திறப்பதும்…… மூடுவதும்
மகள் வயதில் நின்ற
நான்கு பூவரச மரங்கள்
அவளின் திருமணச் செலவிற்காக வெட்டப்பட்டபோது
வீடே
ஒருவித நிசப்தத்தில் மூழ்கியது
அன்றுமட்டும்
பூவரசமரங்கள் வெட்டப்படவில்லையென்றால்
அவளது திருமணம் நடந்திருக்காது
இன்று அந்தப் பூவரசமரம்
யாரோ ஒருவர் வீட்டில்
நிலைக்கதவாகவோ
சன்னலாகவோ நிச்சயமிருக்கும்
ஒருபெண்
திறப்பாள்
மூடுவாள்.
********
வெடிச்சத்தம்
வறண்ட காட்டில்
சிறு குருவிகள்
தம் கண்ணையொத்த தானியங்களைத் தேடுகின்றன
யானைப்போல் படுத்துக்கிடந்த பாறை
பலத்த வெடிச்சத்தத்துடன்
கற்களை வனமெங்கும் வீசி
புகையையும் நெருப்பையும் உமிழ்கின்றன
குருவிகள்
இருளடைந்த பொழுதில்
தம் முட்டைகளைத் தேடுகின்றன
முட்டைகள் கருங்கல் வீச்சில்
சிதைவுற்றுக்கிடக்கின்றன
குருவிகள் கங்குல் இரவில்
காட்டில்
துயில்கொள்ள இயலாமல்
அலரித் தவிக்கின்றன.
மீண்டும் ஒரு பலத்த வெடிச்சத்தம்
காடு
காடாகவும் இல்லை
குருவிகள் குருவிகளாகவும் இல்லை.
*********
கழிவாகும் நிலம்
ஒலிவ மலர்களை
லீலி பூக்களை அவன் கண்டதேயில்லை
காட்டுமல்லிகையின் வாசத்தை நுகர்ந்ததுண்டு
முற்றிய செம்மண் நிலத்தில்
அவன்
பூக்களைக் கொட்டியதில்லை
தானியங்களைக் கொட்டியவன்
மணக்க மணக்க
விளைந்த நெல்மணிகளை மஞ்சளை அவித்துக்
காற்றில் வாசத்தைத் தூவியவன்
நிலம் கர்ப்பமடையவில்லை என்று
கண் கலங்குகிறான்
பசுங்கிளிகள் அற்ற அவனது நிலம்
உணவுத் திருவிழா நடத்துகிறது
சிறுதானியங்களை அறிமுகம் செய்கிறது
நூறு… ஆயிரம் என
மருந்துச் சீட்டுகளால்
கைகள் நீளும்
அவனது நிலம்
அணுவுலைக் கொட்டும் கழிவால் நிறைகிறது.
********