2. செயலாகும் சொற்கள்

1. எனக்கு ஒரு வழக்கு திருப்பூரிலிருந்து வந்தது. ஒரு பெண், தம் கணவரைப்பற்றி புகார்கொடுத்தார். அவர் நடவடிக்கையில் ஏதோ மாறுதல். திடீரென லேட்டா வர்ரார். கையில் பணமும் தங்கல. சின்ன வீடு எதாவது இருக்கா… சொத்தைகித்த எதாவது எழுதி கொடுத்திட போறார்னு பயம். மனுஷன் திடீர்னு நல்லா டிரஸ் வேற பண்ண ஆரம்பிச்சதுதான் முதல் ஐயம்.. சரி மனுஷன் எங்க போறார்னு எங்க வர்ரானு ஆள் வெச்சி பாலோ பண்ணோம். அவர் வாரத்துல ரெண்டு நாள் வேலைக்கு பர்மிஷன் போட்டு யாருக்கும் சந்தேகம் வராதபடி ஒரு வீட்டுக்குள் போறதை கண்டுபிடிச்சி சொன்னாங்க எங்க ஆளுங்க.. ஆனா அவர் போயிட்டு வர்ற வீட்டுக்கு நாம எப்படி போய் பாக்குறது… நானே ஒரு சேல்ஸ் கேர்ள்மாதிரிகூட உதவியாளரை கூப்பிட்டு போக முடிவு செய்து அந்த வீட்டு அருகே போனேன். அது சீமை ஓடுபோட்ட சின்ன வீடு தான். வீட்டை சுத்தி மலை ஓணான் செடி வேலியா இருந்தது. (மலை ஓணான் செடி பார்த்து இருப்பீங்க ஆனா பேரு தெரியாது உங்களுக்கு… இப்போ சொல்றேன் பாருங்க… எல்லா மாலையிலும் பச்சையா ஒருஇலையை வெச்சி கட்டுவாங்க இல்லை அதான் மலைஓணான் செடி. வீட்டுக்கு முன்புறம் நிறைய இடம் இருந்தது… அந்த இடத்தில் ஒரு நாய் படுத்து இருந்தது. நாம வாசலில் நின்னு குரல் கொடுத்தா அல்லது கேட் இல்லாத அந்த வேலி தாண்டி உள்ளே போனால் நாய் விரட்டலாம், குரைக்கலாம். முதலில் என்னுடைய ஆண் பணியாளை பிச்சைக்காரனாக அனுப்பினேன். என் பணியாள் வாசலில் நின்று அம்மா என்று குரல் கொடுத்தபோது அந்த நாய் தலையைத் தூக்கிப்பார்த்து சட்டை செய்யாமல் படுத்துக்கொண்டது. குரைக்கவில்லை. நான் மனதுக்குள் ஒரு முடிவெடுத்தேன். இந்த வீட்டுக்கு நிறைய பேர் வருவார்கள். குறிப்பாக ஆண்கள். பலரைப் பார்த்துப் பார்த்து பழகிப்போனதால் அந்த நாய்க்கு குரைக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் போயிருக்கலாம் என்று தோன்றியது.

பிறகு நான் அந்த பிச்சைக்காரரோடு சேர்ந்து இருவரும் வீட்டு வாசல் வரை வந்தோம். பிச்சைக்காரருக்கு அந்தப் பெண்மணி பத்து ரூபாய் கொடுத்தார். நான் மேக்கப் செட் விற்பவளாக என்னிடம் இருந்த அழகு சாதனங்களைக் காட்டினேன். பேச்சுக் கொடுத்தேன். பார்வையால் படம் பிடித்தேன். இப்போதும் அந்த நாய் என்னை சட்டை செய்யலை. எங்கோ ஒரு நாய் குலைக்கும் சப்தம் கேட்டதும் இந்த நாய் குரைத்தபடியே வெளியே ரோட்டுக்கு ஓடியது. பிறகு நான் இன்னும் சில விசாரணைகளை செய்து முடித்தேன். எனக்குக் கிடைத்த தகவல் அந்தப் பெண்ணிற்கும் எனக்கு வழக்கு தந்த பெண்ணின் கணவனுக்கும் எப்படியோ நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. அந்தப் பெண்ணிற்கு இதுபோன்ற நிறைய நட்புகள் இருப்பதும் தெரிய வந்தது. அந்தப் பெண்ணிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு விசாரணையை முடித்துக்கொண்டோம். ஆனால் என் என்கொயரிக்கு பெரிதும் ஆதாரமாக இருந்தது அந்நிய ஆடவர்களைப் பார்த்தும் குலைக்காத அந்த பெண்ணின் வீட்டு நாய்தான்.

2

கோவையில் 60 வருடங்களாக நேர்மையான தரமான, பிரபலமான, பிரமாண்டமான பாத்திரக்கடை கமலா ஸ்டோர். அதன் அதிபரின் மனைவி பிரேமா. நீண்டநாள் பழக்கம். நான் அவங்க குடும்பத்தில் மூத்த மகள்மாதிரி. என்னுடைய ஐ.எஸ்.ஒய்.வெரிபிகேஷன் சர்வீஸ், அதன் விழாக்கள், எனது யாஸ்மின் பவுண்டேஷன் என எந்தக் காரியத்தையும் அவங்கதான் குத்து விளக்கு ஏத்தி தொடங்கி வைப்பாங்க… சாதி மதத்துக்கு அப்பாற்பட்ட மானுட உறவு.

அந்த பிரேமா அம்மா வீட்டில் ஒரு உயர் ரக நாய் வளர்த்தார்கள். இயல்பிலேயே அங்க அன்பானவங்க… அந்த நாயை குழந்தையைபோல பொத்திப் பொத்தி வளர்த்தாங்க… அவங்களுக்கு ஒரே ஒரு குறை என்னேன்னா.. அந்த நாய் பெண் நாய் வளர்ந்து கம்பீரமாய் நின்றது. பார்ப்பவரை மிரட்டும் தொணி. ஆனால் குலைக்காது. யாராவது வெளி ஆட்கள் வந்தால் எழுந்து கம்பீரமாக நிற்கும். எஜமானியைப் பார்க்கும்… ஆனால் சத்தமிட்டு குலைக்காது. அதற்குக் குரல் ஊனமாகி விட்டதா? அல்லது நாயோடு பழகாததால் குலைக்க தெரியலையா? அல்லது நாய்போல் நடத்தாததால் அது மனுஷா தன்மைக்கு வந்துடுச்சா எதுவும் தெரியல. அது குரைக்க என்னென்னவோ வைத்தியம் செய்து பார்த்தார்கள். பயன் இல்லை.

அது முறையா குட்டிகள் போட்டதும், நோய் வந்து செத்து போச்சி. இப்போ புலிமாதிரி ஒரு நாய் வீட்டில் அவங்க வீட்டில் இருக்கு. அந்த பழைய நாய் போட்ட குட்டிகளில் ஒரு குட்டி எப்போதும்போல் எனக்கும் ஒரு பங்காக வந்தது. அதைக் கொண்டுவந்து நான் வளர்த்தேன். ஆனால் நான் பிரேமா அம்மாபோல் அதற்கு ரொம்ப செல்லம் கொடுக்கல. வீட்டு வரவேற்பு அறைக்குகூட வரக்கூடாது. அதுக்கு எனது அன்பிற்குரிய காப்பாளன் என்பதைப் புரியவைத்தேன். அதே நேரம் அதன் கவனிப்பில் அக்கறையில் குறைவைக்கல. அந்த நாய் மிக கம்பீரமா இருக்கும். யாரும் வீட்டு வாசலுக்குமுன்கூட நிற்க முடியாது அப்படி குறைக்கும். ஒரு சிங்கம்போல் அதன் பார்வை இருக்கும். அடிக்கடி பிரேமா அம்மா என் வீட்டுக்கு வந்ததால் நாய்க்கும் அவங்களைத் தெரியும். ஒருமுறை என் வீட்டுக்கு வந்த பிரேமா அம்மா ஹாலில் உட்கார்ந்து கொண்டு என் நாயைக் கூப்பிட்டார்கள். உள்ளே வரவே இல்லை.. ‘என்ன யாஸ்… கூப்பிட்டா வரலே’ என்றார்கள். ‘வராதும்மா. அதன் எல்லை எதுன்னு அதுக்குத் தெரியும். அதன் கடமை என்ன என்பதும் அதுக்குத் தெரியும். நமக்கும் அதுக்குமான உறவு என்ன என்பதும் தெரியும். நான் பாசம் காட்ட நாயை வளர்க்கலம்மா அதுக்கு எனக்கு மனுசங்கதான் வேணும். அது என்னைக் காப்பாத்ததான் இருக்கு இதை தெளிவா என் நாயும் நானும் புரிஞ்சிக்கிட்டு இருக்கோம்னு’ சொன்னேன்.

நாய் என்றால் குரைக்கணும். பிரதிபலிக்கும் மனிதன் என்றால் விருப்பு வெறுப்புகளை சொல்லணும். சமுகத்தின் நடைமுறையில் வரும் மாறுதல்கள் மனித தன்மைக்கு எதிராக இருந்தா குரல் கொடுக்கணும். சில சந்தேக சூழல் இருந்தா குரலால் கேள்வி கேட்கணும். சமுக நல்லிணக்கத்துக்கு கேடுவிளைவிக்கும் சில தப்பான ஆட்களைக் கண்டால் குரைத்து விரட்டி துரத்தனும். இந்த விஷயத்தில் நாயுக்கும் மனிதனுக்கும் ஒரேமாதிரி அளவுகோல்தான் என்பது என் புரிதல்.

3

சின்ன வயசிலே இருந்து நாயுடன் என் விளையாட்டு இருந்ததால் அதன் குணாதிசயங்கள் அதன் உடல்மொழி மூலம் சில விஷயங்களை தெரிஞ்சிக்க முடியும். நாய் ஒரே இடத்தில் படுக்காது . மாறி மாறி படுக்கும். படுக்கும்போது தரையில் தலைவைத்து இருக்கும். ஏன் மாறி மாறி படுக்கும்னா காற்று வரும் திசைக்கு எதிரே தன் முகத்தை வைத்துக்கொள்ளும் அப்போதுதான் காற்றின்மூலம் வந்து சேரும் வாசனை மூலம் வித்தியாசத்தை புரிந்து மோப்பம் கொள்ளும் இது இயல்புக்கு மீறி வாசனை என்று உனர்ந்தால் சட்டென எழுந்து நின்று குரைக்கும். நாம் யார்ரான்னு பார்த்தால் சம்பந்தப்பட்ட அந்நியன் அந்த தெரு முனையில் வந்துகொண்டு இருப்பான்.. வீசும் காற்றின் திசையில் தன் முகத்தை வைத்து அவன் வருவதுக்கு முன்பாகவே வாசத்தை அறிந்து எழுந்து நிற்கும். நாமும் இப்படி விழிப்புணர்வோடுதான் இருக்கணும்.

4

கோவையில் இரண்டு நாள் தானே கல்யாணத்துக்குப்போய் வந்துடலாம்னு நாயை வீட்டின் காம்பவுண்ட் சுவருக்குள் அவிழ்த்து விட்டுவிட்டு அதற்கு உணவு கொடுக்காமல் பசியில் போட்டு விட்டு இரண்டாவது நாள் மாலை வீட்டுக்கு வந்து கேட்டை திறந்தபோது பசியின் உக்கிரத்தில் ஓனர் மீதே பாய்ந்து அவரைக் கொதறிய நாயை எனக்குத் தெரியும். நாய் வளர்ப்பதன் அடிப்படை காரணம் என்ன? பாதுகாப்புக்கு / வசதிக்கு பிலிம் காட்ட… இதை விட்டுட்டு வேற காரணம் இருக்குமா? நாய் மற்றும் செல்ல பிராணிமீது பாசம் வைப்பவர்கள், வளர்ப்பவர்கள் பலர் அன்புக்கு ஏங்குபவர்கள் அல்லது தமது அன்புக்கு இந்த மனிதர்கள் தகுதி அற்றவர்கள் என்று நினைப்பவர்கள் அல்லது ஒரு பேச்சு துணைக்கு ஒரு ஜீவன் வேண்டும் என நினைப்பவர்களும் பிறரிடம் அதிகாரம் செய்ய முடியாதவர்களும்தான்.

முந்தைய தொடர்கள்:

திசை தேடும் திருநங்கையர்-  https://bit.ly/2QqyjkQ

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சிக்கிய மோசடி சித்தர்- டிடெக்டிவ் யாஸ்மின்
  2. சந்தேகக் கோடு- டிடெக்டிவ்  யாஸ்மின்
  3. பூனை இருக்கும் இடத்தில் பில்லி சூனியம் வைக்க முடியாது-டிடெக்டிவ் யாஸ்மின்
  4. திசை தேடும் திருநங்கையர்- டிடெக்டிவ் யாஸ்மின்