எஸ்பிபி : காதலிக்க வந்த கலைஞன் – 3

கடந்த இரண்டு கட்டுரைகளில்,

எம் எஸ் வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என மூன்று இசையமைப்பாளர்களின் மூன்று காலகட்டங்களின் பாடல்களைப் பற்றி மட்டுமே  பெரும்பாலும் பார்த்தோம். அவர்களின் இசையமைப்பில், குறிப்பாக முதல் இருவர் இசையில் எஸ் பி பி ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். இதே மூன்று காலகட்டத்திலும் அவர்  பிற இசையமைப்பாளர்கள் இசையிலும் பிரமாதமான பல பாடல்களைப் பாடி இருக்கிறார்.

முதல் காலகட்டத்தை எடுத்துக் கொண்டால் எஸ்பிபி பாடிய முதல் பாடல்களுள் ஒன்றான ‘ஆயிரம் நிலவே வா!’ பாடலே திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் அமைந்த பாடல்தான். அடிமைப் பெண் (1969) திரைப் படத்தில் அமைந்தது. பல பாடகர்களது முதல்பாடலைக் கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது. குரலில் ஒரு குழைவும் முதிர்ச்சியும் இருக்காது. அப்படியே நன்றாக இருந்தாலும் அந்தப்பாடல் அவ்வளவாகக் கேள்விப்பட்டிராத பாடலாக இருக்கும்.

ஆனால்  தமிழில் எஸ் பி பி பாடிய முதல்பாடலே மெக ஹிட்டாக அமைந்தது. அவரது குரல் அந்தப் பாடலிலேயே குழைவு நெளிவுகளுடன் அமைந்திருக்கும. உடன் பாடியது அப்போது உச்சத்தில் இருந்த பி.சுசீலா என்றாலும்’நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க, நாணமென்ன’ பாவமென்ன என சிருங்கார ரசம் பொங்கக் குழைந்து நெளிந்து பாடியிருப்பார்.

அதே கே.வி. மகாதேவன் இசையில்தான் சங்கராபரணம் (1979) திரைப்படத்துக்காகத் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார்.  மெல்லிசைப் பாடல்களையே பாடி வந்த எஸ்பிபியைத் துணிச்சலாக கர்னாடக சங்கீதப் பின்புலத்தில் அமைந்த அந்தத் திரைப்படத்தில் பாட வைத்தனர் கே.வி.மகாதேவனும் அவரது உதவியாளர் புகழேந்தியும். தெலுங்கு மொழிப் படம் அதுவும் கர்னாடக இசையை மையமாகக் கொண்டு அமைந்த படப்பாடல்கள் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன என்பதை இக்காலத்து மக்களுக்கு நம்பக் கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தத் திரைப்படத்தில் ராகமாலிகையாக அமைந்த ராகம் தானம் பல்லவி, சங்கராபரணம் ராகத்தில் அமைந்த ஓம்கார நாதானு, கல்யாணி ராகத்தில் தொரகுணா இட்டுவண்டி சேவா ஆகிய பாடல்களுடன் புகழ்பெற்ற கர்னாடக சங்கீதக் கீர்த்தனைகளான சாமஜவரகமனா (ஹிந்தோளம்) , ப்ரோச்சேவாரெவருரா (கமாஸ் ராகம்) ஆகிய பாடல்களை அருமையாகப் பாடியிருப்பார். ஆயினும் மெல்லிசைபாணியில் மத்யமாவதி ராகத்தில் அமைந்த சங்கரா என்ற பாடலில்தான் எஸ்பிபியின் குரல் அதிக உயிர்ப்புடன் இருக்கும். இறுக்கமான செவ்வியல் மரபுப் பாடல்களைவிட மெல்லிசையில்தான் தனது முழுத்திறமையையும் உணர்ச்சிகளையும் காட்ட முடிகிறது என உணர்ந்திருப்பார். அதே கே.வி.மகாதேவன் இசையில் தியாகைய்யா (1981) எனத் தியாகய்யரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்திலும் ஏராளமான கர்னாடக இசைப் பாடல்களைப் பாடியிருப்பார். ஆயினும் அதை அவர் முதன்மையாக எடுத்துக் கொள்ளவில்லை. அரிதாகவே அதுபோல் பாடி வந்திருக்கிறார். இசையமைப்பாளர்களும் மெல்லிசைக்கு எஸ்பிபி, செவ்வியல் இசைப்பாடல்களுக்கு ஏசுதாஸ் என்று பிரித்துப் பார்க்கத் தொடங்கினர். அதே கே.வி.மகாதேவன் இசையில் ஏணிப்படிகள்(1979) திரைப்படத்தில் பாடிய பூந்தேனில் கலந்து என்ற பாடல் மிக அருமையான ஒரு பாடல்.

எழுபதுகளில் எஸ்பிபியை வைத்து அருமையான பாடல்களைத் தந்த இன்னொரு இசையமைப்பாளர் விஜயபாஸ்கர். கன்னடத்தில் முக்கியமான இசையமைப்பாளராக இருந்தாலும் தமிழிலும் மெல்லிசை பாணியில் எஸ்பிபியை வைத்து நல்ல பாடல்களைத் தந்திருக்கிறார். எங்கம்மா சபதம் (1974)திரைப்படத்தில் வரும் அன்பு மேகமே ஒரு சிறந்தபாடல். வாணி ஜெயராம் உடன் எஸ்பிபி பாடியிருப்பார். தப்புத்தாளங்கள் (1978) திரைப்படத்தில் ஸ்டைலாக ‘என்னடா பொல்லாத வாழ்க்கை!’ என்று பாடியிருப்பார் . விரக்தி கலந்த தத்துவப்பாடலை அலட்சியமாகப் பாடியிருப்பார். ஆடுபுலி ஆட்டம் (1977) திரைப்படத்தில் வானுக்குத் தந்தை எவனோ என்ற பாடலும் ஒரு சிறப்பான பாடல். ஆனால் விஜயபாஸ்கர் இசையமைத்த பாடல்களிலேயே எஸ்பிபியின் மாஸ்டர்பீஸ் திரைப்படம் மயங்குகிறாள் ஒரு மாது (1975) படத்தில் இடம்பெற்ற சம்சாரம் என்பது வீணை என்ற பாடல்தான்.  சந்தோஷம் என்பது ராகம் எனச் சொல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொப்பளிக்கும் அவரது குரலில். மறக்கமுடியாத பாடல்.

இதே காலகட்டத்தில் மிக முக்கியமான இசையமைப்பாளராக இருந்தவர்கள் சங்கர் கணேஷ். பட்டிக்காட்டு ராஜா (1975) என்ற திரைப்படத்தில் வரும் ‘ உன்னை நான் பார்த்தது வெண்ணிலா’ என்ற பாடல் நல்ல துள்ளலான பாடல்.

தாயில்லாமல் நானில்லை (1978)  திரைப்படத்தில் நடிகனின் காதலி நாடகம் ஏனடி பாடலும் அப்படியே. மனிதன் பாம்பாக மாறும் அல்லது பாம்பு மனிதனாக மாறும் வினோத கதையை வைத்து எடுக்கப் பட்ட படம் நீயா(1978). அந்தப் படத்தில் எஸ்பிபிக்கு நல்ல பாடல்களை அமைத்திருப்பார் சங்கர் கணேஷ். ‘நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா’ இளமைப்கொப்புளிக்கும் ஒரு பாடல். விழிகளில் தாபம் படமெடுத்தாடும் எனப் பாடும்போது நிஜமாகவே குரல் பாம்புபோல் வளைந்து நெளிந்து ஆடும். வாணி ஜெயராமுடன் பாடிய ‘ ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாட்டு இன்றும் ஜீவனுள்ள பாடல். அரவணைப்பு என்னும் சொல்லே பாம்புகள் பின்னிப் பிணைந்திருப்பதை வைத்து வந்த சொல்தானே. அதுபோல் ஜோடிக்குரல்கள் பின்னிப் பிணைந்திருக்கும் இப்பாடலில். அதே திரைப்படத்தில் அமைந்த  இன்னொரு க்ளாசிக் பாடல் ‘உன்னை எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பதில்லை’ என்ற பாடல்.

சங்கர்கணேஷ் இசையில் எண்பதுகளில் ஓ நெஞ்சே நீதான் (டார்லிங் டார்லிங் டார்லிங் 1981)  நான் உன்னை நெனைச்சேன் ( கண்ணில் தெரியும் கதைகள் -1980), அழகிய கொடியே ஆடடி ( தாய் வீடு 1983)  மாசி மாதம்தான் ( ஊர் காவலன்-1987) என நெஞ்சங்களில் நீங்காத பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார் எஸ்பிபி. ஆனால் அவரது இசையில் ஆகச் சிறந்த பாடல் என்றால் அது நட்சத்திரம் (1980) திரைப்படத்தில் வரும் அவள் ஒரு மேனகை பாடல்தான். சிவரஞ்சனி  என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் வேறு ஒரு இசையமைப்பாளர் போட்ட டயூன்தான் என்றாலும் அதைத் தமிழில் அழகாகக் கொண்டுவந்திருப்பார். எஸ்பிபி பாடிய மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று. சிவரஞ்சனி, பிலஹரி, சரஸ்வதி, கல்யாணி என அமைந்த ராகமாலிகை பாடல் அது.  சிவரஞ்சனி ……என உச்சஸ்தாயியில் எடுப்பார். அடுத்த வருடம் ஏக் து ஜே கேலியே திரைப்படத்தில் ‘தேரே மேரே பீச் மே’ என சிவரஞ்சனி ராகத்தில் ஹிந்தியில் பாடி இரண்டாவது தேசிய விருது வாங்குவதற்கான பயிற்சியாக அப்பாடல் அமைந்தது.

விஜயபாஸ்கர் போன்று கன்னடத்தில் புகழ்பெற்ற இன்னொரு இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ்.  கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கு ஏராளமான பாடல்களை இசையமைத்தவர். இளையராஜா ஆரம்பத்தில் இவரிடம்தாம் உதவியாளராக இருந்தார். இவரது இசையில் பொண்ணுக்குத் தங்க மனசு (1973) என்னும் திரைப்படத்தில் ‘ தேன் சிந்துதே வானம்’ என்ற அருமையான பாடலை எஸ்பிபி  பாடியிருப்பார்.

மலையாளத்தில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷ்யாம் .  ந்யூ  டெல்லி, சி.பி.ஐ டைரிக் குறிப்பு போன்று மலையாளத் திரைப்படங்களின் வீச்சை வெளிப்படுத்திய திரைப்படங்களின் இசையமைப்பாளர். அவர் எஸ்பிபிக்கு மிகப் பிரமாதமான ஒரு பாடலைத் தமிழில் தந்திருக்கிறார்.

மனிதரில் இத்தனை நிறங்களா(1980) என்ற திரைப்படத்தில் அமைந்த மழை தருமோ என் மேகம் என்ற பாடல்தான் அது.. இனிமையும் நெகிழ்வும் ததும்பி வழியும் பாடல் அது.எஸ்பிபியைத் தவிர வேறு யார் குரலிலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.

இன்னும் எண்பதுகள், தொண்ணூறுகளில் பல இசையமைப்பாளர்களின் மெகா ஹிட் பாடல்களுக்குக் குரல் கொடுத்தவர் எஸ்பிபி..

அது அடுத்த கட்டுரையில்…

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. எஸ் பி பி: காதலிக்க வந்த கலைஞன் 2 -டாக்டர். ஜி. ராமானுஜம்
  2. எஸ்.பி.பி: காதலிக்க வந்த கலைஞன் 1 - டாக்டர் ஜி. ராமானுஜம்