திரையும் கதையும்-2

ஒரு வரியில் கதையை சுவாரசியமாக சொல்வதன் அவசியத்தைப் பார்க்கிறோம். ஒரு முழு நீளப் படத்துக்கான கதையை ஒரு வரியில் சுவாரசியமாக ஏன் சொல்ல வேண்டும்? கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்க போகும் தயாரிப்பாளருக்கு கதையை முழுதாக கேட்க கூட நேரம் இருக்காதா? என்ற கேள்விகள் எழலாம்.

சினிமா என்பது ஒரே ஒருவரின் முயற்சி, திறமை, வேலையால் உருவாவது அல்ல. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். 24 துறைகளின் ஒருங்கிணைப்பே ஒரு சினிமா. இயக்குனர் என்பவர் இந்த துறைகளை சரியாக ஒருங்கிணைத்து அவர்களிடம் இருந்து அவர்களின் சிறந்ததை வாங்குபவர். நீங்கள் 100 சதவீதம் சுவாரசியமாக யோசித்த கதை படமாக வெளியேவரும்போது நீங்கள் மனதில் வைத்திருந்ததில் 20 சதவீதம் தான் கிடைத்து இருக்கும். நினைத்ததை கொண்டு வர முடியவில்லை என்ற ஆதங்கம் தோற்றுப்போன ஒவ்வொரு இ யக்குனரிடமும் இருக்கும். அவர் இந்த 24 துறைகளில் ஏதாவது ஒன்றிலாவது காம்ப்ரமைஸ் ஆகி இருப்பார். அதுவே அவரது தோல்விக்கான காரணமாக இருக்கும்.

சினிமாவும் அரசியலும் ஒன்று என்று சொன்னேன் அல்லவா? இரண்டுமே கிட்டத்தட்ட போர் தான். போரில் கருணை பார்க்க கூடாது. நீங்கள் எத்தனை சிரமங்கள் வேண்டுமானாலும் பட்டிருக்கலாம். ஆனால் படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இங்கு கருணை அடிப்படையில் எந்த படத்தையும் ஓடவைக்க முடியாது. உயிரையே கொடுத்து படத்தை எடுத்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்காவிட்டால் அவ்வளவுதான்.

சினிமாவில் எண்ணம் எழுத்தாக மாறுவதில் தொடங்கி நடிப்பு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அடுத்த அடுத்த கட்டங்களில் நாம் நினைத்தது சிதையவே வாய்ப்புகள் அதிகம். அப்படி சிதைய விடாமல் எல்லா குதிரைகளையும் இழுத்துவந்து நாம் நினைத்த கதையை நினைத்தபடி சுவாரசியமாக கொண்டு வருவதில் தான் வெற்றியின் ரகசியம் அடங்கி இருக்கிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக ஒரு திரைப்படத்தின் ஆதிபுள்ளியான ஒருவரிகதையில் இருந்தே நமது கடின உழைப்பை தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல படத்தை கொண்டு வருவது சாத்தியம். அதாவது எல்லா துறைகளிலுமே 500 சதவீதம் வாங்கினால் தான் நாம் நினைத்ததுக்கு நெருக்கமான படத்தைக்கொண்டு வர முடியும்.

மிக பெரிய வெற்றிப் படங்கள் பெரும்பாலும் ஒரு வரியில் கதை சொல்லி அசத்திய படங்களாக தான் இருக்கும். ஒரு முன்னணி நடிகர் இருக்கிறார். அவரிடம் கதை சொல்லப் போன உதவி இயக்குனர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவம் இது. அவர் மிக வேகமாக வளர்ந்து முன்னணிக்கு வந்தாலும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துதான் சினிமாவில் வெற்றி பெற்றார். கூட்டத்தில் ஒருவனாக நின்று சின்ன சின்ன வேடங்களில் நடித்து இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது கூட கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் ஒரு கதாபாத்திரம் பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடிக்கிறார். நட்பு, மனிதாபிமானம், வெளிப்படையாக பேசுதென்று அந்த நடிகருக்கு ரசிகர்கள் ஏராளம்.

அவரிடம் ஒரு உதவி இயக்குனர் கதை சொல்லப்போனார். கதை சொல்லப்போன உதவி இயக்குனர் எடுத்த எடுப்பிலேயே கதையை சொல்லாமல் தன்னுடைய பணி அனுபவங்களை அடுக்கி இருக்கிறார். சரியாக 10 வது நிமிடம் வரை கதாநாயகன் பொறுத்து பார்த்தார். பேசிக்கொண்டு இருந்த உதவி இயக்குனரை நிறுத்த சொல்லி கிளம்பலாம் என்று சொல்லிவிட்டார். இங்கு அந்த கதாநாயகன் செய்ததில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அந்த கதாநாயகனுக்கு அவரது நேரம் முக்கியம். அதை அந்த உதவி இயக்குனர் உணர்ந்திருக்க வேண்டும்.  சினிமாவில் நமது கதையை சொல்லி திருப்திப்படுத்துவதில் தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது. அப்படி கதை சொல்ல நமக்கு கிடைக்கும் நேரத்தில் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது தான்.

புது இயக்குனர், மீடியம் பட்ஜெட், குடும்ப பாங்கான கதை என வெற்றி படங்களை வரிசையாக கொடுத்த தயாரிப்பாளர் அவர். அவரிடம் கதை சொல்லி கவர்ந்துவிட்டாலே தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றது போலத்தான். அந்த அளவுக்கு கதை கேட்கும்போதே அந்த கதை வெற்றி  பெறுமா? இல்லையா? என்பதை துல்லியமாக கணிப்பவர். அவரிடம் ஒரு புது இயக்குனர் கதை சொல்லப்போகிறார். அந்த இயக்குனர் தனது ஒட்டுமொத்த கதையையும் இரண்டே வரிகளில் சொல்கிறார். நகரத்தின் முக்கிய பகுதிகளில் வைக்கப்படும் பெரிய விளம்பர போர்டுகளுக்கு பெய்ண்ட் அடிக்கும் பணி செய்கிறான் ஹீரோ. அப்படி ஒரு முறை அவன் பணிபுரியும்போது வானில் ஒரு விமானம் பறக்கிறது. அந்த விமானத்தில் வந்து இறங்குபவர் தான் ஹீரோயின். அந்த ஹீரோயினை ஹீரோ எப்படி காதலித்து கைபிடித்தான் என்பதே கதை.

இந்த ஒரு வரி கதையே தயாரிப்பாளருக்கு பிடித்துவிட்டது. கதை படமாக வெளியாகி மிகபெரிய வெற்றி பெற்றது. அந்த இயக்குனர்  இன்னமும் வெற்றி கரமான இயக்குனராக வலம் வருகிறார். படத்தின் பெயர் சொல்லாமலே. இயக்குனர் சசி. தயாரிப்பாளர் சூப்பர் குட் ஆர்பி.சவுத்ரி. அந்த படத்தின் கதையை நினைத்து பாருங்கள். நமக்கு தோன்றும் ஒருவரி என்னவாக இருக்கும்? ஒருவன் ஊமை என்று பொய் சொல்லி காதலிக்க வைக்கிறான். அந்த பொய்யை உண்மையாக்க தன் நாக்கையே அறுத்துக்கொள்கிறான். இதுதானே ஒருவரியில் அந்த  படத்தின் கதை.

இயக்குனர் சொன்ன ஒரு வரிக்கும் நாம் நினைக்கும் ஒரு வரிக்கும் என்ன வித்தியாசம்? இயக்குனர் சொன்ன ஒரு வரி என்பது கதையை தொடங்குகிறது. நாம் நினைத்த ஒரு வரி  என்பது கதையை முடித்தே வைக்கிறது. இயக்குனர் சொன்ன ஒரு வரி அந்த கதை எப்படி செல்லும்? என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. நாம் நினைத்த ஒரு வரி கதை அவ்வளவுதானா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

இயக்குனர் சொன்ன ஒரு வரியில் சுவாரசியமான கதைக்கான முரண்பாடு இருக்கிறது. அந்த முரண்பாடு கதாநாயகனுக்கும் கதாநாயகிக்குமான ஏற்றத்தாழ்வு பிரச்சினை. ஒட்டுமொத்த படத்தையுமே எடுத்துக்கொண்டால் அதுதானே கதையின் மையப்பிரச்சினை? கதாநாயகனின் தாழ்வு மனப்பான்மை தான் படத்தின் கரு. காதல், தியாகம் எல்லாமே அடுத்தது தான். அந்த தாழ்வு மனப்பான்மையால் தான் நடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறான். அவன் செய்யும் தியாகம் கதையை முடிக்கிறது. ஆனால் அவனது தாழ்வு மனப்பான்மை கதையை நகர்த்துகிறது.

தனி ஒருவன் படத்தின் கதையை எடுத்துக்கொள்ளுங்கள்… உலகத்தையே ஆட்டி படைக்கும் ஒரு சூப்பர் பவர் வில்லனை தனி ஒருவனாக கதாநாயகன் எதிர்க்கிறான். இந்த கதை பழைய கதையாக தெரியும். அதே கதையை இப்படி சொல்லி பாருங்கள்… செய்தித்தாளில் இருக்கும் ஒரு கிரைம் செய்தி. அதில் குற்றங்களை தேடிப்போய் செய்யும் வில்லன், அதே குற்றங்களின் ஆணிவேரை தேடி கண்டுபிடித்து பிடுங்க நினைக்கும் ஹீரோ… இந்த கதை சுவாரசியமாக தெரியும்.

உங்களிடம் இருக்கும் கதையை இதேபோல் ஒருவரியாக்கி சொல்லி பாருங்கள். அது சுவாரசியமாக இருக்கிறதா? என்று… சுவாரசியமாக உங்களுக்கு தோன்றினால் போதும்.

(உரையாடுவோம்)