“கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல் அதிகம் கிடைக்குமென்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல் தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்!”
– கலாப்ரியா எழுதிய இந்தக் கவிதை தமிழ் இலக்கியத்தில் பிரசித்தம்.
தமிழ் சினிமாக்களில் குடும்பத்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தாங்களே குடும்பத்தை நடத்திக்கொள்ளத் துணிவதும் ஏதேனும் ஒரு மூத்த குழந்தை, தம்பி தங்கைகளை வளர்க்கக் கூலித் தொழிக்கோ திருடுவதற்கோ செல்கிற, கழிவிரத்தைக் கோரும் காட்சிகளை நிறைய பார்த்திருக்கிறோம். தமிழ் சினிமா இயக்குநர்கள் அதற்கெனவே சிறப்பு மாண்டேஜ் காட்சிகள் நிறைந்த பாடலொன்றை வைத்து ஒப்பேற்றிவிடுவார்கள்.
நேபாள மொழி பேசும் அசாம் மாநிலத்திலிருந்து முதல் படமாக “பகுனா”வைத் தயாரித்துள்ளார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.பாஹி டயர்வாலா என்கிற இந்தியப் பெண் இயக்குநர், இளம் எழுத்தாளர் பிஷ்வாஸ் டிம்ஷினா என்பவரை வசனகர்த்தாவாகக் கொன்டு திரையில் ஒரு அற்புதத்தை நிகழ்த்த முயன்றிருக்கிறார்.
நாட்டின் எல்லைகள் வெறும் கோடுகளாலானது:
+அசாம் மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட நேபாள மொழிப் படமாக “பகுனா” அமைந்துள்ளது. நிலம், மொழி, இனம் இவற்றின் கோடுகளைக் கலை என்னும் பொருண்மை பொருட்படுத்துவதே இல்லை.
2018ல் வெளியான இந்தத் திரைப்படம், ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேசக் குழந்தைகள் திரைப்பட விழாவில் சிறப்பு கவன விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதையும் பாதங்களும்:
பயணத்தை ஒட்டி அமையும் திரைக்கதை இயல்பாகவே ஒரு செவ்வியல் தன்மையை நெருங்கிவிடும்.
நேபாளத்தில் மாவோயிஸ்ட் புரட்சி, துப்பாக்கியின் பேரொலி, அதனால் இடம்பெயரத் துடிக்கும் ஒரு குடும்பம். 5 உறுப்பினர்கள் கொண்ட அதில் குடும்பத் தலைவரும் தலைவியும் திசை மாறிவிட, மூன்று குழந்தைகளும் ஊர்மக்களோடு சேர்ந்து இந்திய எல்லை இருக்கும் பகுதிக்கு வந்து சேரும் பயணத்தில் தொடங்குகிறது திரைப்படம்.
வழி தவறும் குட்டி ஆடுகள்:
கூட்டத்தில் வயதான மனிதரொருவர் அவிழ்த்துவிடும் ஒரு கதையைக் கேட்டுக் குழந்தைகள் அச்சமுறுகின்றனர்.
அடைக்கலம் தேடிச்செல்லும் தேவாலயத்திலிருக்கும் பாதிரிகள் குழந்தைகளைத் தின்பர், நேபாளிகள் அசல் மதத்தை இழக்க நிர்பந்திக்கப்படுவர் என்றெல்லாம் அவர் கூறும் வார்த்தைகள் குழந்தைகள் தலைக்கேறிக் கொள்கின்றன. ஏற்கனவே தாய் தந்தையரைத் தொலைத்துவிட்டு நிற்கும் அவர்கள் அடைக்கலம் தேடிச்செல்லும் ஆலயப் பாதிரியார்கள் குறித்தும் கவலையுறுகின்றனர்.
மூத்த குழந்தை அம்ரிதா, மூத்த பையன் பிரணய் இருவருக்குள்ளும் பிரியும் வேளையில் அம்மா கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அம்மா கூறியபடி எந்த சூழலிலும் குட்டிக்குழந்தை பிஷாலைக் காப்பாற்றவேண்டும் என்ற பொறுப்பை மற்ற இரு வளர்ந்த குழந்தைகளும் ஏற்றுக் கொள்கின்றன. இரு குழந்தைகளும் கூட்டத்திலிருந்து விலகி காட்டுக்குள் தனித்து செல்கின்றனர்.
ஏழு, எட்டு வயதுடைய இரண்டு குழந்தைகளும், பிறந்து சில மாதங்களேயான தம்பிக்குழந்தையை அந்த மலைப்பிரதேசத்தில் எப்படி வளர்த்தன? குழந்தைகள் தாய் தந்தையரை சென்று அடைந்தனரா? என்பதே படம்.
பிஞ்சுத் தோள்களின் பாரம்:
ஒரு திரைப்படத்தை இரண்டு பிஞ்சுகள் தோள்களில் தாங்குகின்றன. இயக்குநர் டயர்வாலா ஒரு நேர்காணலில் கூறுகிறார். “பல்வேறு பள்ளிக்குழந்தைகளை நாங்கள் நேர்காணல் செய்தோம். அந்த சிறுவனும் சிறுமியும் எப்படி இருக்கவேண்டும் என்று என் மனதில் ஒரு தெளிவான படத்தை வைத்திருந்தேன்”.
இருவரது நடிப்பும் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. படம் முடிந்து நெடுநேரமாகியும் அந்த சிரிப்பும் கண்களும் நம்முடனே பயணம் செய்கின்றன.
இருளைக் கண்டு பயப்படும் ப்ரணய்க்கு அம்ரிதா வெளிச்சமாக இருக்கிறாள். நீர்வீழ்ச்சியின் கரையில் தண்ணீர் எடுக்க மூங்கில் கழிகளைப் பிளந்து குழாய்கள் அமைத்துத் தரும் ப்ரணய், அம்ரிதாவுக்கு உற்ற துணையாக இருக்கிறான்.
குழந்தைகளைப் பொறுத்தவரை வாழ்க்கை என்பதே சொப்பு சாமான்களை வைத்து விளையாடும் விளையாட்டைப் போலத்தான். ஆனால் வயதில் மூத்தவர்களான நாம் தான் கிடந்து அலட்டிக்கொள்கிறோம்.
ஆபத்தில்லா வளைவுகள்
சிறு பிள்ளைகளுக்குப் பெரியவர்கள் அளவுக்கு சாமர்த்தியம் போதாது என்பதே நமது கணிப்பு. தனித்து விடப்பட்ட பிரதேசத்தில் இந்த இரு குழந்தைகளும் என்ன செய்யப்போகின்றன என்ற பதைபதைப்பு படம் முழுக்க பார்வையாளர்களை சூழ்ந்துகொள்கிறது.
படத்தின் துவக்கம் முதலே அந்தப் பதைபதைப்பு நம்மை உதைக்கத் தொடங்கிவிடுகிறது. ஆனால் அந்த உதைத்தல், கையில் ஏந்தியிருக்கும் குழந்தை பசிக்கு வீறிட்டுக் கால்களால் எத்துவதைப் போல சீராக இருக்கிறது.
படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட திடீர்த் திருப்பங்கள் இல்லை. மலைச்சாலைகளில் ஏற்படும் இயல்பான வளைவுகளாக அவை இருக்கின்றன.
இரண்டு புதிய மனிதர்கள் அந்தக் காட்டுக்குள் அக்காவுக்கும் தம்பிக்கும் வழித்துணையாக வருகின்றனர். அந்தக் காட்சிகள் அத்தனை அற்புதமாகப் பொருந்தியிருக்கின்றன.
கர்ப்பிணிப் பெண் ஒருத்திக்கு அம்ரிதா துணையாகிறாள். வயதான மனிதருக்குத் துணையாக, ப்ரணாய் வேலைக்குச் செல்கிறான். இருவருமாக நேரம் ஒதுக்கி, தம்பி பிஷாலை கவனித்துக் கொள்கின்றனர். இருவரும் அவர்கள் வரைந்த வீட்டுக்கு வண்ணமாகப் பொருள் ஈட்டுகின்றனர்.
சிறு சிறு காட்சிகள் எதிர்பாராமல் அசர வைக்கின்றன.
வனையப்படும் புதிய பாதைகள்:
பெரியவர்கள் கற்பிதமாகக் கூறும் விஷயங்கள் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிகின்றன. மதம், சாதி குறித்தெல்லாம் குழந்தைகள் இவ்வாறுதான் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
வாழ்வென்பது ஒரு தூரப்பயணம். அதை யார் பொருட்டும் எதை முன்னிட்டும் எவரும் நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
பெற்றோர்களைத் தொலைத்த பிறகும் பிள்ளைகள் இங்கு பிழைப்பதற்கு வழி இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் ஒரு பிடிமானம் தேவைப்படுகிறது. இங்கு அந்தக் குழந்தை ஒரு பிடிமானம்.
பிடிமானம் இல்லாதுபோனாலும் என்ன? அவரவரை அவரவரே முன்னிறுத்தி வாழ்தல் நலம்.
கைவிடப்பட்ட குழந்தைகள் இந்த வாழ்க்கையை எத்தனை புரிதலோடு அணுகுகின்றன என்பது வியக்க வைக்கிறது. அது புரிதல் அல்ல, விவரம் தெரியாமையால் வரும் அசட்டு தைரியம் என்று கூட நாம் வரித்துக்கொள்ளலாம். குழந்தைகள் அவ்வப்போது கலங்குகின்றனவே தவிர, ஒருபோதும் உடைவதேயில்லை. நம்பிக்கையைக் கனிவான வழிபோக்கனாக்குகிறது திரைக்கதை.
குழந்தைகளின் அப்பழுக்கற்ற பார்வையின் வழியாக ஒரு வாழ்க்கையை தரிசிக்க வைத்திருக்கிறது இத்திரைப்படம்.
Pahuna: The little visitors
Language: Nepali
Year: 2018
Platform: Netflix
–