அரபியிலிருந்து தமிழில்: முனைவர் அ. ஜாகிர் ஹுசைன்
மடையர்கள்… வெட்கம் கெட்டவர்கள்… வேலை வெட்டி இல்லாமல் நான் சும்மா இருக்கிறேனாம்… ஒவ்வொரு நாளும் எவ்வளவு க~;டமான பெரிய வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன் … தெரியுமா அவர்களுக்கு?…
ஐந்தாண்டுகள் இறக்குமதி ஏற்றுமதி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தேன். நான்கு மணி நேரம்… ஒரு சாதாரண வேலை…. என் மனைவி ஷிகோரெலிலில் ஒரு கடையில் டெய்லராக வேலைபார்த்துவந்தாள். அவளுக்கு எட்டு மணி நேரம் வேலை. என்னைவிட இரண்டு மடங்கு சம்பளம்.
திடீரென கம்பெனியிலிருந்து விலகிவிட்டேன். அதற்குப் பிறகு புதிய வேலை தேடி கம்பெனிகள் , தொழிற்சாலைகள் , அரசு அலுவலங்கள் ஒன்று விடாமல் பல நாட்கள் ஏறி இறங்கினேன். கடைசியில் என் ஷு தேய்ந்து காலுறைகள் என் கால்களில் ஒட்டிக்கொண்டதுதான் மிச்சம்… வேலை தேடும் நேரம் போக மற்ற நேரங்களில் மனைவி வரும்வரை வீட்டு வேலைகள் செய்வேன். பாத்திரம் கழுவுதல் வீடு பெருக்குதல் , பர்னிச்சர்களைச் சுத்தம் செய்தல் , குழந்தைகளைக் கவனித்தல் போன்ற வேலைகளைச் செய்வேன். எனக்கு மூன்று குழந்தைகள். ஒரு மகள் , இரண்டு மகன்கள்… மனைவி வீட்டுக்கு வரும்போது வீடு சுத்தமாக இருப்பதைப் பார்த்துச் சந்தோசப்படுவாள். நீண்டநாள் அனுபவமுள்ளவன் சுத்தம் செய்ததைப்போல வீடு பளிச்சென இருக்கும்…
சில நாட்களுக்குப் பிறகு வீட்டுவேலைகள் செய்வது எனக்கு முக்கியமாக பட்டது. ஒன்றுவிடாமல் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். எந்தப் பிரயோஜனமுமில்லாமல் கம்பெனிகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் வேலை தேடி அலைவதை அடியோடு நிறுத்திவிட்டேன். இனி கால்களுக்கு ஓய்வு. ஷுக்களைப் பத்திரப்படுத்திவைத்தேன். வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகள் முதற்கொண்டு எல்லா வேலைகளையும் ஆர்வத்துடன் சுறுசுறுப்படன் செய்ய ஆரம்பித்தேன். கிழிந்த ஆடைகளைத் தைப்பது, குழந்தைகளுக்குத் தலைவாரிவிடுவது எல்லாவற்றையும் சீக்கிரமாகக் கற்றுகொண்டேன். கடைசி குழந்தைக்குத் தூக்கம் வரும்போது இனிமையாகத் தாலாட்டுப் பாடி தூங்கவைப்பேன் – சில பாடல்களை நானே சொந்தமாக எழுதினேன் – என் இனிமையான குரலைக்கேட்டு ஒரு நொடியில் குழந்தை தூங்கிவிடும். சமையல் செய்வதற்கும் கற்றுக்கொண்டேன். மளிகைக்கடைகாரனிடமும் , காய்கறிக்கடைக்காரனிடம் பேரம் பேசுவதற்கும் பழகிவிட்டேன். வீட்டிலுள்ள பெண்கள்கூட இந்தத் திருடர்களிடம் என்னைப்போல பேரம் பேசமாட்டார்கள். துணி துவைக்கவும் தெரியும்… இப்போது ஒன்றுவிடாமல் எல்லா வீட்டு வேலைகளுக்கும் எனக்கு அத்துப்படி…
வேலைக்குப் போகாமல் மனைவியின் சம்பாத்தியத்தில் வீட்டில் உட்கார்ந்துப் சாப்பிடுகிறேன் என்று ஊர்க்காரர்கள் பேச ஆரம்பித்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செல்லும்போது என்னை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். முட்டாள்கள்… விவரம் தெரியாதவர்கள்… நான் எவ்வளவு பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் எவ்வளவு க~;டப்படுகிறேன்… எதுவும் அவர்களுக்கு தெரியாது…
நான் இப்படி வீட்டிலேயே இருப்பது சில நேரம் மனைவிக்கு பிடிக்காது. அதற்காக சண்டைபோடமாட்டாள். எப்போதும் அமைதியாகவே இருப்பாள். கோபம் அதிகமானால்கூட எப்போதாவது எதையாவது சொல்வாள்… அவ்வளவுதான்… படுக்கச்செல்லும்போது மட்டும் சிரமப்பட்டு அவளைப் பார்த்து லேசாக ஒரு சிரி சிரிப்பேன். வீட்டுவேலைகளில் இதுதான் எனக்கு ரொம்பவும் க~;டமான வேலை…
இப்படியே ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன…
ஒரு நாள்…
எப்போதும் போல மனைவி வேலைக்குப் போனாள். முகம் கழுவி விடுவதற்காக கடைசி குழந்தையைத் தேடினேன். என் மகள் குழந்தைக்கு முகம் கழுவிக்கொடுத்துக்கொண்டிருந்தாள்… என்ன இது? எந்த உரிமையில் என் மகனுக்கு முகம் கழுவிவிடுகிறாள்?… பெரிய மனு~p ஆகிவிட்டாளா?… இப்போது அவளுக்குப் பத்து வயதுதான்… என் வேலைக்குப் போட்டியாக வருவாளோ? வேலையைவிட்டு என்னைத் துரத்திவிடுவாளோ?… வேலை போய்விடுமோ?… கூடாது… ஒருபோதும் இது நடக்கக்கூடாது…
ஒரு அறைவிட்டு அவளுடைய கையிலிருந்து குழந்தையை வாங்கி நான் முகம் கழுவிவிட்டேன். அவள் என் முகத்திற்கு நேராகக் கத்தினாள்: “ஏன் வேலை தேடி போகாம அம்மா சம்பாத்தியத்தில வீட்ல உட்கார்ந்து சாப்பிட்டு இருக்கிறீங்க?”
திமிர்பிடித்தவள்… ஒழுங்காக வளர்க்கவில்லை… தந்தையிடம் இப்படி பேச எங்கிருந்து வந்தது இவ்வளது துணிச்சல்? யார் சொல்லிக்கொடுத்தது? ஒழுங்காக வளர்க்கவேண்டும்… இனி தந்தையிடம் எப்படி மரியாதையுடன் பேசவேண்டும் என்று பாடம் புகட்டவேண்டும்…
கோபம் தலைக்கேறி அவளை அடிக்க ஆரம்பித்தேன்…கதறி அழுதாள்… கண்டுகொள்ளாமல் முடியைப் பிடித்து இழுத்து அவளுக்கு முகம் கழுவிவிட்டேன்…வலுக்கட்டாயமாக உட்காரவைத்து தலைவாரி சடைபின்னிவிட்டேன். இது என் வேலை… எனக்குப் போட்டியாக வர யாரையும் விடமாட்டேன்…
மாலையில் எப்போதும் போல மனைவி களைப்பாக வீட்டுக்கு வந்தாள். அதற்குள் மகள் புகார் சொல்ல ஆரம்பித்தாள். நானும் என் பக்கத்து நியாயங்களைச் சொன்னேன். பொறுமையிழந்த மனைவி ஆத்திரத்தில் கத்தினாள்: “இரண்டுபேரும் கொஞ்சம் வாயை மூடுறீங்களா? எதையும் எனக்குக் கேட்கவேண்டாம்” சிறிது நேரம் கழிந்து மகளை அழைத்து மார்போடு அணைத்து தலையில் முகம் பதித்து அழுதாள்.
அன்று முதல் ஒவ்வொரு நாளும் எனக்கும் மகளுக்குமிடையே ஓயாமல் சண்டை நடந்துகொண்டேயிருந்தது… சர்வ சாதாரணமாக என்னை வேலையிலிருந்து விரட்ட நினைத்தாள்… இதனால் அவளை வெறுக்க ஆரம்பித்தேன்…
இனி வீட்டு வேலைகள் மட்டும் செய்தால் போதாது. மகள் என் உரிமையில் தலையிடாமல் பார்;த்துகொள்ளவேண்டும். அதுதான் முக்கியமான வேலை. இதற்கு முன்பு பர்னிச்சர்களைச் சுத்தம் செய்வது , வீடு பெருக்குவது , உருளைக் கிழங்கின் தோலை உரிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகளில் அவள் எனக்கு உதவுவாள். இப்போது எந்த வேலையையும் அவளைச் செய்யவிடவில்லை.
எங்களுக்குள் ஓயாமல் நடந்துவந்த இந்தச் சண்டையால் ஒரு முடிவுக்கு வந்தேன். இனி எனது முக்கியத்துவத்தை மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் புரியவைத்தால் மட்டும் போதாது. முதலில் நாம் அதை நிரூபித்துக் காட்டவேண்டும். முன்பைவிட முழு ஈடுபாட்டுடன் வீட்டுவேலைகள் செய்ய ஆரம்பித்தேன். திடீரென ஒரு விபரீத எண்ணம். மீண்டும் ஒரு முறை மனைவியைக் கர்ப்பமாக்கினால்…அவள் கர்ப்பமானாள்… அவளுடைய வயிறு பெரிதாக பெரிதாக எனது செல்வாக்கு அதிகரித்தது. இழந்த கர்வம் திரும்பக் கிடைத்தது. நான் ஒரு ஆண்மகன்… நான் ஒரு ஆண்மகன் என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும்… குழந்தைகள் உருவாக காரணம் நான்… என் மனைவின் வயிறு பெரிதாக காரணம் நான்… என் ஒத்துழைப்பு இல்லாமல் அவளால் மட்டும் இந்த வேலையை செய்ய முடியாது… இது அவளுக்கும் தெரிந்திருக்கும்…
பெண் குழந்தை பிறந்தது… பலவீனமான… ஆரோக்கியமில்லாதக் குழந்தை… அன்றுமுதல் குழந்தையின் முழு பொறுப்பும் என்னுடையது… குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுப்பது, டிரஸ் மாற்றுவது, குளிப்பாட்டுவது என சகலவேலைகளையும் நானே செய்துவந்தேன். இரவு பகல் முழுவதும் குழந்தைக்குப் பக்கத்திலேயே நின்றுகொண்டிருப்பேன். இது மிகவும் சிரமமான வேலை. என்னைப்போல எந்தத் தாயுமே இப்படி க~;டப்படமாட்டாள். இந்த வேலைக்கு என்ன பரிசு தந்தாலும் அதற்கு நான் தகுதியானவன். குறைந்தபட்சம் என் மனைவி ஒரு புதிய ஷு வையாவது வாங்கித்தரவேண்டும்.
ஒரு நாள் அவளிடம் புதிய ஷு வாங்கிக் கேட்டேன். அவளுடைய உடலிலிருந்து ஒரு மாமிசத் துண்டைக் கேட்டதைப்போல கோபப்பட்டாள். உண்மையில் அவள் கஞ்சம் இல்லை. அவளுடைய சம்பளத்தில் எனக்காக எதையும் வாங்கித்தர முடியாத சூழ்நிலை அவளுக்கு…
ஒரு நாள் மாலையில் அவள் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். வரும்போது கிழிந்துபோன பழைய ஷுவை மாட்டிக்கொண்டு அவளுக்கு முன்னால் நிற்கவேண்டும். குழந்தையையும் வீட்டு வேலைகளையும் எப்படியெல்லாம் பார்த்துக்கொள்கிறேன் , இந்த வீட்டிற்காக எப்படி மாடாக உழைக்கிறேன் , பத்து வேலைக்காரர்கள் செய்யக்கூடிய வேலையை ஒருத்தனாக எப்படி சமாளிக்கிறேன் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி புரியவைக்க வேண்டும்… அப்போது அவளுக்கு நம்மீது பரிதாபம் ஏற்படும்…
அப்படியே செய்தேன்… ஆனால் அவள் எதையும் கண்டுகொள்ளவில்லை… ஒருவேளை நான் சொன்னதை அவள் கேட்கவில்லையோ… விடக்கூடாது… எப்படியும் புதிய ஷு வேண்டும் என்பதை வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டியதுதான்… ராக்கெட் புறப்படுவதைப் போல ஒரு காட்டுக் கத்தல்: “அதெல்லாம் முடியாது”… கடுமையாகத் திட்டினாள்… அதை உங்களிடம் சொல்ல எனக்கு மனமில்லை… எனக்குப் பிடிக்காத என் மகளுக்கு முன்னால் என்னைத் திட்டியதைத்தான் என்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. மகளின் முகத்தில் அவ்வளவு சந்தோசம்… விடக்கூடாது… மனைவிக்குப் பதிலடி கொடுக்கவேண்டும்… அவளைவிட மோசாகத் திட்டவேண்டும்… அன்பு மனைவியை அடிக்க நினைத்தேன்… அடிக்க கையை ஓங்கியபோது குழந்தை அழும் சப்தம் கேட்டது. குழந்தையை எடுக்க ஓடினேன். எனக்கு முன்பாக எனக்குப் பிடிக்காத மகள் குழந்தையை எடுத்துவிட்டாள். எனக்குப் பைத்தியமே பிடித்துவிட்டது. முழு பலத்தையும் பயன்படுத்தி ஒரு அறை… அவள் கீழே விழுந்தாள்…ஷு கால்களால் மிதித்தேன். இந்தக் கலவரத்தில் அவளுடைய கையிலிருந்த குழந்தைக் கீழே விழுந்து அடிபட்டு இறந்தேவிட்டது…
காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டேன்… வருந்தினேன்… நான் இவ்வாறு நடந்துகொண்டதில் சில நியாயங்களும் உண்டு. ஒரு வேலைக்காரனுக்குப் போட்டியாக இன்னொருவன் இடையில் வந்து வேலையைவிட்டு அவனைத் துரத்த நினைத்தால் இப்படித்தானே ஆத்திரம் வரும்… நான் ஏதோ வீட்டு வேலைகளைச் செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். அதைக் கெடுக்க அவள் முயற்சிசெய்துகொண்டேயிருந்தாள். அதுவுமில்லாமல் அவள் என் மகள். அவள் எனக்கு மரியாதைத் தரவேண்டுமா இல்லையா?
என் மனைவி புத்திசாலி… இனி மகளை வீட்டில் விட்டால் சரியாக வராது என முடிவுசெய்து அவள் வேலைபார்க்கும் ஷிகோரெலிலில் மகளுக்கு உதவி டெய்லர் வேலை வாங்கிக்கொடுத்து தன்னுடன் அழைத்துச் செல்ல ஆரம்பித்தாள்…
இப்படித்தான் சண்டை ஓய்ந்தது…
எப்போதும் போல வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்துவந்தேன். இப்போது எனக்குப் போட்டி யாருமே இல்லை. என் வருங்காலத்திற்கு எந்த ஆபத்துமில்லை.
நான் வெறுக்கும் என் மகள் முதல் மாத சம்பளத்தை என்ன செய்தாள் தெரியுமா?
எனக்கு புதிய ஷு வாங்கித்தந்தாள்…
என்ன… நம்பமுடியவில்லையா?…