1) மகுடி

சுருட்டி வைத்திருந்த பாம்புச் சட்டையை உயர வீசி வீசிப் பிடித்துக்கொண்டிருந்தான். நான்காவது வீச்சில் கீழிறங்கும்போது என்னையது உரசிக்கொண்டு விழவே, உடலே திடுக்கிட்டு நடுங்கியது. ஆறு மணியின் மென்னிருளுக்கு, சோடியம் விளக்குகள் அமானுஷ்ய சாயமூட்டிக்கொண்டிருந்தன. கூட்டமோ சற்றளவும் அசைந்துகொடுக்கவில்லை. அந்நேரத்திற்கு டியூஷன் ஆரம்பித்து அரை மணி ஆயிருக்கும். சுபத்ராவோ கண்களை ரொம்பவே தீவிரமாக்கியிருந்தாள். சிறுவர்கள் என்பதால் முன்வரிசையில் நிற்கவேண்டிய நிர்பந்தம் வேறு.

‘சுபி, போயிறலாம்டீ..’. அவள் லேசில் நகர்வதாய் தெரியவில்லை. கையிலிருந்த ஐந்து ஒரு ரூபாய் நாணயங்களில் மூன்று எஞ்சியிருந்தன. ‘ஆளுக்கு ஒர்ரூவா ஏற்கனவே போட்டுட்டேன்.. போதும் வா.. கெளம்பிறலாம்’ இதையே சாக்காக வைத்து அவளது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டேன். ஷாந்தா மிஸ், தாமதமாக போவதற்கு நிச்சயம் இம்ப்போஸிஷன் வேறு கொடுத்துத்தொலைப்பார்.

‘இன்னிக்கு போகவேணாம்’ மூடியிருந்த கூடையையே பார்த்தபடியே சுபி சொன்னாள். எனக்குமே அன்று டியூஷனுக்கு போக விருப்பமிருந்திருக்கவில்லை என்பது, அலட்டலற்ற அவளது பதில், இறுக்கம் கலைத்தபோதுதான் புரிந்தது; முழுமனதுடன் வித்தையைப் பார்க்க ஆரம்பித்தேன். பற்றியிருந்த அவளது கைவிரல்களை கூடுதலாக கோர்த்துக்கொள்ள தோன்றியது. தெரிந்த முகமெதுவும் கூட்டத்தில் நிற்கிறதாவென அலசிவிட்டு, இன்னும் அவளோடு நெருங்கி உரசி நின்றுகொண்டேன்.

‘உத்தரவு சொல்லு தாயீ.. உத்தரவு சொல்லு’ – பிரத்யேக ஆலாபனையொன்றுடன் இதையேதான் அவ்வளவு நேரமும் சொல்லிக்கொண்டேயிருந்தான். கூடைக்கருகில் விரிக்கப்பட்டிருந்த ஜமுக்காலத்தில் கிடந்த சிறுமி, யாதொரு அசைவையும் காட்டவில்லை. அவளைவிட கொஞ்சம் பெரிய சிறுவன் அதே காம்ப்ளான் தகர டப்பாவைக் குலுக்கிக்கொண்டு இன்னொரு வட்டம் வந்துபோனான். அதிகம் காசு விழவில்லை.

‘காசு போட்டுப் பாத்து முடிச்சவங்கலாம் கெளம்பிருங்க தெய்வமாரே.. போடாதோரு போட்டுருங்க.. தவறி நின்னா ஒடம்பு சொகப்படாது.. இந்த பரதேசிப்புள்ளைக வவுத்துல அடிச்சது விடாமல்ல தெரத்தும்.. கெளம்பிருங்க தெய்வமாரே.. யாரு பாவமும் எனக்கு வேணாம்.. கெளம்பிருங்க.. கெஞ்சி கருணையா கேட்டுக்குறேன்..’

அவன் சொன்னது எங்களிருவருக்குமே புரிபடவில்லை. அக்கம்பக்கம் நின்றவர்களை சுபி குழப்பமாக பார்த்தாள். அந்தச் சிறுவன் மறு சுற்று டப்பாவைக் குலுக்கினான். இம்முறை காசு விழும் சத்தம் தொடர்ந்து கேட்டது. எங்களருகில் அவன் வந்தப்போது, பதற்றத்தில் மேலும் இரண்டு நாணயங்களைப் போட்டுவிட்டேன். சுபியும் நான் செய்ததுதான் சரி என்பதுப்போல என்னைப் பார்த்தாள். அங்கு தொடர்ந்து நிற்பதற்கு உரிமம் கிடைத்துவிட்டதைப் போல இருவருமே பெருமிதப்பட்டோம். குலுக்கல் ஓசை நின்றதும், நடுவிலிருந்த பிடாரன் மீண்டும் சத்தமெழுப்பினான்.

‘சொன்னது கேட்டுக்கிருச்சா.. ஊத தொவங்கறக்குள்ள ஏற்கனவே ஒரு நட பாத்துட்டவோ கெளம்பிறனும்.. காலப் புடிச்சி சொல்றேன்.. வேண்டுதலா சொல்றேன்..’ கூட்டத்திலிருந்து சிலர் விலகிக்கொண்டார்கள்.

‘சுபி, எத பாத்தாச்சான்னு கேக்குறாங்க?’

‘பாம்பதான்’

‘நாம பாத்துட்டோமா இல்லையா?’

‘எனக்கும் தெரியல..’

‘வீட்டுக்கு போயிறலாமா?’

கொஞ்சம் யோசிப்பதைப்போல தெரிந்தாள். அதற்குள் பிடாரனின் குரல் மீண்டும் உயர, அவள் என் கையைக் கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

‘இந்தா நடுவெரல் இருக்குது பாருங்க.. பாம்பு வெரலு.. ஊத ஆரம்பிக்கும்போது நிப்போரு எல்லாரும் ரெண்டு கைலயும் பாம்பு வெரல மடக்கி வெச்சுக்கடணும்’

அப்படி செய்வதற்காக, சுபி சட்டென கையை உருவிக்கொண்டாள். எனக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது. கண்ணுக்கு புலப்பட்ட வரை எல்லோருமே நடுவிரல்களை மடக்கிவைத்திருந்தனர். இருட்டு கூடிவிட்டது. பிடாரன் ஊத ஆரம்பித்தான். அந்தச் சிறுமியிடம் அப்போதும் அசைவில்லை. சிறுவன் ஓரோரத்தில் அமர்ந்து காசுகளை எண்ணிக்கொண்டிருந்தான்.

அத்தனை கண்களுக்கும் அக்கூடைதான் இலக்காக இருந்தது. மூடியோ இம்மியளவும் ஆடவில்லை. பிடாரன் ஒரு குதி குதித்து தவ்விப்போய் அதனருகிலேயே குத்தலிட்டு, இன்னும் உணர்வுப்பூர்வமாக ஊத ஆரம்பித்தான். அவனது கருவிழிகள், இமைகளுக்குள் அடங்காது துருத்திக்கொண்டு வர ஆரம்பித்தன. மகுடி காற்று லேசாக மணற்புழுதியைக் கிளப்பிவிட்டது. ஊதலொலி ஒரு கட்டத்தில் திகிலூட்டுவதாக தெரியத் துவங்கியது. அச்சிறுவன் ஓடிவந்து, மூடியை லேசாக திறந்துப்பார்த்துவிட்டு மூடினான். சரியாக ஒரேவொரு வினாடிதானிருக்கும். நாங்களும் அதைப் பார்த்துவிட்டோம்.

‘காசு போடாதோரு போட்றுங்க தெய்வமாரே.. இப்ப கெளம்பாம போச்சுன்னா, இருவத்தியோரு நாளுக்கு அடங்காம திரிய ஆரம்பிக்கும்.. பாத்தவோ நிக்காதீய..’

மீண்டும் டப்பா குலுக்கல். ஒரு நாணயம்தான் மிச்சமிருந்தது.

‘நீ பாத்தியாடா? நான் பாத்துட்டேன்’

‘எனக்கும் பாத்த மாதிரிதான் இருந்துச்சு’

‘இன்னொருவாட்டி காசு போட்ரு’ அவள் சொல்லிமுடிப்பதற்குள் டப்பாவில் போட்டுவிட்டேன்.

‘ஆனா ஒருத்தருக்குதான் போட்டேன்..’

‘லூசு..’

‘அவ்ளோதான் இருந்துச்சு’

‘அப்ப நீ மட்டும் நில்லு..’ என்று சொல்லிவிட்டு சுபி அச்சத்துடன் வெளியேறப்போனாள். அதற்குள் பிடாரன், பாம்புச்சட்டையை இன்னொருமுறை வீச ஆயத்தமானான். அதை மட்டும் ஒரு முறை பார்த்துவிடலாம் என்று நின்றபோது, அவன் வேண்டுமென்றேதான் எங்கள் மீது வீசியிருக்கவேண்டும். திரும்பியிருந்த சுபியின் முதுகில் அது வந்து விழுந்ததும், அரண்டு அலறிவிட்டாள். கூட்டத்தைப் பிளந்துகொண்டு வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தோம். நான் ஒரு முறை தடுக்கி விழுந்து எழுந்து ஓடினேன்.

மூன்றாம் நாள் நிலவொளியில் இருவரின் அம்மையும் கதையளந்துகொண்டிருந்தபோது, திண்ணையில் என்னருகில் அமர்ந்திருந்த சுபி, அதுவரை பேசாதிருந்த அந்தச் சம்பவத்தை, மெல்ல கிசுகிசுத்தாள், ‘அன்னிக்கு கூடைய அந்த பையன் தெறந்தப்ப நீ என்ன பாத்த..?’ மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால், எனக்கும் அது குறித்து பேசுவது குறுகுறுப்பாகத்தான் இருந்தது.

‘பஞ்சர் போடும்போது காத்த நெரப்பி டியூப தண்ணியில முக்குவாங்கல்ல.. அப்ப அது கருப்பா பளபளன்னு இருக்கும்ல.. அந்த மாதிரி உள்ள ஏதோ சுருண்டு இருந்ததுச்சு’

‘ம்ம்.. அப்டிதான் எனக்கும் தெரிஞ்சுது’ அந்த இருட்டிலும் அவள் கண்ணிலிருந்த அச்சம் துலக்கமாகத் தெரிந்ததும், நான் உற்சாமாகனேன்.

‘முன்னாடி நாங்க இருந்த வீட்ல ஒரு இருதலமணி பாம்பு வந்துச்சு, வாலே கெடையாது.. ரெண்டு பக்கமும் தலதான் இருக்கும்.. ஒரு வாய்ல மட்டும்தான் வெஷம் இருக்கும்.. இன்னொன்னுல கடிச்சா ஒன்னுமே ஆவாது.. என்ன ஒரு வாட்டி கடிச்சிது..’ – கண்களை மேலும் விரித்தாள், நான் அவளை நெருங்கி அமர்ந்துகொண்டு தொடர்ந்தேன் – ‘சாரப்பாம்பும் நல்லப்பாம்பும் ஜோடி தெரியுமா? நல்லப்பாம்பு ஆம்பள, சாரப்பாம்புதான் பொம்பள. ஒன்ன அடிச்சிட்டா இன்னொன்னு நம்மள கொன்னுடும்.. மரத்துமேல நின்னு பாத்துட்டேயிருக்கும்’

அவளுக்கு பேச்சே வரவில்லை. சற்று இடைவெளி விட்டு, ’ஏன் அவரு அவ்ளோ ஊதியும் கூடைலேந்து அது வெளியவே வரல?’ என்றாள்.

‘பாம்புக்குலாம் காதே கேக்காது.. மகுடி ஊதும்போது அவங்க ஆடுறாங்கல்ல.. அத வெச்சுதான் அதுவும் ஆடுமாம்.. சதீஸண்ணன் சொல்லிச்சு’

‘கூடைக்குள்ள இருக்க பாம்பு எப்டி அதெல்லாம் பாக்கும்?’

‘அதான் அது வரவேயில்ல.. அந்தாளுக்கு இதுவே தெரியல’

அவள் திருப்திப்பட்டதாக படவில்லை. அடுத்த கேள்வியை அவள் யோசித்துக்கொண்டிருப்பதாக தெரிந்த வேளையில், பின்புறமாக அவளது சட்டைக்கு கீழிருந்து கைவிட்டு முதுகில் ஒரு விரலை வைத்து சட்டென ஒரு குட்டி பாம்பின் வளைவை வரைந்தேன். திடுக்கிட்டுப்போனவள் என் தொடையில் பளிச்சென்று ஒன்று வைத்தாள்.

கேலியாக சிரித்துவிட்டு கேட்டேன், ’நீயும் பனியன் போடுவியா?’

‘லூசு.. அது ஷிம்மி’ – அவர்கள் வீட்டு கொடியில் காயும்போது பார்த்திருக்கிறேன்தான். அந்த இருட்டில் அந்தக் கணத்தில் அதைப் பற்றி பேச பிடித்திருந்தது.

ஓரிரு நிமிட இடைவெளியிருக்கும். அவளும் என் சட்டைக்குள் கைவிட்டு அதேப்போல கூச்சமூட்டி ஒரு கிள்ளு கிள்ளினாள். சட்டென உடலைக் கொஞ்சம் உலுக்குவதுப்போல செய்துவிட்டு அவளை அடிக்க போனப்போதுதான் கவனித்தேன் – அவளது இரு கைகளும் அசையாமல் அவளது தொடையில்தான் இருந்தன.

2) தலைகள்

‘Never retaliate when people insult you – Peter 3:9’ – எதிரில் தொங்கிக்கொண்டிருந்த காலண்டரில் தென்பட்ட வாசகம், வரப்போகும் நாட்களுக்காக தன்னைத் தயார்ப்படுத்துவதாக ரமேஷுக்கு தெரிந்தது. அமர்ந்திருக்கும் தொனியில் அதீத பதவிசு. நடு உதட்டின் சிகரெட் கருமைக்கும் நெற்றியிலிருக்கும் திருநீருக்கும் துளியும் பொருத்தமிருக்கவில்லை. நெடுமாறன் வரும்வரை, ஓர் ஆஸ்துமா கிழவிக்கு நெபுலைஸர் வைத்தபடி, விமலா சிஸ்டர்தான் கேஷுவாலிட்டி நெறிமுறைகளை அவனுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்; மஞ்சளிட்ட அந்த முகத்தின் மந்தகாசம் அவனுக்கு பிடித்திருந்தது.

‘புது ஹெளசியா?’, நெடுமாறன் ஒருவித ராணுவ மிடுக்குடன் உள்ளே நுழைந்தபோது, ரமேஷ் பதறியெழுந்து பிளாஸ்டிக் நாற்காலியைப் பின்னால் பறக்கவிட்டான். அதையெடுத்து நிறுத்திவிட்டு, ஆஸ்துமா கிழவிக்கு அருகில் போய் ஏதோ வேலை பார்ப்பதைப்போல நின்றுகொண்டான். ‘முன்னாடி பேட்ச் பசங்க சொல்லிருக்காங்களாப்பா? டியூட்டி பேட்டர்ன்லாம் எப்டின்னு?’ என்று அவர் மேசையிலிருந்த பதிவேடுகளில் கையெழுத்திட்டபடி கேட்டபோது, ‘அந்தாளு சரியான சொண டா, அஞ்சு நிமிஷங்கூட ப்ரேக்குன்னு வெளியவிடாம தாலியறுப்பான்..’ என்று கேட்டுவைத்திருந்ததுதான் நினைவுக்கு வந்தது.

‘ப்ராட் டெட் ஒன்னு வெய்ட்டிங் சார்.. எண்ட்ரி போடல.. சார் இன்னிக்கு புதுசுங்கறதால நீங்க வந்ததும் பாத்துக்கலாம்ன்னு..’, சிஸ்டர் வெளியே யாரையோ தேடுவதைப் போல பார்த்துக்கொண்டே சொன்னார்.

‘எப்ப வந்துச்சு?’

‘அஞ்சு நிமிஷம்தான் இருக்கும்.. பீசீ இங்கதான் நின்னாப்டி.. அதுக்குள்ள ஆள காணும்..’

‘ஹிஸ்ட்ரி என்னவாம்?’

‘டிஏ.. இப்ப சாய்ந்தரந்தான்.. வண்டி வரும்போது போயி படுத்தத ஆளுக பாத்துருக்காங்க’, சிஸ்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே நெடுமாறன் வெளியே சுவரோரத்தில் நின்ற ஸ்ட்ரெச்சர் பக்கம் போய்விட்டு வந்தார். ரமேஷ் உள்ளிருந்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘தம்பி வந்து ஒக்காருங்க.. பாட்டிக்கு பொகையெல்லாம் தன்னால போய்க்கும்..’

ரமேஷ் அவருக்கெதிரில் ரொம்பவே பவ்யமாக அமர்ந்தான்.

‘ஏஆர் புக் இது.. மெடிக்கோலீகல் கேஸெல்லாம் இதுல எண்ட்ரி போடனும்’ ரமேஷ் மேசையிலிருந்த அந்த ஏட்டை கொஞ்சம் முன்னே நகர்ந்து பார்த்தான். அதிலிருந்த படிவத்தில் எந்ததெந்த இடத்தில் என்னென்ன நிரப்பவேண்டுமென்று நெடுமாறன் சொல்லிக்கொண்டே வந்தார். ‘அடையாளங்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில் இரண்டு கோடுகள் இருந்தன. ‘போயி அந்த ஸ்ட்ரெச்சர்ல இருக்க பாடில, மொகத்துல எதுவும் மச்சம் தழும்பு இருக்கான்னு பாத்துட்டுவா’

தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட முதல் பணியை நிறைவேற்றும் துணிபு அவனது நடையில் தெரிந்தது. கான்ஸ்டபிளும் அதற்குள் வந்துவிட்டார்.

‘ஐடி மார்க்ஸ் பாக்கனும்’ என்றதும், வந்தவர் அந்தக் கருப்பு பிளாஸ்டிக் உறையை விளக்கினார். அதிர்ந்துப்போய் அருகிலிருந்த சுவற்றில் அப்படியே சாய்ந்துவிட்டான். தலையற்ற உடலின் கழுத்துப்பகுதிலிருந்து நார்நாராக ஏதேதோ தொங்கிக்கொண்டிருந்தன. தண்டுவடம் மேலே கொஞ்சம் உறுவிக்கொண்டு வந்து சிறுகொடி போல கிடந்தது. பின்னாலிருந்து வந்த நெடுமாறன் உறைந்து நின்ற அவனை பரிகசிப்பதைப் போல பார்த்தார்.

‘தல டோட்டலா பேஸ்ட் மேரி ட்ராக்கோட போயிருச்சு சார்.. இது மட்டும்தான்’, நெடுமாறனுக்கு ஒரு சல்யூட் வைத்துவிட்டு, கான்ஸ்டபிள் சொன்னார்

‘பேரு அட்ரெஸெல்லாம்?’

‘ஐடி கார்டு, ஃபோனு எதுமேயில்ல பாக்கெட்ல.. அனாத பொணமாவனும்ன்னே பண்ணிருக்கான்’

‘சரி.. மார்க்ஸ் மட்டும் பாத்து சொல்லுங்க’ என்றபடி உள்ளே போய்விட்டார்.

‘மொழமொழன்னு ஷேவ் பண்ணிருக்கான் பாருங்க.. மார்ல கூட மயிரு வைக்காம..’ என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதும் ரமேஷுக்கு திகைப்பு அடங்காமல்தான் இருந்தது.

‘என்னா சார் இது? ஒரு மச்சத்தையும் காணும்’ கையுறைகள் எதுவும் அணியாமல் கால், கையென ஒவ்வொன்றாக ஆராய்ந்தபடி அவர் சொன்னார். ரமேஷும் மெல்ல கொஞ்சம் நிலைக்கு வந்து, அவரோடு சேர்ந்து தேட ஆரம்பித்தான். கழுத்து பக்கம் மட்டும் கண்ணைக் கொண்டுப்போகவே இல்லை.

சலித்துப்போன கான்ஸ்டபிள் ஒரு கட்டத்தில், ‘இத நோட் பண்ணிக்கோங்க டாக்டர்’ என்று கவட்டையருகில் காட்டினார்.

‘அது ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன்.. அத எப்டி எடுத்துக்கிறது?’

‘வேற எதுமே இல்லையே.. பெயிண்ட் அடிச்ச மேரி இருக்கு ஒடம்பு’

வேறுவழியின்றி அதையே குறித்துக்கொண்டு, நெடுமாறனிடம் வந்து, ‘க்ராயின்ல ஒரு ஸ்கார் மட்டுந்தான் சார் இருக்கு’ என்றான்.

‘இருக்கறத நோட் பண்ணிட்டியா.. போதும்.. இந்த பாடிலாம் க்ளைமே ஆவாது..’ என்றபடி அந்தப் படிவத்தை வாங்கி மேலும் சிலவற்றை நிரப்பி கையெழுத்திட்டார்.

நள்ளிரவையொட்டி கேஸ் வரத்து குறைந்ததும், நெடுமாறன் ஓய்வெடுக்க பணியறைக்கு போய்விட்டார். விமலா சிஸ்டரும் ஒரு மஃப்ளரைக் கட்டிக்கொண்டு சுவற்றில் சாய்ந்திருந்தார். ரமேஷுக்கு ‘ஒரு சிகரெட் இழுத்தால் தேவலாம்’ என்றிருந்தது. அந்தக் கோரத்தைப் பார்த்த அதிர்ச்சி இன்னும் தணிந்தபாடில்லை: நெடுமாறனின் புன்னகையிலிருந்த சீண்டலும். அந்தக் காட்சி தனக்கு எந்தவொரு அதிர்வையும் அளிக்கவில்லையென்பதில் அப்படியென்ன அவருக்கு வறட்டு பெருமை? தானொரு மரத்துப்போன ஜடம் என்பதுப்போல காட்டிக்கொள்வது, அற்ப தம்பட்டமன்றி வேறென்ன? கை வேறு நமநமவென அரிக்க ஆரம்பித்துவிட்டது.

‘நான்கு சாவுகளை இப்படி பார்த்துவிட்டால் என்னாலும்தான் இதை கடந்துப்போய்விட முடியும். அதையெல்லாம் பாராமலா போய்விட போகிறேன்.’ இதை யோசிக்கும்போது, முன்பு தான் காண சகிக்காத எதையுமே கண்டதில்லையா என்று யோசித்தான். ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்வளாகத்தில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தப்போது, தான் நின்ற இடத்திலிருந்து பத்தடி தொலைவுக்குள் ‘மொட்ட்ட்’ என்று கீழே விழுந்து சிதறிய பெரியப்பாவின் கபால ஓட்டின் ஓசை நினைவுக்கு வந்தது. அவர் நான்காவது மாடியிலிருந்து குதித்திருந்தார் என்பதும், அக்கா கடிதம் எழுதிவைத்துவிட்டு ஓடிவிட்டாள் என்பதும் ரமேஷுக்கு புரிவதற்கே அரை நாளானது. பெரியப்பாவின் சிதறிய தலைக்கும், தலையற்ற இன்றைய முண்டத்திற்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை.

‘சிஸ்டர்.. போயி ஒரு டீ சாப்டு வர்றேன்.. கேஸ் வந்துச்சுன்னா கால் பண்ணுங்க.. ஓடிவந்துருவேன்.. சார எழுப்பிட வேணாம்’

பன்னிரெண்டு ஜோடி விலா எலும்புகளையும் அகல விரித்து, புகையை உள்ளேயிழுத்து நிறுத்தி, மெல்ல வெளியிட்டான். டீயும் ரொம்பவே உணக்கையாக இருந்தது. மார்ச்சுவரிக்கு ஒரு முறை போய் அந்த பிணத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்றுகூட அபத்தமாக தோன்றியது. கடைசி சொட்டு டீயில் கங்கைக் கசக்கிவிட்டு, மீண்டும் கேஷுவாலிட்டிக்குள் நுழைந்தபோது, நெடுமாறன் இருக்கைக்கு வந்திருந்தார். அந்தக் கான்ஸ்டபிளும் உடன் நின்றபடி ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.

பூனையைப்போல போய் இடத்தில் அமர்ந்துகொண்டான். கேட்டால் யூரின் போகப்போனதாக சொல்லிக்கொள்ளலாம். கான்ஸ்டபிளிடம் பேசிக்கொண்டிருந்த நெடுமாறன், ’ஒரு பூமரயாச்சும் வாங்கி மென்னுட்டு வாடா’ என்று இடையில் திரும்பி இவனிடம் சொல்லிவிட்டு, பேச்சைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அருகிலிருந்த சிஸ்டர் அதற்கு சிரிப்பது பார்க்காமலேயே தெரிந்தது.

நெடுமாறனிடம், ’பேங்க் வேலைலதான் இருக்கானாம் சார்.. அந்தம்மாவ பாத்தாலே பாவமா இருக்கு.. ஒத்தையாளா வந்து நின்னுட்டு இருக்கு..’ என்ற கான்ஸ்டபிள், ரமேஷிடம் ஓர் ஆதார் அட்டையை நீட்டி, ‘இதான் சார் நாம பாத்த அந்த இல்லாத தல’ என்றார். கையில் வாங்கிப்பார்த்துவிட்டு, ‘நல்ல பெயர்’ என்று நினைத்துக்கொண்டான்.

‘ஐடி மார்க்ஸ் மாத்ததான் சார் வந்தேன். நாம முதுகு, தொடையெல்லாம் பாத்தோம்ல.. பட்டக்ஸ்க்கு மேல கொஞ்சம் நடுவுல நாம கவனிக்கல.. ஒரு வெரக்கட அளவுக்கு தழும்பு இருக்குது அந்தாளுக்கு.. அந்தாளோட ஒய்ஃபு அதத்தான் மொதல்ல சொன்னுச்சு..’

நெடுமாறன் எதுவும் திட்டப்போகிறாரோ என்று பார்த்தான். கண்டுகொள்ளாமல் ஏதேதோ நகல்களில் கையெழுத்திக்கொண்டிருந்தார். இவனிடம் ஒரு தாளை நீட்டி ‘அவரு சொல்ற அந்த ஸ்கார சேத்து எழுதிடு’ என்றார்.

ரமேஷ் அதை எழுத ஆரம்பித்தப்போது, கான்ஸ்டபிளும் அருகில் நின்று, ‘பட்டக்ஸ்க்கு மேல..’ என்று நினைவூட்டுவதைப் போல மீண்டும் சொல்லிவிட்டு, ‘ஏதோ பாம்புகடிக்கு கீறிவிட்ட தழும்புன்னுச்சு..’ என்பதைச் சேர்த்தார். சரியாக அதே கணம் கொடுக்கப்பட்ட தாளுக்கு பின்னால் இணைக்கப்பட்டிருந்த மார்ச்சுவரி சீட்டில், பெரியப்பாவின் அசாதாரணப் பெயர், ‘சுபத்ரா சாமுலிங்கம்’ என்ற கையொப்பத்தில் பளிச்சென்று கண்ணில் பட்டது.