பாகிஸ்தான் மீதான பாலாகோட் தாக்குதலின் போது இந்திய போர் விமானங்கள் மேகங்களுக்குள் மறைந்துகொண்டு ராடாரின் கண்காணிப்பிலிருந்து தப்பும் என்று கூறி புகழ் பெற்றவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. ராடார் என்ன உங்கள் வீட்டு டி.டி.எச் குடையா என்பதுபோல் அப்போது மோதியை பலர் வறுத்தெடுத்தனர். அது கடைசி வரை இப்படியும் அப்படியுமாக குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டது. இப்போது, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 மணிக்கு இந்தியாவில் அனைவரும் ஒன்பது நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும் என கூறியிருக்கிறார். அவ்வாறு திடீரென மின்சாரத்தைத் துண்டித்தால் தேசிய அளவிலான மின்சார கிரிட்கள் செயலிழக்கும், அதைச் சரி செய்ய வாரங்களாகும் என பீதியைக் கிளப்புகிறார்கள் மின்சாரத் துறை அதிகாரிகள்.

கொரோனா போன்ற துயரம் முதல் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியுடனான ஒரு முரண்பாடு வரை பலவற்றையும் பற்றி மோதி பேசும் போது, குறிப்பாக டிவியில் தோன்றி உரையாற்றும் போது அவரின் உடல் மொழியை கவனியுங்கள். அதையெல்லாம் ஒரு நிகழ்த்துக் கலை போல, சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா போல நிகழ்த்துபவர் அவர். அதுதான் அவரின் திறமை. மோதி ஒரு சினிமா நடிகர் என்றால் அதற்காக அவரைப் பாராட்டியிருக்கலாம்.

மோதி ஒரு சர்வாதிகாரி என்பதற்கு பண மதிப்பிழப்பு முதல் விளக்கணைப்பு முதலான நடவடிக்கைகளே சாட்சி. இப்படி திடீரென நாடு முழுக்க விளக்கணைத்தால் தேசிய கிரிட் செயலிழக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் மின் துறை அதிகாரிகள், அவ்வாறு நடக்காமலிருக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியிருக்கிறார்கள். அதாவது, மோதி சீட்டுகளை கலைத்து போடுவார்கள். அரசு ஊழியர்கள் அதைத் திரும்பி அடுக்கிக்கொண்டிருப்பார்கள். ஆட்சியில் வெட்டியாக அமர்ந்திருப்பவர்கள் போரடிக்காமல் இருப்பதற்காக ஆடும் கேளிக்கை விளையாட்டு போல் இது தெரிகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்பட.

பண மதிப்பிழப்பு அறிவிப்பால் புதிய நோட்டுகளை விரைவாகத் தயாரிக்க, ஏ.டி.எம்களில் அந்த புதிய நோட்டுகளின் புதிய சைஸுக்கு பொருந்தச் செய்வதற்காக ரிசர்வ் வங்கியும் தனியார்-பொதுத் துறை வங்கிகளும் மேற்கொண்ட பெரும் போரட்டங்களை நாம் அறிவோம். நாளை இதே போல ஒன்பது நிமிடம் விளக்கணைத்த பிறகும் மின் துறை ஊழியர்கள் நாள்கணக்காக போராடி அதைச் செய்வார்கள். பாவம், எதிர்த்துப் பேச முடியாத அடிமை ஜனநாயகத்தின் பிரஜைகள் அல்லவா நாம்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய பி.ஜே.பி அரசின், பிரதமர் மோதியின் பங்கு கைத்தட்டச் சொல்வதும் விளக்கணைக்கச் சொல்வதும்தான் என்பது மீண்டும் இப்போது கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் ஒவ்வொன்றையும் பிடுங்கி தன் கையில் வைத்துக்கொள்வதை ஒரு சடங்கு போல செய்து வருவதுதான் இந்த பி.ஜே.பி அரசு. மாநிலங்களில் தனித் தனியாக இருந்த வரியை ஜி.எஸ்.டி என மத்திய அரசு வசூலித்துக்கொண்டு, அதைப் பெற மாநிலங்களை நாயாய் அலைய வைத்துக்கொண்டிருக்கிறது. அதிலும் பிடிக்காத ஆட்சி என்றால் காலி. பல்கலைக்கழக மானியக் குழுவை (யு.ஜி.சி) கலைத்துவிட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உயர் கல்வியை கொண்டு வருகிறார்கள். கொரோனாவுக்கு நிதி திரட்டுவது என வரும் போதுகூட தனது நேரடி கட்டுப்பாட்டில் பி.எம் கேர்ஸ் என்ற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார். ஏற்கனவே இருந்த பிரதம மந்திரி நிவாரண நிதித் திட்டத்தை பயன்படுத்தவில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்தும் கடினமான வேலைகளை மாநிலங்களின் தலையில் போட்டுவிட்டதோடு அல்லாமல் இத்தகைய விளக்கணைப்பு அறிவிப்புகள் மூலம் மோதி மாநிலங்களுக்கு புதிய தலைவலியை உருவாக்கிவிடலாம். அதைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கொரோனா இந்தியாவுக்குள் பரவுகிற வியாதியாக இருந்திருந்தால் ஏதாவது ஒரு நாட்டின் சுற்றுப் பயணத்தின் பகுதியாக கான்ஃபரன்ஸ் மூலமாக மாநில முதல்வர்களுக்கு உத்தரவு போட்டுக்கொண்டிருப்பார். சென்னை வெள்ளத்தை மோதி விமானம் மூலம் பார்த்ததாக ஃபோட்டாஷாப் செய்த புகைப்படத்தை வெளியிட்ட மத்திய பத்திரிகை தகவல் மையம் (பி.ஐ.பி) போல முட்டுக்கொடுக்க அடிமை அரசு ஊழியர்களும் மக்களும் இருக்கிறார்கள். இஷ்டம் போல கரன்ட் வயரைப் பிடுங்கலாம்.

கவனத்தை திசை திருப்பி ஏமாற்ற புல்வாமா போன்ற தாக்குதலோ, தப்லீகி ஜமாத் போன்ற கூட்டமோ நடக்காமலா இருக்கப் போகிறது. ஜெய் ஹிந்த்.

 

ஆதாரம்:

 

https://www.india.com/news/india/might-take-a-week-to-restore-power-maharashtra-urges-people-to-observe-blackout-without-switching-off-lights-3989979/amp/

https://www.india.com/news/india/pm-modis-appeal-rattles-power-sector-officials-think-9-minute-blackout-can-cause-grid-collapse-3989615/

https://indianexpress.com/article/india/india-news-india/pib-removes-pm-modis-chennai-photo-from-website-after-proven-fake/

https://www.factchecker.in/pm-twice-wrong-clouds-do-not-hinder-radar-may-hinder-weapons/

https://www.indiatoday.in/india/story/balakot-strike-clouds-radars-detecting-indian-air-force-marshal-raghunath-nambiar-1535669-2019-05-27

https://economictimes.indiatimes.com/industry/energy/power/only-lights-to-go-off-not-all-other-appliances-power-ministry-on-pms-9-minutes-call/articleshow/74982023.cms?from=mdr

https://www.livemint.com/news/india/modi-s-sunday-9pm-9-minuted-blackout-india-s-power-sector-gears-up-11585986898936.html

https://www.business-standard.com/article/current-affairs/modi-s-9-min-blackout-call-power-sector-on-alert-to-ensure-grid-stability-120040301902_1.html