குஜராத் என்பது நமக்கு
தொலைவில் இருக்கும் நகரமல்ல
அது நம் வாசலிலேயே இருக்கிறது
காற்றின் ரத்த வாசனை அன்று
நம் நகரங்களை இணைத்தது

பிறகு குஜராத் நமக்கு
ஒரு சிறந்த புகைப்படத்தை அளித்தது
ஒரு மனிதன் கைகூப்பி
உயிருக்கு மன்றாடும் புகைப்படம்
அதுவே பிறகு
நம் தேசிய பெருமிதங்களில் ஒன்றாக மாறியது
அந்தப் புகைப்படத்தின் மேல்
ஒரு சர்வவல்லமை பொருந்திய அதிகாரமொன்று
கட்டி எழுப்பப்பட்டது

டெல்லி என்பது நமக்கு
தொலைவில் இருக்கும் நகரமல்ல
அது நம் வாசலியே இருக்கிறது
எரியும் வாசனை இன்று
நம் நகரங்களை இணைக்கிறது

டெல்லி நமக்கு இன்று
மிகச்சிறந்த புகைப்படமொன்றை
அளித்திருக்கிறது
ஒரு மனிதன் ரத்த வெள்ளத்தில்
மண்ணை முத்தமிடும் புகைப்படம்
அசலான மிருகங்கள்
அவன் மாமிசத்தைப் புசிக்கின்றன
இந்தியாவின் பெருமை
சர்வதேச அரங்குகளில் உயர்ந்து கொண்டிருக்கிறது
வல்லரசுகளின் அதிபர்களுக்கு
நம் பாரம்பரிய நடன நிகச்சியை நிகழ்த்திக்காட்டுவதுபோல
இந்தக் காட்சி நிகழ்த்திக் காட்டப்படுகிறது
வரலாறு என்பது புகைப்படங்களாலானது
இடையறாத ரத்த நதிகளாலானது

இதெல்லாம் நடக்குமிடங்களுக்கு
நாம் வெகு தொலைவில் இல்லை
அருகாமையில்தான் உட்கார்ந்திருக்கிறோம்
நூறடி தூரத்திலோ
நூறு மைல் தூரத்திலோ..
எல்லாம் நமக்கு நன்றாகக் கேட்கிறது
பக்கத்து அறையில் நடப்பதுபோல
பக்கத்துவீட்டில் நடப்பதுபோல
நாம் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
நீங்கள் இன்னும் நீதியை நம்புகிறீர்கள்
நானும் அப்படித்தன் நம்புகிறேன்
நீதியை நம்புகிறவர்கள்
நம்புகிறார்களா என
அறிந்துகொள்ள காத்திருக்கிறோம்

காவி ராணுவம் எந்தப் பதட்டமும் இல்லாமல்
தெருக்களை ஆக்ரமிக்கிறது
இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வீடுகளில்
கொடிகள் ஏற்றப்படுகின்றன
கொடிகள் இல்லாத வீடுகளின் மேல்
பிணந்தின்னிக் கழுகுகள் சிதறிப்பறக்கின்றன

தாக்குதலுக்கான கல் ஆயுதங்கள்
ட்ரக்கர்களில் வந்து இறங்குகின்றன
கற்களால் வேட்டையாடும்
ஒரு காலம் பூமிக்கு அடியிலிருந்து எழுந்துவருகிறது

துப்பாக்கிகளை உயர்த்திக் காட்டி முழங்குகிறார்கள்
ஜெய் ஸ்ரீ ராம்
பெட்ரோல் குண்டுகளை உயர்த்திக்காட்டுகிறார்கள்
ஜெய் ஸ்ரீராம்
தடிகளை சுழற்றிக் கத்துகிறார்கள்
ஜெய் ஸ்ரீ ராம்
கற்களை வீசிக்கொண்டே சொல்கிறார்கள்
ஜெய் ஸ்ரீ ராம்
அது நன்கு பயிற்சியளிக்கப்பட்ட
தெளிவான வரைப்படங்களுள்ள ஒரு ராணுவம்
மக்கள் கலைந்துபோக
மூன்று நாட்கள் அவர்கள் கெடுவிதித்தார்கள்
மக்கள் அங்கேயேதான் அமர்ந்திருந்தார்கள்
காவி ராணுவம் தாமதிக்கவில்லை
அவர்களை எந்த ராணுவமும் தடுக்கவில்லை
அவர்களுக்குச் சட்டத்தைப்பற்றி எந்தப் பயமும் இல்லை
போலீஸ் எங்களுடன் இருக்கிறது என
காணொளிகளில் சிரித்துக்கொண்டேமுழங்குகிறார்கள்
பத்திரிகையாளர்கள்
இந்துவா முஸ்லிமா என
ஆடை அவிழ்த்து சோதிக்கப்படுகிறார்கள்
அவர்களது அடையாள அட்டையின் பெயர்களைப் பொறுத்தே
அவர்களது நல்லதிஷ்டம் இருக்கிறது

ஒருவன் தான் தீவைக்கும் காட்சியை
தானே செஃல்பி விடியோவாக பதிவுசெய்கிறான்
வேறொரு காட்சி எல்வாற்றையும் மிஞ்சுகிறது
போராட்டத்தில் முதுகெலும்புகள் முறிக்கப்பட்டவர்கள்
ரத்தக் காயங்களுடன் தெருவில் கிடக்கிறார்கள்
காவல்துறை சீருடை அணிந்தவர்கள்
அவர்களை தேசிய கீதம் பாடச்சொல்லி
அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்
வலியின் தீனக்குரலில்
அவர்கள் தேசியகீதம் பாடுகிறார்கள்
ரத்தக் கவுச்சியுள்ள தேசிய கீதம்
சித்ரவதைகளின் தேசிய கீதம்

கற்களை எடுத்துக்கொண்டு
கொலைவெறியுடன் ஓடும்
அந்தச் சிறுவர்களைப் பாருங்கள்
அவர்களுக்கு பணிரெண்டு அல்லது
பதின்மூன்று வயது இருக்கலாம்
அப்போதுதான் பள்ளிகளிலிருந்து
வீடு திரும்பியிருப்பார்கள்
அவர்கள் முகத்தில் அழிவு வேட்கை
தாண்டவமாடுகிறது
அவர்கள் அதை ஒரு குதூகலமான
திருவிழாவைபோல கொண்டாடுகிறார்கள்
ஒரு புதிய இந்தியா பிறக்கும் காட்சியை
இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது
உண்மையிலேயே பண்டிகையின் மகிழ்ச்சி
காவி ராணுவத்தின் முகங்களில் ததும்புகிறது
குற்ற உணர்வில்லை
சிறு தயக்கம் இல்லை

குஜராத் என்பதும்
டெல்லி என்பதும் வேறு வேறு நகரங்களல்ல
எதுவுமே மாறிவிடவில்லை
அதே வழிமுறைகள்
அதே ரத்த வேட்கைகள்
அதே போலி விசாரணைகள்
அதே கள்ள மெளனங்கள்
எல்லாம் நம் வாசலிலேயேதான்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன

இந்தப் படம் இன்றோடு கடைசி அல்ல
இன்னும் திரைக்கதைகளில் மிச்சம் இருக்கின்றன
மேலும் புதிய காட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன
மேலும் புதிய பிணங்கள்

25.2.2020
மாலை 6.26
மனுஷ்ய புத்திரன்