அசைவறு மதி 19

2007-2008 வாக்கில் வட இந்தியா சுற்றுலா சென்றிருந்தோம். சரியாக நினைவில் இல்லை. டெல்லியிலிருந்து பக்கத்து மாநிலத்திற்குச் சென்று திரும்பவும் வர வேண்டிய நிகழ்ச்சி நிரல். போகும்பொழுது அப்படி எதுவும் வேகமாக எங்கள் பேருந்து போனதாகத்தெரியவில்லை. வரும்பொழுது அசுரத்தனமான வேகம். எங்களுக்கு அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. இரவு உணவிற்குப் பிறகும் வண்டி போய்க்கொண்டே இருந்தது. நள்ளிரவில் ஒரு காஃபி குடித்தால் தேவலை என்று கூட எனக்குள் இருந்த டீ சர்ட் போட்ட கவிஞன் கூவிப் பார்த்தான். டிரைவர் ஓட்டும் வேகத்திற்குக் காஃபிக்கும் டீ க்கும் நிற்பதாகத் தெரியவில்லை. இரண்டு மூன்று வயதானவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க அத்துவானக் காட்டின் நடுவே ஒரு ஓட்டுக்கடை இருந்தது. வேண்டாவெறுப்பாய் நிறுத்தினார். குறிப்பிட்ட நேரத்திற்குள் டோல் கேட்டைக் கடக்காவிட்டால் அதிகப்படியானப் பணம் செலுத்தவேண்டிய நிலை அப்பொழுது டிரைவருக்கு. அதற்காகத்தான் வேகமாக ஓட்டிக்கொண்டிருந்தாராம். வேகத்திற்குப் பின்பான ஒரு காரணம், நேரம். அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் டோல்கேட் தாண்டாவிட்டால் பணம் கூடும். முதலாளி கோபிப்பார். அது தலையைச்சுற்றி சுற்றுலா பயணிகளின் தலையில் விழும் . அது வேறு கதை. எல்லாவற்றிற்கும் அடிப்படையாய் அவர் அந்த நேரத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். நேரத்தை நாம்  பார்த்து பார்த்து வேலை செய்து பழகியிருக்கிறோமா என்ன? முதலில் நேரத்தை எப்படி பார்ப்பது. கடிகாரத்தைப் பார்ப்பதா? அப்படியானாலும் வெறுமனே கடிகாரத்தை மட்டுமே பார்ப்பது அல்ல.

நாங்கள் எல்லாம் மருந்துவிற்பனை பிரதிநிதிகள். வேலை நிமித்தமாக வெளியூருக்குச் செல்வோம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு நேரம் இருக்கும். அப்பொழுதுதான் பிரதிநிதிகளைப் பார்ப்பார்கள். அந்த நேரத்தைத் தவறவிட்டால், அந்த வாடிக்கையாளரைப் பார்க்கமுடியாது. சில மருத்துவர்களுக்கு நேரம் சொல்லமுடியாது. அவர்களுக்காகக் காத்திருக்கும் நோயாளிகளைப் பார்த்துமுடித்தப்பின்னாடி தான் பிரதிநிதிகளைப் பார்ப்பார்கள். சில ஊர்களில் காலையிலிருந்து மதியம் ஒரு மணி வரை அதிகமான வேலை இருக்காது. ஒரு மணி க்குப் பிறகு மூன்று மணிக்குள் குறைந்தது நான்கு அல்லது ஐந்து முக்கியமான வாடிக்கையாளர்கள் பார்க்கவேண்டியதாகி இருக்கும்.இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டே இருப்போம்.  ஒரு மருத்துவருக்குக் காத்திருந்துகொண்டே அடுத்த மருத்துவரைப் பார்க்க  மணியைப் பார்த்துக்கொண்டிருப்போம். உதாரணத்திற்கு ஒரு மருத்துவர் இரண்டு மணிக்கெல்லாம் பிரதிநிதிகளைப் பார்த்துவிடுவார் என்று இருந்தால், ஒன்றரை மணிக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு மருத்துவரிடம் காத்துக்கொண்டிருப்போம். அந்த இரண்டு மணிக்கு கடைசி நொடி வரை காத்திருக்கும் மருத்துவரைப் பார்த்துவிட்டு   பார்க்கவேண்டிய இன்னொரு மருத்துவர் இருக்கும் தூரம் , போக்குவரத்து இவற்றை எல்லாம் யோசித்து நேரத்தைப் பார்த்துகொண்டிருப்போம். இது தான் நேரத்தைப் பார்த்து பார்த்து செய்வது.

அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.  பிரசவம் பார்க்கும் மகப்பேறு மருத்துவர்களை எடுத்துக்கொள்ளுங்கள்.அட்மிட் ஆகும் நோயாளிகள் நல்ல நேரம் பார்த்து இந்த நேரத்தில் பிள்ளைய எடுத்துருங்க என்று ஆர்டர் சொல்வதை நானே பார்த்திருக்கிறேன். பெரும்பாலான பெண் மகப்பேறு மருத்துவர்கள் நோயாளிகளின் செண்டிமெண்ட்டிற்கு ஒத்துழைப்பு கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன். அப்படியானால் அந்த நேரத்தைக் கணக்கிட்டு ஓர் உடலின் உள் இருக்கும் உயிரை எப்படி பக்குவமாய் வெளிக்கொணர மெனக்கெடுவார்கள். இதுதான் நேரத்தைப் பார்ப்பது.

அனைவருக்கும் இந்த அனுபவம் பரீட்சை அறையில் இருந்திருக்கும். கடைசி நொடியில் நூலைக் கட்டிவிட்டு எழுதிக்கொண்டிருக்கும் மாணவனிடம் தாளைப் பறித்துக்கொண்டு செல்லும் காட்சிகள் பார்த்திருப்போம் தானே.

கால்பந்து ஆட்டம் பார்க்கும் ரசிகர்களுக்குத் தெரியும். கடைசி நொடிக்குள் ஒரு கோல் , ஓடிக்கொண்டிருப்பார்கள் அல்லது தடுத்துக்கொண்டிருப்பார்கள்.

வாழ்க்கையில்” நேரம்” ஒரு சுவாரஸ்யமான வஸ்து. எந்தப் பதார்த்தத்திலும் மசாலாவைச் சேர்த்தால் எப்படி காரசாரமாய் இருக்குமோ, அப்படித்தான் ‘நேரம் ‘ என்ற வஸ்துவை எந்த நிகழ்வில் சேர்த்தாலும் வாழ்க்கை காரசாரமாகி சுவாரஸ்யமாய் மாறிவிடும். என் நண்பர் ஒருவர் இருக்கிறார். உடல் எடை குறைக்க நடை பயிலப்போகிறேன் என்றார். ஒருவாரம் கழித்து எடை குறையவே இல்லை என்றார். தினமும் காலை ஐந்து கிலோமீட்டர் நடக்கிறேன். வியர்க்கக்கூட மாட்டிங்குது என்றார். ஒருநாள் அவர் எப்படி நடந்துபோகிறார் என்று பார்த்தேன். லட்சக்கணக்கான கூட்டத்தின் நடுவே மதுரை கள்ளழகர் வரும்போது கூட வேகமாக வருவார். அந்த நண்பர் அதைவிட மெதுவாக நடந்தார். இப்படியான அன்னநடைக்குலாம் வியர்க்காது சார் என்றேன். அவருக்கு இரண்டு புருவங்களும் ஒரு ஜெர்க் கொடுத்தன. ஐந்து கிலோமீட்டரை எவ்வளவு நேரமாய் நடப்பீர்கள் ஒரு மணி நேரம் ஆகலாம், நேரம் லாம் பாக்குறது இல்ல என்றார். அச்சுப்பிசகாமல் பத்து நிமிடம் குறைத்து நடக்கப்பாருங்கள் என்று பற்ற வைத்தேன். மூன்று நிமிடங்கள் குறைத்த ஒரு திருநாளில் தொப்பலாய் நனைந்திருந்தார். உண்மையில் அப்பொழுதுதான் அவரது கொழுப்புகள் கரைய ஆரம்பித்திருந்தன. நேரம் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக்குகின்றது.

நடிகர் அர்ஜூன் ஒரு படத்தில் தன் காதலி சொன்ன நேரத்தில் போய் நிற்பதற்காக ஓடிக்கொண்டே இருப்பார். அது ஒரு பாடல் காட்சி. வழியில் பல சர்க்கஸ்கள் நடப்பதாய்க் காண்பிப்பார்கள். ஒரு இடத்தில் கீழே விழுந்து அருகில் இருப்பவரின் கைக்கடிகாரத்தைப் பார்த்து நேரம் ஆகிவிட்டதா என்றுபார்த்துவிட்டு ஓடுவார். நேரம் தான் நம்மை ஓடவைக்கின்றன.

காலையில் எழுவதற்கான நேரத்தை அலாரமாய் செட் பண்ணுகிறோம். நான் ஒரு மருத்துவரிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவரது மொபைலுடன் இணை செய்யப்பட்டிருந்த அவரது ஸ்மார்ட் வாட்ச், அவரை எழுந்து நடக்க அறிவுறுத்தியது. நெடுநேரம் எந்தச் செயல்பாடும் இல்லாமல் உட்கார்ந்தபடியே இருந்தால் அது அவருக்கு நினைவுறுத்தும். நேரம் நம்மை இயங்கவைக்கும் அபாரமான ஒரு கருவி.

அமைதியான குளத்தில் கல்லை எறிந்துவிட்டால் எழும் அலைகளை ரசிப்பவர்கள் உண்டு. அப்படித்தான், நேரமும். இலக்கை வைத்துக்கொண்டு அதை நோக்கி நகர்பவர்களுக்கு நேரத்தையும் கொடுத்துவிட்டால் அதிர்வுகள் கிடைக்கும்.

வீடு கட்ட வேண்டும், எப்பொழுதிற்குள் கட்ட வேண்டும்.

காதலிக்க வேண்டும், எந்த நாளுக்குள் அதைச் செய்யவேண்டும்,

வெளி நாடு சுற்றுலா செல்ல வேண்டும், எந்த ஆண்டிற்குள் செல்ல வேண்டும். இப்படி எல்லா விசயத்திலும் நேரத்தைப் பொருத்துங்கள்.

முன் காலத்தில் பேருந்தில் PP என்று போட்டிருப்பார்கள். பிறகு PP express என்று போட்டார்கள். இப்பொழுது பைபாஸ் ரைடர் பாயின்ட் டூ பாயின்ட் பஸ்கள் வந்துவிட்டன. இதில் சில பேருந்துகளில் ஒருமணி நேரம் முப்பது நிமிடம் என்றுலாம் நேரத்தைக் குறிப்பிட்டு போடுகிறார்கள். மதுரை ட்டூ திண்டுக்கல், மதுரை ட்டூ கோவை இப்படியான அரசு பஸ்களில் கூடப் பார்த்திருக்கிறேன். நேரம் அவ்வளவு கவர்ச்சியான ஒரு பொருள். பல தன்னம்பிக்கைத் தொடர்களில் நேர மேலாண்மை பெரிய அளவில் பேசப்படும் ஒன்று.

நேர மேலாண்மை என்பது தனக்கு இருக்கும் நேரங்களுக்கு ஏற்றபடி நம் வேலைகளை ஒதுக்குவது. ஒரு வேலைக்கு எவ்வளவு நேரத்தைத் தரலாம் என்று நேரத்தைப் பங்குபோடுவது. உங்கள் கையில் இருக்கும் நேரம் ஒரு பொக்கிஷம். அதைச் சரியான முறையில் சரியான வேலைகளுக்கு அதற்கேற்ற தகுதியில் நேரத்தை நாம் பகிரவேண்டும்.

நீங்கள் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு நேரத்தைக் குறித்துவைத்து அதையே டார்கெட் ஆக்கி செய்து பாருங்கள், உங்களுக்கு நேரம் நிறைய கிடைக்கும். செய்வதற்கு நிறைய வேலைகள் என்று பட்டியல் எதுவும் இருக்காது. சொல்லப்போனால் மற்ற வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்யவேண்டும் போல இருக்கும்.

இத்தனை மணிக்குள் காலை நடைப்பயிற்சி

இத்தனை மணிக்குள் மார்க்கெட் பர்சேஸ்

இத்தனை மணிக்குள் சமையல்

இத்தனை மணிக்குள் வீட்டை ஒதுங்கவைத்தல்

இத்தனை மணிக்குள் நண்பருடன் டீ பருகல்

இப்படி ஒவ்வொரு நிகழ்விற்கும் நீங்களே ஒரு டைம் பாம் வையுங்கள்.

உங்களுக்கு ஒரு புல்லட் வாங்கவேண்டும். டைம் பாம் செட் செய்யுங்கள். எத்தனை மாதத்திற்குள் வாங்கவேண்டும் என்று.

உங்களுக்கு ஒரு பெயிண்டிங்க் வரைந்துப் பழக வேண்டும். டைம் பாம் வையுங்கள். உங்கள் ஒவ்வொரு ஸ்ட் ரோக் கும் பொறுப்புடன் ஓவியமாய் வந்துவிழும்.

இந்தக் கட்டுரையைப் படித்ததும் நீங்கள் செய்திருக்கும் டைம் பாம் எந்த வேலைக்கு என்று கூடப் பகிருங்கள்.