செவ்வரளி மொட்டாக..

உன்னை மறக்கவேயில்லை
எனும் திமிர் மிகுந்து ததும்பிக் கொண்டிருப்பவளை
விலக்கிவிட்டாய்,
நினைக்கவில்லை என்ற வார்த்தைகள் கொண்டு
அலங்கரிக்கிறாய் என்றால்
இன்னும் செவ்வரளி மொட்டாகவே இருக்கிறேன் உன்னில் நான்
புலர்வும் மலர்தலுமான ஒரு அதிகாலை எனக்கும் வாய்க்காமலா போகும்
அந்த நாளின் பூஜையில் அழகிய மலராக உன்னை அலங்கரிப்பேன்

காதலின் நினைவுச் சின்னங்களாவோம்

என்மீது நீயோ உன்மீது நானோ
பலவந்தமாக தீராக் காதல் கொள்ளவில்லை அன்பே

அந்தக் காதல் தான் நம்மை தேர்ந்தெடுத்து
திணித்துக் கொண்டிருக்கிறது
தெய்வீகம் என்ற பெருமையைப் பெற
நம்மைத் தவிர வேறு யாரால் முடியும் சொல்?

எத்தனை காலத்திற்கு ஜெனிமார்க்ஸையும்
அனார்சலீமையும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்க முடியும் பாவம்!

இனி நம் பெயர் சொல்லவேண்டும் என்பது
காதலின் ஆசை என்றால் செவ்வனச் செய்துவிடுவோம் வா.

இருள்தான் ஆடை

காட்டுப்பூச்சியின் கனவுகளில் இருள் தான்
பகலின் வண்ணம்
இருள் தான் மேகம்
இருள் தான் ஒளி
இருள் தான் பிம்பம்
வெளிச்சம் என்பதெல்லாம் கண்திறந்து பார்த்துப் பழகியவர்க்குத் தானே கிளியே..
நான் இன்னும் கண்கள் திறக்காத வனாந்திரப் பறவை
பார்வை வேண்டாம்
வழித்தடம் வேண்டாம்
சிறகுகள் போதும் காடுகள் அளக்க
என் காட்டினளவு தான் என் வானமும்
அதில் நட்சத்தரப்பூக்கள் பூத்து நிலவு வாசம் வீசும்
பகலைக் கானாத வன தேவதைக்கு
இருள் தான் ஆடை
இருள் தான் அன்பு
இருள் தான் உறவு

தலை சாயும் அன்பு

லேசாகத் தலை தாழ்த்துவதெல்லாம்
உனக்கான வேண்டுதலின் போது கடவுளிடமும்
எனக்கான வேண்டுதலின் போது உன்னிடமும் மட்டுமே..
பிடித்தவர்க்காக தாழ்ந்து போகும் அன்பு அழகாகிவிடுகிறது