காதலை நினைவுபடுத்த நமக்கு ஒரு தினம் தேவையா? அது தினங்களை கடந்ததுதானே!
இப்படித்தான் நானும் எண்ணினேன். ஆனால் எல்லா நாளும் ஒருவரை விரும்புவது சாத்தியம்தானா!
இன்று ஒரு உறவை காப்பாற்றுவது என்பது ஒரு மாபெரும் போரில் வெல்வதுபோலக் கடுமையாகத் தோற்றமளிக்கிறது.
“All is fair in love and war” என்பார்கள். போரில் தந்திரங்கள் வெல்ல உதவும்… அதையே காதலில் செய்யலாமா? காதலில் தந்திரமாக இருப்பவர்கள் மிகக் கொடூரமான வலியைத்தான் ஏற்கிறார்கள். அதற்கு உண்மையான தோல்வி உத்தமமானது.
சந்தையில் தனக்கு இணையான துணையை இன்னென்ன பொருத்தங்கள் இருக்கிறதா என்பதை மட்டுமே பார்த்து தேர்ந்தெடுப்பதில் வரும் ஆதார சிக்கல்கள் இவை. அது காதல் ஆகாதே… அப்போது காதலின் அரிச்சுவடி என்ன? அதன் முதல் விதி எது? முதல் தகுதி எது?
இது காதலுக்கான உத்தரவாதமான கையேடா என்றால் தெரியவில்லை ஏனெனில் அதுவும் தொடர்ந்து மாற்றி எழுதப்படுகிறது. இது காதல் என்கிற அந்த வஸ்துவைப் புரிந்துகொள்வதற்கான மிகச்சிறிய முயற்சி.
காதல் என்றால் மதித்தல். முதலில் நம் இணையின்மீது நமக்கு மதிப்பு வர வேண்டும். அதுவே காதலாக உருப்பெறுகிறது. உடல் கவர்ச்சி உடலோடு முடிந்துவிடுகிறது ஆனால் இது வேறு ஏதோபோல இருக்கிறதே.
ஏன் இவ்வளவு சந்தோஷம் தருகிறது?
ஏன் உலகையே வெல்லும் துணிச்சல் தருகிறது?
ஏன் அனைத்தையும் அழகாக்குகிறது?
ஏன் எல்லாவற்றையும் மன்னிக்கும் தேவ உள்ளத்தைத் தருகிறது?
ஏன் தவிக்க வைக்கிறது?
ஏன் மண்டியிட வைக்கிறது?
ஏன் நம் சுயத்தைக்கூட காணிக்கையாகக் கேட்கிறது?
ஏன் நம் ஆன்மாவைப் பலி கேட்கிறது?
நம்மை நாம் எப்போதும் ஒரு கவசம் கொண்டு பாதுகாத்து வருகிறோம். யாரும் நம்மைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று. எவ்வளவு கவனமாக இருந்தும் நாம் நொறுக்கப்படும்போது முன்னைவிட இன்னும் துளைக்கமுடியாத கவசம் அணிகிறோம். நாளாக நாளாக நம் கவசத்தின் எடை அதிகமாகிறது. இதைக் கழற்றிவைக்க முடியாதா என ஏங்குகிறோம். யாரிடமாவது நாம் நிராயுதபாணியாக நிற்க விரும்புகிறோம்.
யாரிடம் நம்மால் நம் குழந்தைத்தனத்தோடு இருக்க முடிக்கிறதோ, யார் நம் மௌனங்களுக்கு மரியாதை தர விரும்புகிறார்களோ, யார் நம்மை நாமாக இருக்க அனுமதிக்கிறார்களோ அவர்களுக்கே நம் இதயம் திறக்கிறது.
உங்களுடைய சந்தோஷ செய்தியை நீங்கள் முதலில் யாரிடம் சொல்ல விரும்புகிறீர்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது அந்த அன்பு.
நாம் சோர்ந்து போயிருக்கும் போதும் துவண்டு போயிருக்கும் போது நம்மைப் புன்னகைக்க வைப்பது காதல் மட்டுமே. பெரும் வீழ்ச்சிக்குப் பின்னும் நாம் மீண்டும் எழ நமக்கிருக்கும் ஒரே நம்பிக்கை காதலே. அதை நாம் நம் இணைக்குக் கொடுக்கிறோமா என்பதில் இருக்கிறது அந்த அன்பின் ஆயுட்காலம்.
எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும் அவர்கள்மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கான ஒரு சிறிய இடைவெளியை நாம் கொடுத்தே ஆக வேண்டும். உறவுகளில் பயமும் பதட்டமும் இருக்கக்கூடாது. அன்பு அதற்கு இடம் தராது. சுதந்திரமும் அமைதியும் மட்டுமே அதன் அடையாளம். இந்த நியாயம் இருவருக்கும் பொதுவானது.
காதலில் எப்போதும் ஒருவர் மட்டுமே கொடுத்துக்கொண்டிருப்பது ஆபத்து. காதலின் நிமித்தம் அவர்கள் ஆரம்பத்தில் அதை எதிர்பார்க்காமலிருந்தாலும் அது எவ்வளவு புரிந்துகொள்கிற இதயமாக இருந்தாலும் ஒரு நாள் அதுவும் சோர்வடையும்.
பேசுங்கள், நிறையப் பேசுங்கள். கேளுங்கள், நிறையக் கேளுங்கள். குறிப்பாக அவர்கள் சொல்லாததையும் மனதால் கேளுங்கள். பேசுவது காதலில் பெரும் மயக்கம். ஏனெனில் பின்னொரு காலத்தில் நம்மால் பேச மட்டுமே செய்ய முடியும்.
உறவில் மௌனம் எப்போதும் ஆபத்து. சண்டையில் கூட நீ எனக்கு வேண்டும் என்கிற போராட்டமே இருக்கும்… ஆனால் மௌனத்தின் அர்த்தம் என்னிடம் இருந்து நீ விலகிவிட்டாய் என்பதே.
பொசசிவ்னஸ் எனும் சிறை. அன்பைவிட பெரும் ஆயுதம் இல்லை. அதுவும் இது அன்பின் பெயரால் கேட்கும் பலி. ஒரு அன்பு தன்னை நிரூபி எனக் கேட்குமா அப்படிக் கேட்பதும் அன்பாகுமா? இதை ஃபிஷ் லவ் (Fish Love) என்பார்கள். நீ ஏன் மீனை விரும்பி உண்கிறாய் எனக் கேட்டால்? எனக்கு மீனை மிகவும் பிடிக்கும் என்பதுபோல. உங்களுக்கு மீனை அவ்வளவு பிடிக்கும் என்றால் அதை உயிருடனும் சுதந்திரமாக உயிர்ப்புடனும் வாழ விடவேண்டும்தானே.
காதலின் கோட்பாடுகள் இடம், காலம், மனிதர்கள், பணி, கலாச்சாரம், கலை ஆகியவற்றால் உருமாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தின் புனிதங்கள் இன்று மகா கேலியாகப் பார்க்கப்படுகிறது. கவிஞர் ஒருவர் என்னிடம் ஒரு கவிதையைப் பற்றிச் சொல்லும்போது இதை நான் 10 வருடங்களுக்கு முன் சொல்ல முடியாது என்றார். அன்றைய கலாச்சார அதிர்ச்சி இன்றைய நடைமுறையாக இருக்கிறது. அப்படி இருவரில் ஒருவர் ஒரு காலத்தில் இருக்க மற்றொருவர் வேறொரு காலத்தில் இருக்கச் சிக்கல்கள் வருகிறது.
ஓர் உறவை அடையப் போராடும் அந்தக் கடும் முனைப்பில் அதை அடைந்தவுடன் அதற்குமேல் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள். அல்லது தேங்கிப் போய்விடுகிறார்கள்.
இல்லையே அப்படி முழுக்க பொதுமைப்படுத்த முடியாதே… எங்களின் ஆதிச் சொல்லில் அன்பிருந்ததே. என்று நீங்கள் வாதிட்டால் கண்டிப்பாக இருந்திருக்கும் ஆனால் பல காரணங்களுக்காக ஒருவர் அந்த அன்பிலிருந்து வெளியேறுவதும் நிகழ்கிறது. சிலநேரம் காதலில் அன்பு மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை.
பிரிவு தவிர்க்கமுடியாததாக இருக்கும்போது மிகக் கவனமாக இருங்கள். பிரிவு காதலின் உன்னதமான பகுதி. மிகவும் நேசித்த அந்த உயிரை நீங்கள் எப்படி மனதார விடைபெற அனுமதிக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் அன்பின் உச்சம் இருக்கிறது.
காதலித்த காலம் அன்பாக இருப்பேன் பிரிந்த பிறகு வெறுப்பேன் என்பது நம்முடைய அன்பை நாமே கொல்வதாகாதா.. அந்தக் காலத்தில் உண்மையாகத் தானே காதலித்தோம்.. அது அந்த காலத்தையே நிராகரித்ததாக ஆகாதா..அப்போது நம் அன்பு விதிகளுக்கு உட்பட்டதா. பண்டமாற்றாம் தானா.. அடைவது மட்டுமே அன்பா என்றால் சிலநேரம் உங்கள் அன்பை நீங்கள் ஒரு அந்நியராக இருந்து மட்டுமே காப்பாற்ற முடியும்.
(சட்ட விதி: போலியாகவும், சுயநலமாகவும், வஞ்சித்தவர்களின் பிரிவு பற்றி இங்கு சொல்லவில்லை)
காதல் இவ்வளவு வலி நிறைந்ததா? இவ்வளவு உக்கிரமானதா? இவ்வளவு உத்தரவாதமில்லாததா என்று எண்ணி மட்டும் காதலிக்காமலிருந்துவிடாதீர்கள் அது இந்தப் பிரபஞ்சத்தையே அவமதிப்பதாகும். ஏனெனில் அன்பின் வழி மட்டுமே இந்தப் பேரண்டத்தால் உங்களுக்குள் அந்த பேரொளியைப் பாய்ச்ச முடியும். அதற்காக அது மீண்டும் மீண்டும் ஏதேனும் சதி செய்து உங்களைக் காதலிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.
“தாகம் கொண்டவன் நீரைத் தேடுவதுபோல நீரும் தாகம் கொண்டவனைத் தேடுகிறது” எனும் தத்துவம்போல, உங்கள் தாகம் தீர்க்காத நீரைத் தேடாதீர்கள். உங்களுடையது பெரும் தாகமாக இருப்பின் வாழ்வு உங்களை ஒரு பெரும் தடாகத்தின் அருகிலேயே கொண்டு செல்லும்.
ஆரம்பத்தில் கேட்ட கேள்வியின்படி வாழ்வு முழுவதும் காதலிக்க வேண்டுமா என்ற நினைப்பேகூட ஒரு சுமையாக தெரியலாம். மாறாக இன்று மட்டும் காதலியுங்கள் போதும். அப்படியே ஒவ்வொரு நாளும். வாழ்வு அப்படித்தானே வருகிறது ஒவ்வொரு நாளாய்!