நரேந்திர தாமோதர்தாஸ் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு முடி(த்)ந்துவிட்ட நிலையில், இந்த ஓராண்டுக் காலத்தையும் சேர்த்து 2014 முதல் 2020 வரையிலான 6 ஆண்டுக் காலத்தில் தங்களின் அரசு சாத்தித்தது என்னவென்று விளக்கி உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு கட்டுரையாக அனுப்பி அது பல நாளேடுகளில் வெளியாகியுள்ளது.
அமித் ஷாவின் கட்டுரையுடம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடித்தத்தின் விவரங்களையும் சேர்த்தே நாம் அனுகினால் அது ‘பயன்’ அளிப்பதாக இருக்கும்.
‘நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நாமே முடிவு செய்வோம்’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி தங்களது ஆட்சியின் முதல் ஆண்டு நிறைவைப் போற்றி எழுதியுள்ள கடித்ததில், “இந்நாட்டின் 130 கோடி மக்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தற்போது நிலவி வரும் எதிர்ச்சூழல் நிர்ணயித்துவிட முடியாது” என்று கூறியுள்ளார். இது மிகவும் ஆழ்ந்து சென்று அர்த்தம் தேடும் வார்த்தைகாளகும்.
“நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நாமே முடிவு செய்வோம்” என்றால் இந்த உலகத்தின் போக்கில் இருந்து தன்னைத் தனித்து வழி நடத்திக்கொண்டு இந்நாடு அதை சாதிக்கப்போகிறது என்று பொருள் கொள்ளலாமா? அப்படியாயின் இதுவரை மோடி அரசு கடைபிடித்து வந்த அந்நிய நேரடி முதலீடுகளுக்கு இதற்கு மேல் இந்தியாவில் இடமில்லை என்று அர்த்தமா? என்கிற கேள்வி எழுகிறதல்லவா?
அப்படியேதுமில்லை! இன்று காலை ஆங்கில நாளிதழ் ஒன்றில் வந்துள்ள தலைப்புச் செய்தி கூறுகிறது, உலக அளவில் இயங்கும் ஐந்து மின்னணுப் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதே எண்ணிக்கையிலான ஐந்து இந்திய நிறுவனங்களுக்கும் ரூ.50,000 கோடி மின்னணு ஊக்கத் தொகைத் திட்டத்தை இந்திய ஒன்றிய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவித்துள்ளார்!
ஒரு 10 நாட்களுக்கு முன்னர்தானே தற்சார்பு இந்தியா – அதாவது ஆத்மாநிர்பார் பாரத் – என்கிற திட்டத்தை அறிவித்தாரே பிரதமர் மோடி, பிறகு இப்போது எதற்கு 5 அந்நிய நிறுவனங்களுக்கு அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்யும் செல்ஃபோன்கள் மதிப்பில் 4 – 6% ஊக்கத் தொகை தருவோம் என்று அறிவிக்கிறார்? இது அவசியமா?
இப்போது இந்தியாவில் இயங்கும் செல்ஃபோன்கள் உற்பத்தி நிறுவனங்கள் 2019ஆம் ஆண்டில் மட்டும் ரூ.1,70,000 கோடி மதிப்பிலான 29 கோடி செல்ஃபோன்களை உற்பத்தி செய்து விற்றுள்ளனவே? அது மட்டுமல்ல, ரூ.61,908 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளனவே? பிறகு எதற்கு ஊக்கத் தொகைத் திட்டம் அறிவிப்பு? உலகில் இரண்டாவது அதிக அளவு மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் செல்ஃபோன் பயனாளர்கள் மிக அதிகம், உலகின் எந்த நிறுவனம் இங்கு வந்து தரமான செல்ஃபோன்களை தயாரித்து விற்றாலும் வாங்குவதற்கு பெரும் சந்தை உள்ளது. அப்படியிருக்கு அழைக்காமலேயே ஓடி வந்து உற்பத்தி செய்து இலாபம் பார்க்கும் நிறுவனங்களுக்கு எதற்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டும்? கேள்வி எழுகிறதா, இல்லையா? இதில் பிரதமர் கூறிய ‘நாமே நமது நிகழ்காலத்தை எதிர்காலத்தை நிர்ணயிப்போம்’ என்பது எங்கிருக்கிறது? வெளியில் இருந்து வந்து முதலீடு செய்பவர்கள்தான் நிர்ணயிப்பார்கள் என்பதுதானே புலனாகிறது?
தற்சார்பு இந்தியா என்பதே நமது நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லப்போகிறது என்கிற பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் கூறுவது அட்சரம் பிசகா உண்மையெனில் எல்லா துறைகளிலும் தனியார் முதலீட்டிற்கு இடம் தருவோம் என்று கூறுவதும், அந்நிய நேரடி முதலீடுகளுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் திட்டங்களை அறிவிப்பதும் எங்கே பொருந்துகிறது?
கொரோனா தொற்றும் வேடிக்கைப் பார்த்த அரசுகளும்!
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை ஒற்றுமையுடனும் உறுதியுடனும் எதிர்கொண்டோம் என்பதை உலகிற்கு காட்டியுள்ளோம் என்று பிரதமர் கூறுகிறார். அடுத்த வரியில் சொல்கிறார், “நமது தொழிலாளர்களும், புலம்பெயர் தொழிலாளர்களும், குறுதொழில் செய்யும் கைவினைஞர்களும், வண்டியில் பொருள் விற்போர் உட்பட நமது சக நாட்டவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர்” என்று தனது கடித்த்தில் வருத்தத்துடன் கூறுகிறார்.
வீட்டில் இருங்கள், தனித்து இருங்கள், முகக் கவசம் அணியுங்கள், கைகளைக் கழுவுங்கள் என்றெல்லாம் அரசுகள் சொன்னதனை இந்நாட்டு மக்கள் ஒருமித்துக் கடைபிடித்தார்கள், ஆனால் அரசுகள் என்ன செய்தன? முழு அடைப்பும் ஊரடங்கும் அறிவித்தப் பின்னர்தானே சோதனைக் கருவிகளுக்கான வாங்கும் உத்தரவு ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டது? அதன் பிறகு வந்த கருவிகளும் பழுதானவை என்று அறியப்பட்டதே, அதனை திருப்பி அனுப்பிய நாளில் முதல் 21 நாட்கள் ஓடிவிட்டனவே, இதில் நீங்கள் சாதித்தது என்ன பிரதமர் அவர்களே?
21 நாட்களுக்குப் பிறகு 19 நாட்களுக்கு 2வது ஊரடங்கு, பிறகு மேலும் 14 நாட்களுக்கு 3வது ஊரடங்கு, அதன் பிறகு மேலும் இரண்டு வாரங்களுக்கு 4வது ஊரடங்கு என்று தொடர்ந்து உத்தரவிட்டீர்களே, ஆனால் கரோனா தொற்று சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே போகிறதே, இதில் இந்நாடு ஒற்றுமையாகவும் உறுதியாகவும் எதிர்கொண்டோம் என்பதை உலகிற்கு காட்டினோம் என்கிறீர்களே, என்னத்தைக் காட்டினோம்? சோதனைக் கருவி இல்லாமலேயே காலத்தை ஓட்டியதையா? அல்லது வயத்திற்கு சோறும் இன்றி வாடகை அளிக்காத காரணத்தால் இருக்குமிடத்தில் இருந்து துரத்தப்பட்டு தங்கள் ஊரை நோக்கி பல நூறு கி.மீ. தூரம் சாலையில் நடக்கத் தொடங்கினார்களே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், அவர்களின் உறுதிப்பாட்டை சொல்கிறீர்களா மோடி அவர்களே? நீங்கள் எழுதிய கடிதம் வினோதமானது என்பது கூட உங்களுக்குத் தெரியவில்லையா பிரதமரே?
உங்கள் கடிதத்தில் ஒரு உண்மையை சொல்லியுள்ளீர்கள், கொரோனா தொற்றுக்கு எதிரான நீண்ட கால போர் என்று, அதற்காக இந்நாட்டு மக்கள் உணர்ந்து பாராட்ட வேண்டும். ஏனென்றால் ஒரு குறுகிய காலத்தில் அந்த தொற்றின் அச்சுறுத்தலை முடிப்பதற்கு நாம் என்ன வியட்நாமா அல்லது தென் கொரியாவா? 130 கோடி மக்களைக் கொண்ட கிரேட் கண்ட்ரியல்லவா?
நடையாய் நடந்து தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களின் அவலங்கள் படங்களாகவும் காணொளிக் காட்சிகளாகவும் உலகெங்கிலும் பார்க்கப்பட்டது மோடி அவர்களே! ஆனால் உங்களது கட்சிக்காரர்கள் ‘கொரோனா தொற்றை வெற்றிகரமாக கையாண்டதற்காக உலகமே உங்களைப் பாராட்டுவதாக’ பரப்புரை செய்கிறார்கள், குடித்துவிட்டு மதி மயக்கமுற்று கிடப்பவனுக்குக் கூட இது நகைச்சுவையாகத் தெரியுமே?
இப்படி கால் தேய நடந்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்காக ரூ.60,000 கோடி அவர்களின் கணக்கில் செலுத்தப்பட்டதாகச் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. தங்கள் ஊரை நோக்கி நடந்துக் கொண்டிருக்கும் புலம் பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஒவ்வொருவருக்கும் எவ்வளவு செலுத்தப்பட்டது? சொல்லவில்லை அமித் ஷா. ஆனால் கொரோனா தொற்றால் செய்யப்பட்ட முழு அடைப்புச் சூழலில்தான் தற்சார்பு இந்தியா பிறந்துள்ளது என்கிறார். இதன் பொருள் என்னவென்று நீங்கள்தான் கூற வேண்டும் பிரதமர் அவர்களே.
தொழிலாளர்களின் கணக்குகளில் பணம் செலுத்தப்பட்டது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆனால் ஏன் அவர்களுக்கு நிதி உதவி செய்யக் கூடாது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கையில் பணம் கொடுப்பதை விட அவர்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே சிறந்தது என்று தான் கருதுவதாக பதிலளித்தார். இதில் எது உண்மை? பணம் கொடுத்ததா இல்லை மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்த்தா பிரதமர் அவர்களே?
இந்த முழு அடைப்பு ஊரடங்கால் தொழிலைத் தொடர முடியாமல் இந்நாட்டின் 28% குறு சிறுத் தொழில்கள் மூடப்பட்டுவிட்டன என்கிற செய்தி தெரியுமா பிரதமர் அவர்களே? உங்கள் நிதியமைச்சர் 45 இலட்சம் குறு சிறு நடுத்தரத் தொழில்களுக்குத் தேவையான உடனடிக் கடன் உதவியாக வங்கிகள் ரூபாய் மூன்று இலட்சம் அளிக்கும் என்று அறிவித்தார். இந்நாட்டில் அப்படிப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 6 கோடியே 50 இலட்சம் என்பதைக் கூட அறியாமல்!
பிரதமரின் கடிதத்திலும் சரி, அமித் ஷாவின் கட்டுரை அல்லது அறிக்கையிலும் சரி, இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் சாதித்ததாக அவர்கள் கூறுவது: காஷ்மீருக்கு அளிக்கபட்டிருந்த அரசமைப்பு ரீதியான 370 பிரிவு நீக்கமும் அதோடு நீங்கிய 35ஏ பிரிவும், முத்தலாக்கு தடைச் சட்டமும், குடியுரிமைத் திருத்தச் சட்டமும்தான் தங்கள் ஆட்சியின் போல்ட் டிசிசன்ஸ் என்று கூறி புளங்காகிதமடைகின்றனர்.
இம்மூன்று நடவடிக்கைகளைத்தான் சுட்டிக்காட்டி 60 ஆண்டுகளில் செய்யப்படாதது 6 ஆண்டுகளில் செய்யப்பட்டது என்று மார்த்தட்டிக் கொள்கிறார் அமித் ஷா. ஆனால் இவர்கள் எதனையெல்லாம் சாதனை என்று மகிழ்ந்து கூறுகிறார்களோ அவற்றால் தங்கள் உரிமைகளை இழந்த மக்களின் வேதனைகளை கிஞ்சித்தும் அறியாதவர்களாய் இருக்கிறார்கள். ஆட்சியாளர்களுக்கு சாதனை என்பது அவர்களால் பாதுகாக்கப்பட வேண்டிய மக்களுக்கு வேதனையாகும் என்றால் சாதனை என்கிற சொல்லிற்கு இவர்கள் கற்பிக்கும் பொருளும் வேதனையானதே.
இதிலும் பிரதமர் மோடி தன்னை மறைக்காமல் ஒரு விடயத்தை சொல்லியிருக்கிறார், அதுதான் கவனத்திற்கும் வியப்பிற்கும் உரியது. முதலில் ஆங்கிலத்தில் உள்ள அந்த வார்த்தைகளைப் படியுங்கள்:
The Prime Minister also took the opportunity to comment on the spirit behind many of the bold decisions that his government had taken or had to react to. “(The dilution of ) Article 370 furthered the spirit of national unity and integration. The Ram Mandir judgment, delivered unanimously by the Honourable Supreme Court of India, brought an amicable end to a debate persisting for centuries.
ராம் ஜன்ம பூமி வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு கூட இவர்கள் ஆட்சி எடுத்த போல்ட் டிசிசன்களில் ஒன்றா? அந்த ஒருமித்த தீர்ப்பை தங்கள் ஆட்சியின் துணிவான முடிவு என்று இந்நாட்டுப் பிரதமர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் என்றால்….
பிறகு ஏன் உலகத் தலைவர்கள் பாராட்ட மாட்டார்கள்? அவர்களெல்லாம் இப்படி போல்ட் டிசிசன்ஸ் எடுத்து எந்தத் தீர்ப்பை தங்கள் நாட்டு நீதிமன்றங்களில் பெற்றுள்ளார்கள்? இதையும் மறைக்காமல் சொன்னீர்களே, நன்றி மோடி அவர்களே.
அப்போதும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன் மக்களே. எருதின் புண் காக்கை அறியாது என்கிற பழமொழி நம் தாய்த் திருநாட்டில் பன்னெடுங்காலமாக மறையாமல் ஒலித்து வருகிறது. எவ்வளவு ஆழ்ந்த பொருள் கொண்ட மொழியது! உருவத்தில் எருது பெரியதே, ஆனால் தன் உடலில் ஒரு புண் ஏற்பட்டுவிட்டால், அதிலும் தனது அலகைத் திணித்து ஊணை எடுத்து உண்ண காக்கைகள் முற்படும்போதெல்லாம் அது வலியால் தவித்தாலும் கேட்பாரில்லை, பார்ப்பாரில்லை. இதுதான் இன்றைய உலகில் உழைப்பாளர்களுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையிலான ‘உறவு’ மக்களே. அதில் நீங்கள் தேர்ந்தெடுத்த (?) அரசும் பொருந்திருகிறது.
சென்னை, ஜூன் 03, 2020.