ராமலிங்கம் கடைக்கு வருகையில் மணி காலை ஆறரை. அந்நேரத்துக்கே பஜார் சுறுசுறுப்பாகி விட்டது. தேவாரம், போடி பகுதிகளில் இருந்தெல்லாம் பருத்தி தாட்டு ஏற்றி வந்த மாட்டு வண்டிகளில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வண்டிகள் தரையில் சரிந்து இருந்தன. விடுதலையான மாடுகளை வண்டிச் சக்கரத்திலேயே கட்டி புல்லைப் போட்டு விட்டார்கள். அந்த மாடுகள் பஜாரே எங்களுது என்பது போல் தரையில் பப்பரப்பா என்று அமர்ந்து புல் மேய்ந்து கொண்டும் , அசை போட்டுக் கொண்டுமிருந்தன. வண்டிக்காரர்கள் அங்கங்கே இருந்த டீக்கடைகளில் குழுமி டீ குடித்துக் கொண்டு இருந்தார்கள். அந்நேரத்துக்கு ஆவி பறக்கும் சுண்டலும் வடையும் பரபரப்பாக விற்றுக் கொண்டு இருந்தன. சுமை தூக்கும் ஆட்களும், சிறிய தள்ளு வண்டி ஆட்களும் கச கச என்று பேசிக் கொண்டு இருக்க, கமிஷன் கடை சிறு பையன்கள் கம்பி வளையங்களில் டீயும் காபியும் வாங்கி தத்தம் கடை கணக்குப் பிள்ளைகளுக்கு கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்நேரத்துக்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கை அவித்து கூடையில் வைத்து ஒரு கிழவி விற்று வர அதையும் கொஞ்ச பேர் வாங்கி ஊதி ஊதி அவுக் அவுக் என்று தின்று கொண்டிருந்தார்கள்.
அது உழைப்பாளிகள் கூட்டம். வயிற்றுக்கு எதையாவது போட்டு பசியாற்றி விட்டு வேக வேகமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். ராமலிங்கம் கடை வாசலில் நின்று பார்த்தான். எல்லாரும் எறும்புகள் போல குறுக்கும் மறுக்குமாக ஓடிக் கொண்டிருக்கும் பஜார். ராமலிங்கத்தை ஆளாக்கிய பஜார். ராமலிங்கம் பத்து வயதிலேயே பஜாருக்கு வந்து விட்டான். தங்கக் கனி அய்யாவின் கடையில் எடுபிடி வேலை. அப்போதெல்லாம் கடையிலேயே படுத்து விடுவான். காலையில் ஆறு மணிக்கெல்லாம் எழுந்து சாணம் தெளித்து வாசல் கூட்டி , கடையைத் திறந்து , சுத்தமாகப் பெருக்கி , பாயை எல்லாம் தட்டிப் போட்டு விரித்து விட்டு, வேகமாகப் போய் குழாயில் குளித்து விட்டு சாமி படத்துக்கு ஊதுவத்தி கொளுத்தி வைத்து விபூதி வைத்துக் கொண்டு காத்திருப்பான்.
சரியாக ஏழு மணிக்கெல்லாம் தங்கக் கனி அய்யா வருவார். கரிய நிறம், ஆறடி உயரம். வெள்ளை வெளேர் கதர் சட்டை, விபூதி வெள்ளை மீசை என்று பார்த்தாலே கம்பீரமாக இருக்கும் மனிதர். ராமலிங்கத்திடம் ரொம்ப பிரியமாக இருப்பார். பஜாரில் அவர் பேச்சுக்கு தனி மரியாதை. வாக்கு சுத்தம், பேச்சு சுத்தம். ஆனால் அனாவசியமாக நயா பைசா பெயராது. அப்படி ஒரு இறுக்கமான வரவு செலவு பார்க்கிற மனிதர்.
பத்து வயது ராமலிங்கத்தின் அப்பா சயரோகம் வந்து செத்துப் போன போது தனியாக நின்ற மாரியம்மா பிள்ளையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்து இந்தக் கடை வாசலில்தான் நின்றாள். அப்போது தங்கக் கனி அய்யாவுக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். கடை போட்டு மெல்ல மெல்ல வியாபாரத்தில் காலூன்றிக் கொண்டிருந்த சமயம். ஒத்தை ஆளாக எல்லாவற்றையும் சமாளித்து மேடேறிக் கொண்டிருந்தார்.
வாசலில் வந்து நின்ற மாரியம்மாளை ஏற இறங்கப் பார்த்தார். சாயம் போன சுங்கிடிச் சேலை. தாலி இல்லை. பொட்டு இல்லை. பூனைக் குட்டி போல் காலை உரசிக் கொண்டு ஒரு சிறுவன் ‘ என்னா வேணும்?’.
“அய்யா, எம் புருசன் செத்துப் போயிட்டாரு. இது எம் புள்ளை. நான் கூலி வேலைக்குப் போயி வயித்துப் பாட்டை பாத்துக்கிருவேன். இவன் ஒரு ஆளாகணுமில்லையா? அதான் கூட்டிட்டு வந்தேன். ஒங்க கடையில வைச்சுக்கங்க.. எல்லா வேலையும் செய்வான்”
தங்கக் கனி அவளை ஏற இறங்கப் பார்த்தார் “ எந்த ஊரும்மா நிய்யி? “
“ நாங்க இங்க போன வருசம்தாம் குடி வந்தோம். பூர்விகம் கோவில்பட்டி பக்கம்…எம் புருசன் இங்க பலசரக்குக் கடை வேலைக்கு வந்தவரு.”
“அப்படியா? மொழங்கால் ஒசரம் தான் இருக்கான். இவன் என்னா வேலை செய்யப் போறான். ஒரு மூட்டையைப் பிரட்ட முடியுமா?”
“வளர வளர பொரட்டிருவான் சாமி. இப்ப இவனுக்குத் தக்கன ஒரு வேலையைக் குடுத்திங்கன்னா போதும், ஒரு செடிக்கி நெழலு குடுத்த புண்ணியம் உங்களுக்குக் கெடைக்கும்”
“நிழல்ல எப்படியாத்தா செடி வளரும். அதுக்கு வெயில் இல்ல வேணும்”
அவள் பதில் வராமல் திகைக்க தங்கக் கனி புன்னகை செய்தார்.
“ சரி. இவன் இங்க இருக்கட்டும். ஆனா சோறு மட்டும்தான். சம்பளம் கெடையாது, சம்மதம்னா விட்டுட்டுப் போ…”
“ஒத்தக் காசு கூட வேணாம்யா. அவன் பசியை ஆத்துனாப் போதும்.”
“ அப்புறம் அவன் இங்கனக்குள்ளயே கிடக்கணும்… நீ பாட்டுக்கு அப்பப்ப வந்து வீட்டுக்க்கு கூட்டிட்டுப் போற சோலியே இருக்கக் கூடாது”
“ சரிங்க அய்யா. இவன் ஒரு இடத்துல ஒழுங்கா இருந்தாப் போதும்”
தங்கக் கனி ராமலிங்கத்தைப் பார்த்தார். பயந்த கண்களுடன் அப்பாவியாக நிற்கும் பத்து வயது பாலகன். அப்பனை இழந்து அம்மாவின் சேலையைப் பற்றி நின்று கொண்டு இருந்தான். எண்ணெய் தேய்த்து வழித்துச் சீவி , நெற்றியில் விபூதி வைத்துக் கூட்டி வந்திருந்தாள் மாரியம்மா.
“ உன் பேரென்னடா?”
“ ராமலிங்கம் “
“ மொதலாளின்னு சொல்லுடா” என்றாள் மாரியம்மா
“ராமலிங்கம், மொதலாளி”
தங்கக் கனிக்கு லேசாக சிரிப்பு வந்தது. “ சரி… புள்ளையை விட்டுட்டுப் போம்மா.. வீடு எங்கே”
“ கெழக்க ரயில் ரோட்டுக்கிட்ட”
“ உள்ள வாம்மா. லேய் ராமலிங்கம். உள்ள வாடா ”
அம்மாவின் கை பற்றியவாறு ராமலிங்கம் கடைக்குள் நுழைந்தான்.
தரையில் விரிக்கப்பட்டிருந்த பாய். அதன் மேல் இருக்கும் சிறிய கணக்கப் பிள்ளை மேசை. அதன் மேல் கணக்கு நோட்டு. அவர் அந்த மேஜை முன் தரையில் சப்பணம் கட்டி அமர்ந்து கொண்டார். அவரது வலது புறம் ஒரு சின்ன ஸ்டூல். அதில் போன மாசம் புதிதாக கனெக்ஷன் வாங்கிய கறுப்பு நிற டெலிஃபோன். அதனை அடுத்து ஒரு சிறிய இரும்பு பீரோ. ஒழுகறைப் பெட்டி என்று அதை சொல்வார்கள். அதைத் திறந்து பத்து ரூபாயை எடுத்தார் . எடுத்து மாரியம்மாளிடம் கொடுத்தார்.
“ அய்யா?’
“ இந்தக் காசு உன் செலவுக்கு. இனி இந்தப் பய இங்கியே தங்கிக்கிரட்டும். புதன் கிழமை பஜார் லீவு. அன்னைக்கு மட்டும் அவனை வீட்டுக்கு கூட்டிட்டுப் போ. சும்மா சும்மா கடைப்பக்கம் வந்துக்கிட்டு இருக்காதே. புரியுதாம்மா?”
“சரிங்க அய்யா” என்றவள் ராமலிங்கத்தின் தலையை தடவிக் கொடுத்தாள்.” புத்தியா இருந்து பொழைச்சுக்கிரணும்யா ராமலிங்கம்…என்னா?”
அவளது கண்கள் லேசாகக் கலங்கின…மெதுவாக இறங்கி கடையை விட்டு நடந்து போனாள். வரும் போது இருந்த நடை தளர்ந்து பலம் இழந்தது போல ஒரு விசும்பலான நடை. பத்து வயசு ராமலிங்கத்துக்கு அம்மா அப்படி நடந்து போனது அப்படியே மனசில் பதிந்து விட்டது. எப்போது அம்மாவை நினைத்தாலும் பிள்ளையை கடையில் விட்டு விட்டு மனசில் அழுகையோடு நடந்து போகும் அந்த அம்மாதான் அவன் மனதில் தெரிவாள்.
ராமலிங்கத்தின் கண்கள் கலங்கின. அன்றைக்கு அம்மா மனசு என்ன பாடு பட்டிருக்கும்? தன்னோட சங்கடத்தை நினைக்காம, என் புள்ளை எப்படியாச்சும் ஒரு ஆளாயிரணும்னு வந்து இந்தக் கடை முன்னாடி நின்ன அந்த மனசு. ஆனா போகும் போது அம்மா அழுதுக்கிட்டுத்தான் போனா. அது எனக்குத் தெரியும்.
இருபது வருஷம் ஆயிருச்சு. கல்யாணத்துக்குப் பிறகு அம்மா ரெண்டு வருஷம் கூட இருந்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ, கோவில் பட்டி அருகே இருக்கும் சொந்த ஊரில் போய் இருக்கிறேன் என்று போய் விட்டாள். அங்கே பங்காளி ஒருத்தர் வீட்டுத் திண்ணையில் வசித்துக் கொண்டு முடிந்த வேலையை செய்து கொண்டு அவள் காலம் போகிறது. ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தரம் ராமலிங்கம் அவளை போய் பார்த்து செலவுக்கு காசு கொடுத்து விட்டு வருவான்.
கடையை நோக்கி ஸ்கூட்டர் வருவது தெரிந்ததும் ராமலிங்கம் பரபரப்பானான். கடை முன்னால் ஸ்கூட்டர் வந்து நின்றது. தங்கக் கனி அய்யா இறங்கினார்.. ஸ்கூட்டரில் அவரை இறக்கி விட்டு விட்டு அவர் பையன் கிளம்பிப் போய் விட்டான். இவர் கடைக்குள்ளே போய் நேராக சாமி கும்பிட்டு விட்டு அந்த கணக்குப் பிள்ளை மேஜை மீது அமர்ந்தார்.
“நேத்து எதும் காசு வந்துச்சாடா ராமலிங்கம்?’
“ வந்துச்சு அய்யா, உள்ளாற சீட்டு எழுதி பொட்டலம் போட்டு வைச்சிருக்கேன்.
ஒழுகறைப் பொட்டி சாவியை நீட்டினான் ராமலிங்கம்…அவனிடம் அந்த சாவியை பத்து வருடங்கள் கழித்துத்தான் தங்கக்கனி அய்யா ஒப்படைத்தார். பயல் கை சுத்தமானவன் என்ற நம்பிக்கை அதற்கு முன்னாலேயே வந்து விட்டது.
பீரோவைத் திறந்தார், உள்ளே வெள்ளைப் பேப்பரில் தனித் தனியாக பணம் சுற்றப்பட்டு , மேலே கொடுத்த பார்ட்டியின் பேர் எழுதி இருந்தது. அதனை ஒவ்வொரு பொட்டலமாகப் பிரித்து , பற்று வரவு நோட்டில் அதனை ஒவ்வொருத்தர் பெயரிலும் வரவு வைக்க ஆரம்பித்தார்.
“ அய்யா டீ வாங்கிட்டு வரட்டுமா?”
“ வேணாம் நான் அப்புறம் குடிச்சுக்கிறேன். நீ இன்னைக்கு போடி வரைக்கும் போகணும்.”
“ சரிங்க அய்யா”
“ பவுனு தெரியுமில்லை… அவரு இருபத்தி அஞ்சு குழி பருத்தி போட்டு இருக்காரு. எடுப்பு ஆரம்பிச்சிட்டாரு. நீ போய் பருத்தி எப்படி இருக்குன்னு பாத்துட்டு அவருக்கு ஒரு அட்வான்ஸை குடுத்துட்டு வந்திரு. ஞாயித்துக் கிழமை பருத்தியை அனுப்பச் சொல்லிரு. வண்டி வாடகை நம்மளே குடுத்துருவோம்னு சொல்லு.”
“சரிங்க அய்யா,”
“அட்வான்ஸ் குடுக்கவும், செலவுக்கும் காசு எடுத்துக்க” என்று பெட்டியைக் கை காட்டினார்.
ராமலிங்கம் பணத்தை எண்ணி எடுத்துக் கொண்டான்.
“அய்யா, அட்வான்ஸ் ஆயிர ரூவா எடுத்துருக்கேன். செலவுக்கு இருபது ரூபா எடுத்துருக்கேன்”
“சரி…. கெளம்பு”
மூன்றாந்தலை ஒட்டித்தான் பஸ் ஸ்டான்டு. பஸ் ஸ்டான்டுக்கு தெற்கே ஒரு கால்வாய். அதில் எந்நேரமும் சல சலவென்று கண்ணாடியாய் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ராமலிங்கம் போன போது போடி பஸ் எதுவும் இல்லை.
எதிர்ப்பக்கம் ஒருந்த சலூனில் இருந்து முனியாண்டியும், ராஜாமணியும் வந்தார்கள். ராஜாமணிக்கும் இந்த ஊர்தான். ஆனால் மாசத்தில் பெரும்பகுதி கேரளாவில் சாந்தாம்பாறையில்தான் இருப்பான். அங்கே ஒரு எஸ்டேட்டில் மேனேஜருக்கு எடுபிடியாக இருந்தான். சரியான தில்லுவாரிப் பய என்பது ராமலிங்கத்தின் எண்ணம். அவன் பேச்சும் நடவடிக்கையும் இவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது.
“என்னா ராமலிங்கம், பஸ் ஸ்டாண்டுக்குச் செவ வந்திருக்க?”
“ போடி வரைக்கும் போகணும், நீ எப்படி இருக்க ராஜாமணி?’
“எனக்கென்னா? நான் ராசா கணக்கா இருக்கேன். உங்களை மாதிரி பஞ்சுக்கும், தூசிக்கும் நடுவில பஜார்ல லோல் படாம மலை மேல ஜம்முன்னு இருக்கேன். ஜிலு ஜிலுன்னு குளுரு, பச்சைப் பசேருன்னு மலை, பெலாப் பழம், நேந்திரம் பழம், கப்பைக் கிழங்கு…அப்பப்ப சாராயம்…” உற்சாகமாகப் பேசினான் ராஜாமணி.
உற்சாகமும் சவடாலும் அவன் உடன் பிறந்தது. அதனாலேயே ராமலிங்கத்துக்கு அவன் மீது எப்போதும் ஒரு ஒவ்வாமை இருந்தது.
“பரவால்ல.நல்லா இருந்தாச் சரிதான் ராஜாமணி,”
“ஒரு நிமிசம் நில்லுங்க. சீரட் வாங்கிட்டு வர்ரேன்”
ராஜாமணி சிகரெட் வாங்கச் சென்று விட ,”இவனை எங்குட்டு இருந்துடா புடிச்ச முனியாண்டி ?’
“காலையிலயே வீட்டுக்கு வந்துட்டான். நம்ம வீட்லதான் சாப்புட்டோம். சும்மாதான இருக்க, எங்கூட வா . சாந்தாம்பாறை வரைக்கும் போயிட்டு வரலாம்னு கூப்டான். அதான்”
“காசு இருக்காக்கும் கையில, ஊரு சுத்த கெளம்பிட்டயாக்கும்?”
“இல்லைடா…அளவாத்தான் இருக்கு. கூப்புட்டான். ஏலக்காச் செடி தூர்லயே காச்சுத் தொங்கும்னு சொன்னான். சரி நம்மளும் அதை எல்லாம் எப்ப பாக்குறது? “
ராஜாமணி சிகரெட் வாங்கி வந்து கப் கப் என்று ஊதி மூக்கு வழியாகப் புகை விட்டான்.”
‘ஏன்டா முனியாண்டி, பேசாம ராமலிங்கத்தையும் நம்ம கூட கூட்டிட்டு போயிட்டா என்னடா?”
முனியாண்டி முகம் மலர்ந்தான்.”ஆமா….ஆமா…ஏய் ராமலிங்கம்…வா,, நம்ம மூணு பேருமா போயிட்டு வரலாம்..”
“ நான்லாம் வரலைப்பா.. சோலி கெடக்கு”
“சோலி எப்பவும்தான்டா இருக்கு, ஒரு நாளுதானே…அப்படியே போயி மலைங்காடு எல்லாம் எப்படி இருக்குன்னு பாத்துட்டு வருவோம்டா.”
ராமலிங்கம் யோசித்தான். “போடிக்கு ஒரு சோலியால்ல போறேன். ஒரு தோட்டத்துல போயி பருத்தி தரம் பாத்துட்டு அட்வான்சு குடுக்கணும்”
“தங்கமாக் குடு… நாங்களும் கூட வாரோம். அந்தச் சோலிய முடிச்சுட்டு அப்படியே மலைக்கு வண்டி ஏறிருவோம்.”
“ அதெப்படி? போடி போனவன் சாயிங்காலம் வரலையேன்னு மொதலாளி தேட மாட்டாரா?”
“வந்து எதாச்சும் காரணம் சொல்லிக்கிரலாம்டா ‘ என்று முனியாண்டி சொன்ன போதும் ராமலிங்கம் மனசில்லாமல் இருக்க
ராஜாமணி,” அது ஒண்ணும் பிரச்சினை இல்லை. போடியில ஏலக்கா ஆபிசுல போன் இருக்கு. நான் போனா போன் பேச விடுவாங்க.அங்கருந்து உன் கடைக்கி போன் செஞ்சு நாளைக்கு வர்ரேன்னு சொல்லிரலாம்.”
“ஏய் யோசிக்காம வாடா. என்னமோ சின்னப் பய மாதிரி பயக்குறான். முப்பது வயசு எளந்தாரி…”
“சரி போலாம் ‘ என்றான் ராமலிங்கம். அப்போதுதான் அவளை கவனித்தான்.
பஸ் ஸ்டாண்ட்டுக்கு தெக்கே ஓடும் கால்வாய்க்கு அந்தப் பக்கம் இருந்த வாவரக்காச்சி மரத்தின் அடியில் ராணி நின்றிருந்தாள்.
“ஏய்….அந்தப் பொம்பளை அங்க நிக்கிறா பார்றா முனியாண்டி”
முனியாண்டி அவளை திரும்பிப் பார்த்தவன் வேகமாக அவளை நோக்கிச் செல்ல , அவள் திரும்பி தெற்குப் பக்கமாக நடக்க ஆரம்பித்தாள். அவள் நின்றிருந்து மரத்திலிருந்து வயல்கள் துவங்கின. வரப்புகள் வழியாக அவள் வேகமாக நடக்க முனியாண்டி அவளை நோக்கி விடு விடு என்று செல்ல, அவளும் வேகமாக நடந்தாள். முனியாண்டியின் பின்னால ராமலிங்கமும், ராஜமணியும் வேகமாக நடந்தார்கள்
தெற்கே கொஞ்ச தூரத்தில் மேற்கிலிருந்து கிழக்காக ஆறு ஓடுகிறது. இரண்டு பக்கமும் எக்கச் சக்கமான தாழம்புதர்களும், நாணல்களும் மண்டி இருக்கும். அவள் வேகமாக அதை நோக்கிச் செல்ல, அவளைப் பிடித்து விடும் நோக்கத்தோடு முனியாண்டி கத்தியபடி செல்ல அவள் கீறும் மடல்களைப் பொருட்படுத்தாமல் ஒரு தாழம்புதருக்குள் நுழைந்து விட்டாள்.
முனியாண்டி கத்தினான் “ ஏய் கூறு கெட்ட கழுதை…நல்ல பாம்பு இருக்கும் புடுங்கிக் கிடிங்கி வைச்சிரப் போகுது….வெளிய வா ’
அவள் பதில் சொல்லாமல் முறைத்தாள். அதற்குள் ராமலிங்கமும் ராஜாமணியும் வந்து விட்டனர்.
“ ஏய்.. இங்க வா.. யாரு நீ?’ எந்த ஊரு?’
ராஜாமணிக்கு இந்த விஷயம் எதுவுமே புரியாமல் “ ஏய்..என்னங்கடா. பஸ்ஸுக்கு போறதை விட்டுட்டு இவ பின்னால ஓடியாந்துட்டிங்க?”
“ அது ஒரு பெரிய கதையப்பா. அப்புறஞ் சொல்றோம்..ஏய் பொம்பளை. இப்ப வர்றியா இல்லையா?
அவள் தலை தாழம்புதருக்குப் பின்னால் மறைந்தது. அடுத்த நொடி ஒரு பெரிய தாழம்பூவை மடலோடு பிடுங்கி இவர்களை நோக்கி எறிந்தாள். அது நேராக ராஜாமணி முகத்தை நோக்கி வர அவன் கைகளால் மறைக்க தாழம் மடலில் இருந்த கூரான பகுதி அவன் கையில் கிழித்து பொல பொல என்று ரத்தம் வந்தது.
ராஜாமணி “ ஏய் லூசு முண்டை “ என்று வைதபடி ரத்தம் வரும் இடத்தை அழுத்திக் கொண்டு கத்த, இவர்கள் இருவரும் அவனது காயத்தைப் பார்த்துப் பதறினர்.முனியாண்டி வரப்பின் ஓரம் சந்தனம் மாதிரி வழு வழு என்று இருந்த சகதியை எடுத்து காயத்தின் மீது அப்பினான். ரத்தம் வருவது மட்டுப் பட்டது.
ராமலிங்கம் கோபத்துடன் தாழம்புதரை நெருங்கினான். அவள் அதற்குள் புதரின் மறு பக்கம் வெளிப்பட்டு ஆற்றில் இறங்கி விட்டாள். ஆற்றில் முழங்கால் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க, அவள் வேகமாக ஆற்றைக் கடப்பது தெரிந்தது. அக்கரையில் ஒரு பெரிய தென்னந்தோப்பு இருந்தது.
ராமலிங்கம் திரும்பி வந்தான்..
“என்னடா?’
“ ஆத்துக்குள்ள எறங்கிட்டா….”
“ கிறுக்கச்சியா இருப்பாளோ? அன்னைக்கும் இப்படித்தான் ஓடுனா!”
ராஜாமணியின் கையில் சிறிய காயம்தான். ரத்தம் வருவது நின்று விட்டது..”யாருடா அவ? நீங்க எதுக்கு அவளை விரட்டினீங்க?”
“அவளை யாரு விரட்டினது? விசாரிக்கலாம்னு கிட்டப் போனேன். சனியன் ஓடுறா. அதான் நானும் ஓடுனேன்.”
“அவ கிட்ட என்னா விசாரிப்பு ?”
“ அது ஒரு கதை , வா போகலாம்”
திரும்ப பஸ் ஸ்டாண்ட்டுக்கு வரும் வழியில் அந்தப் பெண் கம்மாயில் குதித்தது துவங்கி ஆஸ்பத்திரியில் இருந்து ஓடியது வரை நடந்தவை அனைத்தையும் ராஜாமணியிடம் இருவரும் சொல்லி முடித்தார்கள்.
“சந்தேகமே வேணாம். அவ கிறுக்குத்தான். சரி வாங்க. “
மூவரும் டீயைக் குடித்து விட்டு போடிக்கு பஸ் ஏறினார்கள்.
போடியிலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் மேற்கே இருந்தது அந்த தோட்டம். வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு மூவரும் தோட்டத்துக்குப் போனார்கள். சம்சாரி பவுனு கோவணத்தோடு நின்றிருந்தார். மூணு பேருக்கும் இளனி வெட்டிக் கொடுத்தார். குடித்தார்கள். பருத்தி எடுத்து தாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். ராமலிங்கம் போய் பருத்தியின் இழையை சோதித்துப் பார்த்தான். சிறு வயதிலிருந்து பருத்தியோடே புழங்கியதில் அனுபவம் கூடி இருந்தது. பருத்தியை அள்ளி இரண்டு கைகளாலும் இழுத்துப் பார்த்து பருத்தியின் இழைத் தன்மையை துல்லியமாக அளவிட்டு, அதற்கு இதுதான் விலை என்று நிர்ணயிக்கிற திறமை..பவுனிடம் எவ்வளவு தர முடியும் என்று சொன்னான்.
பவுன் முகத்தில் ஏமாற்றம் கவிந்தது. “ என்னா ராமலிங்கம், நீயே இப்படி சொன்னா எப்படி?”
“ உள்ளதைத்தானே சொல்றேன் அண்ணாச்சி?’
“ஏகப்பட்ட செலவு செஞ்சிருக்கேன்.. இந்தத் தடவை மாதிரி புழுவு எந்த வருசமும் இல்லை..”
‘ என்ன அண்ணே. பருத்தியில புழுவு விழுகறது என்ன புதுசா?
“புழுவு விழுகும்யா, மருந்து அடிப்போம், செத்துப் போகும் . ஆனா இந்த தடவை மருந்து அடிச்சும் சாகலை. அதனால புழுவு பெறக்குனோம்யா..ஆளு விட்டு புழுவு பெறக்கினோம்.”
அவர் சொன்னது முனியாண்டிக்குப் புரியவில்லை.
“என்னது ? புழுவு பெறக்கினீங்களா?”
“ ஆமா…வாங்க , என் சகலை தோட்டத்தில இன்னைக்கு புழுவுப் பெறக்கிக்கிட்டு இருக்காங்கெ…நேரிலேயே வந்து பாருங்க அந்தக் கொடுமையை”
மூன்று பேரையும் கொஞ்சம் தள்ளி இருந்த தோட்டத்துக்குக் கூட்டிப் போனார். போகும் வழியில் சொல்லிக் கொண்டே வந்தார்.
“ எங்கப்பன் காலத்துல வேப்பம் புண்ணாக்கை தண்ணியில கரைச்சு செடி மேல தொளிப்போம்…. அம்புட்டுத்தேன். வேற மருந்து ,மண்ணாங்கட்டி எல்லாம் ஒண்ணும் கிடையாது. அப்ப நாட்டுப் பருத்திதான். அப்புறம் அதிகாரிக வந்து கம்பெனிப் பருத்தி வெதையை குடுத்தாங்க.. விளைச்சல் கூடுதல்தான், ஆனா உரமும் மருந்தும் கூடுதலா ஆயிப் போச்சு. அவங்க சொல்றபடியெல்லாம் உரம் வைச்சு மருந்தடிச்சுத்தான் வெள்ளாமை பண்றோம். ஆனா இந்த வருசம்தான் இப்படி ஒரு கொடுமையை என் கண்ணால பாக்கிறேன். பூச்சி மருந்து அடிச்சும் கூட புழுவு சாகலை…அதனால களை எடுக்கவும், பருத்தி எடுக்கவும் கூலியாளை விட்டு வேலை செஞ்ச மாதிரி இப்ப புழுவு பெறக்கவும் கூலியாளை விட்டு சம்பளம் குடுக்கற நெலைமை ஆகிப் போச்சு… இதெல்லாம் என்ன காலக் கொடுமைன்னே தெரியலை.”
மூன்று பேரும் அவர் சொன்னதைக் கேட்டபடியே பேசாமல் நடந்து அந்தத் தோட்டத்தை அடைந்தார்கள்..
“வெள்ளாமைக்குள்ள எறங்கிப் பாருங்க…அந்தக் கருமாயத்தை”
பருத்தி வெள்ளாமைக்குள் ஆணும் பெண்ணுமாக இறங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மூவரும் பவுனு டன் வரப்பை விட்டு வெள்ளாமைக்குள் இறங்கிப் பார்த்தார்கள். அந்தப் பருத்திச் செடிகளைப் பார்த்தவுடன் இவர்கள் உடலெல்லாம் கூசியது.
செடி நிறையப் புழுக்கள். அடை அடையாக… பச்சை மற்றும் சாம்பல் வண்ணத்தில்..திரும்பிய பக்கமெல்லாம்….புழுக்கள். அடிப்பாகத்தில் முள் போன்ற முனைகளுடன் ஊர்ந்து கொண்டிருந்தன.
ராமலிங்கம் பவுனைப் பார்த்தான். பரிதாபமாக இருந்தது.
“ பாத்தியா ராமலிங்கம்… எல்லா வேலையாளுக கையிலயும் இருக்கற கூடையில புழுவைப் பெறக்கி பெறக்கிப் போட்டு தீ வைச்சுக் கொளுத்தறோம்.. அங்க பாரு.”
மேட்டில் ஒரு தகர ட்ரம்மில் உள்ளே விறகைப் போட்டு மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்திருந்தார்கள்.
அந்த வேலையாட்கள் பொறுக்கிய புழுக்களை கூடை கூடையாக ஒரு தகர ட்ரம்மில் வந்து கொட்ட அந்தப் புழுக்கள் நெருப்பில் பொசுங்கும் வாசம் குமட்டியது.
முனியாண்டிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ என்னாங்க இது கொடுமையா இருக்கு?’
“ஆமாப்பா…கலி முத்திப் போச்சு…நீ வேணாப் பாரு. உலகம் அழியப் போகுது. இதெல்லாம் அதோட அறிகுறிதான் ‘
பவுனு வயிறெறிந்து சொன்னார். மேற்கே மலைத் தொடரை ஒட்டி மின்னல் வெட்டியது. சட சட வென்று மழை தூற ஆரம்பித்தது.
( தொடரும் )
ஓவியங்கள் கிரிஜா ஹரிஹரன்