ஆலிவர் சாக்ஸ் என்ற ஒரு மிகப் பெரிய புகழ் பெற்ற மூளை இயல் நிபுணர் மியூசிக்கோஃபிலியா (Musicophilia)  என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். அதாவது இசைப் பித்து. அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் அவர் சொல்லியிருக்கிறார்- மனித இனம்  வாழ்வதற்கு இசையால்   உயிரியல் ரீதியாக எந்த உபயோகமும் இல்லை.இசை இல்லாமல் உயிரினங்கள்  பல்லாயிரம் நூற்றாண்டுகள் கூட இருக்கும். இருந்திருக்கின்றன. இன்னும் இருக்கும்- என்கிறார் அவர்.  இசை என்பதையே சுத்தமாக துடைத்து அழித்து விட்டால் கூட  மனித இனம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும்.  உயிரோடு இருக்கும். அந்த வாழ்க்கை உயிர்ப்புடன் இருக்குமா என்பது தெரியாது. நல்ல ஒரு ரோபோவிடம் ஒலிக்குறிப்புகளைக் கொடுத்தால் அது இசைக்கும் . ஆனால் அதனால் ‘பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ‘ என்று பாடிக்கொண்டிருக்கும் போதே ஒரு இடையில் ஒரு சிரிப்பு வருமே. அப்படி சிரிக்க முடியுமா? .நம்முடைய  எந்திரத்தனமான
வாழ்க்கைக்கு உயிர்மை கொடுத்த ஒரு கலைஞன் எஸ் பி பாலசுப்பிரமணியம்.

அவரது இசை வாழ்க்கையிலே இரண்டாம் கட்டம் என்பது அவருடன் இசைக்குழுக்களில் நெருக்கமாக இருந்த இசைஞானி இளையராஜா தமிழ் திரை உலகிற்கு அன்னக்கிளி ( 1976) படம் மூலம் அறிமுகமான  பின்னே தொடங்கியது. முதல் கட்டுரையில்  சொன்னது போன்று எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாணி பாடகர்களின் குரலுக்கும் பாடல் வரிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கும்.

ஆனால் இளையராஜாவின் பாணி என்பது அதிலிருந்து வேறுபட்டது. இசைக்கருவிகளுக்கும் ஆர்கெஸ்ட்ரா எனப்படும் இசைஅமைப்புக்கும் அதில் பாடகர்களுக்குச் சமமான பங்கு இருக்கும். இசைஞானியைப் பொறுத்தவரை குரலும் ஒரு இசைக்கருவியே. இசைக்கருவிகளும் இசைக்கலைஞனின் குரலே. ஆக குரலிலே மட்டுமே கொண்டுவரக்கூடிய பாவங்களை, உணர்வுகளை எல்லாம் இசைக்கருவிகள் மூலமும் தரமுடியும் என நிரூபித்தவர். மேலும் அவர் ஒரு கறார்வாதி. தான் எழுதியதை மிகச் சரியாகப் பாடகர்கள் பாடினால் போதும் என எண்ணுவார். தனது இசைமேல் அபாரத் தன்னம்பிக்கை உடையவர். ஆனால் இங்கு பாடகர்  பேரெடுப்பது இன்னும் சவலாக ஆகிறது. அந்தச் சவாலை மிக எளிதாக எதிர்கொண்டார் எஸ்பிபி.

கொஞ்சம் கட்டுப்பாடுகள் கூடுதலாக உள்ள சூழலில் அவர் செய்த சாதனை என்னவென்று பார்த்தால் அற்புதமான இசையமைப்பு உள்ள ஒரு பாடலை யார் பாடினாலும் நன்றாக இருக்கும் என்று இருந்ததைத் தனது குரல் வளத்தாலும் , இனிமையாலும், ஈடுபாட்டுடன் உணர்வுப்பூர்வமாகப் பாடும் முறையாலும் ‘ இந்தப் பாடலை எஸ்பிபி தவிர யார் பாடினாலும் எடுபடாது’ என்று தோன்ற வைத்திருக்கிறார். சிறந்த ஒன்றை ஆகச் சிறந்ததாக ஆக்குவது மிகக் கடினம். அதைத்தான் அவர் செய்திருக்கிறார்.

ராஜபார்வை(1981) திரைப்படத்தில் அமைந்திருக்கும் அந்தி மழை பொழிகிறது என்ற பாட்டை நினைத்துப் பாருங்கள் .இந்த பாடலில் பாடல் வரிகள் தொடங்குவதற்கு முன்பே அந்த பாடல் ஒரு ஹிட் ஆகிவிட்டது.  இசைக் கருவிகள் மற்றும் ஹம்மிங்க் மூலம் ஒரு மிகப் பிரமாதமான தொடக்கத்தை கொடுத்து இருப்பார் இளையராஜா . இந்தப் பாடல் தொடங்கும் பொழுது அந்தி மழை பொழிகிறது என எஸ் பி பாலசுப்ரமணியம் எடுக்கும்போது அந்த இசைக் கருவிகளுக்கு இணையாக அவற்றை மேலும் அழகுபடுத்த செழுமைப்படுத்த தனது குரலால் ஆரம்பிப்பார்.

பயணங்கள் முடிவதில்லை (1982) திரைப்படத்தில் வரும் இளையநிலா பொழிகிறது என்ற பாடலை எடுத்துக் கொள்ளுங்கள். கிதார், புல்லாங்குழல் என இசைக்கருவிகளின் ஒத்திசைவில் ராஜா ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கி உள்ளார்.  வைரமுத்துவின் சிறப்பான பாடல் வரிகள் வேறு.. இவையிரண்டையும் தாண்டி அப்பாடலைத் தனது குரலால் செழுமைப் படுத்தியிருப்பார் பாலு.

பலரும் பார்த்த ஒரு வீடியோ ஒன்று உண்டு.ஒரு மேடைக் கச்சேரி. இளைய நிலா என பாலு எடுத்தவுடனேயே அரங்கம் அதிர்கிறது. அடுத்து வரும் இசைக்கருவிகளின் இசையைக் கேட்டு மெய்மறக்கிறது அரங்கம். அப்போது தலைசிறந்த புல்லாங்குழல் கலைஞர் அருண்மொழி ஒரு துணுக்கை வாசிக்கும் போது தவறான சுருதி புல்லாங்குழலை எடுத்துவிடுகிறார். அப்படியே நின்று விடுகிறார். எஸ் பி பி சமாளித்து வாயாலேயே ‘ தாரத் தர தர’  என ஹம்மிங் கொடுத்து பாடி முடிக்கிறார். ஆனாலும் என்னவோ குறைந்த உணர்வு. எஸ்பிபி அருண்மொழிக்காக மீண்டும் ஒரு முறை பின்னணி இசையை வாசிக்கச் சொல்ல பிரமாதப் படுத்துகிறார் அருண்மொழி. அரங்கம் அதிர்கிறது.

இந்த நிகழ்வின் மூலம் மூன்று விஷயங்கள் தெரிகின்றன. இளையராஜாவின் இசைத் துணுக்குகள் பாடலோடு கலந்தவை. அவை இல்லாமல் பாடினால் முழுமை இல்லாமல் இருக்கும். இரண்டாவது அவற்றை எஸ் பி பி பாடுவது அழகிற்கு அழகு சேர்ப்பது போல. வேறு யார் பாடினாலும் கொஞ்சம் குறையாகத்தான் உணர்வோம். மூன்றாவதாக எஸ் பி பி என்னும் மகா கலைஞனிடம் இருக்கும் மனித நேயம்.

இளையராஜாவின் இசையில் இசைக்கருவிகளுடன் பின்னிப் பிணைந்து ஒலிக்கத் தொடங்கியது எஸ் பி பி யின் குரல்.  உதயகீதம் (1985) படத்தில் வரும் சங்கீத நேரம் என்ற பாட்டாக இருக்கட்டும், தளபதி (1991) திரைப்படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு சேதியாக இருக்கட்டும் மெல்லத் திறந்தது கதவு(1986) இசை எம் எஸ் வி- இளையராஜா) படத்தின் வா வெண்ணிலா வாக இருக்கட்டும்,  இளமை ஊஞ்சலாடுகிறது(1978) திரைப்படத்தின் ஒரே நாள் உனை நான் ஆகட்டும் பாடல்களின் அதியற்புதமான பின்னணி இசையை உன்னதமாக்குவது எஸ்பிபியின் குரலே. சில மேடைக் கச்சேரிகளில் அவர் பாடிய பாடலை வேறு சிலர் பாடும் போது அந்த உயிர்த்தன்மை குறைவதைப் பலமுறை அனுபவித்திருக்கிறோம்.

எஸ்பிபியின் இசைப் பயணத்தின் மூன்றாவது காலகட்டம் தொண்ணூறுகளில் தேவா ஏ.ஆர்.ரஹ்மான், மரகதமணி, வித்யாசாகர் என இளம் இசையமைப்பாளர்களோடு பணியாற்றுவதில் தொடங்குகிறது. சாதி மல்லி பூச்சரமே (அழகன்-1991), மலரே மௌனமா (கர்ணா -1995) நலம் நலமறிய ஆவல் (காதல் கோட்டை -1996) எனப் பல்வேறு இசையமைப்பாளர்களுடன் ஆகச் சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறார் . குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலப் படங்களில் எஸ் பி பி பாடிய பாடல்கள் அற்புதமானவை. இளையராஜவின் இசைத் துல்லியமும்  எம் எஸ் வி பாணியில் பாடகர்களுக்குக் கூடுதல் சுதந்திரம் அளிக்கும் தன்மையும் கொண்ட பாணியில் அமைந்தவை அவை. காதல் ரோஜாவே (ரோஜா-1992), தொடத் தொட மலர்ந்ததென்ன (இந்திரா-1995) , அழகான ரட்சசியே (முதல்வன்-1999), தங்கத் தாமரை மலரே (மின்சாரக் கனவு-1997), அஞ்சலி அஞ்சலி, என் காதலே என் காதலே ( டூயட்-1994) , பெண்ணல்ல பெண்ணல்ல (உழவன்-1993) என இனிமையும் இளமையும் புதுமையும் நிரம்பி விழியும் பாடல்கள் அவை.

எழுபதுகளில் எம் எஸ் வி யுடனும் எண்பதுகளில் இளையராஜாவின் காலத்திலும் ரஹ்மான் கோலோச்சிய தொண்ணூறுகளிலும் இவர்களோடும் இன்னும் பல இசையமைப்பாளர்களோடும் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார். இன்றைய காலத்தின் அனிருத் வரை.

பாடலுக்கு மூன்று அடிப்படையான விஷயங்கள் ராகம், தாளம் மற்றும் பாவம். இதில் ராகம் என்பது சுருதி மாறாமல் சங்கதிகளை இனிமையாக பாடுவது. இதில் எஸ் பி பி ஒரு மாஸ்டர். முறைப்படி இசை கற்கவில்லை என்றாலும் தன்னுடைய இயல்பான பிறவி ஞானத்தால் பாடல்களை அவை அமைந்திருக்கும் ராகம் மற்றும் சுருதி விலகாமல் பாடக் கூடியவர். ஆரம்பத்தில் இளையராஜாவும் இவரைப் போலவே மேற்கத்திய , கர்னாடக இசை அடிப்படைகளைக் கற்கா விட்டாலும் தான் கேட்கும் இசையை அப்படியே ஆர்மோனியத்தில் வாசிக்கும் ஆற்றல் படைத்திருந்தார். பின்னர் அவர் முறைப்படி இசை கற்றார். அது போன்ற ஒரு ரா டேலண்ட் (Raw talent) ஆக இருந்தவர் எஸ்பிபி தன்னுடைய இசை அறிவின் மூலம் ராகங்களின் அடிப்படையில் அமைந்த பல பாடல்களை ஆகச் சிறப்பாகப் பாடியிருப்பார் . ரீதிக்கௌளையில் தலையைக் குனியும் தாமரையே (ஒரு ஓடை நதியாகிறது-1983) , கல்யாணியில் வந்தாள் மகாலட்சுமியே (உயர்ந்த உள்ளம் -1985), நதியில் ஆடும் பூவனம், மோகனத்தில் பூவில் வண்டு கூடும் ( காதல் ஓவியம்-1982), தர்மவதியில் இளம் சோலை பூத்ததா (உனக்காகவே வாழ்கிறேன்-1986), சிந்துபைரவியில் வளையோசை கலகலகலவென (சத்யா-1988) என ஏராளமான கர்னாடக இசை ராகங்களில் அமைந்த பாடல்களை சிறப்பாகப் பாடியிருப்பார்.

அடுத்ததாக பாடலின் ஜீவனாக விளங்கக்கூடியது பாவம். அதுதான் எஸ்பிபியை  கேட்பவர்களிடம் மிகவும் நெருங்க வைக்கிறது. கிண்டல், ஊற்சாகம், காதல், நட்பு, பிரிவு, சோகம் , காமம், விரக்தி என எல்லா உணர்வுகளையும் குரலில அப்படியே கொண்டுவருபவர் அவர். பொன்மானே சங்கீதம் பாடவா எனக் காதலிப்பார் ;  காதல் ரோஜாவே எனப் பிரிவுத்துயரில் ஏங்குவார், அடேய் நண்பா உன்னை வெல்வேன் எனச் சவால் விடுவார்; நான் ஆட்டோக்காரன் என உற்சாகமாகத் துள்ளவும் முடியும். அப்படலைக் கேட்பவர்கள் அவர் தங்களுக்காகவே பாடுகிறார் என உணர வைத்தார். அப்பாடல் அவர்களுடைய மனதுக்கு மிகவும் நெருக்கமாகி எஸ்பிபி மானசீகமாகத் தங்கள் தோள் மீது கைபோட்டு, அரவணைத்து, ஆறுதல் கூறுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். அதுவே அவரது இழப்பினை தங்களது சொந்த சோகமாகக் கருத வைத்தது.

எஸ்பிபி வெறும் திரைப்பாடகர் மட்டும் அல்ல. அவர் ஒரு நிகழ் கலைஞர். பல நூறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நேரடியாக மக்கள் முன் பாடியவர். பலமுறை ஒத்திகை செய்யப்பட்டு திரைப்படத்துக்காகப் பதிவு செய்யும் பாடலை அதே செய் நேர்த்தியுடன் மக்கள்முன் நிகழ்த்திக்காட்டியவர். அப்பாடல்களின் நுட்பங்களை , உணர்வுகளை உணர்த்திச் சிலசமயம் மூலப்பாடலை இன்னமும் மேம்படுத்தியவர். அதுவும் அவரை நமது வரவேற்பறைகளில் நம்மோடு அமர்ந்து இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு மனிதராக உணரவைத்தது.

அவர் இசையைக் காதலிக்க வந்த கலைஞன். நாமெல்லோரும் அவரைக் காதலிக்க வந்த கலைஞன்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. மழைதருமோ மேகம் - டாக்டர் ஜி. ராமானுஜம்
  2. எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 - டாக்டர் ஜி. ராமானுஜம்