மார்கெட் தெரு தன் மதிய நேர மந்த நிலையிலிருந்து மெல்ல விலகி மாலை நேரப் பரபரப்பிற்குள் நுழைந்துகொண்டிருந்தது. வெய்யில் காலம் என்பதால் வெப்பமிருந்த நீண்ட மாலையாக அது இருந்தது. மார்க்கெட்டின் பின்பகுதியில் இருக்கும் மீன் கடைகள் மதியமே மூடப்பட்டுவிட்டன. கருவாடு விற்கும் ஒரு கிழவி மட்டும் எங்கோ பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.  அந்த வரிசைக்கு அடுத்த வரிசையிலிருந்த வளையல் கடைகளில் சிறியது முதல் நடுத்தர வயது பெண்கள் வரை ஏதேதோ வாங்கிக்கொண்டிருந்தனர். அதற்கு அடுத்த இரண்டு வரிசையில் காய்கறி கடைகளும் கடைசியில் முட்டைக்கடைகளும் மற்றும் வாழையிலைக் கடைகளும் இருந்தன. அந்த ஐந்து வரிசைக்கு குறுக்காக , நடுவே ஒரு வரிசையும் கடைசியாக ஒரு வரிசையும் இருந்தது. நடுவே இருந்ததில் சில காய்கறிகளும் கடைசியாக இருந்த குறுக்கு வரிசையில் கறிக்கடைகளும் இருந்தன. அதே வரிசையின் கடைசியில் இடதுபுறம் ஒரு நுழைவாயிலிருந்தது. வலதுபுற மூலையில் ஒரு கழிப்பறை இருந்தது. இந்த மார்க்கெட்டுக்கு மொத்தம் மூன்று நுழைவாயில்கள். மார்க்கெட் தெருவில் அடுத்தடுத்து இரண்டு நுழைவாயில்களும் பக்கத்து தெருவில் கறிக்கடைகள் உள்ள இடத்தில் ஒரு நுழைவாயிலும் உண்டு. மார்க்கெட் தெருவில் இருக்கும் இரண்டு நுழைவாயிலுக்கு நடுவே ஒரே ஒரு காய்கறி கடை மட்டுமே உண்டு சற்று பெரிய கடை. காலையிலிருந்து மதியம் வரை அதில் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இந்தக் கடையால் மார்க்கெட்டுக்குள் இருக்கும் காய்கறி கடைகள் சற்று கடுப்பில் இருந்தன. இந்தக் கடை சரியாக மூன்று மணிக்குச் சாத்தப்பட்டுவிடும். அதன்பிறகு மாலை வேலைகளில் அந்த கடையின் திண்ணையில் சிலர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள். சில வயதானவர்கள் புதுச்சேரியின் முக்கிய வழக்கமான ஒன்றான செஸ் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அதை ஒரு கும்பல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்.

“இன்னா வெய்யிலு இப்புடி காயிது” என்று அலுத்தபடியே வந்து தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் உட்கார்ந்தாள் சின்னப்பொண்ணு. சின்னப்பொண்ணுக்கு முடியெல்லாம் நரைத்துவிட்டது. பட்டுப்புடவைக் கட்டியிருந்தாள். கழுத்தில் இரட்டைவட சங்கிலியும் , காதில் கல் வைத்த பெரிய கம்பலும் மூக்கின் இருபுறமும் மூக்குத்தி அணிந்திருந்தாள். அவள் வந்து உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே “இன்னா ஆயா அதுக்குள்ள வந்துட்ட? கொஞ்சம் வெய்யிலு தாழ்ந்ததும் வரலாம்ல” என்று சொல்லிக்கொண்டே அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள் லட்சுமி. லட்சுமி பள்ளிக்கூட சீருடை அணிந்திருந்தாள். அது சற்று அழுக்காக இருந்தது. பதினொன்று அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கலாம் என்று பார்த்தவுடன் கணிக்கத்தக்க வகையில் இருந்தாள்.

“ஆமா, அந்த கிறுக்கன் எங்க ஒரு நேரம் போல இருக்கான். இப்பெல்லாம் திடீர்னு திடீர்னு கடைய மூடிகினு ஓடிர்றான், இல்லனா புதுசா ஒரு குட்டிய கூட்டிகினு வந்து அமக்களம் பண்ணின்னு இருக்கான். இதுக்குலாம் என்னிக்கு தான் ஒரு விடிவுகாலம் வருமோ” என்றாள் சின்னப்பொண்ணு. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ஒரு குழந்தை அழுதபடி அவர்கள் எதிரில் சுற்றி சுற்றி வந்தது. ஆனால், யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை. சின்னப்பொண்ணு சலித்துக்கொண்டாள், “இது ஒன்னு… எப்பப் பாத்தாலும் அழுதுகினு. இதால ஒரே தல நோவு”.

“ஆயா, கொழந்தயப் போயி அப்புடி சொல்லாத ஆயா. தனியா அது இன்னா பண்ணும் சொல்லு”

“க்கும். இதே வந்துடுச்சிங்களே அரைவேக்காடுங்க” என்று சின்னப்பொண்ணு சொன்னதும் மார்பளவு மட்டும் உருவம் கொண்ட சில ஆண்களும் பெண்களும் மிதந்தபடி வந்துகொண்டிருந்தனர்.  அதில் ஒரு பெண் நேராக சின்னப்பொண்ணுவிடம் வந்து  “ எப்ப பாத்தாலும் எங்கள் கரிச்சிக்கொட்றதே உனுக்கு வேலையாப் போச்சி. அந்த கோயிலாண்ட தான நீ பஜ்ஜி சுட்டுன்னு இருக்க, இரு அங்க போயி என் வேலைய காட்டிட்டு வரேன்” என்று அந்தப் பெண் மிதந்தபடியே தெரு முனைக்குச் சென்றாள்.

“போடிப் போ…”

“ஏன் ஆயா… எங்களுக்கு தான் தலையெழுத்து இப்புடி இருக்குறோம். உனுக்கு இன்னா நல்லாத்தானே இருக்கற. ஏன் இன்னும் உன்ன வாங்கின்னு போவாம இருக்குற.”

“மறந்திருப்பேன். வயசாயிடுச்சில”

“சும்மா சொல்லாத ஆயா போன வாரம் சும்மா உன் கடை வரைக்கும் போயிட்டு வந்தேன். அங்க யாரோ ரொம்ப நாளுக்கி முன்னாடி கடன் வாங்கிட்டு குடுக்கலன்னு ஏசின்னு இருந்த”

“க்கும்… இதெல்லாம் நல்லா கேளு, ஆமா ஏன் அழுவற”

“நான் எங்க அழுவறேன்”

“அங்க பாரு. அழுதுனு வறது நீதான”. சின்னப்பொண்ணு சொன்னதும் லட்சுமி திரும்பிப் பார்த்தாள். தூரத்தில் லட்சுமி வேறு ஒரு உடையில் சற்று வளர்த்தியாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவள் கண்கள் கலங்கி அதில் கண்ணீர் வழிந்தவாறு இருக்க அதை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டே இவர்களைக் கடந்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தாள்.

“இன்னாடி ஆச்சி” என்றாள் சின்னப்பொண்ணு. அவள் அருகில் இருந்த லட்சுமி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னால், “ஏதுனா ஆயிருக்கும். வுடு ஆயா, இப்ப நாம ஃபீல் பண்ணி இன்னா ஆவப்போவது. சின்னப்பொண்ணு அமைதியாக இருந்தாள். ரோட்டில் அழுதுகொண்டிருந்த குழந்தையின் சத்தம் திடீரென்று அவளுக்கு உறைக்க, மீண்டும் தன் பழைய நிலைக்கு வந்து, “இது இன்னாட ஒரே ரோதனயாப் போச்சி” என்றாள்.

வானம் தன் நீல நிறத்தைக் கரைத்துக்கொண்டிருந்தது. தெருவிளக்குகள் தெருவை ஒளியூட்டத் தொடங்கின. அவர்கள் எதிரில் கழுத்தில் பூமாலையுடன் ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் மெல்ல நடந்து வந்தாள். அவள் முகம் வாடியிருந்தது. கைகளில் நிறைந்திருந்த வளையல்கள் அவள் நடந்து வரும்போது ஓசையெழுப்பி சின்னப்பொண்ணுவின் கவனத்தை கலைத்தது. அருகில் வந்த அவள் “ஆயா, செத்த தள்ளி உக்காறேன். எறைக்குது”. சின்னப்பொண்ணு எதுவும் பேசாமல் தள்ளி உட்கார்ந்தாள். அவள் இருவருக்கும் இடையில் உட்கார்ந்துகொண்டாள்.

“வசந்தாக்கா… போயி உன் புள்ளய பாத்து வந்துட்டு வருவோமா” என்றாள் லட்சுமி.

“வேணாமா. ரொம்ப எறைக்குது. அதுவுமில்லாம, இவன் எப்ப கடையப் பூட்டிகுனு போவான்னு தெரியாது. அப்பறம் அதுக்கு வேற ஓடிவரனும்.”

“போனவாட்டி பாத்தப்பவே நல்லா வளந்திருந்தான்ல”

“ஆமா… அப்படியே அவங்கப்பா ஜாட”

“இப்புடி உட்டுப் போறதுக்கு எப்புடித்தான் இவங்களுக்குலாம் மனசுவருதோ” என்று அலுத்துக்கொண்டாள் சின்னப்பொண்ணு.

“ஆயா கம்முன்னு இருக்கமாட்ட” என்று அதட்டினாள் லட்சுமி. சிறிது நேரம் அமைதி நிலவியது. அப்போது ஒரு கிழவர் கத்திக்கொண்டே வந்தார், “அய்யோ… இன்னும் எத்தினி நாளிக்கித்தான் இந்த கன்றாவியெல்லாம் பாத்துன்னு இருக்கறதுன்னு தெரிலயே. எனக்கு ஒரு சாவு வந்துத் தொலையமாட்டேங்குதே” என்று கத்திக்கொண்டே இவர்களை நோக்கி நடக்க முடியாமல் வந்தார்.

“இன்னா தாத்தா. எப்ப கூப்டாலும் வரமாட்டேன்னு சொல்லுவ.” என்றாள் லட்சுமி.

“என்னால இந்த எழவெல்லாம் பாத்துன்னு இருக்க முடியாது. இன்னாத்தான் நெனச்சுன்னு இருக்கறான் அவன். அந்தக் குட்டிய கூட்டின்னு வந்து இத்தினி நாளா பேசினு தடவிகினு இருந்தான். இன்னிக்கி இன்னாடான்னா அந்த ரூமுக்குள்ள போயி” என்று தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும் போதே எதிரில் கேட்டுக்கொண்டிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டனர்.

“வசந்தாக்கா… தாத்தா சொல்றதப் பாத்தா அவன் கடைய அடைக்க நேரம் ஆவும் போல வா மெதுவா போயிட்டு வந்துடலாம். பக்கத்து தெருவுல தான.” என்றாள் லட்சுமி.

வசந்தா சரியென்றவாறு தலையசைத்துவிட்டு மெல்ல எழுந்தாள். லட்சுமி அவள் எழுந்திருக்க உதவி செய்தவாறே, “ஆயா,  இதோ வந்துடறோம்.” என்றாள்.

“செரி பாத்து போயிட்டு வாங்க. அப்புடியே என்னையும் கண்டுகுன்னு வாங்க”.

அவர்கள் மெல்ல நடக்கத் தொடங்கியதும் காலியான இடத்தில் தாத்தா உட்கார்ந்துகொண்டு மீண்டும் புலம்ப ஆரம்பித்தார்.

“லட்சுமி”

“இன்னாக்கா”

“எதுவும் ஆவாம இருந்திருந்தா இந்நேரம் நீ காலேஜ்லாம் முடிச்சிருப்பல்ல”

“அதவுடுக்கா, இன்னா எழுதிகிதோ அதான நடக்கும்”

வசந்தா எதுவும் பேசவில்லை. அவளுக்கு அவள் வளைகாப்பு அன்று நடந்தவை கண்முன் வந்து போனது. அன்று அவள் மிக மகிழ்ச்சியாகவும் அதே சமயம் உள்ளூர ஒரு பயத்துடனும் இருந்தாள். சொந்தங்களும்  அக்கம்பக்கத்தினரும் வந்து அவளுக்கு நலங்கு வைத்துவிட்டு சென்றனர். அவள் தன் கணவனை அன்று போல் என்றுமே அவ்வளவு மகிழ்ச்சியாகப் பார்த்ததேயில்லை.அனைவரும் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும்தான் அவள் கணவன் திடீரென்று ‘ஸ்டுடியோவிற்கு சென்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா’ என்று கேட்டான். அவர்கள் வீட்டிலும் சரியென்று சொல்ல அப்போதே அவர்கள் பக்கத்து தெருவிலிருந்த ஸ்டுடியோவிற்குச் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதலில் இருவரும் பிறகு அவள் மட்டும் தனியாகவும் எடுத்துக்கொண்டனர். நீண்ட நாட்களாக அவள் கணவன் அந்த புகைப்படத்தை வாங்கவேயில்லை. ஏற்கனவே அந்த ஸ்டுடியோவில் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாங்கப்படாமல் இருந்தவர்களைப் போல் இருவர்களும் ஒருநாள் உயிர்பெற்றார்கள். அவர்களை போல உலாவத் தொடங்கினார்கள். மாலை வேளையில் பேசத் தொடங்கினார்கள்.

லட்சுமியின் நினைவுகள் எங்கெங்கோ அலைபாய்ந்துகொண்டிருந்தன. லட்சுமி கல்லூரி விண்ணப்பத்தில் ஒட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுக்க வந்தவள், ஆசைப்பட்டு ஒரு முழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டவள். எப்படியாவது ஒரு டிகிரி வாங்க வேண்டும் என்று அவள் அப்பா கடைசியாகச் சொன்னது அவளுக்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு டிகிரி முடித்துவிட்டால் தன் வாழ்க்கையே மாறிவிடும் என்று அவள் அப்பா நம்பினார். அவர்கள் அதே மார்க்கெட்டில்தான் இலைக்கடை வைத்திருந்தார்கள். அவள் புகைப்படம் எடுத்த அன்று இரவே அவள் அப்பா இறந்துவிட அவள் கல்லூரிக் கனவு கனவாகவே போனது. இப்போது அவள் அந்த இலைக்கடையின் வருமானத்தில்தான் தன் அம்மாவையும் மூளை வள்ர்ச்சியில்லாத தன் தம்பியையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

சின்னப்பொண்ணு, கிழவர், என ஏதோ ஒரு காரணத்திற்காகப் புகைப்படங்களை வாங்காதவர்கள். வெறும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்துக்கொண்டவர்கள் மார்பளவு உருவத்துடன் உலாவிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு மணி என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் போலியோ வால் பாதிக்கப்பட்டவன். எப்போதும் லட்சுமியுடனே இருப்பவன். இரண்டு கட்டைகளின் உதவியுடன் தான் அவனால் நடக்க முடியும். அவன் ஒரு நாள் லட்சுமியிடம்’ஏன் லட்சுமியாக்கா… நானும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்திருந்த இவங்கள மாதிரி ஜாலியா பறந்துன்னு இருந்திருப்பேன்ல. எதுக்குத்தான் எங்கப்பா என்ன முழுசா போட்டோ புடிச்சாறோ’ என்றான். திடீரென்று ஒருநாள் அவன் மறைந்துவிட்டான். இறந்துவிட்டால் மறைந்துவிடலாம் என்று அவர்கள் அன்று தான் உணர்ந்தார்கள்.

மற்றொரு நாள் வசந்தாவின் கணவனும் மறைந்துவிட்டான். ஒரு கணம் அனைவருக்கும் திக்கென்று ஆனது. லட்சுமி, வசந்தாவை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடினாள். வீட்டு வாசலில் அவள் கணவன் கண்ணாடி பெட்டியில் படுக்கவைக்கப்பட்டிருந்தான். அவன் அருகில் வசந்தா மயங்கிக்கிடந்தாள். விபத்தில் இறந்துவிட்டதாக அருகிலிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். வசந்தா அழத்தொடங்கினாள். லட்சுமியால் அவளைச் சமாதானப்படுத்த முடியவில்லை. எப்படியோ ஒருவழியாக மீண்டும் அவளை அழைத்து வந்தாள். இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. அவ்வப்போது சென்று தன் குழந்தையைப் பார்த்துவிட்டு  வருவாள். அப்போதெல்லாம் தன் வயிற்றை ஒருமுறை தடவிக்கொள்வாள்.

இருவரும் மெல்ல வசந்தாவின் வீட்டிற்கு வந்தனர். வாசற்கதவு லேசாகத் திறந்திருந்தது. ஹாலில் குழந்தை மட்டும் பொம்மைகள் வைத்து விளையாடிக்கொண்டிருக்க வசந்தா மெல்ல அதன் அருகில் சென்று, “என் ராஜா குட்டி” என்று கொஞ்சினாள். லட்சுமி வசந்தாவை பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு இவர்களைத் தெரியவில்லை. அதுபாட்டிற்கு விளையாடிக்கொண்டிருந்தது. அது ஒரு சிறிய வீடு. அந்த ஹாலைத் தவிர்த்து ஒரு அறையும் ஒரு சிறிய சமையற்கட்டும் இருந்தது. வசந்தா மெல்லத் திரும்பி சுற்றிப்பார்த்தாள். சுவரில் அவள் கணவன் படத்திற்கு மாலை போடப்பட்டிருந்தது. அதைக் கண்டு அவள் கண்கள் கலங்கின. லட்சுமி சுற்றிப் பார்த்துக்கொண்டே, “கொழந்தயவுட்டு எங்கக்கா போன, உன் மாமியாரையும் காணோம்” என்றாள். அருகிலிருந்த அறைக் கதவு சாத்தப்பட்டிருந்தது. இருவரும் சென்று பார்த்தனர். அது உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அருகிலிருந்த ஜன்னல் வழியாக இருவரும் பார்த்தனர். ஒருநொடி இருவரும் அதிர்ந்தனர். வசந்தா அப்படியே நின்றுகொண்டிருந்தாள். லட்சுமி கத்தத் தொடங்கினாள்.

“அக்கா… வேணாக்கா… அக்கா”

உள்ளே ஃ பேனில் தன் புடவையால் தூக்கு மாட்டிக்கொண்டிருந்த வசந்தாவிற்கு அது கேட்கவேயில்லை. லட்சுமி தொடர்ந்து கத்தினாள். “அக்கா… அவசரப்படாதக்கா… வெளியே வந்து அந்த பச்சப்புள்ளய பாருக்கா… அதவுட்டு போவாதக்கா… அக்கா” என்று தொடர்ந்து கத்திக்கொண்டேயிருந்தாள். ஆனால், வசந்தா அதற்குள் சுருக்கை தன் கழுத்தில் மாட்டி நாற்காலியைத் தள்ளிவிட்டு விட்டு துடிக்க ஆரம்பித்தாள். அவள் அடங்கி முடிக்க நீண்ட நேரம் ஆனது. அதுவரை லட்சுமி கத்திக்கொண்டே இருந்தாள். ஒருவழியாக அது அடங்கி முடித்ததும் அழுதுகொண்டு ‘இன்னாக்கா இப்புடி பண்ணிட்ட’ என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பார்த்தாள். அங்கே வசந்தா இல்லை.

வசந்தவின் மாமியார் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தாள். குழந்தை தனியாக இருப்பதைப் பார்த்துவிட்டு “கொழந்தைய இப்புடிப் போட்டு எங்கப் போனா” என்று சொல்லிக்கொண்டே அறைக்கதவைத் தட்டினாள். அது திறக்கவில்லை. அருகிலிருந்த ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டு அய்யோ என்று கத்திக்கொண்டே கீழே சரிந்தாள். அவள் சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் ஓடிவர, அதே நேரம் லட்சுமி அங்கிருந்து அழுதுகொண்டே வெளியேறிக்கொண்டிருந்தாள்.

லட்சுமி மட்டும் தனியாக நடந்து வருவதைப் பார்த்த சின்னப்பொண்ணுவின் முகத்தில் சந்தேகம் வலுத்தது. லட்சுமி அருகில் வந்ததும், “எங்கடி அவ” என்றாள்.

லட்சுமி அழுதுகொண்டே, “அந்தக்கா தூக்குமாட்டிக்கிச்சி” என்றாள்.

சின்னப்பொண்ணு சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவள் கண்கள் கலங்கியது. சட்டென நினைவிற்கு வந்தவளாய், “அந்தப் புள்ள” என்றாள்.

“அது வெளாடின்னு இருக்குது”

மார்க்கெட் மெல்ல அடங்கிக்கொண்டிருந்தது. கடைகள் அடைக்கப்பட்டுக்கொண்டிருக்க வெளியே சென்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. லட்சுமியும் சின்னப்பொண்ணும் அழுதுகொண்டிருப்பதைப் பார்த்து விஷயத்தைக் கேள்விப்பட்டு அவர்களும் அமைதியானார்கள். சிலர் அழுதார்கள். அப்போது எதிரில் இருந்த இருந்த ஸ்டுடியோவிலிருந்து ஒருபெண் சிரித்துக்கொண்டே வெளியேறினாள். இவர்கள் அனைவரும் மெல்ல ஸ்டுடியோவிற்குள் ஒவ்வொருவராய் சென்றார்கள். அந்தக் குழந்தையும் அழுதுகொண்டே அவர்களோடு நடந்தது. மனசுக்கேட்காத சின்னப்பொண்ணு அந்தக் குழந்தையைத் தூக்கி தன் தோல் மீது போட்டுக்கொண்டு “என் கண்ணுல, ஏன் அழுதுகிணே இருக்கற. அதான் ஆயா, தாத்தா, அக்காலாம் இருக்கோம்ல, அப்பறம் இன்னா உனுக்கு, ஜோ ஜோ ஜோ… அழவுதடா” என்று கொஞ்சிக்கொண்டே உள்ளே சென்றாள்.

மொத்த மார்கெட் தெருவும் அடங்கத் தொடங்கியபோது அவன் ஸ்டுடியோவை பூட்டிவிட்டுச் சென்றான். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் இப்போது சில நாய்கள் படுத்திருந்தன.