அ. முத்துலிங்கத்தின் “கடவுள் தொடங்கிய இடம்” நாவலில் விஸா இல்லாமல் கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு முயற்சிக்கும் ஈழ அகதிகளை ஒரு முகவர் உக்ரேனில் ஒரு வீட்டில் தங்க வைக்கிறார். அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவதில், தூங்குவது, ஒரே தமிழ்ப் படத்தை வீடியோ கேஸட்டில் திரும்பத் திரும்பப் பார்ப்பது என கழிக்கிறார்கள். அவர்களுடைய சமையலுக்கான கறி, மீன், காய்கனி உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பொறுப்பை கேயார் என்பவர் மேற்கொள்கிறார். துபாயில் வேலை செய்து அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு உக்ரெய்ன் வந்த புஷ்பநாதன் என்பவர் தன்னை வீரசைவ வேளாளர், ஊரில் பெரிய குடும்பம் என பெருமைப்பட்டுக் கொள்பவர். உணவு விசயத்தில் கேயாருக்கும் புஷ்பநாதனுக்கும் அடிக்கடி மோதல் வரும். புஷ்பநாதன் கோபத்தை கட்டுப்படுத்த தெரியாமல் கத்த ஆரம்பித்தால் அவராக அமைதியானால் தான் உண்டு. ஒருநாள் மலிவான மீன்களை கேயார் வாங்கி வர அதனால் புஷ்பநாதன் கடுப்பாகி அவரை கத்தியால் குத்திக் கொன்று விடுகிறார். அவருக்கு உக்ரெய்ன் சிறையில் ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது.
கதையின் பிரதான பாத்திரம் நிஷாந் அவரை சிறையில் கண்டு பேசும் போது சவுதியில் இருக்கும் தன்னுடைய மகளுக்கு சாக்லேட் வாங்கி அனுப்ப முடியுமா எனக் கேட்கிறார். அவர் தன் மகளை இருபதாண்டுகளுக்கு முன் பார்த்திருக்கிறார். அவரிடம் உள்ளது அவளுடைய சிறுவயது புகைப்படம். தன்னிடம் இருந்து சாக்லேட் வந்தால் மகள் உற்சாகத்தில் துள்ளிக்குதிப்பாள் என்கிறார். இவர் ஏன் இப்படி கட்டுப்பாடற்ற கோபமும், அர்த்தமற்ற தற்பெருமையும் படைத்த மனிதராகிப் போனார் எனும் கேள்வி அப்போது நமக்கு எழுகிறது. நிஷாந் இந்த அகதிகளின் மனநிலை பற்றி அம்பிகாபதி மாஸ்ரர் என்பவரிடம் புலம்புகிறார். அவர் அவனிடம் “ஒருவன் ஏழையாக இருக்கலாம். புகழ் இல்லாமல் இருக்கலாம். படிப்பில்லாமல் இருக்கலாம். உற்றார், உறவினர், நண்பர் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாடு இல்லாமல் இருப்பது கொடுமையானது. அது ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய ஆக மோசமான தண்டனை. அவர்கள் அப்படி பிறக்கவில்லை. இலங்கையை விட்டு புறப்பட்ட போது அப்படி இருக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை அவர்களை மாற்றி விட்டது.” எனக் கூறுகிறார். இந்த உரையாடல் நாவலின் முக்கியமான இடம்:
இந்த அகதிகள் தம் நாட்டு மண்ணிடம் இருந்து மட்டுமல்ல குடும்பத்திடம் இருந்தும் தான் பிரிந்து வந்திருக்கிறார்கள். ஒருவித உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கும் ஆளைப் போன்று அவர்கள் இருக்கிறார்கள். ஒன்று அவர்கள் வாழ்வில் அக்கறையற்றவர்களாக முழுக்க கேளிக்கையில் மூழ்குகிறார்கள். கேயார் கொல்லப்பட்ட அன்று உக்ரெய்ன் போலிசார் புஷ்பநாதனுடன் பிற அகதிகளையும் சேர்த்து பிடித்துக் கொண்டு போய் வைத்து அடிக்கிறார்கள். புஷ்பநாதனே கொலையாளி என நிஷாந் சொன்ன பின்னரும் அவர்கள் அடிக்கிறார்கள். இதை நிஷாந் ரஷ்ய மொழியில் குறிப்பிட்டதும் அவர்கள் அடிப்பதை நிறுத்துகிறார்கள். (சொந்த மண்ணை இழந்தவர்களை வதைப்பது போலிசாருக்கு எவ்வளவு எந்திரத்தனமாக மாறுகிறது எனப் பாருங்கள்!) விடுவிக்கப்பட்ட அகதிகள் வீட்டுக்குத் திரும்புகிறார்கள். அங்கு கேயாரின் உடல் அகற்றப்படாமல் அப்படியே கிடக்கிறது. அகதிகள் அதைப் பொருட்படுத்தாமல் அன்று எந்த மீனுக்காக அந்த கொலை நடந்ததோ, எதற்காக புஷ்பநாதன் அப்போது கைதாகி இருக்கிறாரோ, அந்த மீனை சமைத்து கோதுமைப்புட்டுடன் சாப்பிடுகிறார்கள். மீன் சுவையாகவே இருந்ததாக உணர்கிறார்கள். அவர்கள் சம்பவம் நடந்த போது பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ப் படத்தை விட்ட இடத்தில் இருந்து பார்க்க ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவு தான் – அந்த கொலை, ரத்த சகதி, பிணம் எதுவும் தம்மை பாதிக்காதது போல நடந்து கொள்ள முயல்கிறார்கள். இது ஒரு தற்காப்பு மனநிலை. அல்லது, இந்த மக்கள் வன்முறை, கோபம் என உருமாறுகிறார்கள். அல்லது அவர்களில் மிகச்சிலர் முடிந்தளவுக்கு படிப்பு, காதல், இயற்கையில் ஆர்வம் என தம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க முயல்கிறார்கள். என்னால் தனிப்பட்ட முறையில் புஷபநாதனின் கட்டற்ற கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
நான் பெங்களூருக்கு வந்த போது என் குடும்பத்தையும் இழந்து விட்டிருந்தேன். போகப் போக நான் மிகவும் துண்டிக்கப்பட்ட மனிதன் ஆனேன். எனக்கு புதிய உறவுகளை ஏற்படுத்துவதில், புதிய விசயங்களை அறிவதில், புதிய இடங்களுக்கு செல்வதில் ஆர்வம் மிகவும் குறைந்தது. முன்பு நான் எதனாலும் சலனப்படாதவனாக இருந்தேன். இப்போதோ சின்னச் சின்ன தூண்டுதல்கள் என்னை கடுங்கோபம் கொண்டவனாக்கின. ஒருவித கட்டுப்படுத்த முடியாத கோபம் அது. ஒருநாள் என் முஷ்டி முழுக்க கிழிந்து வீட்டுக்கு ரத்தம் சொட்டச் சொட்ட திரும்பினேன். அப்போது எனக்கு இன்னொரு பிரச்சனை ஏற்பட்டிருந்தது – என் உடம்பில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டினாலும் சுத்தமாக வலிக்காது. ஆனால் ஊசியால் குத்தினாலோ அடிபட்டாலோ வலிக்கும். வலியில்லாமல் என் உடல் குருதி சிந்துவதை, அதை தீராக்கோபத்தின் ஆவேசத்தில் உடல் பஞ்சு போலாகிட, நான் பார்த்துக் கொண்டிருந்தேன். கழுவுத்தொட்டியில் நீரைத் திறந்து விட்டு கையை அலம்பினேன்.
ரத்தம் நீண்ட நேரமாக நிற்கவில்லை. அந்த ரத்தம் எனக்கு என் உடல் சொல்ல முயலும் ஒரு அந்நிய மொழியிலான சேதியைப் போல இருந்தது – நான் என்னில் இருந்தே முழுக்க துண்டிக்கப்பட்டது போல உணர்ந்தேன். அந்த நொடியில் நான் உணர்ந்து கொண்டு பிரக்ஞை பூர்வமாக என்னை அதில் இருந்து விடுவித்தேன். எப்போதெல்லாம் கோபம் கண்ணை மறைக்கிறதோ “உனக்கு என்ன நடக்கிறது என்று கவனி. கடுங்கோபத்தை யாரிடமும் எங்கும் காட்டாதே. காட்டினால் அது முடிவுறாமல் ஒரு சுழற்சியாக திரும்பத் திரும்ப தோன்றும்” என சொல்லிக் கொள்வேன். அப்படித்தான் ஓரளவுக்கு அதில் இருந்து விடுபட்டேன். ஒரு புதிய ஊருக்கு வருவது, சமூகமாக்கல் செய்வதற்கு சொந்த மக்கள் இல்லாமல் இருப்பது, விரும்பிய பண்பாட்டு உலகத்துடன் உறவாட முடியாமல் போவது நம்மை மிதக்கும் மனிதர்கள் ஆக்குகிறது.
நாம் இந்த அந்நிய மண்ணில் உறவுறுத்த முயலும் நபர்களும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்பது கொடுமை. இரண்டு அக்டோபஸ்கள் கைகுலுக்குவது போலத்தான் அது இருக்கும். உ.தா., சென்னையில் நாம் ஒருவரை சந்தித்து பேசி ஒரே நாளில் உயிர் நண்பர்களாகி விடுவோம். இந்த ஊரில் நாம் சொந்த மொழி பேசும் ஒருவரை சந்தித்து உரையாடுவது காற்றில் மிதக்கும் பஞ்சுகள் பரஸ்பரம் உரசிக் கொள்வதைப் போலவே இருக்கும். எனக்கு இதை எப்படி விளக்குவது எனத் தெரியவில்லை – ஆனால் மனித உறவுகள் ஆத்மார்த்தமாக உயிரோட்டமாக தோன்றுவதற்கும் வாழ்நிலத்துக்கும் ஏதோ தொடர்புள்ளது என நினைக்கிறேன்.
ஒரு உதாரணம் சொல்வதென்றால், நான் சென்னையில் ஒரு நண்பரை சந்திக்கிறேன். அவருடைய வீட்டுக்கு என்னை அழைக்கிறார். நான் அவருடைய வீட்டை கண்டுபிடித்து செல்லும் வழியும் சாலையிலும் டீக்கடைகளிலும் பார்க்கும் ஆட்களுடன் எத்தனையோ சமிக்ஞைகளை பரிமாறுவேன், சின்னச்சின்ன உரையாடல்களில் ஈடுபடுவேன். சுவரொட்டிகளை படிப்பேன். அரட்டைகளை கவனிப்பேன். சாலையில் போகும் ஒரு ஊர்வலத்தை கவனிப்பேன். அந்த வழியில் அந்த மண் தன்னை பலவிதங்களில் எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும். வாழ்நிலமானது ஒரு உயிருள்ள பிராணி என இதனாலே நினைக்கிறேன்.
ஆனால் மொழியும் பண்பாடும் புரியாத ஒரு வாழ்நிலத்தில் நீங்கள் பயணிக்கும் போது அது உங்களுக்கு எதையும் உணர்த்தாது. அது அவநம்பிக்கையுடன் உங்களை கண்காணித்து அமைதியாக உங்களுக்கு வழிவிடும். ஏதோ கனவில் சஞ்சரித்து யாரையோ சந்தித்து மீளும் உணர்வே உங்களுக்கு இருக்கும்.
இந்தியாவுக்குள் இருக்கும் ஒரு மாநிலமே எனக்கு திறந்த சிறைச்சாலையாக தோன்றுகிறது என்றால் ஸ்லோவேக்கியா, போலந்து, உக்ரெய்ன், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகள் எப்படி இருப்பார்கள். அவர்கள் ஒரே வீட்டில் அடைந்து கிடந்தாலும் மொழியற்றவர்களாக, அனுபவப் புலத்தில் இருந்து கத்தரிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். புஷ்பநாதனின் கோபமானது மிகை உணர்ச்சியால் இதை எதிர்கொள்ளும் ஒரு உபயமாக இருக்கலாம். பிறரது மிகையான கேளிக்கை விருப்பம், கூலாக இருப்பதாக அவர்கள் தம்மை காட்டிக் கொள்வதும் அப்படியே.
இந்த நாவலில் நிஷாந் தான் உணரும் வேரின்மையை, விலகலை, அவநம்பிக்கையை அன்பைக் கொண்டு கடந்து விட முயல்கிறான். அந்த வழிமுறையையே அ.முத்துலிங்கம் பரிந்துரைக்கிறார் என நினைக்கிறேன்.