மதராஸ் – மண்ணும் , கதைகளும் -15 

1914-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இருபத்திரெண்டாம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஒன்பதரை மணி. இப்போதுள்ள  சென்னைமாநகர மக்கள்போல அன்றைய மக்கள் இரவு ஒன்பதுமணிக்கெல்லாம் விழித்துக்கொண்டிருக்காத காலம். மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது ஒரு  நீர்மூழ்கிக்கப்பல் வங்களாவிரிகுடா கடலின் நீர்மட்டத்துக்கு மேலெழும்பி சத்தமில்லாமல் நிற்கிறது. கப்பலில் இருபதுக்கும் மேற்பட்ட பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. எந்த முன்னறிவிப்புமின்றி  ஒரு நிமிட அவகாசத்துக்கும் குறைவான நேரத்தில்  நூற்றுக்கும் மேற்பட்ட பீரங்கிக்குண்டுகள் கடலில் நின்றுக்கொண்டிருந்த கப்பலிலிருந்து நகர கட்டிடங்கள் மேலே பறந்துச்சென்று விழுந்தன. சென்னைத் துறைமுகத்தின்  வெளியே நின்றிருந்த பிரிட்டிஷ் கப்பல்கள், ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மா ஷெல் ஆயில் டாங்குகள், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம் மேல் பீரங்கிக்குண்டுகள்  விழுந்து வெடிக்கின்றன.  கட்டிடங்களின் பெரும்கற்கள் பலத்த ஓசையுடன் சிதறுகின்றன.    ஆங்கிலேயருக்குச் சொந்தமான பர்மியக் கம்பெனி எண்ணெய்க் கப்பல்கள் மேல் குண்டுகள் சிதறிவிழ கப்பல்கள் கொழுந்துவிட்டு எரிகின்றன. பிரிட்டிஷ் காவலர்கள் பதறியடித்து வந்துப்பார்க்கும்போது சில நொடிகளில் எல்லாமே முடிந்திருந்தன. குண்டுவீசிவிட்டுப்போன கப்பல் வந்தசுவடே தெரியாமல் மறைந்திருந்தது. யார் குண்டுவீசினார்கள். எப்படி இந்த பேரழிவை செய்தார்கள் என்று ஆங்கிலேயர்கள் தலையை பிய்த்துக்கொண்டார்கள். அந்தக்கப்பலை பற்றி விசாரிக்கும்போதுதான்  அதன் பெயர் எஸ்.எம்.எஸ் எம்டன் என்பதும்  அது ஒரு ஜெர்மனியக்கப்பல். போலந்து நாட்டின் “டான்ஜிக்” கப்பல் கட்டும் துறையில் கட்டப்பட்ட போர்க்கப்பல் என்பதும் தெரியவந்தது.  வெள்ளைக்காரனுக்கே ஒருத்தன் தண்ணி காட்டிட்டு போயிருக்கான் பாருய்யா. சரியான எமகாதகன். எம்டன்தான் என்று உள்ளூர் மக்கள் சொன்னார்கள். அன்றிலிருந்துதான் சத்தமில்லாமல் பெரிய பெரிய கில்லாடி வேலைகளை செய்துவிட்டு போவர்களை சரியான எம்டன் என்று அழைக்கும் வழக்கம் வந்தது.

    எம்டன் கப்பல் மெட்ராசுக்கு வருவதற்குமுன்பே வழியெங்கும் பலநாடுகளின்  துறைமுகங்களில் நின்றிருந்த இருபதுக்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் போர்க்கப்பல்களை குண்டுவீசி அழித்துவிட்டுத்தான் வந்தது  என்ற தகவலையும் கேட்டு பிரிட்டிஷார் ஆடிப்போனார்கள். ஆனால் அதைவிட அவர்களை பெரும் அதிர்ச்சியூட்டிய விஷயம். அந்த குண்டுவீச்சு திட்டத்தின் மூளையாக இருந்தவர் ஜெர்மானிய இராணுவத்தில் பயிற்சிபெற்றவர். இந்தியாவிலிருந்து சென்றவர். அதுவும் ஒரு தமிழர் என்பதை கேள்விப்பட்டு இன்னும் ஆடிப்போனார்கள்.  சூரியன் மறையாத நாடு என்று பெருமையில் இருந்தவர்களது முகத்தில் ஒருவர் பல்லாயிரம் மைல்கள் கடல் தாண்டி வந்து அவர் பிறந்த சொந்தநாட்டிலேயே கரியைp பூசிச்சென்றது பிரிட்டிஷ் அரசுக்கு எவ்வளவு பெரிய அவமானத்தையும், வேதனையையும்  தந்திருக்கவேண்டும்? அவரது  தலையைக்கொண்டு வருபவர்களுக்கு ஒரு இலட்சம் பவுண்டுகள் பரிசளிக்கப்படும் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. எம்டன் கப்பலில் வந்து குண்டுவீசிச்சென்றவரின் பெயர் செண்பகராமன் பிள்ளை. நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் அவருக்கு செம்பக்  என்ற இன்னொருப்பெயரும் உண்டு.

செண்பகராமன் 1891 வருடம்  திருவனந்தபுரத்தின் புத்தன் சந்தை  ஊரில் பிறந்தார். அவரது தந்தை சின்னசாமிப்பிள்ளை திருவாங்கூர் சுதேச அரசாங்க சேவையில் தலைமை கான்ஸ்டபிளாக இருந்தார். அதனால்  செண்பகராமனுக்கு இயல்பாகவே விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, களரி போன்ற வீரக்கலைகளிலும் ஆர்வம் இருந்தது. அவற்றை முறையாக கற்றுக்கொண்டவர் பிறகு  திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.  அப்போது ஜெர்மனிக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் பக்க இருந்தது. ஜெர்மனிய உளவாளிகள் பலர் பிரிட்டிஷ் ஆட்சிசெலுத்தும் நாடுகளில் ஏதாவது வேலைப்பார்த்துக்கொண்டு தங்கள் நாட்டுக்கு உளவுச்செய்தி அனுப்பியபடி இருந்தார்கள். அப்படியான ஒரு ஜெர்மானிய உளவாளி சர் வால்டர் வில்லியம்  என்ற கால்நடை மருத்துவரை ராமன் சந்திக்கிறார். செண்பகராமனுக்கு பிரிட்டிஷ்அரசு   மீதிருந்த வெறுப்பு  வால்டர் வில்லியமுக்கு பிடித்துப்போக இருவருக்கும் நெருங்கிய நட்பு ஏற்படுகிறது.  செண்பகராமன் பெற்றோர் அனுமதியோடு பிரிட்டிஷ் அரசுக்கு தெரியாமல் சர் வால்டர் வில்லியம்ஸின் உதவியுடன் ஐரோப்பா செல்கிறார். அங்குள்ள, பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கிறார். தமிழ், மலையாளம் , ஹிந்தி , ஆங்கிலம் தவிர  ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகள் கற்றுக்கொண்டார்.  பெர்லின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றார்.

சுவிட்சர்லாந்தில் மாணவராக இருந்தகாலத்தில் அரசியல் பிரவேசம் நடக்கிறது.  இந்தியாவில்  ஆங்கிலேயர் அடக்குமுறைகள் பற்றி பல கூட்டங்களில் கலந்துக்கொண்டு பேசுகிறார். பெர்லினில் இந்திய சர்வதேசக் குழுவை நிறுவி இந்தியர்களை ஒருங்கிணைக்கிறார்.  பொதுவாக ஐரோப்பியர்களுக்கு இந்தியர்கள் என்றாலே படிக்காதவர்கள். சுத்தம் இல்லாதவர்கள். காட்டுமிராண்டிகள் என்று இருந்த பொதுபிம்பத்தை உடைக்க தொடர்ந்து பல முயற்சிகள் எடுக்கிறார்.       ‘புரோ இந்தியா’ என்ற பத்திரிக்கையைத் தொடங்கி இந்தியர்களை பற்றிய உண்மைகளையும், அவர்களது வரலாற்றையும், விடுதலை வேட்கையையும் தொடர்ந்து பதிவு செய்கிறார்.

முதல்உலகப்போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜெர்மனிய கப்பல்படையில் சேர்கிறார். எம்டன் கப்பலில் உதவிப்பொறியாளராக பணிக்கு சேர்ந்து பல வெற்றிகளை பெற்றுத்தருகிறார்.

செண்பகராமன் பெர்லினில் இருந்தபோது அங்கு லட்சுமிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். லட்சுமிபாயின் பூர்வீகம் மணிப்பூர். திருமணவாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைத்திருக்கவில்லை. மணமாகி மூன்றாண்டுகள் கழித்து செண்பகராமன் மறைந்தார். இறக்கும்போது அவரது வயது நாற்பத்தி இரண்டுதான். அவரது மரணத்தைப்பற்றி இரண்டுவித கருத்துக்கள்  உண்டு. அதிகநாட்கள்நீர்மூழ்கிக் கப்பலிலேயே பயணித்து உலகெங்கும் சுற்றியதால் கப்பலின் டீசல் புகையால் நுரையீரல்தொற்று ஏற்பட்டு இறந்தார் என்றும் அவரது செல்வாக்கு பொறுக்காமல்   ஹிட்லருடன் இருந்த நாஜிக்களின் சிலர் உணவில் விஷம் வைத்து கொன்றிருப்பார்கள் என்றும் சொல்வார்கள். இதில் இரண்டாவது கூற்றில்தான் உண்மை இருக்கவேண்டும். ஏனெனில் ஜெர்மனிய மன்னர் கெய்சர் இருந்தவரை செண்பகராமனுக்கு எந்த பிரச்சினையுமில்லை. அப்போது ஹிட்லர் அதிபராகவில்லை.  செண்பகராமன்போல ஹிட்லரும் ஒரு இராணுவவீரர்தான். ஜெர்மனியில் ஏற்பட்ட உள்நாட்டு புரட்சிக்கு பிறகு மன்னராட்சி மறைந்து ஜனநாயக நாடாகி ஹிட்லர் அதிபராகிறார்.

ஒருமுறை செண்பகராமனும் , ஹிட்லரும் உரையாடும்போது  ஹிட்லர் இந்தியர்களை கிண்டலடிக்கும் தொனியில் பேசியுள்ளார். இந்தியர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு அடிமையாக இருக்கத்தான் லாயக்கு. சுதந்திரம் கிடைத்தால்கூட  நாட்டைத்திறமையாக ஆளும் தகுதி அவர்களுக்கு  இருக்கிறதா என்பது சந்தேகம்தான் என்று சொல்ல செண்பகராமன் அதை கடுமையாக மறுத்து வாதம் செய்து இறுதியில் ஹிட்லரை மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார்.  ஹிட்லர் அதிபரானதும்தான் நாஜிக்களின் தொல்லை அதிகரித்தது. அதிபரானபிறகு  ஹிட்லரின் முகம் வேறுவிதமாக வெளிப்பட தொடங்கியது. இனப்படுகொலைகள், அயல்நாட்டினர் மீதான அடக்குமுறைகள் அதிகரித்தன. என்னதான் அவரது இராணுவத்தில் இருந்தாலும் அவரும் ஒரு வெளிநாட்டினர்தானே. நாஜிக்கள் எப்போதும் அவரை கண்காணித்துக்கொண்டே இருந்தார்கள். அவருக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள்.  தனது எதிரிகள் பற்றி செண்பகராமனும் ஓரளவு ஊகித்திருக்கக்கூடும். தான் இறந்தால் தனது அஸ்தியை இந்தியாவுக்கு எடுத்துச்சென்று தனது தாயாரின் அஸ்தியை கரைத்த திருவனந்தபுர கரமனை ஆற்றில் கரைக்க வேண்டும். மீதியை  நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும் என்பது செண்பகராமனின் இறுதியாசையாக இருந்துள்ளது. அதை தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு வெளியே வாழ்ந்தாலும் செண்பகராமனின் மனமெல்லாம் இந்திய சுதந்திரப்போராட்டம் பற்றித்தான் இருந்துள்ளது.  ராமன் மேற்கொண்ட பயணங்கள் எல்லாம் பிரமிக்கவைக்கிறது. சீனா, தென் ஆப்பிரிக்கா, பர்மா போன்ற  நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள இந்தியர்களிடம் ஆதரவைத் திரட்டுகிறார். அப்போது  ஆப்கானிஸ்தானில்  பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கமொன்று நடந்தது. புரவிஷனல் கவர்ன்மென்ட் ஆப் இந்தியா என்ற பெயரில் அந்த போட்டி அரசை நடத்தினார்கள். அந்த அரசாங்கத்தின் அதிபராக  காபூலின்  ராஜா மஹேந்திர பிரதாப்பும்,   பிரதம மந்திரியாக மவுலானா பர்கத்தும் இருந்தார்கள். அந்த போட்டி அரசாங்கம் பிரிட்டிஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அந்த அரசின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக செண்பகராமன் பணியாற்றினார்.  இந்த போட்டி அரசுக்கு ஜெர்மனியும், ஜப்பானும் பலவகையில் உதவி செய்தது. ஆனால் ஒருக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசின் அழுத்தம்  தாங்கமுடியாமல் ஜப்பான் ஆதரவை விலக்கிக்கொள்ள இந்த போட்டி அரசால் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனது. செண்பகராமன் ரஷ்யாவுக்கும் சென்றுள்ளார். அங்கு லெனினை சந்தித்து உதவி இந்திய பிரிட்டிஷ் இராணுவத்துக்கு எதிராக போராட உதவிகள் கேட்டுள்ளார். தவிர செண்பகராமன் ஆரம்பித்த இயக்கம்தான் ஐரோப்பாவில், அமெரிக்காவில் எல்லாம் தொடங்கப்பட்ட இந்திய சர்வதேச சுதந்திரப்போராட்ட குழுவுக்கு முன்னோடியாக இருந்தது. அந்த அமைப்புகளில் இருந்த பலர் பின்னாளில் காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கும்போதும், நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஐ ஆர்மியிலும் இணைந்தார்கள்.

 செண்பகராமன் உடலை ஜெர்மனியில் தகனம் செய்ததும்  அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி செய்கிறார் லட்சுமிபாய். ஆனால் அது அவ்வளவு எளிதானதொன்றாக இல்லை. நாஜிக்கள் லட்சுமிபாயை கைதுசெய்து மனநலக்காப்பத்தில் அடைத்து பலவகையில் சித்ரவதைகள் செய்கிறார்கள். ஒருவழியாக  நெருங்கிய நண்பர்களின் உதவியால் லட்சுமிபாய் நாஜிக்களிடமிருந்து தப்பித்து வருகிறார். தனது கணவரின் அஸ்தியை எடுத்துக்கொண்டு  இத்தாலிக்கு சென்றவர் அங்கிருந்து கப்பலேறி ஸ்பெயின் வழியாக 1936-ம் வருடம் பம்பாய் வந்திறங்கினார். ஒரு மாவீரரின் அஸ்தியை யாருக்கும் தெரியாமல் ஆற்றில் கரைக்க அவருக்கு விருப்பமில்லை. இராணுவ மரியாதையோடு கரைக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறார். அன்றைய காங்கிரஸ் அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். அதிகாரிகளை சந்திக்கிறார். அரசியல் பிரமுகர்களை சந்தித்து  பேசுகிறார். யாரும் கண்டுக்கொள்ளவில்லை. பிரதமர் இந்திராகாந்திக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறார். ஒருக்கட்டத்தில் உருக்கமான கடிதமொன்றை இந்திராகாந்திக்கு எழுதி அந்தக்கடிதத்தில் இந்திரா சிறுமியாக இருந்தபோது தனது வீட்டுக்கு வந்துபோன நிகழ்வை நினைவுகூர்ந்து நாட்டுக்காக போராடிய  தனது கணவரின் எளிய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கிறார். அந்த உருக்கமான வேண்டுகோளை பார்த்து இந்திராகாந்தி  அனுமதி தருகிறார். இந்தியாவின் முதல் யுத்தக்கப்பலான ‘ஐ.என்.எஸ் டெல்லி’ கப்பலில் லட்சுமிபாய் தனது கணவரின் அஸ்திக்கலயத்தோடு பம்பாயிலிருந்து எர்ணாகுளம் பயணிக்கிறார். 1966 செப்டம்பர் 19-ம் தேதியன்று இராணுவவீரர்களின் ‘வந்தே மாதரம்’  இசை முழக்கத்தோடு ஆற்றில் கரைக்கப்பட்டது. ஒருவர் மறைந்து முப்பத்திநான்கு ஆண்டுகளுக்குப்பிறகு அவரது அஸ்தி ஆற்றில் கரைக்கப்படுவதென்பது எவ்வளவு கொடுமையான விஷயம்? ஆனாலும் உறுதியாக நின்று போராடி வென்றார். அத்தனை வருடங்களில் தனது கணவரின் அஸ்தியை வைத்துக்கொண்டு எவ்வளவு இன்னல்களை லட்சுமிபாய் அடைந்திருப்பார். தனது கணவருக்கான அரச மரியாதையை பெற்றுத்தர அவர் எத்தனை போராட்டங்களை நடத்தியிருப்பார். எம்டன் கப்பலில் வந்து குண்டுவீசிச்சென்ற செண்பகராமனின் கதைக்கு எந்தளவிலும் குறைந்ததில்லை அவரது மனைவியின்  மகத்தான தியாகம் நிறைந்த போராட்ட கதை. 1972-ம் வருடம் லட்சுமி பாய் மும்பையில் மறைந்தார்.

வரலாற்றில் சரியாக பதிவு செய்யமுடியாமல் போன எத்தனையோ வீரர்களில் கதைகளில் ஒன்றுதான்  செண்பகராமனின் கதையும். இன்று சாவர்க்கரை உயர்த்தி ஜெய்ஹிந்த் என்று உச்சரிக்கும்  இந்துத்துவவாதிகள் எத்தனைப்பேருக்கு செண்பகராமனின் தியாகமும், ரத்தம் தோய்ந்த கதையும் தெரியும்?  ஜெய்ஹிந்த் என்ற சொல்லை முதல்முதலில் உச்சரித்ததும் இவரே. 1933 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் செண்பகராமன் நேதாஜியை சந்தித்து இந்திய சுதந்திரப்போருக்கான திட்டங்களை பற்றி அவரிடம் சொல்கிறார். அப்போதுதான் முதன்முதலில் ஜெய்ஹிந்த் என்ற சொல்லை செண்பகராமன் உச்சரிக்கிறார். அதைக்கேட்ட நேதாஜி இதென்ன புதிதான வார்த்தையாக இருக்கிறதென்று ராமனை பாராட்டியுள்ளார். பிறகு  ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெய்ஹிந்த் உச்சரிக்க அது பிரபலமானது.

பின்னாட்களில் காங்கிரஸ் போராட்டத்தையும் காந்தியின் வரலாற்றையும்  முன்னிலைப்படுத்தி உயர்த்திப்பிடிக்க நினைத்த சிலர் நேதாஜி, செண்பகராமன் போன்றோரின் வீரவரலாற்றை மறைக்க பார்த்தார்கள். அதனால்தான் அவரது மனைவியும்  கணவரின் அஸ்தியை வைத்துக்கொண்டு அவ்வளவுகாலம் போராட வேண்டியிருந்தது. தவிர செண்பகராமனை சாதாரண மனிதராக மாற்ற வரலாற்றை திரிக்க ஆரம்பித்தார்கள். எம்டன் கப்பல் மெட்ராஸ் மீது நடத்திய குண்டுவீச்சு ஒரு தோல்வி முயற்சியென்றும் குண்டுகள் தவறுதலாக உயர்நீதிமன்ற கட்டடத்தில் விழுந்ததாகவும் கதைகளை பரப்பினார்கள்.  எம்டன் கப்பலில் வந்த செண்பகராமன் நினைத்திருந்தால் அன்று மெட்ராஸ் மாநகரின் மீது மிகப்பயங்கரமான பேரழிவை நடத்தியிருக்கலாம். ஆனால் அது தனது  சொந்தமக்கள்மீதே  தாக்குதல் நடத்தியதுபோல முடிந்திருக்கும். அவரது நோக்கம் பிரிட்டிஷ் அரசை அச்சுறுத்துவது தவிர  ஆங்கிலேயரின் எண்ணெய்க் கப்பல்களை மட்டும் குறிபார்த்து தாக்குவது மட்டுமே. அதனால்தான் எல்லாரும் உறங்கும் நேரத்தில் சரியான பிரிட்டிஷ் இலக்குகளை மட்டும் குறிவைத்து தாக்கிச்சென்றார்கள். பொதுமக்கள் காப்பாற்றப்பட்டார்கள். இதை வைத்தே அவரது தியாகத்தையும், இந்த மண்ணின் மனிதர்கள் மீதான நேசிப்பையும் தெரிந்துக்கொள்ளலாம்.  இந்த மெட்ராஸ் என்ற ஊர்தான் எத்தனை பேரை  நேசிக்கவைத்துள்ளது? எம்டன் கப்பலிலிருந்து சென்னையை நோக்கி வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள் சில இன்றும் அருங்காட்சியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.