சனிக்கிழமை (12 ஜூன், 2021) கிளப் ஹவுசில் ‘ஹைடெக்கர் கூட்டுவாசிப்பு அறையில்’ நடந்த விவாதத்தில் ஹைடெக்கரின் தத்துவம் குறித்த ஆழமான ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது – அதற்குக் காரணம் மார்க் இன்வுட்டின் அறிமுக நூலின் (Heidegger: A Very Short Introduction) இந்த மூன்றாம் அத்தியாயமே (“இருத்தல்”) முந்திய அத்தியாயங்களை விட கூடுதல் சிக்கலான பல கருத்துக்களை உள்ளடக்கியிருந்ததே. விவாதத்தில் ஆயுஷ், ஹபீப், நந்தினி, சிமி ஆகியோர் நேரடியாக கலந்து கொண்டனர். வேறு சிலர் பார்வையாளர்களாக வீற்றிருந்தனர். பரஸ்பரம் கேள்விகளை எழுப்பி விவாதித்து விடைகளை கண்டறிந்தது ஒரு பரவசமூட்டும் அனுபவமாக இருந்தது.
இதற்கு முந்தைய நாள் விவாதத்தின் போது எழுந்த கேள்வி ஒன்றுக்கும் ஒரு சரியான பதில் அன்று கிடைத்தது – ஹைடெக்கர் ஏன் நாசிச, இனவாத கொடுமைகளை எதிர்த்துப் பேசவில்லை? அவர் தன் தத்துவத்தை அறத்துக்கு அப்பாலான ஒன்றாக முன்வைக்கிறாரா? அல்லது அறம் என்பது தன் தத்துவத்துக்குள் வராது என்கிறாரா?
இருத்தலைக் குறித்த ஹைடெக்கரின் சில பிரபலமான உதாரணங்கள், உவமைகள் இதை நுட்பமாக தெரிவிக்கின்றன. ஒன்று சுத்தியல் பற்றியது. ஒருவர் சுத்தியால் சுவரில் அறையும் போது அவர்-அவருடைய கை-அது பற்றியுள்ள சுத்தியல்-அது ஆணியில் மோதும் புள்ளி-ஆணி பொருந்தியுள்ள சுவர் என ஒரு இணைப்புச் சித்திரம் தோன்றுகிறது, இந்த சித்திரமே சுத்தியால் அறையும் ஒருவரின் இருத்தல் என்றார் அவர். இதற்குப் பதிலாக அவர் ஒரு பெண்ணின் தலையை சுத்தியலால் உடைத்து கொலை செய்தால் அது அப்போதைய இருத்தலாகும். ஹைடெக்கர் இரண்டு காட்சிகளையும் சமன்படுத்தவில்லை, ஆனால் இருத்தலில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என்கிறார். புரியவில்லையா? இதைத் தான் நாங்கள் அன்று மும்முரமாக விவாதித்து புரிந்து கொண்டோம்.
அரிஸ்டாட்டில் ஒரு சுத்தியலை, அதன் இருத்தலை அதன் பயன்பாடு கருதி மட்டுமே வரையறுத்தார். ஒரு சுவரில் ஆணியை அறைய, தச்சுப்பணிகளுக்கு பயன்படும் ஒரு சுத்தியல் வேறு, கொலை செய்ய பயன்படும் சுத்தியல் வேறு. அரிஸ்டாட்டில் இதை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், பொதுச்சமூகத்துக்கு பயன்பாட்டு அடிப்படையிலான இருத்தலானது ஒழுக்கம், அறம் குறித்த மதிப்பீடுகளை அமைக்க உதவுகிறது. இந்த இடத்தில் இதைப் புரிந்து கொள்வது முக்கியமானது. பிறகு ஏன் இதை சொல்கிறேன் என்பதற்கு வருகிறேன்.
அரிஸ்டாட்டில் இந்த உலகிலுள்ள உயிருள்ள ஜீவன்களுக்கு, உயிரில்லாத பொருட்களுக்கு ஒன்று அவற்றின் பெயர்களின், அடையாளங்களின் அடிப்படையில் இருத்தல் தோன்றுகிறது, அதே சமயம் ஒரே மாதிரியான சாயல்கள் கொண்ட இருத்தல்களும் இருக்கின்றன என்கிறார். ஒரு பொருளின் இருத்தலை அவர் பத்து பகுப்புகளாக பிரிக்கிறார் – இயல்பு, பொருண்மை, மற்றொன்றினுடனான அதன் தொடர்பு … இப்படி. இந்த பத்து பகுப்புகளுக்கும் தலையானது அதன் சாரமே என கருதுகிறார். உ.தா., ஒரு குதிரையைப் போன்றே குதிரை வடிவிலான விளையாட்டுக் கருவி இருக்கலாம். ஒரு வெண்ணிற குதிரை, கறுப்புக் குதிரை, பந்தயக் குதிரை, உழவுக்குதிரை, போர்க் குதிரை என பலவிதமான குதிரைகள் இருக்கலாம். ஆனால் ஒரு குதிரையின் நிறமோ உயரமோ அதன் வாசனையோ அல்லது அதன் பயன்பாடோ அதை குதிரையாக்காது. குதிரையை குதிரையாக்கும் அதன் ஒரு சாராம்சமே தலையானது, பிற சங்கதிகள் அதன் பேரினத்தை (genus) தீர்மானிக்க இயலாது என அரிஸ்டாட்டில் கூறுகிறார். இந்த “குதிரைத்தன” சாராம்சமே ஒரு குதிரையின் ‘இருத்தல்’. குதிரை என சொல்லும் போது நமக்குத் தோன்றும் பல அர்த்தங்கள் வரலாற்றுரீதியிலான, மொழி, பண்பாட்டு ரீதியிலான தற்செயல் தொடர்புகளால் தோன்றுபவை. அவற்றின் மேம்போக்கான சாயல்கள் அவற்றின் இருத்தலை தீர்மானிக்க முடியாது. அதாவது குதிரை பொம்மை, மேய்ச்சல் குதிரை, போர்க்குதிரை என பல குதிரைகள் ஒரே சமயம் பரஸ்பரம் வேறுபட்டவையாகவும் ஒன்றாகவும் இருக்கலாம், அப்படி இருப்பதனால் அவற்றுடைய இருத்தல் தோன்றாது. ஏனென்றால் குதிரை எனும் பேரினத்திற்குள் முடிவற்று பல்வேறு வகையான இருத்தல்கள் தோன்றிக் கொண்டிருக்க முடியாது.]
எழுத்தாளனை எடுத்துக் கொள்வோம் – எழுதுவது என்பதை சாராம்சமாக புரிந்து கொண்டால் புத்தகம் எழுதுகிறவன், பிளாக் எழுதுகிறவன், செய்தி அறிக்கை எழுதுகிறவன், காவல் நிலையத்தில் வழக்கை பதிவு செய்கிறவன், காதல் கடிதம் எழுதுகிறவன், பேஸ்புக், டிவிட்டரில் எழுதுகிறவன், தான் எழுதியதை ஒரு போதும் பதிப்பிக்காமல் கிழித்துப் போடுகிறவன் என பல விதங்களில் ஒருவன் எழுத்தாளனாய் ‘இருக்கலாம்’. நாம் இவர்களை தொகுத்து எழுத்தாளன் என ஒரு பேரினத்தை உண்டு பண்ணும் போது நம் வசதிக்கு ஒரு எழுத்தாளனை கற்பனை பண்ணுகிறோம். அவனே மையம், அவனைப் போன்று செயல்படுகிறவர்கள் – கடிதம் எழுதுபவர்கள், தேர்வு எழுதுபவர்கள், காவல் நிலைய ரைட்டர்கள், தொலைக்காட்சி தொடர் எழுதுகிறவர்கள் – எழுத்தாள சாயல் கொண்டவர்களே ஒழிய ‘அசல்’ எழுத்தாளன் அல்ல எனக் கூறுகிறோம். இந்த பகுப்புமுறையைத் தான் அரிஸ்டாட்டில் முன்வைத்தார்.
இப்போது யோசித்துப் பார்த்தால் ஒருவரை அவருடைய சாராம்சமான சில செயல்களின் அடிப்படையில் – குதிரையாக இருத்தல் – ஒற்றைப் புள்ளியில் அடையாளப்படுத்தினால் அங்கு ஒரு ஒழுக்கவாத, அற மதிப்பீடு சாத்தியமாகும். ஒரு திருடன் என்ன தான் சமையல் செய்து சாப்பிடுகிறவனாக, வேளாவேளைக்கு வீட்டு வேலைகளை செய்கிறவனாக, புத்தகம் படிப்பவனாக, டி.வி பார்ப்பவனாக, முகநூலில் பதிவு போடுகிறவனாக இருந்தாலும் அவன் அந்தந்த செயல்களால் அல்ல திருட்டினாலே அறியப்படுவான். ஒரு அரசியல் தலைவர் ஊழல் செய்தாலும் அவர் அரசியல் தலைவரே; என்ன ஊழல் செய்த அரசியல்வாதி ஆவாரே ஒழிய அவரது சாராம்சமான இருத்தல் மாறாது. நமது மரபான சமூகம் நீண்ட காலமாக இப்படியே இருத்தலை அடையாளம் கண்டு வருகிறது – ஏனென்றால் அதிகாரக் கட்டமைப்பை உண்டு பண்ண, அதற்கு ஒருவரை நிரந்தரமாக அமர்த்துவதற்கான பேரங்களில் ஈடுபட, ஒழுக்கவாத பஞ்சாயத்துகளில் கலந்து கொண்டு அடுத்தவர்களை ஒடுக்க இது நமக்கு அவசியமாக இருக்கிறது. ஹைடெக்கர் இந்த வகையிலான இருத்தல் படிநிலையை ஏற்கவில்லை.
ஹைடெக்கர் இருத்தலை சாராம்சமற்ற, மனிதனை மையமாக்காத, ஒற்றை செயலின் அடிப்படையில் வரையறுக்காத ஒன்றாக வரையறுத்தார். ஒரு விசயம் அந்த சமயத்தில் ஒரு குறிப்பிட்ட வெளியில் குறிப்பிட்ட ஒன்றாக இருப்பதே இருத்தல் தான் – இப்படியான “அந்த-இருத்தல்” (that being), எதுவொன்றாக இருத்தல் (what being), அவ்வாறு இருத்தல் (how being) என பலவிதங்களிலான இருத்தல்களை ஹைடெக்கர் பரிசீலித்தார். முக்கியமாக, ஒன்றை அதன் சாராம்சமான செயல்பாட்டைக் கொண்டு அடையாளப்படுத்தும் போது அது ஒரு புறவயமான சங்கதி ஆகிறது. ஒரு கத்தியை எடுத்துக் கொண்டால் அது வெட்டுவதற்கான கருதி. பலவகை கத்திகள் உண்டு. சமையல் கத்தியும், கொலைக்கருவியும் ஒன்றல்ல – ஆனால் அதை எதற்கு பயன்படுத்துகிறோமோ அதைக் கொண்டு தான் பொதுவாக அடையாளப்படுத்துகிறோம். கத்தி என்பது எல்லா இடத்திலும் கத்தி தான். ஒரு கொலைக்காக நாம் கத்தியை பழிக்க மாட்டோம். அங்கு நமது கவனம் கொலைகாரன் மீது சென்று விடுகிறது. அதை கொலைகாரனின் கத்தியாக்குகிறோம். ஒருவன் தான் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த கத்தியை வைத்து சட்டென பக்கத்தில் நிற்கிறவரை குத்திக் கொன்று விட்டால் அது சற்று முன்பு சமையல் கருவியாகவும், அதற்கடுத்து கொலைக்கருவியாகவும் மாறி விடுகிறது. இங்கு நம் வசதியின் பொருட்டு ஒரு சாராம்சத்தை அக்கருவி மீது ஏற்றுகிறோம். அந்த கத்தியை கழுவாமல், அதிலுள்ள கைரேகைகளை அழிக்காமல் ஆதாரமாக அதை பாதுகாக்கிறோம். வழக்குவிசாரணையில் அது ஒரு முக்கிய அங்கமாகிறது.
இப்படி இருத்தலை புறவயமாக உறைய வைப்பது பிழையானது என ஹைடெக்கர் கருதுகிறார். ஏனென்றால் இருத்தலானது அப்படி செயல்பாட்டளவில் உறைந்து நிற்பதில்லை. இருத்தல் என்பது கத்தியை கையில் எடுப்பவன், அவன் இருந்த வெளி, அவன் இருந்த காலம், அவன் அதைக் கையில் எடுத்த அந்த ‘உறவுநிலை’ ஆகியவற்றில் இருந்து பிரித்து புறவயமாக பிரித்தெடுத்து ஆய்வு செய்யும் ஒன்றல்ல. இருத்தல் என்பது ஒரு வலைப்பின்னலின் தோற்றம் – அதன் ஒவ்வொரு கண்ணியும், அதில் சேர்ந்த தூசு, அதில் விழுந்த பூச்சிகள், ஏற்கனவே அதில் சிக்கி இறந்த பூச்சிகளின் உடல், ஓரமாய் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கைப்பார்க்கும் சிலந்தி, அது எந்த வெளியில், காலத்தின் மீது தொங்கிக் கொண்டு அசைகிறதோ அவை என பல விசயங்களை ஒன்றிணைப்பதாக உள்ளதே இருத்தல். கத்தியை ஒருவன் கையில் எடுக்கையில், அந்த குறிப்பிட்ட காலத்தில், வெளியில், ‘அவன் கத்தியை-அங்கு-அப்போது-எடுத்தவன்’ ஆகிறான். அவனையும் கத்தியையும் இரு வேறாகப் பார்ப்பதோ, அவன் என்ன செய்தான் என்பதை வைத்து அவனை மதிப்பிடுவதோ அவனுடைய இருத்தல் அல்ல. அவனுடைய இருத்தலானது ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு இடத்திலும் இன்னொன்றாக தோன்றிக் கொண்டே இருக்கிறது. சொல்லப் போனால் அக்கத்தியை எடுத்து இன்னொருத்தனை குத்துகிறவனின் இருத்தலானது கத்தியால் குத்தியவனுடையதே அல்ல; ஏனென்றால் குத்திய பின்பு அவன் அதுவல்ல. மற்றொரு கால, வெளிக்குள் அவன் புகுந்து விடுகிறான். இப்படி பேசுவதன் நோக்கம் அது குற்றம் அல்ல என நிறுவுவதல்ல – இருத்தல் என்பது குற்றம், குற்றமற்றது எனும் பாகுபாடுகளுக்குள் அடைபடுவது அல்ல எனக் கூறுவதே இந்த விவாதத்தின் நோக்கம்.
இதைக் கொண்டே ஹைடெக்கரின் ‘இருத்தல்’குறித்த விவாதங்களில் ஏன் அற மதிப்பீடுகளுக்கு இடமில்லாமல் போகிறது என நாம் புரிந்து கொள்ளலாம். அவர் இருத்தலுக்கு அறிவு, அற விழுமியங்களிலான மதிப்பீட்டுக்கு எந்த அவசியமும் இல்லை எனக் கூறுகிறார். எனில் அறிதலுக்கும், மதிப்பிடலுக்கும் முன்பான ஒரு இருத்தல் உண்டா?
தீயைத் தொட்டால் சுடும் என்பது எச்சரிக்கை. இது தீய்க்காயத்தின் அனுபவத்தால் அல்லது அது குறித்த ‘முன்னறி’ ஞானத்தால் வருவதாக இருக்கலாம். பனிக்கட்டியை தொட்டால் குளிரும் என்பதும் அப்படியே. இதில் ஒரு மதிப்பிடல் இல்லையா? இந்த மதிப்பிடலில் இருந்து இருத்தலை பிரிக்க முடியுமா? நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது நீங்கள் என் முதுகில் ஒரு பனிக்கட்டியை வைத்தால் நான் அதை உணர்வது “குளிர்” எனும் சொல்லின் வழியாக அல்லவா? ஹைடெக்கர் இதை மறுக்க மாட்டார் – ஆனால் பனிக்கட்டி என் உடலைத் தொடுதலில் நான் அறியும் இருத்தலானது நிச்சயமாக குளிர்மையை அறிவதற்கு முன்பானதே. பனிக்கட்டி என் உடல் இருக்கும் வெளிக்கு, காலத்துக்கு வரும் போது அது என் இருத்தலின் பகுதி ஆகி விடுகிறது. ஒரு மைக்ரோ நொடியில் அது என்ன என பகுத்தறிந்த பின்னரே மதிப்பிடல் நிகழ்கிறது. உ.தா., ஏற்கனவே கடுங்குளிராக இருக்கும் இடத்தில் ஒரு பனிக்கட்டி முதுகில் படுவது என்னை அதிர்ச்சி அடைய வைக்காமல் இருக்கலாம். அதனால் பனிக்கட்டி-என்-முதுகை-ஒரு இடத்தில்-ஒரு நொடியில்-தொடுகிற அந்த இருத்தல் நிகழாமல் போகாது. “அறிதல்” என்பதை ஹைடெக்கர் பிரக்ஞை, பகுத்தறிதலுக்கு முன்பான ஒன்றாக இதனாலே கருதுகிறார்.
இப்படி ஒவ்வொன்றுக்கும் பின்னால் வெகுநுட்பமான இடத்துக்கு அவர் இருத்தலை எடுத்து செல்வதால் அவருக்கு அறம் ‘அங்கு’ முக்கியமாக இருப்பதில்லை. இதன் பொருள் அவர் அறத்தை பொருட்படுத்தவில்லை என்பதல்ல.