப் போலக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஒரு மலையின் தரிசனத்துக்காக அனைவரும் பயணிப்பதும் காத்திருப்பதும் முக்கியமான குறியீடாகவும் திரைக்கதையை முன்னகர்த்திச் செல்லும் தேடலாகவும் இருக்கிறது.

அம்மா, சண்டை முடிந்துவிட்டது

என்று நான் அறிவிப்பேன்

என்னை நீ அணைத்துக்கொள்வாய்

நீயின்றி என்ன செய்வேன் நான்

என்றபடி என்னை முத்தமிடுவாய்

என்ற புகழ்பெற்ற தாகூரின் கவிதை ஒன்று உண்டு. அதையொட்டிய ஒரு சாகசக் காட்சியும் கதையாகச் சொல்லப்படுகிறது. கவிதைகளிலிருந்து வீரத்தைப் பெற்றுக்கொள்வதாகவும் புனைவுகளிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொள்வதாகவும் கதாபாத்திரங்கள் படம்நெடுக உரையாடுகின்றன. இந்தக் கவிதையின் உணர்வுசார் வடிவமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. எல்லா உறவுகளையும் அன்புதான் இயக்குகிறது, அதை வெளிக்கொணர்ந்துவிட்டால் உறவுச்சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்பது சொல்வதற்கு எளிது, ஆனால் அதை நடைமுறைப் படுத்துவது மலையேறுவதைப் போல கடினமான உழைப்பைக் கோருகிறது. சிரமங்களை ஒதுக்கிவிட்டுத் தொடர்ந்து நடப்பவர்களுக்கே தங்கம் பூசிய பனிமலையின் தரிசனம் கிடைக்கிறது.

Movie: Shonar Pahar

Year: 2018

Language: Netflix

Platform: Netflix

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  7. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  8. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  9. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  10. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  11. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  12. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  13. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  14. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  15. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  16. ஹெல்லாரோ: குஜராத்தி திரைப்படம்/வானத்தை திறக்கும் சிறகுகள்- ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்