கொரோனா வைரஸ்  மரணம் குறித்தபாரம்பரியமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறைகளுக்கு நம்மைத் திருப்புமா,   – அல்லது ஆயுளை நீட்டிப்பதற்கான நமது முயற்சிகளை வலுப்படுத்துமா?

மனிதர்களால் மரணத்தை முறியடிக்கவும் தோற்கடிக்கவும் முடியும் என்ற நவீன கால நம்பிக்கைகளால் இந்த உலகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான அணுகுமுறை. நீண்டகால வரலாற்றின் பெரும்பகுதிவரை, மனிதர்கள் மரணத்திற்கு அமைதியாக அடிபணிந்தனர் அல்லது ஏற்றுக்கொண்டனர். பெரும்பாலான மதங்களும் சித்தாந்தங்களும்  நவீன யுகத்தின் பிற்பகுதி வரை, மரணத்தை தவிர்க்க முடியாத விதியாக மட்டுமன்றி, வாழ்க்கையின்  முக்கிய அர்த்தமாகவும் ஆதாரமாகவும் கொண்டிருந்தன.  மனிதனுடைய இருத்தலில் மிக முக்கியமான நிகழ்வுகள் மனிதர்களுடைய கடைசி மூச்சை வெளியேறிய பிறகுதான் நிகழ்ந்தன. அப்போதுதான் மனிதர்கள் வாழ்க்கையின் உண்மையான ரகசியங்களை அறிந்தார்கள். அப்போதுதான் மனிதர்கள் நித்திய இரட்சிப்பைப் பெற்றார்கள், அல்லது நித்திய தண்டனையை அனுபவித்தார்கள்.

மரணம் இல்லாத உலகில்சொர்க்கம், நரகம் அல்லது மறுபிறவி இல்லாமல்கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும் இந்து போன்ற எந்த மதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை.

வரலாற்றின் பெரும்பகுதியில் சிறந்த அறிஞர்களும் ஞானிகளும்  மரணத்திற்கு அர்த்தம் கொடுப்பதில் மும்முரமாகவே இருந்தனர், அதைத் தோற்கடிக்க முயற்சிக்கவில்லை.

கில்கேமேஷின் காவியம், ஆர்ஃபியஸ் மற்றும் யூரிடிஸின் கதை, பைபிள், குர்ஆன், உள்ளிட்ட வேதங்கள், எண்ணற்ற  புனித நூல்களும்  கதைகளும் துன்பகரமான மனிதர்களுக்கு மரணம் கடவுளின் கட்டளை அல்லது இயற்கை விதி என்று அறிவுறுத்துவதால்அதனை ஏற்றுக்கொண்டு தாழ்வுணர்ச்சியுடனும் சுயபச்சாதாபத்துடனும்   இறந்துவிடுகிறார்கள். கிறிஸ்துவின் மறுவருகை போன்ற மாறாநிலைவாத கொள்கைகளால்  ஒருவேளை கடவுள் மரணத்தை அழிக்கக்கூடும். ஆனால் அதுபோன்ற பெரும் மாற்றங்களை அரங்கேற்றுவது மனிதர்களின்  ஊதியத்தை உயர்த்துவதைவிட மேலானதாகவே இருந்தது.

அதன் பிறகு அறிவியல் புரட்சி வந்தது. விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, மரணம் ஒரு தெய்வீக ஆணை அல்லது கட்டளை அல்ல – இது ஒரு தொழில்நுட்ப பிரச்சினை மட்டுமே. மனிதர்கள் இறப்பது கடவுளின் கட்டளையால் அல்ல, ஆனால் மனித உடலில் ஏற்படும் சில தொழில்நுட்ப குறைபாடுகளால் மனிதர்களுடைய இதயம் இரத்தம் செலுத்துவதை நிறுத்திவிடுகிறது. புற்றுநோய் கல்லீரலை அழித்துவிடுகிறது. வைரஸ்கள் நுரையீரலில் பெருகிவிடுகிறது. இந்த தொழில்நுட்ப சிக்கல்களுக்கெல்லாம் என்ன காரணம்? பிற தொழில்நுட்ப சிக்கல்கள் தான் காரணம். அதாவது போதுமான ஆக்ஸிஜன் இதய தசைகளை எட்டாததால் இதயம் இரத்தம் செலுத்துவதை நிறுத்திவிடுகிறது. சில மரபணு மாற்றங்கள் காரணமாக கல்லீரலில் புற்றுநோய் செல்கள் பரவி விடுகின்றது. பஸ்ஸில் யாரோ தும்மியதால் வைரஸ்கள்  நுரையீரலில் குடியேறி விடுகின்றது. அதைப் பற்றி மாறாநிலைவாதம் எதுவும் இல்லை.

ஒவ்வொரு தொழில்நுட்ப சிக்கலுக்கும் ஒரு தொழில்நுட்ப தீர்வு இருப்பதாக அறிவியல் நம்புகிறது.

மரணத்தை வெல்ல கிறிஸ்துவின் வருகைக்காக நாம் காத்திருக்க தேவையில்லை.  ஆய்வகங்களில் பணிபுரியும் இரண்டு விஞ்ஞானிகள் மரணத்தை வெல்வதற்கு போதும். ஒரு காலத்தில் மரணத்தை வெல்வதற்கு  சிறப்புமிகு சாமியார்கள் மற்றும் கறுப்பு அங்கி இறையியலாளர்களிடம் செல்வோம், இப்போது மரணத்தை வெல்வதற்கு  வெள்ளை அங்கி ஆய்வக  மருத்துவர்களிடம் செல்கிறோம். இதயம் படபடக்கிறது என்றால், நாம் அதை இதயமுடுக்கியின்  மூலம் தூண்டலாம் அல்லது புதிய இதயத்தை பொறுத்தலாம். புற்றுநோய் பரவினால், நாம் அதனை  கதிர்வீச்சால் கொன்றுவிடலாம். வைரஸ்கள் நுரையீரலில் பெருகினால், அவற்றை நாம்  புதிய மருந்துகள் முலம் அழிக்கலாம்.

தற்போது நம்மால் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்க முடியாது என்பது உண்மை தான். ஆனால் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களையும் தீர்க்க தீவிரமாக செயல்படுகிறோம். விஞ்ஞானிகளும் அறிஞர்களும் தங்கள் நேரத்தைப் பயன்படுத்தி மரணத்திற்கு அர்த்தம் கொடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக, அவர்கள் மனித உயிர்களின் ஆயுளை நீட்டிப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். நோய் மற்றும் முதுமைக்கு காரணமான நுண்ணுயிரியல், உடலியல் மற்றும் மரபணு அமைப்புகளை அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர், மேலும் புதிய மருந்துகள் மற்றும் புரட்சிகரமான சிகிச்சை முறைகளை உருவாக்குகிறார்கள்.

ஆயுளை நீட்டிப்பதற்கான  போராட்டத்தில், மனிதர்கள் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில், சராசரி ஆயுட்காலம் 40 வயதிலிருந்து இருந்து பல நாடுகளில் 72 வயதாகவும், சில வளர்ந்த நாடுகளில் 80 வயதுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டு வரை, குறைந்தது மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் கூட வளரிளம்பருவ வயது எட்டவில்லை. இளைஞர்கள் வழக்கமாக குழந்தை பருவ நோய்களான வயிற்றுப்போக்கு, அம்மை மற்றும் பெரியம்மை நோய்களுக்கு ஆளாகியிருந்தனர்.  இங்கிலாந்து நாட்டில், 17 ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பிறந்த ஒவ்வொரு 1,000 குழந்தைகளில் 150 குழந்தைகள் முதல் ஆண்டில் இறந்தனர், சுமார் 700 குழந்தைகள் மட்டுமே 15 வயதை எட்டினர். இன்று, 1,000  குழந்தைகளில் ஐந்து குழந்தைகள் மட்டுமே முதல் ஆண்டில் இறக்கின்றனர், மேலும் 993 குழந்தைகள்  15 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்கள். ஒட்டுமொத்த உலகில், குழந்தைகள் இறப்பு வீதம் 5% க்கும் குறைவாக உள்ளது.

வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் நீட்டிப்பதற்கும் மனிதர்கள் மேற்கொண்ட முயற்சியில்  மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள் . மரணம் குறித்த நமது உலகளாவிய கண்ணோட்டம் மிகவும் ஆழமாக மாறியிருக்கிறது. நீண்ட காலமாக பாரம்பரிய மதங்கள்  மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையின் அர்த்தத்தை முக்கியமாகக் கருதினாலும், 18 ஆம் நூற்றாண்டின் தாராளமயம், சோசலிசம் மற்றும் பெண்ணியம் போன்ற சித்தாந்தங்கள் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் உள்ள அனைத்து ஆர்வத்தையும் இழந்துவிட்டது .

ஒரு கம்யூனிஸ்டுக்கு அவன் அல்லது அவள் இறந்த பிறகு என்ன நடக்கும்? ஒரு முதலாளிக்கு இறந்த பிறகு என்ன நடக்கும்? ஒரு பெண்ணியவாதிக்கு  இறந்த பிறகு  என்ன நடக்கும்?

இதற்கு கார்ல் மார்க்ஸ், ஆடம் ஸ்மித் அல்லது சிமோன் டி பியூவோயர் ஆகியோரின் எழுத்துக்களில் மரணத்திற்கு பிறகான வாழ்க்கையின் பதிலைத் தேடுவது அர்த்தமற்றது.

இன்றைய சூழலில் மரணத்திற்கு ஒரு முக்கியத்துவத்தை வழங்கும் ஒரே நவீன சித்தாந்தம் தேசியவாதம் மட்டும் தான்.

மிகவும் முக்கியமான  தருணங்களில், இக்கட்டான காலங்களில் தேசத்திற்காக யார் இறந்தாலும் அவர்கள்  அந்த தேசத்து மக்களின் நினைவுகளில் என்றென்றும் வாழ்வார்கள் என்று தேசியவாதம் உறுதியளிக்கிறது. எனினும் இந்த வாக்குறுதி மிகவும் தெளிவற்றது தான். பெரும்பாலான தேசியவாதிகளுக்கு மக்களின் நினைவுகளில் வாழ்வதற்கு  என்ன செய்வது என்பது  தெரியவில்லை.

மக்களின் நினைவுகளில்  உண்மையில்வாழ்வதுஎப்படி? நாம் இறந்துவிட்டால், மக்கள் நம்மை நினைவில் வைத்திருக்கிறார்களா இல்லையா என்பது நமக்கு எப்படித் தெரியும்?

வூடி ஆலன் ஒரு முறை சினிமா ரசிகர்களின் நினைவில் என்றென்றும் வாழ விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு,  சினிமா இரசிகர்களின் நினைவில் வசிப்பதை விட நான் என் குடியிருப்பிலேயே வசிக்க விரும்புகிறேன் என்று பதிலளித்தார். பாரம்பரிய மிக்க பல மதங்கள்   மரணம் பற்றிய தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன. அதாவது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் மனிதர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வழிகாட்டுவதைவிட   உயிரோடு பூமியிலிருக்கும் போதே அவர்களுக்கு என்ன செய்யலாம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய தொற்றுநோய் மரணம் குறித்த  மனிதர்களின் மனப்பான்மையை மாற்றுமா என்றால்  அநேகமாக இல்லை என்பதுதான் பதில். ஆனால் கோவிட் -19  நோயிலிருந்து மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகளை இரட்டிப்பாக்கக்கூடும். கோவிட் -19 க்கு எதிரான   நடவடிக்கைகளில் பெரும்பான்மை மக்களின் எதிர்வினை என்பது கைவிட்டுவிடுவதல்ல -சீற்றமும் நம்பிக்கையும் கலந்த  கலவையாக கோவிட்-19 உடன் போராடுவது.

நவீன காலத்திற்கு முந்தைய சமூகத்தில் மத்திய ஐரோப்பாவில் ஒரு தொற்றுநோய் தாக்கியபோது, ​​மக்கள்   உயிருக்கு அஞ்சினார்கள் மற்றும் உறவினர்களின் மரணத்தால் பேரழிவிற்கு ஆளானார்கள், ஆனால்  பெரும்பான்மை மக்கள் நோய்க்கு எதிரான தங்கள் எதிர்வினையை    கைவிட்டுவிட்டனர். உளவியலாளர்கள் இதைகற்றறிந்த உதவியற்ற தன்மைஎன்று அழைக்கிறார்கள். இந்த தொற்றுநோய் கடவுளின் விருப்பம் –  மனிதகுலத்தின் பாவங்களுக்கு தெய்வீக பழிவாங்கல் என்று மக்கள் தங்களுக்குள் கூறிக்கொண்டனர். சிலர், “கடவுளுக்கு நன்கு தெரியும், பொல்லாத மனிதர்கள்  தொற்றுநோய் தண்டனைக்கு தகுதியானவர்கள் தானென்று. இது முடிவில் சிறந்ததாக மாறும், நாம் காண்போம். கவலைப்பட வேண்டாம், நல்ல மனிதர்கள் பரலோகத்தில் தங்கள் வெகுமதியைப் பெறுவார்கள். மருந்து தேடும் நேரத்தை வீணாக்காதீர்கள். இந்த நோய் நம்மைத் தண்டிக்க கடவுளால் அனுப்பப்பட்டது. இந்த தொற்றுநோயை  தங்கள் கல்வியறிவால்  சமாளிக்க முடியும் என்று நினைப்பவர்கள்  தங்களுடைய குற்றங்களுக்கு  பாவத்தை சேர்க்கிறார்கள். கடவுளின் திட்டங்களைத் தடுக்க நாம் யார்என்றனர்.”

இன்றைய நமது அணுகுமுறைகள் யாவும் முந்தய அணுகுமுறைகளிடமிருந்து பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கின்றன.  ஏதேனும் ஒரு பேரழிவு பலரைக் கொல்லும் போதெல்லாம் – அது ஒரு ரயில்விபத்தாக இருக்கலாம் , உயர்ந்த கட்டிடத்தின் தீ விபத்தாக இருக்கலாம், புயல் காற்றாகக் கூட இருக்கலாம் – இதை நாம் தெய்வீக தண்டனை அல்லது தவிர்க்க முடியாத இயற்கை பேரழிவு என்று பார்க்காமல் தடுக்கக்கூடிய மனித தோல்வி என்று தான் கருதுகிறோம். ரயில் நிறுவனம் அதன் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சரியாக ஈடுபடவில்லை என்றும், நகராட்சி சிறந்த தீ தடுப்பு விதிமுறைகளை வகுத்திருக்கலாம் என்றும் அரசாங்கம் விரைவாக உதவியை அனுப்பியிருக்கலாம் என்றும் – இந்த மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகிறோம். ஏனெனில் 21 ஆம் நூற்றாண்டில், பொதுமக்கள் மரணம் என்பது வழக்கு மற்றும் விசாரணைகளுக்கு ஒரு முக்கிய காரணியாக இருக்கின்றது.

கொள்ளை நோய்கள்  பற்றியும் நமது அணுகுமுறை இப்படித்தான் இருக்கிறது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு கடவுளின் தண்டனை தான் எய்ட்ஸ் என்று சில மத போதகர்கள் கூறினாலும் நவீன சமூகம்  அத்தகைய கருத்துக்களை புறக்கணித்துவிட்டது. இந்த நாட்களில் எய்ட்ஸ், எபோலா மற்றும் பிற சமீபத்திய தொற்றுநோய்கள் பரவுவதை நிறுவனங்களின், அரசின் தோல்விகள் என்றுதான் பொதுவாக கருதுகிறோம். இதுபோன்ற தொல்லைகளைத் தடுப்பதற்குத் தேவையான அறிவும் கருவிகளும் மனிதகுலத்திடம் உள்ளன என்று நாம் நம்புகிறோம். ஒரு தொற்று நோயினை கட்டுப்படுத்த முடியாவிட்டால், அதற்கு  தெய்வீக கோபத்தை விட மனித இயலாமை தான் மிக முக்கிய காரணம். கோவிட் -19ம் இதற்கு விதிவிலக்கல்ல. நோய் தொற்று ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை, எனினும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டனர்.

அரசியல்வாதிகள்  பொறுப்பை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கையெறி குண்டினை வீசுவது போல மாற்றி மாற்றி வீசிக்கொள்கிறார்கள்.

தொற்றுநோய் குறித்து சீற்றத்துடன், மிகப்பெரிய அளவிலான நம்பிக்கையும் நம்முடன் உள்ளது. நமது ஹீரோக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்துவிட்டு மரணத்தை கடவுளின் தண்டனையென அப்படியே ஏற்கும் சாமியார்கள் அல்ல – நம் ஹீரோக்கள் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்கள். நமது சூப்பர் ஹீரோக்கள் ஆய்வகங்களில் உள்ள விஞ்ஞானிகள். ஸ்பைடர்மேன் மற்றும் வொண்டர் வுமன் திரைப்படங்களில் கதாநாயகர்கள் கெட்டவர்களை தோற்கடித்து இறுதியில் உலகைக் காப்பாற்றுவார்கள் என்று சினிமா ரசிகர்களுக்கு தெரியும்,, அதுபோல  சில மாதங்களுக்குள், ஒருவேளை ஒரு வருடத்திற்குள், ஆய்வகங்களில் உள்ளவர்கள் கோவிட் -19 க்கு பயனுள்ள சிகிச்சைகள்  மற்றும் தடுப்பூசிகள் கூட கொண்டு வருவார்கள் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். இந்த கிரகத்தில் மோசமான உயிரினமான கொரோனா வைரஸுக்கு தக்க பதிலடி கொடுப்போம் ! வெள்ளை மாளிகையிலிருந்து, வால்ஸ்ட்ரீட்டிலிருந்து இத்தாலியின் பால்கனியில் உள்ளவர் உட்பட அனைவரது உதடுகளிலும் உள்ள கேள்வி: “தடுப்பூசி எப்போது தயாராக இருக்கும்?” ஒருவேளை இல்லை என்றால் என்ன செய்வது?.

தடுப்பூசி உண்மையில் தயாராகி, தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், மனிதகுலத்தின் முக்கிய நடவடிக்கை என்னவாக இருக்கும்?

எல்லா விதங்களிலும், மனித உயிர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் நாம் இன்னும் அதிக  முதலீடுகளை  செய்ய வேண்டும். மக்களுக்கு  அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனைகள், அதிகமான எண்ணிக்கையில் மருத்துவர்கள், அதிக செவிலியர்கள்  எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதிகமாக சுவாச இயந்திரங்கள், அதிகமாக பாதுகாப்பு உபகரணங்கள், அதிகமாக சோதனைக் கருவிகளை சேமித்து வைக்க வேண்டும். அறியப்படாத நோய்க்கிருமிகளை ஆராய்ச்சி செய்வதிலும், நவீன சிகிச்சை முறைகளை உருவாக்குவதிலும் அதிகமாக முதலீடுகளை செய்ய வேண்டும். நம்மை மறுபடியும்  வீடுகளில்  எந்த நோயும் பிடித்து வைக்கக்கூடாது.

இது தவறான பாடம் என்றும், தொற்றுநோய் நெருக்கடி காலங்கள் நமக்கு மனத்தாழ்மையைக் கற்பிக்க வேண்டும் என்றும் வாதம் செய்கிறார்கள். இயற்கையின் சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கு  மக்களுக்கு திறன் இல்லையென்று  மனத்தாழ்மையைப் போதிக்கிறவர்களுக்கு,  திறன் இருப்பது குறித்து 100% சரியான  பதில் தெரியும்.  மாற்றுக் கருத்தாளர்கள் சிலர் பிறரை உதவிக்கு அழைத்துக் கொள்வார்கள்  – டொனால்ட் டிரம்பின் அமைச்சரவைக்கு வாராந்திர பைபிள் படிப்பை வழிநடத்தும் ஒரு போதகர், ஓரினச்சேர்க்கைக்கு  இந்த தொற்றுநோய் தெய்வீக தண்டனை என்று வாதிட்டார். ஆனால் இப்போதெல்லாம் பாரம்பரியத்தை கடைப்பிடிக்கும் அறிஞர்கள் பலர் வேதங்களை விட அறிவியலில் தான்  நம்பிக்கை வைக்கின்றனர்.

கத்தோலிக்க திருச்சபை விசுவாசிகளை தேவாலயங்களிலிருந்து விலகி இருக்க அறிவுறுத்துகிறது. இஸ்ரேல் அதன் ஜெப ஆலயங்களை மூடிவிட்டது. ஈரான் இஸ்லாமிய குடியரசு மசூதிகளுக்கு மக்கள் வருவதை ஊக்கப்படுத்தவில்லை. அனைத்து வகையான கோயில்களும் பிரிவுகளும்  விஞ்ஞானிகளின்  பரிந்துரைகளின் பேரில் பொது விழாக்களை நிறுத்தி வைத்துள்ளன.

நிச்சயமாக, மனிதர்களின் பெருமை, தன்னம்பிக்கை பற்றி எச்சரிக்கும் எல்லோரும் கடந்தகாலத்துக்கு போக வேண்டும் என்று கனவு காணவில்லை. நமது விஞ்ஞானிகள் கூட எதிர்பார்ப்புகளில் நாம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதையும், வாழ்க்கையின் எல்லா பேரழிவுகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற மருத்துவர்களின் சக்தியில்,  குருட்டு நம்பிக்கை வைக்கக்கூடாது என்பதை ஒப்புக்கொள்வார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனிதநேயமும்  சக்திவாய்ந்ததாக மாறினாலும், தனிப்பட்ட மக்கள் இன்னும் தங்கள் பலவீனத்தை எதிர்கொள்ளத் தான் வேண்டும். ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு  நூற்றாண்டுகளில் விஞ்ஞானங்கள் மனித வாழ்க்கையை காலவரையின்றி நீட்டிக்கலாம், ஆனால் இதுவரையிலும் இல்லை. ஒரு சில பில்லியனர் குழந்தைகளைத் தவிர்த்து,  நாம் அனைவரும் ஒரு நாள் இறக்கப் போகிறோம், நாம் அனைவருமே நமது அன்புக்குரியவர்களை இழப்போம். நமது மாற்றத்திற்கு நாம் காரணமாக இருக்க வேண்டும்.

பல நூற்றாண்டுகளாக, மக்கள் மரணத்திற்குப்  பிறகும் நிலைத்திருக்க மதத்தை ஒரு பாதுகாப்பு கவசமாக கருதினார்கள்.இப்போது மக்கள் சில தருணங்களில் விஞ்ஞானத்தை ஒரு மாற்று பாதுகாப்பு கவசமாக கருதுகிறார்கள். மருத்துவர்கள் எப்போதும் அவர்களைக் காப்பாற்றுவார்கள் என்றும் அவர்கள் குடியிருப்பில் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் நம்புகிறார்கள். நமக்கு இங்கே ஒரு சீரான நடுநிலையான அணுகுமுறை தேவை. தொற்றுநோய்களைக் கையாள்வதற்கு நாம் அறிவியலை  நம்ப வேண்டும், எனினும் நம்முடைய தனிப்பட்ட இறப்பு மற்றும் மாற்றத்தைக் கையாளும் சுமையை நாம் தான்  சுமக்க வேண்டும்.

தற்போதைய நெருக்கடி நிலை உண்மையில் பல நபர்களுக்கு மனித வாழ்க்கை மற்றும் மனித சாதனைகளின் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், பெரும்பாலும்  நமது  மக்கள் அதன் எதிர் திசையில் தான் ஒட்டுமொத்தமாக  செல்வார்கள். அதன் பலவீனங்களை நினைவிலிறுத்தி அதற்கெதிராக வலுவான பாதுகாப்புகளை உருவாக்குவார்கள். தற்போதைய தொற்றுநோய் நெருக்கடிகள் முடிந்ததும், தத்துவ துறைகளைவிட மருத்துவ துறைகளில்  கணிசமான நிதி அதிகரிப்பு  எதிர்பார்க்கலாம்.  மருத்துவப் பள்ளிகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் நிதி திட்டங்களில் பெரிய வளர்ச்சியை காணலாம் என நினைக்கிறேன்.

ஒருவேளை அதுவே மனிதனாக நாம் எதிர்பார்க்கக்கூடிய மிகச்சிறந்ததாக இருக்கலாம். அரசாங்கங்கள் எப்படியிருந்தாலும் தத்துவங்களில் மிகச் சிறந்தவை அல்ல. அது அவர்களின் களமும் அல்ல. சிறந்த சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் அரசாங்கங்கள் தான் உண்மையில் கவனம் செலுத்த வேண்டும். சிறந்த தத்துவங்களை  தனிநபர்கள் தான் உருவாக்கமுடியும். நம்முடைய இருத்தலெனும் புதிருக்கு மருத்துவர்களால் தீர்வுகளைக் கண்டறிய முடியாதுநம்முடைய புதிருக்கான தீர்வுகளைக் கண்டறிய மருத்துவர்கள் இன்னும் சிறிது காலத்தை  நமக்கு நீட்டித்து  தரலாம். அவ்வாறு நீட்டிக்கப்படும் காலத்தில் என்ன செய்கிறோம் என்பது முழுவதுமாக நம்மைப் பொருத்தது.

 

தமிழில்: கோகுல கிருஷ்ணன் கந்தசாமி

Yuval Noah Harari: ‘Will coronavirus change our attitudes to death? Quite the opposite’

https://www.theguardian.com/books/2020/apr/20/yuval-noah-harari-will-coronavirus-change-our-attitudes-to-death-quite-the-opposite