1. நான் பசியோடிருக்கின்ற நேரம் யாரோ ஒருவன்

தான் உண்ணும் அறுசுவை உணவை முகநூலில்

பதிவிட்டு விருப்பக்குறியிடுகளை குவித்துக்கொண்டிருக்கிறான்…மிச்சமிருக்கும் தண்ணீரை மீண்டுமொரு முறை குடிக்கத்தொடங்குகிறேன்…

தேயத்தொடங்கியிருந்தது நிலவு!

**

2. இலஞ்சம் வாங்கியதேயில்லை என்கிறார்,

குறைந்த ஊதியத்தில்

ஆடம்பரமான வீடு கட்டியவர்,

தாமதமென்பது

என்னவென்றே தெரியாதென்கிறார்,

பதினோரு மணிக்கு பேருந்துக்காக காத்திருப்பவர்,

பொய் பேசியதேயில்லை என்கிறார்,

கடந்த வாரம் மனைவிக்கு தெரியாமல் திரைப்படத்திற்கு சென்று திட்டு வாங்கியவர்,

கடன் வாங்குவதும் கொடுப்பதும் மிகப்பெரிய குற்றமென பேசிக்கொண்டிருக்கிறார்,

கடன்கொடுத்தவர் அவரை நெருங்கும் போது கூட்ட நெரிசலில் மறைந்தவர்,

படிக்காத மகனை படி படியென அதட்டிக்கொண்டிருந்தார்,

படிப்பே வராத உங்க மகனை வேலைக்கு அனுப்பிடலாம்,ல

என்ற ஆதங்கத்தோடு பக்கத்து வீட்டுகாரரிடம் சொன்னவர்,

சொல்வதொன்று செய்வதொன்றாய் இருக்கும்

மனிதர்கள் வாழும் பூமிக்கு,

தவறாமல் வந்து விடுகிறது அதிகாலை சூரியன்!

***

3. தொள தொளவென அணிந்து

வந்த ஆடைகளை

கச்சிதமாக இருக்குமாறு அமைத்துக் கொண்டேன்,

தலைமூடியினை எண்ணெய்

பசையில்லாதவாறு பார்த்துக்கொண்டேன் ,

சாதாரண தொலைபேசியிலிருந்து

ஆண்ட்ராய்டு அலைபேசி இப்போது கையில்,

தூய தமிழில் வந்து விழுந்த

வார்த்தைகள் தற்போது

ஆங்கிலம் கலந்து,

பழைய இரண்டு சக்கர வாகனத்தை மாற்றிவிட்டு

புதுரக விலையுயர்ந்த வாகனமென,

புதிது புதிதாய் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டாலும், இதயத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் வலிகள் மட்டும் அப்படியே இருக்கிறது…அரத பழசாய்!

**

4. இதற்கு முன்பு கண்டும் காணாமல் போன ஒருவன்

இப்போது மாண்டுவிட்டான்,

அவனைப் பற்றி பேச

புதுப்புது வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம்,

அவனைப் பற்றி எழுத

யாரும் அறியாத சொற்களைப்

பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்,

அவனின் நிழற்படத்தில் துயரத்தை கண்ணீர்த்துளியாய் சொட்டிக்கொண்டிருக்கிறோம்…

அவன் இவற்றையெல்லாம் கண்டிருந்தால் முன்பே மரணித்திருப்பான்,

நடித்தவர்களால் நடுத்தெருவிற்கு வந்தவனுக்கு

வேறொன்றும் எளிதில்லை… செத்துப்போவதை விட!

**

5. முன்பொரு நாள்

வார்த்தைகளால்

காயப்படுத்தியவனை

காயப்படுத்த விரைகிறேன்…

கையில் சாக்லெட்டோடு அருகில் வருகிறான்

பிறந்த நாளென,

என்ன செய்வதென அறியாது நிற்கிறேன்,

அருகில்

புன்னகைத்துகொண்டிருக்கிறார் புத்தர் சிலையாக!

**

6. உன்னையும் என்னையும்

யாராலும்

பிரிக்க முடியாதென சொன்னவர்கள் தனித்தனியே

வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்…

அந்த இடைவெளிக்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன,

முகமறியா முகங்கள்!

**

7. உறங்கிக்

கொண்டிருப்பானோ

உடல் நலம் சரியில்லாமலிருக்குமோ,

வாகனத்தில் சென்று கொண்டிருப்பானோ,

மழைக்காக ஒதுங்கியிருப்பானோ,

பிறகு பேசிக்கொள்ளலாமென

நினைத்திருப்பானோ,

இனி மேல் என்னோடு பேசக்கூடாதென நினைத்திருப்பானோ,

பிரார்த்தனை செய்து கொண்டிருப்பானோ,

என எத்தனையோ கேள்விகளை கேட்க வைத்திடுகிறது மனது,

அவன் ஏற்றுக்கொண்டிருக்கலாம் எனது ஒற்றை அழைப்பை!

**

8. யாரோ ஒருவன் தனது தொலைந்த சாவியை தேடும் போது

தனது சாவி இருக்கிறதாயென தொட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்,

யாரோ ஒருவன் தனது கடவுளை வணங்கும் போது

தனது கடவுளை வணங்கிக்கொள்கிறார்கள்,

யாரோ ஒருவன் தனது குழந்தையோடு விளையாடிக்கொண்டிருக்கையில் தனது குழந்தையை நினைத்துக்கொள்கிறார்கள்,

யாரோ ஒருவன் தனக்கு பிடித்த நாயகனின் புகைப்படத்தை பதிவிறக்கம்  செய்கையில் தனக்கு பிடித்த நாயகனின் புகைப்படத்தை

பதிவிறக்கம் செய்கிறார்கள்…

யாரோ ஒருவன் தனக்கு தெரிந்த ஒருவனின் பிறந்த நாளை முகநூலில் பதிவிடுகையில் தனக்கு தெரிந்தவனின் பிறந்தநாளை

பதிவிடுகிறார்கள்

யாரோ ஒருவன் தன் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில் தான் பெற்ற வெற்றிகளை சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்,

யாரோ ஒருவன் துன்பப்படுகையில் யாரோ

ஒருவன் தானே என நினைத்து விலகிப்போகிறார்கள்!

**

9. அவசர அவசரமாய்

சிலுவை பற்றிய கவிதையொன்றை கேட்கிறாய்,

கொஞ்ச நேரம் காத்திரு…

நேசித்தவர்களால்

என் கைகளில் அறையப்பட்ட

ஆணிகளை அகற்ற கொஞ்சம் தாமதமாகலாம்!

**

10. வலிக்காத அடியொன்றோடு

முடித்துக்கொள்,

கண்டும் காணாது போவது

போல் முடித்துக்கொள்,

என்னுடன் பேசாமல்

வேறு யாருடனாவது பேசுவதை போல் முடித்துக்கொள்,

அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் போது தொடர்பை துண்டித்து

முடித்துக் கொள்….

யாரேனும் என் பெயரினைக்

கேட்டால்

தெரியாதென முடித்துக்கொள்,

பிறந்த நாள் சாக்லெட்டை

என் அருகில் இருப்பவனுக்கு தந்து விட்டு எனக்கு தராமல் சென்று முடித்துக்கொள்,

நான் வெளியே சென்று வர

அழைக்கும் போது

வரமாட்டேனென முடித்துக்கொள்,

இனி உன்னைப் பார்க்க மாட்டேன் உன்னோடு பேசமாட்டேனென மட்டும் சொல்லிவிடாதே,

மரணதண்டனையை விடக் கொடிது உன் மௌன தண்டனை!