( பிப்ரவரி 27 சுஜாதாவின் நினைவுதினத்தை முன்னிட்டு  நான் சுஜாதா பற்றி வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய கட்டுரைகளின் தொடர்)

சுஜாதாவை 92 அல்லது 93ல் மதுரையில் நடந்த ‘சுபமங்களா’ நாடக விழாவில் சந்தித்தேன். அதற்கு சிறிது காலத்திற்கு முன்புதான் அவர் என்னுடைய கால்களின் ஆல்பம் கவிதையை கோவையில் ஒரு சிறுகதைப் பயிலரங்கில் படித்துக் காட்டிய அனு பவத்தைப் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டிருந்தார். முதன்முதலாக சட்டென என் மீது ஒரு வெளிச்சம் விழுந்ததை உணர்ந்தேன். அவருடைய நீண்ட நாள் வாசகன் என்ற முறையில் அவரை சந்திப்பதில் மிகுந்த ஆசை இருந்தது. சுஜாதா உரையாற்றிய அன்று நான் போக முடியவில்லை. அன்று அவரை சந்தித்த  என் நண்பர் ஒருவர் நான் அவரைப் பார்க்க விரும்புவதை யும் அடுத்த நாள் வந்தால் பார்க்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். ‘அதற்கென்ன, அடுத்த நாள் நானே வந்து சந்திக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். என்னால் நம்பமுடியவில்லை. மறுநாள் காலையில் நாடக விழா நடக்கும் அரங்கில் அவருக்காகக் காத் திருந்தேன். அவர் வந்தார். முதல் வாக்கியத்திலேயே கவிதைகளைப் பற்றி பேச ஆரம்பித்தார். என்னைப் போன்ற ஒரு வாசகனை, ஒரு ஆரம்ப நிலை கவிஞனை சந்திப்பதற்காக அவர் தேடிவந்தது எனக்கு மிகுந்த பதட்டத்தை ஏற்படுத்தியது. கொஞ்ச நேரத்தில் அவரைச் சுற்றி கூட்டம் சேர ஆரம்பித்தது. அவர் விடைபெற்றுச் சென்றபோது அவரது இயல்பான சுபாவம் பற்றிய பெரும் பிரமிப்பு எழுந்தது.

என்னைப் போலவே ஏராளமான இளம் எழுத்தாளர்கள்மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். தனக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங் களிலும் கவிதைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். புத்தகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பட்டியல்கள் கொடுத்திருக்கிறார். அவரைச் சந்தித்த பல சந்தர்ப்பங்களில் தனக்கு வந்து குவியும் புத்தகங்களைக் கையாள்வது தொடர்பான பிரச்சினைகளை அவர் சொல்லியிருக்கிறார். எழுதியுமிருக்கிறார். நான் ஒரு முறை அவரிடம் சொன்னேன், ‘இந்தப் பிரச்சினையெல்லாம் நீங்கள் உருவாக்கியதுதான். தமிழில் எழுத்தாளர் கள் புத்தகங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். பத்திரிகைகளுக்கு புத்தகங்கள் தொடர்பான எந்த அக்கறையும் இல்லை. உங்களைப் போன்ற ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஓர் இளம் எழுத்தாளனைப் பற்றி அல்லது அவனது புத்தகங்கள் பற்றி எழுதுவது இந்தச் சூழலில் அபூர்வமான நிகழ்வு.’ இதற்கப்புறம் அவர் அன்று வந்த ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக் காட்டி அதில் உள்ள ஒரு ஒரு வரியை சுட்டிக் காட்டி ‘இதில் இது மட்டும்தான் கவிதை’ என்பார். இளம் எழுத்தாளர் களை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிற பாசாங்கான இலட்சியம் எதுவும் அவருக்கு இல்லை. அது எழுத்தின்பால் தீராத உற்சாகம். பிடித்ததைக் கொண்டாடும் தீவிர வாசக மனோபாவம். தன்னுடைய புகழ் பெருமைகள்பால் கடும் அலட்சியம். இதுதான் சுஜாதா.

மிகுந்த மனச்சோர்வுடனும் கடுமையான பிரச்சினைகளுடனும் அவரைச் சந்திக்கப் போயிருக்கிறேன். திரும்பி வரும்போது எதுவுமே அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்று தோன்றும். அவர் ஆறுதல் சொல்ல மாட்டார். பிரச்சினைகள்பால் ஒரு தர்க்க ரீதியான அணுகு முறையை ஏற்படுத்துவார். சிக்கல்களை உணர்ச்சிகள் வழியாக சந்திக்க மாட்டார். சில சமயம் இது ஒரு அந்தரங்கமான ஏமற்றத்தைக் கூட கொடுக்கும். ஆனால் உணர்ச்சிகள், சிக்கல்களை அலங்கரிக்கவே பயன் படுகின்றன. அவர் வழிமுறைகளின்மீது நம்பிக்கைகொண்ட யதார்த்த வாதி.

எந்த ஒரு விஷயத்தின் பாலும் அதன் மையமான இடத்தை மிகவேகமாக நெருங்கிவிடுவார். வாழ்க்கையின் அபத்தங்கள் குறித்த இடையறாத நகைப்பு ஒன்று எப்போதும் அவரிடம் ஓடிக்கொண்டிருந் திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல மருத்துவமனை அவரை மரணத்தின் எல்லைவரை கொண்டு சென்றது. நான் போய்ப் பார்த்தபோது படுக்கையில் படுத்தபடி இந்த அபத்தம் எவ்வாறு நடக்கிறது என்பதை உற்சாகமாக யாரோ ஒருவருக்கு நடந்ததைச் சொல்வதுபோல சொல்லிக் கொண்டிருந்தார்.

ஒரு படைப்பாளி என்ற விதத்திலும் பதிப்பாளன் என்ற விதத்திலும் அவர் எனக்கு ஆற்றியிருக்கும் உதவிகளுக்கு எல்லை ஒன்றும் இல்லை. என்னுடைய கடந்த பதினைந்தாண்டு கால வாழ்க்கையில் பல சந்தர்ப் பங்களில் அவர் ஒரு நிர்ணயப் புள்ளியாக இருந்துகொண்டிருக்கிறார். என்னுடைய கவிதைகளைப் பற்றி தொடர்ந்து பேசியதன் வாயிலாக எனக்கு ஒரு பரந்த வாசக அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். இன்றும் பல வாசகர்கள் சுஜாதா உங்களைப் பற்றி எழுதியதைப் படித்தே உங்கள் கவிதைகளைப் படிக்க ஆரம்பித்தேன் என்று சொல் வதைக் கேட்கிறேன். ‘உயிர்மை’ பதிப்பகம் சுஜாதாவின் நூல்களுக்கு முதன்முதலாக சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. அவருடைய தொகைநூல்களின் மூலமாக அவரது இலக்கிய முக்கியத்துவத்தை கவனத்திற்குக் கொண்டுவந்தது. ‘உயிர்மை’ பதிப்பகம் குறுகிய காலத்தில் தமிழின் முன்னணி பதிப்பகங்களில் ஒன்றாக மாறியதற்கு சுஜாதாவின் புத்தகங்களும் அவரது வாசகர்களுமே முக்கியக் காரணமாக இருந்திருக் கிறார்கள். எப்போதும் அவருடைய புதிய தொகுதிகளைக் கொண்டு வருவது தொடர்பாக பேசும்போதும் ‘விற்குமான்னு யோசிச்சுக்கோ’ என்பார். நானும் அவருக்கு இருக்கும் வாசக வட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்வேன். தமிழில் மிகப் பெரிய வாசக வட்டத்தைக் கொண்ட ஒரு எழுத்தாளர் தன்னுடைய பதிப்பாளருடன் நடத்தும் இந்த உரையாடலை யாராவது கேட்டால் கொஞ்சம் தமாஷாகத்தான் இருக்கும். ‘உயிர்மை’ இதுவரை இரண்டு பெரிய புத்தக வெளியீட்டு விழாக்களை சுஜாதாவுக்காக நடத்தியிருக்கிறது. இதுபோன்ற விழாக் களுக்கு அவர் மிகவும் எதிரானவராகவே இருந்திருக்கிறார். தன்னைப் பற்றிப் பேசுவதைக் கேட்பதில் அவருக்கு மிகுந்த கூச்சம் இருக்கிறது. இரண்டு முறையும் அவரைப் பலவிதமாக வற்புறுத்தியே அதற்கு சம்மதிக்க வைத்திருக்கிறேன். பலவிதமான ஒத்துழையாமை இயக்கங் களை நடத்துவார். பிறகு நான் எதையெல்லாம் கேட்டேனோ அதை யெல்லாம் மிகுந்த பிரியத்துடன் செய்து கொடுப்பார்.

எழுத்திலும் தனிப்பட்ட முறையிலும் ஏதோ ஒரு ரகசிய உபாயத்தின் வழியாக அவர் தன்னுடைய மூப்பைக் கடந்துவிடுகிறார். ஒவ்வொரு தலைமுறை வாசகனும் அவரைத் தன்னுடைய தலைமுறையைச் சேர்ந்த வராகவே நினைக்கிறான். அவர் எப்போதும் நிகழ்காலத்தின் மீது நின்றுகொண்டிருக்கிறார். இளம் எழுத்தாளர்களுக்கு சவால் விடுகிறார். தன்னுடைய படிப்பினால், வேலை செய்யும் வேகத்தினால் பிரமிப்பை யும் குற்ற உணர்வையும் ஏற்படுத்துகிறார். அவர் ஒரு காலகட்டம். காலகட்டத்தின் அடையாளம். அவருடைய ஒவ்வொரு வாக்கியத்தி லும் அவரது அடையாளம் இருக்கிறது. யாரும் போலி செய்யமுடியாத அடையாளம் அது.

குங்குமம்

2006

சுஜாதாவின் நூல்களை ஆன்லைனில் வாங்க: https://bit.ly/39Yzbou