ஒளிப்பறவை

 

செந்நிற வானம் ததும்பும் பூமியின் நிழலில்

காய்ந்து தொங்குகின்றன நட்சத்திரங்கள்

அணிவகுப்பின் பறவைகள் கடந்த பாதைகளெங்கும்

சுவடுகளைப் பதித்திருந்த இறக்கைகளில் வழிகின்றது

கூடுபற்றிய ஆசுவாசம்

கவலைகளின் இன்மைகளிலிருந்துப் புறப்பட்ட

கூக்குரலில் கூட்டமொடு கனிகொத்தித் தின்று

நட்சத்திரங்களோடு கூடடைகின்றன பறவைகள்

ஒளி எங்கும் படர்ந்திருக்கிறது.

 

அரூபங்கள்

 

கசிந்த நீர்த்துளிகளின் திசையற்ற பயணத்தில்

என்னை ஒப்படைத்துக் கொள்வது எத்தனை ஆதூரம்

ஓர் உதிரும் இலையின் மனம் குமையும்

அடிக்கோடிட்ட துயரங்களை மடியேந்திக் கொல்லும்

மகத்துவத்தைவிட நிறுத்தற்குறிகளற்ற என் கவிதைகள் மேலானவை

உருகி திடமிழந்த திரவங்களை அரூபமாக்கும்

விதிகளை மூட்டைக்கட்டி குப்பை வண்டியில் வைத்திருக்கிறேன்

கிடங்குகளை நோக்கிய அதன் தெரிவுகள் யாவும்

கண்டடைவதற்கானவை இல்லை

 

காதல் செடி

 

நீயின்றி ஏனிந்த மாலையும் இரவும்

ஒரு காதலின் எந்தக் கனிதலுமற்ற உன்னிருப்பின்

அண்மையில் எந்தச் செடியை நீ நடுகிறாய்

பொன்னின் இதழ் கமழும் நம் கவிதைப் பிரதேசங்களை

நீ ஆராதிக்காமல், என் இசைக்குறிப்புகளை

எடுத்துச் சமைக்க ஆரம்பித்து விடுகிறாய்

எழுத முடியாத என் மூச்சுக்காற்றின் தொலைவுகளை

என்ன செய்து என்ன

வாழ்தல் என்பதும் இறத்தல் என்பதும் ஒன்றேயான பின்பு.