எல்லாம் உனக்குத் தெரியும்
இது எப்போதோ தெரிந்ததுதான்
உனக்குமேகூட
உண்மைக்கும் உனக்கும் இடையே
உரையாடல் நிகழும்போது
நான் எப்படி இடையில் வர முடியும்
யாருடைய கதையிலுமே
நீ மூன்றாம் நபர் என்பதோடு
உனது கதையிலுமே நீ அதேதான்
நாயகன் நாயகனென நம்பியே
நகர்ந்துகொண்டிருந்தாய்
ஒரு கேலிக்கூத்து அப்படிதான் நிகழ்ந்தது
உன் அவல நாடகம் அப்படிதான் அரங்கேற்றப்பட்டது
உன் வாழ்வில் எதுவும் நடப்பதுபோலவே
இதுவுமேகூட உனக்குத் தெரியும்
இப்படித்தான் நடக்குமென்பதும்
உன்னால் அடைந்த துயரங்களை
சொல்லிக்காட்டக்கூடாது
நீயும் நிம்மதியாயில்லை
நானும் இதை முன்பே சொல்லியிருக்கலாம்
எல்லாமும் உனக்குத் தெரியும்
அதை ஏற்கத்தான் மறுக்கிறாய்
என்னைப் போலவே
எல்லாமும் எனக்கும் தெரியும்
கரை தாண்டா அலைகளோடு துவங்கும்
உன் விடியலை யாரும் பார்த்ததில்லை
உண்மையில் உனது உடல் உப்புக்காற்றால்
அரிக்கப்பட்டதென நானும் நம்புகிறேன்
உன்னால் காபிப்கோப்பைகள் கசந்து போயின
நீ நஞ்சை ருசித்தது உன் தவறு
மொட்டைமாடிப் பறவைகள் வலசை போயின
உன்னை யார் கூண்டுக்குள் இருக்க சொன்னது
சின்ன சின்ன சந்தோசங்கள் தீர்ந்தன
உன்னை யார் பெரிய பெரிய பலிபீடங்களில்
தலையை வைக்கச் சொன்னது
மதுப்போத்தல்களுக்காக அதிகாலையிலேயே
நீ நகரில் நடந்தபோது
உனக்கு பிடித்த பறவை இடமிருந்து வலமாக
அத்தனை உயரத்தில் பறந்து போனது
இலைகளற்ற மரத்தின் ஒரு கிளையில்
அந்தி இறங்கியதை காட்டியபோது
அதில் தனியே அமர்ந்திருக்கும் பறவைக்கு
நீ உன் பெயரை சூட்டியிருக்கக்கூடாது
அப்போதிலிருந்தே என்னை நம்பாதே
என்னே நம்பாதே என்று தான் சொன்னேன்
உன்னை நீ அவ்வளவு நம்பிடாமல் இருந்திருந்தால்
இவ்வளவு நடந்திருக்காது
எத்தனையோ முறை
நிலவைக் காட்டிய போதும்
நீ விண்மீனையே பின்தொடர்ந்தாய்
எத்தனையோ விளக்குகளின் வெப்பத்தை
உனக்கு உரைக்குமென்றுதான் கூட்டினேன்
நீயோ மின்மினிகளுக்காக சிதையேறினாய்
எனது கரங்களாலேயே சிகரெட் அடித்தபோதும்
எனது கரங்களில் முகம் புதைத்த போதும்
இதை விட்டுவிடு என்றேன்
நீயோ எரிந்தணைந்த கங்கினால்
இன்னமும் புகைகிறாய்
கண்கள் கலங்குகிறாய்
உனது நம்பிக்கையின் வரிகள் உலுக்கப்பட்டபோது
நீ அதை அரச இலையென கையிலேந்தி ரசித்தாய்
இல்லாத உறக்கத்தில் நிகழாத கனவொன்றை
நிகழ்த்திக்கொண்டிருந்தாய்
உன் மொழி எனக்கும் புரிந்ததனால் தலையசத்தேன்
உனக்கான சம்மதத்திற்காய் அல்ல
உனக்கு நாசுக்காக புரிய வைக்கத்தான்
அந்த கசாப்புக்கடைக்காரனை ஒருமுறை காட்டினேன்
கொல்லப்போகும் கிடாயிற்கு கீரையிடும்
அவன் கருணைக்காக நீ உருகியபோதாவது
நான் நகர்ந்திருக்க வேண்டும்
தூக்கம் கலையாத அதிகாலையில்
ஒரு குளிர்ப் பாதையில்
உன்னை வசைபாடிக்கொண்டே
மலையுச்சியை அடைந்தேன்
நான் உண்மையில் அந்த தனிமையை ரசித்தேன்
சூரிய உதயத்தை கண்டபோது
நீ இல்லாமல் இதைக் காண வேண்டுமென
அப்படி நினைத்தேன்
நீயோ இதுபோல ஒரு நூறு உதயத்தை
சேர்ந்து காண்போமென பள்ளத்தாக்கில்
கண்களை பொருத்தியிருந்தாய்
பன்னீர்ப்பூக்கள் சிந்தும் சாலையில்
நீ மதிமயங்கி நின்றபோது
என்னால் சொல்ல முடியவில்லை
காகிதப்பூக்களின் முட்களை வருடிக்கொடுக்கும்
உன் பைத்தியக்காரத்தனத்தை நான் நேசித்தேன்
உனது அற்புதத் தருணங்களிலெல்லாம்
நானிருந்ததாக நம்பினாய்
எனது ஆறாயிரத்து சொச்சம் தருணங்களில்
ஆறோ ஏழோ அப்படி இருந்தது
நான் மறுக்கவில்லை
உன்னைப்போல் பிடிவாதமாய்
கண்களை மூடிக்கொள்ளவில்லை
இணைவு என்பதும்
காதல் என்பதும்
தருணங்கள் முடிவு செய்பவை
நாம் சந்தித்த தருணங்களில்
என்னைத் தவிர வேறொருவர் இருந்திருந்தாலும்
நீ இப்படியேதான் நேசித்திருப்பாய்
உன் முந்தைய தருணங்களே
இப்போதைய தருணங்களை தீர்மானிக்கின்றன
உனது தருணங்களில்
ஆதி தருணமொன்று ஆறா வடுவாக
அமைக்கப்பட்டிருக்கிறது
எந்த மகத்தான தருணமும்
உன்னால் பூக்கும்போது
நீ வசீகரமாக இருக்கிறாய்
ஒரு பூ அளவே ஆயுலுள்ள வசீகரம்
பூக்களிலிருந்து கிளைக்கு
பின் பட்டைக்கு
பிறகு அதே சகதி படிந்த வேருக்கு
எல்லா தருணங்களும் திரும்புகின்றன
உன்னை தவிர்த்துவிடவும்
உன் வாசனைகள் தீர்ந்துவிடவும்
அதுவே போதுமானதாயிருக்கிறது
யாருடனென்றாலும்
அப்படித்தான் நடக்கும்
கடற்கரைக்கு உனக்கு பிடித்த யாரையும்
நீ அழைத்து சென்றதேயில்லை
என்னையுமே கூட
தெரிந்தோ தெரியாமலோ
காலம் உன்மேல் கொண்ட கருணைகளில்
இது தலையாயது
அத்தனைப் பெரிய கடல்
உனக்கும் சேர்த்து
தனிமையில் இருக்கிறது
உப்புச் சுரங்கத்தை
உன் கண்ணீருக்கு பதிலீடாய் வைத்திருக்கிறது
வெல்வட் நிறமாக மாறும் அலைகளை
பேதமையின்றி எதிர்கொள்
அப்போதி மட்டும் யாரையும் நினைக்காதே
நீ பிறழ்வடையாமல் இருக்கவும்
சிதையாமல் இருக்கவும்
அது ஒன்றுதான் வழி
பிருட்டம் மரத்துப்போக அமர்ந்தாலும்
முழங்கால் முடிகள் முகத்தை உரசினாலும்
கணுக்கால் வழியே கண்ணீர்த்தடம் பதிந்தாலும்
நள்ளிரவுப் பூனையின் ஓலத்தோடு
உன் பொழுதைக் கழித்தாலும்
மதுப்போத்தல்களால்
தற்காலிகமாக உன்னை மறந்து கிடந்தாலும்
அதிர்ஷ்டவசமாக என்னை மறந்து கிடந்தாலும்
யாராக இருந்தாலும்
இப்படிதான் முடியும்
நீ இழந்த தருணங்களுக்காகவே
இந்தத் தருணத்தில் கண்ணீர் சிந்துகிறாய்
குடும்பத்தோடு ஒட்டாமல் பிரிவது
எதையும் மாற்றாது
ஆனாலும் குறைந்தபட்சம்
நீ உன்னோடு இருக்கலாம்
குழந்தைகளோடு இருப்பது
உன்னை லேசாக்காது
ஆனாலும் உன் பாரம் குறையும்
நன்றாகப்பார்
அந்தப் பறவை உனக்காகத்தான்
வலமிருந்து இடமாக
அத்தனை தாழ்வாகப் பறக்கிறது
பிரிவு என்பது
நாம் மட்டுமே முடிவு செய்வதல்ல
நான் என்பது
உன் கனவுகளின் கூட்டுத்தொகை
நீ என்பது
என் பிழைகளின் கூட்டுத்தொகை
இன்னமும் கண்களின் ஒளியை
அடகு வைக்காதே
இருளில் யார் இருப்பதும்
யாருக்குத்தான் பிடிக்கும்
இன்னமும் உயிரின் நதியில்
உன் நினைவுச் சாயத்தை கலக்காதே
அதன் தேங்கிய வாடை சகிக்காது
இன்னமும் சிறுநீர் கழிக்கும்போது
எதையாவது முனகாதே
சுவர்ப பல்லிகள் மீது
கொஞ்சமாவது கருணை காட்டு
அவ்வப்போது உன் மீதும்
இன்னமுமே நீ
யார் சொல்வதையும் நம்புகிறாய்
நீ சொல்வதை பிடிவாதமாக நம்புகிறாய்
திறந்த புத்தகமாய் இருப்பதில்
எந்த தவறுமில்லை
ஆனாலும் கரையான் அரிக்கும்போதும்
சலனமின்றி இருந்து
நீ எதை அடைகிறாய்
அல்லது யாருக்காக
எதை இழக்கிறாய்
இடமிருந்து சுழலும் பூமியில்
நீ எல்லாவற்றையும்
எதிர்க்கத்தான் வேண்டும்
சுயமைதுனம் செய்யும்போது
என் முகத்தை நினைத்துக்கொள்
சுய கழிவிரக்கத்தின்போது
நினைத்துக்கொள்வதை விட
இது ரொம்பவே ஆசுவாசமளிக்கும்
உனக்கும்
எனக்குமேகூட
வாளால் அறுத்து சுடினுமென
நாலாயிர பிரபந்தத்தை சுமக்காதே
நான் முப்பது காசுகளுக்கு மட்டுமே
பெருமானமுள்ள யூதாசின் முத்தம்
நான் திருமாலில்லை
நீ ஏசுயில்லை
ஆனாலும் உனக்கு இது தெரியும்
எந்த துகளிலிருந்தோ ஊதிப்
பெரிதாக்கப்பட்ட உயிர் நீ
எந்தக் கரையிலிருந்தோ
ஒதுக்கப்பட்ட நுரை நான்
நான் என்பதும்
நீ என்பதும்
நமக்குள்ளான தருணங்கள்
நான் நேசித்ததோ வெறுத்ததோ
உன்னையல்ல
உன்னோடான சில தருணங்களை
நான் உன்னை நேசித்ததேயில்லை
தற்கொலையிலிருந்து பிணங்கள்
எப்போதும் தப்பிக்கின்றன
உன் உள்ளங்கை வெறுமைக்கு
என் தலையைத் தர நான் தயாராக இல்லை
நீ நோகக்கூடாதென்றுதான்
உன்னிடம் சொல்லவில்லை
புரிந்துகொள் எப்படி துவங்கினாலும்
எப்போது துவங்கினாலும்
இப்படிதான் முடியும்
எல்லாமும் உனக்குத் தெரியும்
ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாய்
உனது தருணங்களும்
எனது தருணங்களும்
கருணை கொள்ளப்போவதில்லை
தருணங்களை கொலை செய்யும் வரை
நீ என்னையோ
அல்லது வேறு யாரையுமேகூட
சந்திக்க இயலாது
நீயும் நானும்
தருணமற்று போகும் தருணத்தில்
சந்திக்கும்போது
இயன்றால்
அப்போதாவது உன்னை
நேசிக்க முயற்சிக்கிறேன்
இருபத்தி எட்டாயிரத்தி சொச்சம்
பகுதியிருந்தும் ஒரே பொருளை நோக்கும்
உனது தட்டாண் கண்களும்
இரு வேறு பொருட்களை
ஒரே போல் காணும் எனது ஓணான் கண்களும்
அதுவரை
கண்கள் கலங்க இருவருமே
கண்கள் கலங்க நான் உன்னையோ
நீ என்னையோ
கண்கள் கலங்க எத்தனித்து
கண்கள் கலங்காமல் மூடிக்கொண்டு
கண்களை சந்திக்காமல்
இன்னொருமுறை
இன்னொருமுறை
இயன்றால் சந்திப்போம்
இந்த உலகை இனியாவது
எச்சரிக்கையுடனே நேசி
நீ கேட்கமாட்டாய்
எனக்கு உன்னை நன்றாகத் தெரியும்
லவ் யூ
கடைசியாக ஒன்றே ஒன்று
உனது தடங்களைத் தொடர்ந்த
உனது பிரியப் பறவை
அதோ மின்கம்பியில் பொசுங்கித்
தொங்கிக்கொண்டிருக்கிறது
டேக் கேர்