அத்தியாயம் 01

 மூன்று மணிக்கே முழிப்பு வந்து விட்டது ராமலிங்கத்துக்கு. உடனே எழுந்து கொள்ள மாட்டான். பூனைப் பிறவி அவன். கை கால்களை நீட்டி மடக்கி, மேல விட்டத்தைப் பார்த்து கொஞ்ச நேரம் மனசை எதில் எதிலோ  ஓட்டுவான். இப்பவும் ஓட்டினான். காலையில யாரைப் பாக்கலாம்? எவன் எவன் பாக்கி தரணும்.? அதில எவன் கெட்டி ? எவன் மட்டி ? என்று யோசனை. மட்டிப் பயலை பின்னால பாத்துக்கிரலாம். கெட்டியா இருக்கவன் கிட்ட இருந்து முதல்ல வசூல் பண்ணனும் என்று மண்டையில் ஓடியது…அந்த யோசனையோடேயே மேலே ஓட்டைப் பார்த்தான். ஒரு ஓடு கீறல் விட்டிருந்தது….ரொம்ப நாளாவே அந்தக்  கீறல் இருக்கிறது. மழை வெயில் காத்து என்று மெல்ல மெல்ல அகண்டு கொண்டே  வந்து விட்டது போல . இன்றைக்கு நன்றாக விலகி மேலே நிலாவின் ஒரு துண்டு தெரிந்து அதன் வெளிச்சம் அழகாக இறங்கி அருகே தூங்கிக் கொண்டிருக்கும் தெய்வானையின் மூஞ்சியில் அடித்தது.

கல்யாணமாகி பத்து வருஷமாச்சு. இன்னும் பிள்ளையில்லை. அந்தக் கவலை அவளை அரித்துக் கொண்டிருக்கிறது. இவன் முன்னால்  அதைப் பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டாள். ஆனால் இவனுக்குத் தெரியும். வாரத்தின் நாலு நாள் அவள் இருக்கும் விரதங்களும், போகும் கோயில்களும்,ஏற்றி வைக்கும் விளக்குகளும் ,வேண்டுதல்களும் அவளது மனசின் ஏக்கத்தை சொல்லிக் கொண்டேதான் இருந்தன. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. புருஷன் பொஞ்சாதி நடவடிக்கையெல்லாம் நன்றாகத்தான் நடக்கிறது. சந்தோசமாத்தான் இருக்கிறது. ஆனால்  உள்ளுக்குள்ள உசுரை விதைக்கிறது நம்ம கையில இல்லையே, ஆண்டவன் கையில இல்ல இருக்கு?. தெய்வானைக்கு ஆம்பளை சொகத்தை விட புள்ளை வேணும்ங்கிற தவிப்பு கூடிக்கொண்டே போவது ராமலிங்கத்துக்குத் தெரியும்.  பத்து வருஷம் சம்சாரம் நடத்தி இருக்கானே? ஆரம்பத்தில் இருந்த ஆசையும் மோகமும்  இப்ப அவ கிட்ட இல்லை. எல்லாம் கடமையாக நடக்கிறது. ‘

இதனை  உணர்ந்த பிறகு பல நாள் மனசுக்குள் குமைந்து  கொண்டே இருந்தான். இவனுக்கு ஒரே ஒரு சினேகிதன் தான். முனியாண்டி.  சின்ன வயசுல இருந்து கூட்டாளி…அவனிடம் சொன்னபோது அவன் பட்டென்று பதில் சொன்னான்.” நியாயந்தானடா… விளைச்சல் வரும்னு நம்புனாத்தானே  உழுகுறதுக்கு  ஆசை வரும்…?”

அவன் சுருக்கென்று இப்படிச் சொன்னதும் மனசு உடைந்து போனது. ஆனால் முனியாண்டிப் பய பேச்சே இப்படித்தான். எந்த முக தாட்சணியமும், நாசூக்கும் அவனிடம் இருக்காது… ஆனால் இவன் முகம் சுருங்கியதைப் பார்த்ததும்  அவனுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. “ நீ கேட்டதுக்கோசரம் சொன்னேன்டா…இந்த பாரு…புள்ளை உண்டாகிறது விளையாட்டுல  தாயம் விழுகிற மாதிரி…  சோவிய உருட்டறதை மட்டும் நிப்பாட்டாதே… நல்லா கோழியும்,கறியுமாத் தின்னு.. சாமியைக் கும்பிட்டு உருட்டு…நெதமும் உருட்டு. தாயம் விழுகாமயா போயிரும்?…”

அந்தக் குசும்பன் சொன்னது ஒவ்வொரு நாள் ராத்திரி பொண்டாட்டியைத் தொடும் போதும் ஞாபகம் வந்து விடுகிறது..எதுக்கு எதை உவமானஞ் சொன்னான் பாரு..என்று அவளை அணைக்கையில் மனசுக்குள் சோழி முத்துகள் அஞ்சு, பன்னெண்டு , ஆறு என்று புரண்டு விழுகின்றன..அடச் சீ ஒரு தாயம் விழுகாதா ? என்று மூச்சு வாங்க ராத்திரியில் யோசனை ஓடுகிறது. எந்த நேரத்தில என்னநினைப்பு ? செருப்பாலடி…அந்த முனியாண்டிப் பயலை?. என்று போகத்தின் நடுவே அவனைத் திட்டுவதும் கூட நடக்கிறது.

..பார்க்கலாம்….அந்த பழனி முருகன் தான் கண் திறக்கணும். என்று மனதில் நினைத்துக் கொண்டபடி கண்ணை மூடினான். முருகன் கோவணதாரியாக கண்ணுக்குள் நிறைந்தான். .. முருகா  ஒரு வாரிசை மட்டும்  குடு….உன் பேரையே எம்புளைக்கி வைக்கிறேன்..” என்று சொல்லி மனசுக்குள் வேண்டி விட்டு எழுந்தான்.

தெய்வானை எழுந்து வாசலைத் தெளித்து வாசலில் பசுமையாக  சாணியை மொழுகி விட்டு வந்து, கம கம என்று அதே வாசத்தோடு கருப்பட்டிக் காப்பியை நீட்டினாள். வாங்கி மோந்து பாத்தபோது சாணி, காப்பித் தூள், மண்டைவெல்லம் எல்லாம் கலந்ததொரு வாசம்..கொஞ்ச நாளாக இந்த காப்பி குடிக்கும் பழக்கம் இவர்கள் ரெண்டு பேருக்கும் வந்து விட்டது. அதுக்கு முன்னால நீச்சுத் தண்ணிதான்… பித்தளைச் செம்பு ஒரு செம்பு குடித்தால் வயிறு குளு குளுன்னு இருக்கும். அப்படியே மூன்றாந்தல் பக்கம் போய் வசூல் பார்த்து விட்டு வந்து ஒன்பது மணிக்கு தண்ணியில ஊற வைச்ச கேப்பைக் களி உருண்டையில  பெரிய  உருண்டையா ரெண்டு மூணு எடுத்து எருமைத் தயிர்ல கரைச்சு , தூக்கலா உப்புப் போட்டுகிட்டு சுனையா ரெண்டு பச்சை மொளகா, வெங்காயத்தை கடிச்சுக்கிட்டே தின்னு முடிச்சா வகுத்துல சும்மா கல்லுப் போட்டாப்ல கெடக்கும். உச்சிப் பொழுது வரைக்கும் வகுறுன்னு ஒண்ணு இருக்குறதே மறந்துரும். இப்ப  இந்தக் காப்பி ஒண்ணு எச்சா உள்ள வந்துருக்கு.

காப்பியைக் குடித்து விட்டு கம்மாய்ப் பக்கம் போய் வந்து காலை ஆகாரத்தை முடித்து விட்டு கிளம்பினான்.

“ துணியை மாத்திருங்க. மூணு நாளா ஒரே துணியைப் போட்டுக்கிருக்கெங்க” என்று தெய்வானை சொல்ல , குத்த வைத்து உக்காந்து  தகரப்பொட்டியைத் திறந்தான். மொத்தம் ரெண்டு சட்டைதான். மூணு வேட்டி. மூணு லங்கோடு….அதில் ஒண்ணில் ஓட்டை விழுந்து போச்சு..பொண்டாட்டி அந்தப் பக்கம் திரும்பி சொளகில் என்னமோ புடைத்துக் கொண்டிருக்க இவன் துண்டைக் கழட்டி விட்டு  ஓட்டை இல்லாத  லங்கோடை எடுத்து இறுக்கிக் கட்டினான். கச்சிதமாகக் கட்டி விட்டு குனிந்து பார்த்தான். ஒட்டிய வகுறும், கருங்காலி மாதிரி காலுமா,,எங்கப்பன் கோமணான்டி மாதிரியேதான் இருக்கேன்” என்று பெருமையுடன் நினைத்துக் கொண்டபடி ஒத்தை மடிப்பு வேஷ்டியை உதறி உடுத்திக் கொண்டான்,சட்டையா பனியனா என்று சொல்ல முடியாத, வெண்பழுப்பு நிறம் கொண்ட  ஒரு காடாத்துணியிலான தொள தொள சட்டை..

“கெளம்புறன்டி”

“ ம்…சரி..மதியானக் கஞ்சிக்கு வருவீங்களா ?”

“இல்லை.. ஏங் கேக்குற?”

“ தங்கச்சி வீட்டுக்கு ஒரு எட்டுப் போய் பாத்துட்டு வரலாமுன்னு. நீங்க சோத்துக்கு வரலைன்னா நான் அங்க போய் சாப்பிட்டுக்கிருவேன்.”

“சரி….ரவைக்கு வந்துருவேல்ல?”

“ பொள்சாய வந்துருவேன்.ராத்திரி வரைக்கிம் அங்க என்னா சோலி எனக்கு?”

“ சரி போய்ட்டு வா…உன் தங்கச்சி கிட்ட தேவையில்லாத பேச்செல்லாம் பேசிக்கிக் கெடக்காத. என்னா”

ராமலிங்கம் எதைச் சொல்கிறான் என்று தெய்வானைக்குத் தெரியும்.

“ என்னாச்சு…ஒழுங்கா குளிக்கிறியா?” என்று தங்கச்சி காரி வாயைப் பிடுங்குவாள். அதைத்தான் சொல்கிறான்…சரி என்று தலையாட்டினாள்.

திண்ணையை விட்டு இறங்கியவள்,நெடு நெடு என்று வளர்ந்து அம்சமாக நடந்து போகும் புருசனை பின்னாடி வாக்கில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தாள்….” என்னா அம்சம் எம்புருசன்…ஒரே ஒரு ஆம்பளைப் புள்ளை இந்த அம்சத்துல வந்துட்டாப் போதும்…வீரவாண்டி மாரியம்மனுக்கு மூணு வருசம் புள்ளையோட வந்து தீச்சட்டி எடுக்கிறேன், மாரியாத்தா.. சீக்கிரம் கண்ணைத் தொற “ என்று  அவனையே ரசித்தபடி மெய் மறந்து இருந்தாள்..அவன்  கண்மறைந்ததும் திரும்பியவள், விசுக் என்று உலுக்கி விழுந்தாள்.

காரணம் அந்தப் பெண்… அடியாத்தி யாரு இவ?

இவளுக்குப் பின்னால் நின்று இவளையே பார்த்தபடி  இருந்தாள் அவள். வயது இருபது இருக்கும். அவளது கண்கள் குறு குறு என்று இமைக்காமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்தன…அவள் முகம் வித்தியாசமாக இருந்தது. கொஞ்சம் கறுப்பான முகம். ஆனால் அவள் கண்களைச் சுற்றிலும் தோல் வெள்ளை வெளேர் என்று நிறம் மாறி இருந்தது…கறுத்த முகத்தில் இரண்டு வெள்ளை வட்டங்கள்…அதன் நடுவே கறுப்பான கண்கள்…என்று அந்த முகத்தைப் பார்த்தவுடனே ஒரு மாதிரி திகிலடிக்க, இந்த லட்சணத்தில் அவள் கண்ணிமைக்காமல் குறு குறு என்று பார்த்தால்…..தெய்வானைக்கு ஒரு மாதிரி வயிறு கலங்கி இழுத்துப்  பிடித்து அந்தக் காலை வேளையிலும் பயமாக இருந்தது.

“யாரு தாயி நிய்யி?”

“பசிக்குது”

தெய்வானை அவள் கண்களைப் பார்த்தாள்…முகத்திலும் கைகளிலும் இருக்கும் வெண் திட்டுகள்…”இது வெண் குஷ்டம்னு இல்லை சொல்லுவாங்க?” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் இமைக்காமல் இவளையே பார்த்தவள் , மெதுவாக வாயைத் திறந்து கேட்டாள். கொஞ்சம் கரகரப்பான குரல்.

“பசிக்குது”

இப்போது அவள் கண்கள் லேசாகக் கலங்க…கை வயிற்றைத் தடவ தெய்வானைக்கு மனசு இளகிப் போனது.

“உக்காரு தாயி”

அந்தப் பெண் திண்ணையில் அமர்ந்தாள். மறுபடியும் சிரித்தாள். அவள் சிரிப்பது சாதாரணமாக இல்லாமல் வேற மாதிரி இருந்தது. உதடுகள் இரண்டு பக்கமும் லேசாக கோடு இழுப்பது போல் இழுக்க , கண்கள் மட்டும் விரிந்தன. கொஞ்சம்  கூட பல் தெரியவில்லை. ஆனால் அவள் சிரிக்கிறாள் என்று புரிகிறது.. சிரிக்கிறாள் என்று சொல்வதை விட அவள் இது என் சிரிப்பு என்று ஒரு சிரிப்பை  சிரித்துக் காட்டுகிறாள் என்றுதான் சொல்ல வேண்டும் .

அந்த முகமும் சிரிப்பும் தெய்வானையை ஏதோ  செய்தது…வேகமாக உள்ளே போனவள் பின்னாடி இருந்த வாழை மரத்தில் இலையை அறுத்து வந்து கேப்பைக் களி உருண்டையும் தயிரும் கொண்டு வந்து வைக்க, அந்தப்  பெண் வேக வேகமாக  சாப்பிட்டாள்… எவ்வளவு பசியோ….அவள் அவுக் அவுக் என்று சாப்பிடுவதை பரிவுடன் பார்த்தபடி இருந்தாள் தெய்வானை..

சாப்பிட்ட பின் அப்படியே எழுந்தாள் அவள்… செம்புத் தண்ணீரில் கை கழுவி விட்டு திண்ணையை விட்டு இறங்கினாள்.. இலை அப்படியே இருந்தது…அதனை நாந்தான் எடுக்கணுமா? என்கிற  சங்கடம் தெய்வானையின் மனதில் வர அந்தப் பெண்ணைப் பார்த்தாள்.

“எலையை எடுத்துப் போட்டுரு..”

அந்தப் பெண் அதே சிரிப்பைச் சிரித்தாள்.

“ என்னடி சிரிக்கிறவ? பசிக்குதுன்ன…சரின்னு பசியாத்தினா… எலையை யும் நான் எடுக்கணுமா? யாருடி நிய்யி?”

அவள் எதுவும் பேசாமல் ஓரமாக இருந்த வேப்ப மரத்தை பார்த்தாள்…அதில் இருந்த ஒரு காக்கா அவளை தலைசாய்த்துப் பார்க்க, அ வளும் அதே போல் தலை சாய்த்து அதனைப் பார்க்க

“ ஏய்…யாரு மகடி நீ?’ உன்  பேரு என்ன?”

அவள் இவளை மறுபடி பார்த்து சிரித்தாள்..

“ராணி”

“…பேரு ராணியாக்கும்…அதனால எலையை எடுக்க மாட்டயாக்க்கும்?’

ராணி பதிலே பேசவில்லை சிரித்தபடி நடக்கத் துவங்கினாள்… அவளை தெய்வானை திகைப்புடன் கவனித்தாள்.

சிகப்பு நிற சுங்கிடிச் சேலையை இழுத்துக் கட்டியிருந்தாள். கோடாலிக் கொண்டை. அவளது நடையில் நளினம் இல்லை. ஒரு அதிகாரம் இருந்தது, திங்கு திங்கு என்று தரையில் காலை உதைத்து எட்டு வைக்க…..

“ அடியே..எடுபட்ட சிறுக்கி… பிச்சைக்காரச் சிறுக்கி. எலையை எடுத்துப் போட்டுட்டுப் போடி”

தெய்வானை அதட்டலாகக் கத்த அவள் ஒரு வினாடி லேசாகத் திரும்பிப் பார்த்தவள் தன் கையிலிருந்து எதையோ தெய்வானையை நோக்கி வீசி விட்டு வேக வேகமாக நடந்து போய் விட்டாள்..

தெய்வானைக்கு சுர்ரென்று இருந்தது. ` எந்தக் காட்டுச் சிறுக்கியோ… இவ எச்சி எலையை நான் தொடணுமா’ என்று நினைத்தபடி உள்ளே போய் தென்னை மாரை எடுத்து வந்து அந்த  இலையை பெருக்கி அப்படியே ரோட்டோர சாக்கடையில் தள்ளி விட்டாள்.. பிறகு தென்னை மாரை ஓரமாகப் போட்டாள்…

அந்தச் சிறுக்கி எதையோ வீசி எறிந்தது நினைவு வர தரையில் அதைத் தேடினாள்…அவள்  எறிந்தது கீழே கிடந்தது… அதனை எடுத்த தெய்வானை முகம் மாறியது,

அது ஒரு அரசிலை. குழந்தைகள் அணிவது. பெண் குழந்தைகளின் அரைஞாண் கயிறில் கோர்த்து இருப்பார்களே அந்த அரசிலை. வெள்ளியால் ஆனது….

“ யாரு அவ? இதை எதுக்கு என் கிட்ட எறிஞ்சுட்டுப் போனா? சரியாவே பேசலையே.. கிறுக்கியா இருப்பாளோ ?”  குழப்பமும் பயமுமாக அந்த அரசிலையை பார்த்தபடி திண்ணையில் அமர்ந்தாள் தெய்வானை.

                       ராமலிங்கம் மூன்றாந்தலில் நாள் பூராவும் சுற்றி, பருத்தி கமிஷன் கடைகளில் வசூலை முடித்து முதலாளி வீட்டில் போய் ஒப்படைத்து  விட்டு கம்மாய்க் கரைக்கு நடந்தான். வடக்கு தெக்காக ஓடும் மெயின் ரோட்டிலிருந்து  மேற்கே மலையடிவார கோம்பைக்கு போகும்  வண்டிப் பாதையில் மணல் பொத பொத என்று இருந்தது. அதை ஒழுகிணிப் பாதை என்பார்கள். ரெண்டு பக்கமும் கத்தாழைப் புதர்கள் அடர்ந்து இருந்தன. பொழுது சாய இன்னும் நேரம் இருந்தது. இருந்தாலும் மாடுகளைப் பத்திக் கொண்டு சனம் மலையடிவாரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தது..ஒழுகிணிப் பாதையில் அந்த மந்தைகள் கிளப்பிய புழுதி மேலெழும்ப துண்டை வைத்து வாயைப் பொத்தியபடி வழி விட்டு நடந்து போய் கம்மாயை ஒட்டிய ஆலமரத்தருகே மேட்டில் ஏறினான் ராமலிங்கம்.

முனியாண்டிக்கு அடுத்து ராமலிங்கத்துக்கு ஏதாச்சும் சினேகிதம் உண்டென்றால் அது இந்த ஆலமரம்தான். பல வருசமாக இந்த மரத்தோட விழுதிலதான் பல் விளக்குறது.   வேலை எதும் இல்லாட்டி வந்து கால் நீட்டி சாயறதும் இங்கதான். அடிமரத்தை மூணாள் சுத்தி நின்னு கட்டிப் பிடிக்கணும். அது தவிர மேற்கு முகமா நாலைஞ்சு விழுது எறங்கி அதுவும் இப்ப மரம் கணக்காவே காலுண்டி நிக்குது. எப்பவும் கிளிகளும், அணில்களும் கிச்சு கிச்சுன்னு சத்தம் போட்டுக்கிட்டுக் கெடக்கும்.. மலையில இருந்து வர்ற தண்ணி நேரா வந்து சேர்ற இடம் இந்தக் கம்மாய்தான். மேற்குத் தொடர்ச்சி மலை எப்பேர்ப்பட்ட மலை? அதுலருந்து வர்ற தண்ணி இல்லையா? அதனால வருசம் பூரா கம்மாய் நெம்பித்தான் கெடக்கும். அது வத்திப் போய் யாரும் பாத்ததில்லை….ஆலமரத்தடியில உக்காந்து  அப்படியே பூரிச்சுத் தளும்புற தண்ணியையும், மேற்க அப்படியே ஒசந்து நிக்கிற மலையையும் பாத்துக்கிட்டே இருந்தாப் போதும். மனசுக்கு அப்படி ஒரு சந்தோசமா இருக்கும். வீட்டுலயோ , மூன்றாந்தல்லயோ ராமலிங்கம் இல்லேன்னா முனியாண்டிப் பய நேரா அவனை இங்க தேடி வந்துருவான்..

ராமலிங்கம் அப்படியே  உக்காந்து மரத்தில சாஞ்சு காலை நீட்டினான். காத்து சிலு சிலு என்று இருந்தது…  சாயங்காலம் கூடடையும் குருவிகளும் கிளிகளும் போடும் சத்தத்துக்கு நடுவே சர சர என்று  ஒரு சத்தம் கேட்டதும், சுதாரித்துத் திரும்பிப் பார்த்தான்.  அஞ்சடி நீளமிருக்கும். பவுன் நிறத்தில் ஒரு நல்ல பாம்பு சர சர என்று இறங்கி ஒழுகிணிப் பாதையை நோக்கிப் போனது. சட்டென்று திரும்பி பக்கவாட்டில் இருந்த ஒரு கத்தாழைப் புதருக்குள்  நுழைந்தது.

ராமலிங்கத்துக்கு எந்த பயமும் தோன்றவில்லை. இது மாதிரி நிறையப்  பார்த்திருக்கிறான். பாம்புகள் தன்பாட்டுக்குப் போய் விடும் என்று அவனுக்குத் தெரியும்… ஒரு நாள் கூட அவன் அதை விரட்டியதும் இல்லை. பயந்ததும் இல்லை…  காற்று கொஞ்சம் விசை எடுத்து அடித்தது.  முனியாண்டிப் பயல் தேடி வருகிற நேரம்தான் என்று நினைத்தபடி பாதையைப் பார்க்கையில்தான் அவளை கவனித்தான்.

ஒழுகிணிப் பாதையிலிருந்து  குறுக்காக கற்றாழைப் புதர்களின் இடைவெளியில் அவள் கம்மாய்க் கரை மீது ஏறினாள். “ அடி சிறுக்கி, பாதையை விட்டுப் புட்டு இவ எதுக்கு இந்த வாக்கில ஏறுறா ? “ என்று நினைத்துக்  கொண்டிருக்கையிலேயே அவள் கம்மாயின் கரையை அடைந்து அடுத்த நொடியிலேயே எம்பி கம்மாயில் குதித்தாள்…

ராமலிங்கத்துக்கு உடலெல்லாம் பதறியது. எந்தக் காட்டுச் சிறுக்கி புள்ளை இவ,  இதில வந்து குதிக்கிறாளே? என்று வேகமாக வேட்டி சட்டையை உதறி வீசி விட்டு லங்கோடுடன் கம்மாயில் குதித்தான்.  சின்ன வயதிலிருந்து நீந்தி விளையாடிய , மூழ்கி மண்ணெடுத்த கம்மாய்….நாலே வீச்சில் அவள் விழுந்த இடத்தை நெருங்கி விட்டான். அவளைக் காணோம்.. தம் பிடித்து முங்கி உள்ளே கண்ணைத் திறந்து பார்த்தான். கலங்கிய தண்ணீரில் எதுவும் தெரியவில்லை… மனசு பதறியபடி சுற்றிச் சுற்றி நீந்தி காலால் துழாவினான்..எதும் தட்டுப் படவில்லை…அய்யோ அய்யோ எங்க இருக்கா என்று துடித்தபடி மறுபடி முங்கி கொஞ்ச தூரம் அடியிலேயே நீந்தினான். தலை எதிலோ இடிக்க  கை வீசிப் பற்றினான். அவள் தான். சட்டென்று அவளை உந்தி மேலே தள்ளித் தானும் மேலெழும்பி வந்தான்.

ஆள் சிக்கியதும் மேற்கொண்டு எந்த சிரமமும் இல்லாமல் அவளை ஆலமரத்தை நோக்கி இழுத்தபடி நீந்தி வந்தான். முனியாண்டி வநது கொண்டிருந்தவன் இவனைப் பார்த்து பதறி ஓடி வர

“ குதிச்சிராதடா…இவளைப் புடி…”

கம்மாய் ஓர சகதியில் வழுக்கி விடாமல் நின்றபடி எட்டிக் கை கொடுத்தான் முனியாண்டி. கையைப் பற்றிக் கொண்டு  மறு கையால் அவளை இழுத்தபடி கரையேறினான் ராமலிங்கம்.

“ என்னாடா விசயம்?”

“ கழுதை யாருன்னு தெரியலை . விசுக்குன்னு  ஒழுகுணிப் பாதையில இருந்து மேல ஏறி குதிச்சுட்டா..”

அவளை தூக்கி வந்து மரத்தடியில் கிடத்தினார்கள்.

“ மூச்சு இருக்கு…..நெறைய தண்ணி குடிச்சிட்டாளோ?”

“ வகுத்தை அமுக்கு”

இருவரும் மண்டியிட்டு அமர்ந்து அவளைப் பார்த்தனர்.

சிவப்பு நிறச் சுங்கிடிச் சேலை..அவள் கண்களைச் சுற்றி தோல் வெள்ளை வெளேர் என்று நிறம் மாறி இருந்தது…கறுத்த முகத்தில் இரண்டு வெள்ளை வட்டங்கள்.

“ என்னடா.. கை காலு மூஞ்சியெல்லாம் வெள்ளை விழுந்து போய் கெடக்கு?”

முனியாண்டி சொன்னதைக் கேட்டு தலையாட்டினான் ராமலிங்கம்.

இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு உள்ளங்கைகளால் அவளது வயிற்றை  அமுக்கினான். சின்ன வயசுதான்.. இருபது  இருபத்தி மூணு இருக்கலாம். இவன் சரியான இடம் பார்த்து அழுத்தியதில் வாயிலிருந்து தண்ணீர் வெளியேறியது..இருமினாள்… லேசாக வாந்தி எடுத்தாள்.

அவள் வலது கையைப் பார்த்தான் ராமலிங்கம். விரல்களின் இடுக்கில் வெள்ளை வெள்ளையாக இருந்தது. கையில் ஒரு செம்பு காப்பு போட்டிருந்தாள்.

அதனருகே கையில் ராணி என்று பச்சை குத்தி இருந்தது

( தொடரும்

 

ஓவியங்கள்: கிரிஜா ஹரிஹரன்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கந்தல் ராணி 4 -பாஸ்கர்சக்தி
  2. கந்தல் ராணி 3 : பாஸ்கர்சக்தி
  3. பாஸ்கர் சக்தியின் ‘ கந்தல் ராணி’ - அத்தியாயம் 2