செயலாகும் சொற்கள்

அன்று திங்கள் காலை. ஜானகியின் அழுகையும் கண்ணீரும் அலுவலக அறையை சோகம் ததும்பியதாக மாற்றி என்னையும் கவ்வ ஆரம்பித்தது. அவரை தேற்றுவதற்கான வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தேன் .  .” மேடம் உங்க கணவர் ராகவன் இந்த ஜானகிக்கு தான் . பேரே இவ்வளவு பொருத்தமா இருக்கு . பயப்படாதீங்க.. தாம்பத்யம் என்பது வைரம் போல கடவுள் அப்பப்போ பட்டை தீட்டி அதை ஜொலிக்க வைப்பார். பட்டை தீட்டும் போது வைரத்துக்கு சேதாரமும் வலியும் வரத்தான் செய்யும் . பட்டை தீட்டுறது என்பது  நமக்கு வர்ற சோதனை தான். எதுவும் ஆகிடாது ரிலாக்ஸ்…எதுவாக இருந்தாலும் சரிப் பண்ணிடலாம் மேடம் நான் இருக்கேன் விடுங்க”  …என்று ஆறுதலாக சொன்னதும் அவர் தேம்பல் கொஞ்சம் நின்றது . என் கைகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டார் பற்று இன்றி காற்றில் ஆடும் கொடிஒரு கொம்பு கிடைத்தால் எப்படி சற்றென கவ்விக்கொள்ளுமோ அப்படி ஒரு இறுக்கம் தெரிந்தது ஜானகியின் பிடியில்..

ஜானகியும் நல்ல வசதியான குடும்பம் . படித்தவர். புருஷன் கைவிட்டாலும் தனியா ராணி மாதிரி வாழலாம். ஆனாலும் இப்போது ஜானகியின் மகிழ்ச்சி பெருமை எல்லாம் கணவனால் கைநழுவிப் போவது போல் அவரை அச்சமூட்டுகிறது.

அவரின் கணவர் ராகவன் போக்கு இப்போ மாறி விட்டதாம். ஆபிஸில் வேலை பார்க்கும் ஸ்டெல்லாவிடம் கதியேன்னு இருக்காராம். பூனைக்குட்டி மாதிரி ஜானு ஜானுன்னு சுத்திக்கிட்டே வந்தவர் இப்போ எங்க இருக்கே என்ன சாப்பிட்டேன்னு எந்தப் பேச்சும் இல்லையாம். எதோ மிஷின் போல் வந்து போகிறாராம். கலகலப்பு குறைந்து போயிற்றாம். ஆபிஸ் ஆட்கள் சொல்லும் தகவல்கள் வயிற்றில் புளியை கரைக்கிறதாம். எல்லாவற்றுக்கும் ஸ்டெல்லா தானாம். கட்டிலில் கூட முதுகை காட்டி யாரோ போல் திரும்பி கொண்டு தூங்குராம். கதை கதையாக சொல்ல ஆரம்பித்தார் ஜானகி. எந்த பொண்ணுக்கு தான் அழுகை பொத்துக்கொண்டு வராது? எனக்கு பாவமாக இருந்தது..ஆனாலும் இப்படி பாவம் ,பரிதாபம் பார்ப்பது என்பது வழக்கை தவறாக ஒருதலைபட்சமாக திசை திருப்பி விட்டுவிடும். உண்மையின் ரகசிய பாதை காட்டாது நம்மை அலைக்கழித்து விடும் என்பதால் நான் என் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருந்தேன்.

”யாஸ்மின் நீங்க என்னை விட சின்னவங்க தான்.ஆனா நீங்களும் கல்யாணம் குடும்பம்னு இருக்கிறவங்க. ஒரு பொண்ணோட கஷ்டத்தை புரிஞ்சிக்க முடியும் தானே? அவரை எப்படி அவடமிருந்து மீட்பது? எனக்கு இந்த செய்வினை மந்திரத்தில்லெல்லாம் நம்பிக்கை இல்லை. அவளை கையும் களவுமாக மாட்டவெச்சி ஆபிஸை விட்டு வெளியே அனுப்புவது எப்படி ?என்னவெணாலும் பண்ணுங்க. செலவு பத்தி கவலை இல்ல. எனக்கு என் புருஷன் வேணும் அவ்வளவு தான் “ என்றார் ஜானகி..எதோ டிவி சீரியல் வில்லிக்கிட்ட நான் உட்கார்ந்து இருப்பது போலவும் நான் என்னவோ அடியாள் போலவும் இருந்தது ஜானகியின் பேச்சு.

முதலில் ராகவன் பற்றியும் ஸ்டெல்லா பற்றியும் முழு தகவல் திரட்டணும். ஜானகி சொல்வது எத்தனை சதவிகிதம் உண்மைன்னு பாக்கணும். இயல்பாக பெண்ணுக்கு வரும் மெனோபாஸ் காலத்து எரிச்சல் சந்தேகம் தன் மீதான கழிவிரக்கம் காரணமாக அதிகபட்சமாக கற்பனை பண்ணி இருக்காரா? ராகவன் எதாவது தப்பு பண்ணி அவள் கிட்ட கையும் களவுமா மாட்டிக்கிட்டு இருக்காரா? அவள் எதாவது இவரை மிரட்டுகிறாளா? செக்ஸ் வரை அவர்கள் உறவு போயிருக்கா? இல்லை வெறும் காதல் மோகம் தானா என்பதையெல்லாம் ஆராயமல் ஜானகியை உசுப்பேத்தக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். ஜானகிக்கு தைரியம் கொடுத்து வழக்கை எடுப்பதாக உறுதி கொடுத்து அனுப்பினேன்.

முதல் கட்ட நடவடிக்கையாய் அவரின் அலுவலகத்துக்கு பாதுக்காப்பு கொடுக்கும் செக்யூரிட்டி கம்பெனி யார் எனப் பார்த்தேன். இரும்பு பட்டாம்பூச்சி என்ற பெயர் கொண்ட நிறுவனம். அட நமக்கு தெரிந்த ஒரு ஆபிஸர் மூலம் அவரை அணுகி..ராகவன் ஆபிஸ் வாசலில் நிற்கும் செக்யூரிட்டியை எனக்கு சாதகமான ஆளாக நியமிக்க வைத்தேன். அதேபோல் ஆபிஸில்  எடுபிடி வேலைக்கு ஒரு ஆளையும் நாசூக்காக உள் நுழைத்தோம்…

விசாரணையை தொடங்கினாலும் ஏன் நாற்பது வயதில் இந்த ஆண்கள் இப்படி தடுமாறுகிறார்கள்.ஃபாட்டி பிளஸ் ஆண்களின் மேல் ஏன் கொஞ்ச வயசு பெண்களுக்கு ஈர்ப்பு வருகிறது என்பதை பற்றியே ஒரு ஆய்வு பண்ணலாம் போல் இருந்தது.

 

ராகவனை பாலோ பண்ண ஆரம்பித்தோம்.அவரின் போன் நெம்பர் தொடர்புகளை ஆராய்ந்தோம்..கம்பெனியில் இருக்கும் எங்க ஆள் மற்றும் நாங்க ஏற்பாடு செய்த செக்யூரிட்டி மூலம் சில தகவல் கிடைத்தது.ஸ்டெல்லா வையும் கண்காணித்தோம்…ராகவன் சில வாரங்களாக ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டரை சந்தித்து வருவதாக அறிந்தோம்.  ஸ்டெல்லாவுக்கு கொஞ்சம் ஒரு லட்சம் பணம் கொடுத்து இருப்பதும் தெரிந்தது. அந்த டாக்டரையும் அங்கு வேலை செய்யும் ஒரு நர்ஸ் மூலம் ராகவன் பற்றி விசாரித்தோம. பிறகு ஜானகியை வரவழைத்து அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் கடைசியாக நடந்த அவர்களின் உறவு பற்றியும் வெளிப்படையாக கொஞ்சம் துருவி துருவி விசாரித்து தெரிந்துக்கொண்டோம். பிறகு ஜானகியிடம் சொல்வதற்கான ,வழக்கின் முடிவை அறிவிக்க அறிக்கை தயார் செய்து  ஜானகியை அழைத்தோம்.

முடிவை தெரிந்துக்கொள்ள  ஜானகி ஆவலோடும் எந்த நேரத்திலும் அழுதுவிடும்படி கண்கள் நீர் கோர்த்து இருந்தது. நெற்றியில் இருந்த திருநீறும் குங்குமமும் அவள் சாமியிடம் நிறைய பிரார்தனையோடு கோவிலுக்கு போய் வந்து இருப்பார் போல் தெரிந்தது.

’’மேடம்..நாங்க வழக்கு எடுத்தால் அதன் முடிவு நேர்மையானதாக உண்மையானதாகவே இருக்கும்.இதை நீங்க நம்பணும்.முதலில் பெண்களுக்கு இந்த மெனோபாஸ் எல்லாம் ஒரு பிரட்சனையே இல்ல. அந்த நேரத்தில் ஹார்மோன் கோளாறு அல்லது  சமன்நிலை மாறும். தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறைவது எப்போதும் எரிச்சல் உடல் மந்தநிலை தான் இனி கணவருக்கு பிடிக்காமல் போயிடுவேனோன்னு நினைப்பது, இளமை குறைய தொடங்குவதாக நம்புவது இதெல்லாம் இந்த நேரத்தில் வந்து போவது சகஜம்.நாம் அதிலிருந்து மீளணும்.இப்போ எல்லாத்துக்கும் ட்ரீட்மெண்ட் இருக்கு மேடம்..

இதே போல் ஆணுக்கும் நிகழும் தானே..அவன் என்ன இயந்திரமா உடல் ஒரு எந்திரம் என்றால் தேய்மானம் உண்டுதானே..ஆனா என்னவொன்னு இந்த கட்டுமஸ்தான எந்திரம் மனசு பாதித்தாலும் இயங்காது..ராகவன் ஸாருக்கு கம்பெனியில் வேலை பளு கூடுட்டிச்சு..கூடவே டென்ஷன்.வேறு.

.என்னதெரியுமா..கம்பெனியின் எல்லா ரகசியமும் தெரிந்த ஸ்டெல்லாவுக்கு கடன் தொல்லை..அவளின் வீட்டுக்காரர்க்கு வேலை போனதால் சிக்கல்..அவளோடு புருஷன் அதிக சம்பளம் தரும் இன்னொரு கம்பெனிக்கு போக சொல்லி கட்டாயம்..ஆக எப்பவேணாலும் ஸ்டெல்லா வேலையை விடலாம்..நம்பிக்கையான எல்லாவேலையும் எடுத்து பாக்கும் ஒரு ஊழியரை அவ்வளவு சீக்கிரம் அனுப்ப முடியாது. திடுதிப்புன்னு ஒரு ஆளை எடுத்து பொறுப்பை ஒப்படைக்க முடியாது..ஆகவே ராகவன் ஸ்டெல்லாவுக்கு பணம் கடனா கொடுத்து இருக்கார்..அவளை தக்க வெச்சிக்க கொஞ்சம் அன்பா பேசி சம்பளம் ஏத்திக்கொடுத்து இருக்கார். தனியார் கம்பெனியில் பாரபட்சமான ஊதிய உயர்வு உண்டு தானே . சில பழிவாங்கல் சில பாராட்டு எல்லாம் இதன் மூலம் நடப்புது உண்டு தானே . இது கம்பெனியில் மத்தவங்களுக்கு பொறாமையை எரிச்சலை ஏற்படுத்தி இருக்கு. ஸ்டெல்லாவுக்கு ராகவனுக்கு தொடர்புன்னு கதை கட்டி வெச்சிட்டாங்க..

ராகவனுக்கும் ட்ரஸ் அதிகமாகி தூக்கமில்லா போயிருக்கு. கூடவே சுகரும் தாறுமாறா எகிறுச்சி. உடம்பிலே இனிப்பின் அளவு அதிகமானா அது நரம்பை தானே பாதிக்கும். நரம்பை பாதிச்சா தாம்பத்யம் கெட்டு போகும். அதாவது இரத்தத்தின் இனிப்பு வாழ்வின் இனிப்பை கொறைச்சிடும்..தானே..அதனால் இயல்பாவே ராகவனுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் கொறைஞ்சி இருக்கு

அந்தச் சூழலில் அவருக்கும் உங்களுக்குமான ஒரு உறவில் முழுமை இல்லாததால் அவரும் உங்களை போலவே தனக்கு குறையோன்னு குழம்பி இருப்பார். இங்க தான் தப்பு பண்ணுவான். பயந்து விலகி போயிடுவான் அதை சரிசெய்வதற்கு பதில் அதை கைவிட்டுட்டுவான். மீண்டும் உங்க கிட்ட இருந்து தப்பிக்க அல்லது அந்த தோல்வியை தவிர்க்க தற்காலிகமா அவர் குடியை தேர்வு செய்து இருந்தார்.அப்புறம் தன்னோட நண்பர் மூலம் ராகவன் அந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் இப்போ சமீப காலமா சிகிச்சைக்கு போராரு. ஆக நீங்க சொன்னதெல்லாம் முழுக்க  சரிதான் .ஆனா காரணம் தான் முற்றிலும் வேற..

ரெண்டு பேருமே ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பா இருக்கீங்க..ஆனா..மனம் விட்டு வெளிப்படையா பேசி இருந்தா இந்த பிரச்சனையே வந்து இருக்காது அதை விட உங்க ரெண்டு பேரோட உடல் தளர்வும் மன குழப்பமும்  முக்கிய காரணம்…எனவே …ராகவன் ஜானகிக்கு நடுவில் ஸ்டெல்லா வரல..எப்பவும் ராகவன் ஜானகிக்கு தான் மேடம்…” என்றேன்..

இப்போதும் ஜானகி என் கையை இறுக்கி விரல்களை அழுத்தி பிடித்து கண்கலங்கினார்.. ”சின்ன விஷத்தை ஊதி சந்தேகப்பட்டு பெருசாக்கி குடும்பம் சிதையாம காப்பத்திட்டீங்க யாஸ்மின்..இனி நான் பாத்துப்பேன்..அவரை பத்திரமா.அவரை சரி பண்ணுவேன் .என்று எழுந்தார்  காலேஜ் கேர்ள் போல் புது குதூகலத்தோடு ஜானகி கிளம்பினார்.

ராகவனையும் ராகவன் போனையும் ஆராய்ந்ததில் ஸ்டெல்லா அவர் வாழ்வில் குறுக்கீடாக வரவில்லை. என்பது உண்மை ஆனால் இன்னொரு பெண்அவருக்கு  தொல்லை கொடுத்து வருவது தெரியவந்தது. அவர் மனரீதியாக திடமாக தான் இருக்கிறார் என்பதாலும் அவரை யாரும் சலனப்படுத்தி விடமுடியாது என்பதாலும் நான் ஜானகியிடம் இதை சொல்லலை..அதை விட ஜானகி அன்பும் காதலும் ராகவனை காப்பாற்றும் என நான் முழுசா நம்பினேன்.

(தொடரும்..)

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சிக்கிய மோசடி சித்தர்- டிடெக்டிவ் யாஸ்மின்
  2. பூனை இருக்கும் இடத்தில் பில்லி சூனியம் வைக்க முடியாது-டிடெக்டிவ் யாஸ்மின்
  3. அன்னிய ஆடவர்களைக் கண்டு குரைக்காத நாய்: துப்புத் துலங்கிய தொடர்பு- டிடெக்டிவ் யாஸ்மின்
  4. திசை தேடும் திருநங்கையர்- டிடெக்டிவ் யாஸ்மின்